M K Stalin
"234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வாஷ் அவுட் ஆகப்போவது உறுதி” - திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்!
“சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி ‘வாஷ் அவுட்’ ஆகப்போவது உறுதி” என திருவாரூரில் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (15.03.2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவாரூரில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரைப் பயணத்தைத் தொடங்கினார்.
அப்போது அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
"முதலில் நீங்கள் எல்லாம் தந்திருக்கும் இந்தச் சிறப்பான, உற்சாகம் மிக்க வரவேற்பிற்கு என்னுடைய இதயம் கனிந்த நன்றியை - வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நான் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறேன். எங்கே என்றால், நம் திருவாரூரில்! கலைஞர் வளர்ந்த - கலைஞரை உருவாக்கிய இந்த திருவாரூர் மண்ணில்!
கலைஞருடைய மகனாக வந்திருக்கிறேன். நான் மட்டுமா, நீங்களும் கலைஞருடைய பிள்ளைகள்தான். நான் இதே திருவாரூருக்குக் குழந்தையாக - பள்ளிக்கூட மாணவனாக - கல்லூரியில் படிக்கும் மாணவனாக -இளைஞரணிச் செயலாளராக - சட்டமன்ற உறுப்பினராக - கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக - சென்னை மாநகரத்தின் மேயராக - கழகத்தின் பொருளாளராக - உள்ளாட்சித்துறை அமைச்சராக - துணை முதலமைச்சராக - செயல் தலைவராக - தலைவராக வந்திருக்கிறேன். இப்போது முதலமைச்சர் வேட்பாளராக வந்திருக்கிறேன்.
என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக இருக்கும், திருவாரூர் தொகுதியின் வேட்பாளர் - நீங்கள் அறிந்த, நீங்கள் புரிந்த ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை தேடித்தந்த நம்முடைய பூண்டி கலைவாணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தந்திட வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்.
அதேபோல் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பி.ராஜா, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேதரத்தினம், நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் ஜோதிராமன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், நம்முடைய கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் திருத்துறைப்பூண்டி தொகுதியில் தோழர் மாரிமுத்து அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்களித்து மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போதும், இந்த திருவாரூரில் இருந்து என்னுடைய பரப்புரையைத் தொடங்கினேன். இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கும், முதன் முதலாக இந்த திருவாரூரிலிருந்து தான் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறேன்.
எவ்வாறு, இந்தியாவின் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இன்றைக்கு 3வது இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கம்பீரமாக இருக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்களோ, அதேபோல இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
200 என்று ஒரு மாதத்திற்கு முன்னர் சொன்னேன். அது இப்போது அல்ல! இப்போது நான் சுற்றி வரும் பயணத்தில் உணரக்கூடிய உணர்வு என்ன என்று கேட்டால், இந்த நாடே எண்ணிக் கொண்டிருப்பது என்ன என்று கேட்டால் - இந்து ராம் அவர்களே தன்னுடைய ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். தி.மு.க 234-க்கு 234 இடங்களில் வெற்றி பெறப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணி ‘வாஷ் அவுட்’ – அதுதான் தமிழக மக்களின் நிலையாக இன்று இருக்கிறது.
எனவே அப்படிப்பட்ட வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்வதற்காகத்தான், உங்களை தேடி - நாடி நான் இன்றைக்கு திருவாரூருக்கு வந்திருக்கிறேன். 10 ஆண்டுகாலமாக இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கும் பழனிசாமி அவர்களின் தலைமையில் இருக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை தேடி - நாடி வந்திருக்கிறேன்.
10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டைப் பாழடித்து விட்டார்கள். அம்மையார் ஜெயலலிதா 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார். ஊழல் வழக்கின் காரணமாக அவர் தண்டிக்கப்பட்டு, அவரது பதவியை ராஜினாமா செய்தார்.
இடையில் பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். எனவே வழக்குப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த காரணத்தால் ஆட்சியை ஒழுங்காக நடத்தவில்லை. அதற்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்று 1 ஆண்டு காலத்திற்குள் அவர் உடல் நலிவுற்று அவர் மறைந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர் மறைந்த பிறகு 4 ஆண்டு காலமாக - இடையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இருந்தார் - அதனைத் தொடர்ந்து பழனிசாமி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று எந்த அளவிற்கு சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடு நன்றாக அறியும்.
இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் அவரும் ஈடுபட்டிருக்கிறார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் அதில் தவறில்லை. அதை விமர்சிக்க நான் விரும்பவில்லை.
ஆனால் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் - சொல்லும் அத்தனையும் பொய்யாகவே, ‘பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்த பசங்களா’ என்று கிராமங்களில் சொல்வார்கள் - அதுபோல பொய்களையே செய்திகளாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞரும் – மு.க.ஸ்டாலினும் தான் என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 10 ஆண்டுகாலத்தில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர் உடல்நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட துப்பற்ற ஆட்சியைத்தான் இவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.
நான் தொடர்ந்து பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறேன். இப்போது நமது தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கையை நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எடுப்போம் என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.
பழனிசசாமி அவர்கள் இப்படி சொல்லி இருக்கிறார். இந்த 4 ஆண்டு காலம் நீங்கள்தான் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ஸ்டாலின் தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா?
இப்போது சொல்கிறேன். தைரியம் இருந்தால் - தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணமென்றால் வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார்… நீங்கள் தயாரா? நான் ரெடி… பழனிசாமி நீங்க ரெடியா?
எதை வேண்டுமானாலும் பேசி விட்டுப் போகலாமா? நாக்கில் உங்களுக்கு நரம்பு இல்லையா? கலைஞர்தான் காரணம் என்று வாய்கூசாமல் பேசுகிறீர்களே எப்படி? அதுதான் எனக்கும் புரியவில்லை.
அம்மையார் ஜெயலலிதா மரணம் மர்மமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. 4 வருடங்களாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இதுவரையில் உண்மை வெளிவரவில்லை. ஜெயலலிதா மரணம் அடைந்ததற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அந்த பதவியை ஏற்றுக்கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
ஆனால் திடீரென்று ஒருநாள் சசிகலாவுக்கு ஆசை வந்துவிட்டது. உடனடியாக பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு தானே முதலமைச்சர் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தேதி நிர்ணயிக்கப்பட்டு, அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது.
என்ன தீர்ப்பு என்றால், அம்மையார் ஜெயலலிதா அவர்களும் - சசிகலா அவர்களும் - இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம். தீர்ப்பு வந்ததா? இல்லையா?
ஆனால் அம்மையார் அவர்கள் மறைந்துவிட்ட காரணத்தால் அவர் தண்டனையை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. அதை விட்டுவிடுவோம். ஆனால் மற்ற 3 பேரும் அந்த தண்டனையை ஏற்றாக வேண்டும்.
ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால் தண்டனையை அவர் அனுபவிக்க வாய்ப்பில்லை. ஆனால் ஏ1 யார் என்றால் ஜெயலலிதா தான். ஏ2 யார் என்றால் சசிகலா தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு பிறகு என்ன ஆனது?
சசிகலா பதவியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் யாரை முதலமைச்சராக நியமிக்கலாம் என்று சசிகலா அவர்கள் யோசித்துக் கொண்டிருந்த போது, யாரோ தவழ்ந்து வருவது போல ஒரு காட்சி தெரிந்தது. காட்சி அல்ல உண்மை. ஊர்ந்து வந்திருக்கிறது. கீழே குனிந்து பார்த்தால் பழனிசாமி.
உடனே அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தவழ்ந்து சென்று ஊர்ந்து சென்று முதலமைச்சராக உட்கார்ந்து இருப்பவர் பழனிசாமி. எனவே அந்த பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.
உடனே ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆத்திரம் வந்தது. போர்க்கொடி தூக்கினார். தர்ம யுத்தத்தை நடத்தினார். நேராக மெரினா சென்றார். ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்றார். 40 நிமிடம் தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார், ‘அம்மா எனக்கு துரோகம் நடந்துவிட்டது. முதலமைச்சர் பதவி நீங்கள் இறந்தவுடன் எனக்கு கிடைத்தது. நீங்கள் சிறைக்குப் போனபோதேல்லாம் நீங்கள் என்னிடம் தான் முதலமைச்சர் பதவியை ஒப்படைத்து விட்டுச் சென்றீர்கள். ஆனால் இன்றைக்கு அந்தப் பதவியை சசிகலா அவர்கள் பறித்து விட்டார். இதற்கு நியாயம் வேண்டும். அது மட்டுமில்லாமல் உங்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது. நீதி வேண்டும். விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’ என்று சொன்னது யார்? ஓ.பி.எஸ்.
