M K Stalin
“எங்கே ஊழல் செய்யலாம்? எங்கே கமிஷன் பெறலாம்? என்பவை மட்டுமே எடப்பாடியின் சிந்தனை” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
"போட்டி போட்டுக்கொண்டு வரியை உயர்த்தும் பிரதமர் நரேந்திர மோடியும் - முதலமைச்சர் பழனிசாமியும் தான் விஷம் போல் விலைவாசி உயர்வதற்குக் காரணம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (17-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, நத்தம் - வடமதுரையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“நீங்கள் தந்திருக்கும் இந்த உற்சாகமான இனியதொரு வரவேற்பிற்கு என்னுடைய இதயமார்ந்த நன்றி. உதயசூரியனுக்கு வாக்குக் கேட்டு, உணர்வோடு – உரிமையோடு, உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களில் ஒருவனாக வந்திருக்கிறேன்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், நத்தம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய ஆண்டி அம்பலம் அவர்கள், ஏற்கனவே நத்தம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்காகப் பணியாற்றி இருப்பவர், சட்டமன்றத்தில் நத்தம் தொகுதியின் பிரச்சினைகளை - கோரிக்கைகளை அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னவர். இந்த தொகுதிக்காக தொடர்ந்து பாடுபடுபவர். எனவே தான் மீண்டும் அவரை தேர்ந்தெடுத்து நத்தம் தொகுதியின் வேட்பாளராக உங்களிடத்தில் அவரை ஒப்படைத்திருக்கிறோம்.
வேடசந்தூர் தொகுதியில் வேட்பாளராக உள்ள காந்திராஜன் அவர்கள், அவரும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர். சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக பொறுப்பேற்று பணியாற்றியவர். அவர் சட்டமன்ற உறுப்பினராக இப்போது இல்லை என்றாலும், அந்தத் தொகுதிக்காக தொடர்ந்து போராடியவர் - வாதாடியவர் - குரல் கொடுத்துக் கொண்டு இருப்பவர். எனவே அவரையே மீண்டும் தேர்ந்தெடுத்து நம்முடைய கழக வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். எனவே இவர்கள் 2 பேருக்கும் நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.
நத்தம் தொகுதியில் நம்மை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க.வின் வேட்பாளரைப் பற்றி நான் அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்றுக்கூட, பணப்பட்டுவாடா செய்ததாக அவர் மேல் ஒரு வழக்கு போடப்பட்டு இருக்கிறது. எனவே பணப்பட்டுவாடா எந்த அளவுக்கு அவர் செய்வார் - செய்து கொண்டிருக்கிறார் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
அம்மையார் ஜெயலலிதாவிடமே கொள்ளையடித்தவர் - தண்டனை பெற்றவர் அவர். அப்படி என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எத்தனுக்கு எத்தன்.
அவ்வாறு கொள்ளை அடித்த காரணத்தால் 10 நாட்கள் அவரைப் பூட்டி வைத்திருந்தார்கள். அதுமட்டுமல்ல அவருக்குக் கடந்த தேர்தலில் வேட்பாளராக வாய்ப்புத்தரக் கூடாது என்று முடிவு செய்தார்கள். அதனால் தான் நத்தம் தொகுதியில் கொடுக்காமல் ஆத்தூர் தொகுதியை கொடுத்தார்கள். அதற்கெல்லாம் நீங்கள் சரியான பதில் வழங்க வேண்டும். ஒரு நல்ல தீர்ப்புத் தரவேண்டும் என்பதற்காகத்தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
நான் இந்தத் தொகுதிக்கு - பகுதிக்கு புதிதாக வருபவன் அல்ல. அடிக்கடி வருபவன். ஆட்சியில் இருந்தபோதும், மேயராக இருந்த போதும், தேர்தல் வருகிற போதும் நான் வந்திருக்கிறேன்.
ஆட்சியில் இருந்தாலும் - இல்லையென்றாலும் மக்களைப் பற்றிக் கவலைப்படுகிற ஒரே கட்சி தி.மு.க.தான். அதை யாராலும் மறுக்க முடியாது.
கட்சியின் பகுதி பிரதிநிதியாக - மாவட்ட பிரதிநிதியாக - பொதுக்குழு உறுப்பினராக - இளைஞரணி செயலாளராக - சட்டமன்ற உறுப்பினராக - சென்னை மாநகர மேயராக - கழக துணைப் பொதுச் செயலாளராக - கழக பொருளாளராக - செயல் தலைவராக - தலைவருடைய மறைவிற்குப் பிறகு இன்றைக்கு உங்களையெல்லாம் கட்டிக்காக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, இதற்கிடையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக, இவ்வாறு பல பொறுப்புகளை ஏற்று பணியாற்றி, எங்காவது ஒரு பிரச்சினை என்று சொன்னால், அந்த இடத்தில் முதல் ஆளாக நிற்பவன் இந்த ஸ்டாலின் என்பது நாட்டு நன்றாகத் தெரியும்.