அதற்குப் பிறகு அவரைச் சமாதானம் செய்து துணை முதலமைச்சர் பதவியை கொடுத்து, பெயரளவிற்கு விசாரணை கமிஷன்; ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. எனவே அந்த விசாரணை கமிஷன் 4 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையில் என்ன நிலைமை என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட ஏழெட்டு முறை விசாரணை கமிஷனுக்கு வாருங்கள் என்று ஓ.பி.எஸ்.க்கு அழைப்பு சென்றிருக்கிறது. இதுவரையில் அவர் செல்லவில்லை. அதனால்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவது தான் எங்களுடைய கடமை. நிச்சயமாக சொல்கிறேன் - உறுதியாக சொல்கிறேன் - சத்தியமாக சொல்கிறேன் ஸ்டாலின் விடவே மாட்டான் என்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
அதைத்தான் இப்போது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறோம். எனவே இதை மூடி மறைப்பதற்காக திட்டமிட்டு ஆத்திரத்தின் காரணமாக கலைஞர் தான் காரணம் - ஸ்டாலின் தான் காரணம் என்று திசைதிருப்புவதற்கு முயற்சிக்கிறார். அதை மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை.
முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியிலிருந்து - கடைக்கோடியில் இருக்கும் மந்திரிகள் வரை என்னென்ன ஊழல்கள் செய்திருக்கிறார்கள்? எங்கெங்கு கமிஷன் வாங்கியிருக்கிறார்கள்? எந்தெந்த வகையில் அவர்கள் கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் பொத்தாம் பொதுவாக அல்ல, வாய்க்கு வந்தபடி அல்ல, நினைத்ததை அல்ல, முழு ஆதாரங்களோடு அத்தனையும் ஒன்றுதிரட்டி தமிழகத்தின் ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.
ஏற்கனவே சில பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கிறது. அத்தனையும் ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். அதில் ஒன்றை மட்டும் நான் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால், பழனிசாமியின் பொறுப்பிலிருக்கும் நெடுஞ்சாலைத்துறை. அந்த நெடுஞ்சாலைத்துறையில் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. யாருக்கு என்றால் அவருடைய சம்பந்தி - சம்பந்தியின் சம்பந்திக்கு. அந்த நிலையில் அவர்கள் டெண்டர் விட்டு இருக்கிறார்கள்.
எனவே அதில் முறைகேடு நடந்திருக்கிறது - ஊழல் நடந்திருக்கிறது என்று ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு சென்று நம்முடைய வழக்கறிஞர் - அமைப்புச் செயலாளர் - மாநிலங்களவை உறுப்பினர் பாரதி அவர்கள் அந்த வழக்கைப் போட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம் அதை முழுமையாக விசாரித்து, அதில் முகாந்திரம் இருக்கிறது. இதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை முழுமையாக வெளியே வரும். சுதந்திரமாக இதை விசாரிக்க முடியும். எனவே இதை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனவே சி.பி.ஐ. விசாரித்தால் உண்மையை வெளிப்பட்டு விடும் என்று பயந்து - அஞ்சி - நடுங்கி முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி உச்சநீதிமன்றம் சென்று அதற்கு தடை வாங்கி விட்டார். தெம்பு இருந்தால் - தைரியம் இருந்தால் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி, அந்த வழக்கை நான் சந்திக்க தயார் என்று சொல்லி இருக்க வேண்டும்.
ஸ்டாலினை நேரடியாக விவாதிக்க வா வா என்று அடிக்கடி அழைத்து கொண்டிருக்கிறாரே… அவ்வாறு அழைத்துக் கொண்டிருக்கும் பழனிசாமி ‘என் மீது களங்கம் சுமத்தப்பட்டிருக்கிறது. அதை துடைக்கிறேன். அதை நிரூபிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் அந்த வழக்கை சந்தித்திருக்க வேண்டும்.