இப்போது முதலமைச்சர் வேட்பாளர் என்ற முறையில் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். 50 ஆண்டுகாலம் என்னை நான் அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு, ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் தொடர்ந்து பணியாற்றி கொண்டிருப்பவன் தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
பத்தாண்டுகாலமாக பாழ்பட்டு போயிருக்கும் இந்த கொடுமையான ஆட்சியை அகற்ற வேண்டும். அதேபோல முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் ஒரு பக்கத்தில் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அது அவருடைய உரிமை – கடமை. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் ஈடுபடலாம். பிரச்சாரத்தை செய்யலாம். நான் அதை தவறு என்று வாதிட மாட்டேன். ஆனால் ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டு தவறான கருத்துக்களை - பொய்யான பிரச்சாரத்தை செய்யக் கூடாது.
நான் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியாக சென்று, அந்த தொகுதியில் இருக்கும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான ஒரு திட்டத்தை அறிவித்தேன்.
வரவிருக்கும் தேர்தலில் நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அது உறுதி. ஆட்சிக்கு வந்து அடுத்த நாளிலிருந்து 100 நாட்களில் மக்கள் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்போம் என்று சொல்லி அந்தத் திட்டத்தை நான் அறிவித்தேன்.
அந்தத் திட்டம் இன்றைக்கு மக்களின் மனதில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது; நம்பிக்கையை வழங்கி இருக்கிறது.
அதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் பழனிசாமி, நேற்றைக்கு தன்னுடைய பிரச்சாரத்தில், 100 நாட்களில் பிரச்சினையை மு.க.ஸ்டாலின் தீர்ப்பேன் என்று சொல்கிறார். அது நடக்காது – முடியாது - யாரும் நம்பாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அதை எவ்வாறு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்?
இதை பற்றி எல்லாம் அவருக்கு தெரியவே தெரியாது. அவருக்கு கொள்ளையடிப்பது மட்டும் தான் தெரியும். எங்கே சதவிகிதம் வாங்கலாம்? எங்கே ஊழல் செய்யலாம்? எங்கே கமிஷன் பெறலாம்? அவருடைய தொழில் கமிஷன் - கரெப்ஷன் – கலெக்ஷன்.
நீங்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. 2006-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.
கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அதே மேடையில் கோட்டைக்கு கூட செல்லாமல் கோட்டையில் இருக்கும் கோப்பை மேடைக்கு வர வைத்து 7000 கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி என்று உத்தரவிட்டார். இதுதான் கலைஞர்.
அதேபோல், ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் கலர் டிவி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல வழங்கினார். இன்றைக்கும் பல வீடுகளில் அந்த டிவி ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்ததெல்லாம் காயலான் கடையில் இருக்கிறது. இதுதான் அவர்கள் ஆட்சியின் நிலை. எனவே சொன்னதைச் செய்தார் கலைஞர் அவர்கள்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று என்று சொல்லி எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாடு முழுவதும் மறைந்த மரியாதைக்குரிய விவசாய சங்கத்தின் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் போராட்டம் நடந்தது. அன்றைக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் கலைஞர் ஆட்சிக்கு வந்தார். ‘மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினீர்கள். இனிமேல் நீங்கள் மின்சாரக் கட்டணமாக ஒரு பைசாகூடத் தர வேண்டிய அவசியம் இல்லை. இலவச மின்சாரம் என்று அறிவித்தார். இதுதான் கலைஞர்.
அவருடைய மகன் ஸ்டாலின் 100 நாட்களில் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம் என்கிற அந்த உறுதிமொழியைத் தந்திருக்கிறேன்.
அதுமட்டுமல்ல, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் தரப்படும் என்று உறுதிமொழி கொடுத்தார் கலைஞர். அதை தி.மு.க. ஆட்சி யாருக்கும் கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார் பழனிசாமி.
இது முதலமைச்சருக்கு அழகல்ல. முதலமைச்சர் கோட்டையில் இருக்கும் அதிகாரிகள் இடத்தில் கேட்டிருக்க வேண்டும். அதற்குரிய கோப்புக்களை பார்த்திருக்க வேண்டும். அவ்வாறு பார்த்து இருந்தால் அவர் இவ்வாறு பேசி இருக்க மாட்டார்.