ஆனால் பயந்து - அஞ்சி - நடுங்கி இன்றைக்கு உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கி இருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு முதலமைச்சராக பழனிசாமி அவர்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார். சி.பி.ஐ. விசாரணை நடக்க தொடங்கி தொடங்கியிருந்தால், அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
ராஜினாமா செய்வது மட்டுமல்ல, சிறைக்குள் இருந்து இருக்கவேண்டும். அதுதான் உண்மையான நிலை. எனவே நீங்கள் முதலமைச்சராக இருக்கும் காரணத்தால் தப்பித்துக் கொண்டிருக்கலாமே தவிர, ஸ்டாலின் முதலமைச்சராக ஆனதற்கு பிறகு நீங்கள் தப்பிக்க முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நிலையில் தான் இன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது.
நேற்று அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. நாம் சொன்னதையே நகலாக காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. அறிக்கையை தி.மு.க. அறிக்கை என்று கூடப் போட்டுவிடுவார்கள். அந்த அளவிற்கு நாம் என்ன சொன்னோமோ அதை அப்படியே நகல் எடுத்துப் போட்டிருக்கிறார்கள்.
மகளிருக்கு உரிமத் தொகை ரூ.1000 என்று அறிவித்தோம். அதை ரூ.1500 என்று அறிவித்துள்ளார்கள். முதியோருக்கு உதவித் தொகை 1,500 என்று அறிவித்தோம். 2,000 என்று அறிவித்துவிட்டார்கள். மாணவர்களுக்குக் கல்விக் கடன் தள்ளுபடி என்று அறிவித்திருந்தோம். அதையே இப்போது அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னோம். இது புதிதாகச் சொன்னதல்ல. விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்து புரட்சி செய்தவர்தான் நமது தலைவர் கலைஞர். எனவே அவர் வழிநின்று கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தேன். அவரும் அறிவித்திருக்கிறார். ஸ்டாலின் என்ன சொல்வார் எனக் காத்துக் கொண்டிருக்கிறார். அறிவாலயத்தில் ஸ்பை வைத்திருக்கிறார் போலும்!
முதலமைச்சராக நீங்கள் நான்கு வருடங்களாக இருந்து இருக்கிறீர்கள் அல்லவா? அப்போது ஏன் இதையெல்லாம் அறிவிக்கும் எண்ணம் வரவில்லை? அப்போது ஏன் சிந்திக்கவில்லை; அந்த உணவு உணர்வு வரவில்லை? என்று நான் கேட்கிறேன். விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு சட்டமன்றத்தில் பலமுறை கேட்டோம். அப்போது நிதியில்லை என்று கூறிவிட்டார்கள்.
விவசாயப் பெருங்குடி மக்கள், அவர்களது அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள். உயர்நீதிமன்றம் கடனைத் தள்ளுபடி செய்யுங்கள் என உத்தரவிட்டது. அந்த உத்தரவை கேட்ட பிறகாவது அதை செய்தார்களா? இல்லை. உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கினார்கள். கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது - நிதி இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டு இப்போது அறிவிக்கிறார்கள். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிந்து பின்னர் அணையுமே அதைப் போலக் கடைசி நேரத்தில் அறிவிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்து விட்டது அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் அறிவிக்கிறார்கள்.
ஏனென்றால் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரப்போவதில்லை, அதனால் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகலாம் அல்லவா?
நாம் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். கலைஞர், ‘சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்.’ என்று சொல்வார். கலைஞருடைய மகனாக இருக்கும் நானும் - இந்த ஸ்டாலினும் ‘சொன்னதைச் செய்வான்; செய்வதைத்தான் சொல்வான்’.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சி போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொரோனா என்ற கொடிய நோய்த் தொற்று வந்த நேரத்தில் ஆளுங்கட்சி செய்ய முடியாத அனைத்துச் செயல்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னின்று செய்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள், முன்னோடிகள் செயல் வீரர்கள், அடித்தளத்தில் நம்முடைய நாடி நரம்புகளாக விளங்கிக் கொண்டிருக்கும் தொண்டர்கள் எல்லாம் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் - உயிரைப் பணயமாக வைத்து மக்களுக்கு பணியாற்றினார்கள். அது என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாதது.
ஆனால் இந்த பழனிசாமி ஆட்சி, கொரோனா காலத்தில், சாலை ஓரங்களில் போடப்படும் பிளீச்சிங் பவுடரில் கூட கொள்ளை அடித்தது. மாஸ்க் வாங்கியதில் கொள்ளை அடித்து விட்டார்கள். துடைப்பம் வாங்கியதில் கொள்ளை! நீங்கள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்!
தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் நாட்டு மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி எல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நேரம் போதாது!
1948 முதல் ஓடாமல் நின்று போயிருந்த திருவாரூர் தேரை, கலைஞர் தான் 1970-இல் முயற்சி எடுத்து ஓடவைத்தார். தேர் ஓடுவதற்கு வசதியாக நான்கு ரதவீதிகளையும் சிமெண்ட் சாலைகளாக மாற்றித் தந்தவர் தலைவர் கலைஞர். பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் கிடந்த திருவாரூர் கமலாலயம் குளத்தைத் தூர்வாரச் செய்தவர் தலைவர் கலைஞர்.
திருவாரூர் ஆழித்தேர் நான்கு வீதிகளிலும் சிரமமின்றி சென்று வீதி உலா வர, நான்கு மாட வீதிகளையும் சிமெண்ட் சாலையாக 2006-ஆம் ஆண்டு மாற்றி கொடுத்தவரும் முதலமைச்சர் கலைஞர்தான்.
திருவாரூர் திருக்குளமான கமலாலய குளம் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தி.மு.க. ஆட்சி காலத்தில் தூர்வாரப்பட்டது.
* திருவாரூர் என்ற புதிய மாவட்டமே தி.மு.க. ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது.
* ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற அலுவலகம் ஆகியவற்றை பிரமாண்டமாக கட்டினார்.
* திருவாரூர் நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டித் தந்தது தி.மு.க.
* மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டாலும் 2013-ஆம் ஆண்டுதான் அ.தி.மு.க. ஆட்சி அதை முடித்தது.
* புதிய பேருந்து நிலையத்துக்கு 2010-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு இருந்தாலும் காழ்ப்புணர்ச்சி காரணமாக எட்டு ஆண்டுகள் கழித்து 2019-இல் தான் திறப்புவிழா செய்தார்கள்.
* தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தை 2009-இல் திருவாரூரில் அமைத்துக் கொடுத்தார் முதலமைச்சர் கலைஞர்!
* 2010-ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியையும் அமைத்தது திமுக!
* மன்னார்குடியில் அரசு கலைக் கல்லூரி
* பாமணி உரத் தொழிற்சாலை
* மாவட்டம் முழுக்க குடிநீர் வசதிகளை உருவாக்கினார் அண்ணன் கோ.சி.மணி அவர்கள்.
* டி.ஆர்.பாலு அவர்கள் முயற்சியால் ஐந்து புதிய ரயில்கள் விடப்பட்டன. அதில் முக்கியமானது செம்மொழி எக்ஸ்பிரஸ்!
* மன்னையில் இருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் விட்டதும் கழகத்தின் முயற்சியினால் தான்!
கழக ஆட்சியின் இத்தகைய பணிகள் தொடர வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை நாடித் தேடி வந்திருக்கிறேன்.
1989-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். இதே தெருவில், இதே வீதியில் நடைபெற்ற வெற்றிவிழாக் கூட்டத்தில் கலைஞர் கலந்து கொண்டார். இப்போது நான் கேட்கிறேன் இந்த தேர்தலில் வெற்றி பெற்று வெற்றி விழா கூட்டத்திற்கு நான் முதன் முதலாக இந்த திருவாரூர் ஊருக்கு தான் வரவேண்டும். வரவைத்து விடுவீர்களா? நிச்சயமாக… உறுதியாக… நம்பிக்கையோடு இருக்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் அதுதான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை நடத்தினோம். மக்கள் கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில் தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களையும் சந்தித்தோம். அதைத் தொடர்ந்து ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நாடு முழுவதும் சுற்றி வந்தோம். ‘உங்கள் தொகுதி ஸ்டாலின்’ என்பது ஏதோ அழகான பெயருக்காகவோ, ஏட்டளவிலான சொல்லுக்காகவோ மட்டுமல்ல. அந்த திட்டத்தின் நோக்கமே நாம் ஆட்சிப் பொறுப்பேற்று பதவியேற்ற அடுத்த நாளில் இருந்து, 100 நாட்களில் தமிழ்நாட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை, அன்றாட பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதுதான். அந்த ஒரே நோக்கத்தோடு உருவாக்கிய திட்டம் தான் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற அந்தத் திட்டம்.
பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டார்கள் மக்கள். திரண்ட மக்கள் கூட்டத்தை கூட்டி உட்காரவைத்து கூட்டத்தை பேசி அனுப்பி வைத்து விடவில்லை. ஒவ்வொருவரும் அந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு அவர்கள் பெயர் ஊர் அவர்கள் குறைபாடுகள் தெருவிளக்கு பிரச்சினையா, சாக்கடை பிரச்சனையா, மருத்துவமனை பிரச்சினையா, பள்ளிக்கூடப் பிரச்சினையா அதேபோல ஓய்வுதியப் பிரச்சினையா - எந்த அடிப்படைப் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை அவர்கள் அங்கே பதிவு செய்து, அதற்குப் பிறகு அவர்களுக்கு வரிசை எண்ணுடன் கூடிய ஒரு அடையாள அட்டை கொடுத்திருக்கிறோம். இதில் உங்களில் பல பேர் வாங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் 234 இடங்களில் மாபெரும் வெற்றியை அடையப் போகிறது. அந்த வெற்றியின் காரணமாக நாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்க இருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 100 நாட்களில் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கப் போகிறோம். ஒருவேளை யாருடைய பிரச்சினையாவது தீர்க்கப்படாமல் இருந்தால், அந்த அடையாள அட்டை இருந்தால் போதும். நேராகக் கோட்டைக்குள் வரலாம். யாருடைய அனுமதியும் தேவையில்லை. கோட்டைக்குள் மட்டுமல்ல முதலமைச்சர் அறைக்குள் வருவதற்கான தகுதி அந்த அட்டைக்கு இருக்கிறது. இதனைத் தெளிவாக நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
எனவே மக்களோடு இருந்து, மக்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்கள் பிரச்சினைகளை அறிந்து, புரிந்து, அவர்களுக்கு பாடுபடக்கூடிய மாபெரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் எல்லாம் என்றைக்கும் துணை நிற்க வேண்டுமென்று உங்களை நான் இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் உறுதிமொழிகளில் குறிப்பாகச் சிலவற்றை நான் தலைப்புச் செய்திகளாக உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நமது தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை மாதம் ரூபாய் 1000. பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைவு. டீசல் லிட்டருக்கு ரூபாய் 4 குறைவு. சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைவு. பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைவு. மகளிருக்கான செலவை குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசப் பயணம்.
கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, அது உருவான போதே 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னேன். நிதி இல்லை என்று சொன்னார்கள். வெறும் 1,000 ரூபாய் கொடுத்தார்கள். இப்போது நான் சொல்கிறேன். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் 4,000 ரூபாய் ரேஷன் அட்டை இருக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
அதேபோல, நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும். கரும்பிற்கு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும். வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் போடப்படும். 100 நாள் வேலைத்திட்டம் என்பது 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.
மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
எனவே இவை எல்லாம் உறுதியாக செய்யப்படும் - நிறைவேற்றப்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மீண்டும் மீண்டும் சொல்லுகிறேன்; கலைஞர் அவர்கள் எங்களை எல்லாம் அப்படித்தான் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
5 முறை முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது அவர் மக்களுக்கு என்னென்ன பணிகளை ஆற்றி இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். மீண்டும் கழகம் உங்களுடைய ஒத்துழைப்போடு உங்களுடைய ஆதரவோடு பொறுப்பேற்கும் நேரத்தில், அந்தத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் அத்தனை உறுதிமொழிகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை மீண்டும் உங்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, திருவாரூர் தொகுதியில் நம்முடைய பூண்டி கலைவாணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், நன்னிலம் தொகுதியில் எஸ்.ஜோதிராமன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், வேதாரண்யம் தொகுதியில் வேதரத்தினம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் - நம்முடைய கூட்டணி வேட்பாளர் மாரிமுத்து அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும் வாக்களித்து நீங்களெல்லாம் மாபெரும் வெற்றியை தேடித் தரவேண்டும்.
வெற்றிவிழா நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திக்க ஒரு நல்வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, உங்களுடைய அன்பான உற்சாக வரவேற்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி… நன்றி… நன்றி… என்று கூறி விடைபெறுகிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!