இப்போது சவால் விடுகிறேன். நீங்கள் கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள். நான் கொடுத்தேன் என்று சொல்கிறேன். கொடுக்கவில்லை என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். கொடுத்தேன் என்று சொல்வதை நான் நிரூபிக்கத் தயார். அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
2006-ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 719 ஏக்கர் நிலத்தை - ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சிதான் கலைஞர் ஆட்சி – தி.மு.க. ஆட்சி. “தான் திருடி பிறரை நம்ப மாட்டான்” என்று சொல்வது தான் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது.
அதே போல் 2011-ஆம் ஆண்டு மற்றும் 2016-இல் அ.தி.மு.க. ஆட்சி எத்தனையோ வாக்குறுதிகளை - உறுதிமொழிகளை கொடுத்தது. அதை அவர்கள் நிறைவேற்றவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும், இப்போது நடக்கும் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா? இல்லை.
ஆனால் கலைஞர் தான் – தி.மு.க. ஆட்சி தான் காரணம் என்று ஒரு பொய்யை பழனிசாமி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். கலைஞர் இருந்த வரையில் தமிழ்நாட்டிற்குள் நீட்டை நுழைய விடவில்லை. இதுதான் உண்மை. நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கி வைத்திருந்தார்.
கலைஞர் மட்டுமல்ல, அவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் மறைந்த அம்மையார் ஜெயலலிதா இருந்த வரையில் கூட தமிழ்நாட்டிற்குள் நீட்டை அனுமதிக்கவில்லை. அதை உள்ளபடியே பாராட்ட வேண்டும். ஆனால் அவர் இறந்ததற்கு பிறகு இன்றைக்கு உள்ளே வந்து இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் அ.தி.மு.க. ஆட்சி தான் - முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி தான்.
அதுமட்டுமல்ல, இப்போது தேர்தல் அறிக்கையில் மகளிர் அத்தனைபேருக்கும் செல்போன் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். இதே அறிவிப்பை கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் - நாடாளுமன்றத் தேர்தலிலும் அறிவித்தார்கள். யாருக்காவது கொடுக்கப்பட்டதா?
2021 தேர்தல் அறிக்கையில் போலியான அறிவிப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. தந்திருக்கும் இன்னொரு உறுதிமொழி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு தருவோம்.
இன்றைக்கு தமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டை இருக்கிறது. அதாவது 1 கோடியே 97 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். அது முடியுமா? நிச்சயமாக முடியாது. எனவே, தவறான - பொய்யான வாக்குறுதிகளை அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர, வேறு எதுவும் இல்லை.
நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள். நாளைக்கு ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டர் கொடுக்கப் போகிறோம் - விமானம் கொடுக்கப் போகிறோம் - ஒவ்வொருவருக்கும் ரயில் கொடுக்கப்போகிறோம் என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இன்றைக்கு விஷம் போல விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இன்றைக்கு இருக்கும் ஆட்சி ஈடுபடவில்லை.
உளுந்தம் பருப்பு தி.மு.க ஆட்சியில் ஒரு கிலோ 60 ரூபாய் - இப்போது 150 வரை போய்விட்டது. துவரம் பருப்பு ஒரு கிலோ தி.மு.க. ஆட்சியில் 38 ரூபாய் - இப்போது அதுவும் 130 ரூபாய்க்கு மேல் போய்விட்டது. கடலைப் பருப்பு தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ 34 - இப்போது 120, பாமாயில் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில் 48 - இப்போது 130, சர்க்கரை ஒரு கிலோ தி.மு.க. ஆட்சியில் 18 - இப்போது 40, சிலிண்டர் ஒன்று தி.மு.க. ஆட்சியில் 400 ரூபாய் - இப்போது 875, பால் ஒரு லிட்டர் தி.மு.க. ஆட்சியில் 35 - இப்போது 60.
இவ்வாறு விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி செய்யவில்லை. மாறாக பிரதமர் மோடியும், முதலமைச்சர் பழனிசாமியும் போட்டி போட்டுக் கொண்டு வரிகளை உயர்த்தி, விலையை அதிகரிக்கச் செய்கிறார்கள்.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கதாநாயகன் என்று சொல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை ‘காமெடி வில்லன்‘.
பெண்களுக்காக எத்தனையோ திட்டங்களை கலைஞர் முதல்வராக ஆட்சியில் இருந்த போதெல்லாம் செய்தார். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு. உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீடு. கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை. விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம். ஏழை - எளிய குடும்பத்தில் பிறந்து இருக்கும் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்யும் அற்புதமான திட்டம். மகளிர் சுய உதவிக்குழு என்ற அற்புதமான திட்டம். ஆனால் இப்போது இருக்கும் ஆட்சியில் அது கேட்பாரற்ற நிலையில் இருக்கிறது.
எனவே இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் நம்முடைய தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று வெளியிடப்பட்டிருக்கிறது.
உடனே அதைப்பார்த்து பழனிச்சாமி 1,500 என்று அறிவித்து விட்டார். எல்லாமே ஸ்டாலின் சொல்வதை அப்படியே ஜெராக்ஸ் காப்பி அடித்துச் சொல்லி விடுகிறார். “ஆண்டவன் சொல்கிறான், அருணாச்சலம் செய்கிறான்” அதேபோல, “ஸ்டாலின் சொல்கிறான், பழனிசாமி காப்பி அடிக்கிறார்” இது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நம்பவும் தயாராக இல்லை.
அதே போல, பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரசின் சார்பில் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படும், மகளிர் செலவைக் கட்டுப்படுத்த உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம்.
இப்போது கொரோனா அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இனிமேல் தயவு செய்து யாரும் மாஸ்க் போடாமல் இருக்காதீர்கள். தடுப்பூசியும் தயவுசெய்து போட்டுக்கொள்ளுங்கள். நானும் போட்டுக்கொண்டேன். நாம் நன்றாக இருந்தால் தான் நாட்டுக்கு பணியாற்ற முடியும். எனவே தயவுசெய்து யார் யார் தடுப்பூசி போட வில்லையோ உடனடியாக தடுப்பூசி போடுகிற முயற்சியில் ஈடுபட வேண்டும்.
கொரோனா தமிழ்நாட்டுக்குள் நுழைந்த நேரத்தில், அம்மா ஆட்சியில் கொரோனா வராது என்று பழனிசாமி சொன்னார். அதனால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு, எவ்வளவு பேர் இறந்து இருக்கிறார்கள்.
அப்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னேன். அப்போது நிதி இல்லை என்று என்று சொன்னார்கள். கொள்ளையடிப்பதற்கு அந்த நிதியை பயன்படுத்தி கொண்டார்கள். கொரோனாவை பயன்படுத்திக் கொள்ளை அடித்தவர்கள் இவர்கள். மாஸ்க்கில் கொள்ளை, ப்ளீச்சிங் பவுடரில் கொள்ளை, துடைப்பத்தில் கொள்ளை.
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி வெறும் 1000 ரூபாய் மட்டும் அறிவித்தார்கள். இப்போது நாம் இந்த தேர்தல் அறிக்கையில் மீதமிருக்கும் 4,000 ரூபாயினை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அத்தனை குடும்பங்களுக்கும் வழங்குவோம் என்று அறிவித்து இருக்கிறோம். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட், மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு குறைவான நகைக் கடன் தள்ளுபடி செய்வோம், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
நத்தத்தில் அரசு கலை – அறிவியல் கல்லூரி உருவாக்கப்படும், வேடசந்தூர் பகுதிக்கு மாயனூர் அணையிலிருந்து காவிரி நீர் கொண்டு வரப்படும், அய்யலூரில் தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை உருவாக்கப்படும். ஆயக்குடியில் பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை. வேடசந்தூர் தொகுதியில் பால் கொள்முதல் நிலையங்கள். பாலசமுத்திரத்தில் பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும்.
நேற்று இரவு நான் திண்டுக்கல் வந்தவுடன் நம்முடைய கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் என்னைச் சந்தித்து கிறித்தவ வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதுகுறித்து கழக அரசு அமைந்ததும் நிச்சயமாக பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அந்த உறுதிமொழியை நான் இந்த நேரத்தில் தெரிவித்து, இந்த கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறீர்கள். கொடுமையான ஆட்சியைத் தாங்கி இருக்கிறோம். இந்த வெயிலைத் தாங்கிக் கொள்கிறோம் என்ற வகையில் இங்கே வந்திருக்கும் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
நத்தம் தொகுதியில் நம்முடைய ஆண்டி அம்பலம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், வேடசந்தூர் தொகுதியில் அன்பிற்கினிய சகோதர காந்திராஜன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தாருங்கள் என்று உங்களை அன்புடன் கேட்டு விடைபெறுகிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!