M K Stalin
“தி.மு.கவை விமர்சிக்க மோடிக்கு உரிமை இல்லை”: பா.ஜ.க ரவுடிகளின் பட்டியலை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் விளாசல்!
“தமிழகம், புதுவையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புள்ள ரவுடிகள் பா.ஜ.க.வில் இணைந்து கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க.வை விமர்சிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு உரிமை இல்லை.
தமிழக நிர்வாகத்தையும் சீரழித்து, நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக்கிவிட்டு பழைய திட்டங்களுக்கு பச்சைப் பெயிண்ட் அடித்து புதிய திட்டங்கள் என்று கூறிக் கல்வெட்டுகளைத் திறந்து ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (26-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், விழுப்புரம் மாவட்டம், தீவனூர் - நான்கு முனை கூட்டு சாலை அருகில் நடைபெற்ற, விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் அவர்களது மறைவிற்கு இக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் நிறைவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை விவரம்:
“உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்கள் பயணத்தை ஜனவரி 25 ஆம் தேதி திருவண்ணாமலையில் நான் தொடங்கினேன். இதுவரை நான்கு கட்டங்களாக நடந்துள்ள இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இதுவரை 152 தொகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை மனுக்களாக வாங்கி வைத்துள்ளேன். ஐந்தாம்கட்டப் பயணத்தை இன்று தொடங்குகிறேன். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த மாவட்டத்துக்கு எனது வாழ்க்கையில் எத்தனையோ முறை வந்துள்ளேன். கழக நிகழ்ச்சிக்காக, அரசுப் பணிகளுக்காக என்று எத்தனை முறை வந்திருக்கிறேன் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது. இன்று நான் வந்துள்ள நோக்கம் மிக மிக முக்கியமானது.
உங்களின் கவலைகளைக் கேட்டறிவதற்காக வந்திருக்கிறேன். கேட்பதற்காக மட்டுமல்ல, அதனை என்னால் நிவர்த்தி செய்ய முடியும் என்று சொல்வதற்காக வந்திருக்கிறேன். அதுவும் 100 நாட்களில் சரி செய்ய முடியும் என்று சொல்வதற்காக வந்திருக்கிறேன். அதுவும், என்னை நீங்கள் கேள்வி கேட்கலாம் என்பதைச் சொல்வதற்காகவும் வந்திருக்கிறேன். தமிழக வரலாற்றில், இந்திய வரலாற்றில் மிக முக்கியமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இது. இந்த திட்டத்தை தொடங்கியதில் இருந்து, என்னைச் சந்திக்கும் ஊடகவியலாளர்கள், ''இதை எப்படி நிறைவேற்ற முடியும்?" என்ற சந்தேகத்தைத் தான் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அவர்களிடம் நான் சொல்லும் பதில், என்னால் முடியும் என்று சொல்லி வருகிறேன். இந்த ஸ்டாலினால் முடியும் என்று சொல்லி வருகிறேன். கலைஞர் மகன் ஸ்டாலினால் நிச்சயம் முடியும் என்று சொல்லி வருகிறேன்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. தீர்க்க முடியும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. நிச்சயம் தீர்ப்பேன். என்னை நம்பி நீங்கள் உங்கள் மனுக்களை ஒப்படைத்திருக்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையை நிச்சயம் நான் காப்பாற்றுவேன். இந்த மக்கள் பயணத்தின் மகத்தான வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சில ஊடகங்கள் இதனைக் குறை சொல்லி எழுதுகின்றன. அதாவது தி.மு.கழகத்தை குறை சொல்லி எழுதுவதன் மூலமாக பழனிசாமியை திருப்திப்படுத்துகின்றன. ஸ்டாலினை திட்டி எழுதினால் உங்களுக்கு அரசாங்க விளம்பரம் கிடைக்கிறது, பணம் வருகிறது என்றால் திட்டி எழுதிக்கொள்ளுங்கள். அப்போதும் நான் உங்களுக்கு நன்மையைத் தான் செய்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள். ஸ்டாலின் மனு வாங்குகிறார், சில மனுக்களை எடுத்து பேசச் சொல்கிறார், மனுக்களை வாங்கி பெட்டியில் போட்டு பூட்டுகிறார், சீல் வைக்கிறார், சாவியை தனது சட்டைப் பையில் போட்டுக் கொள்கிறார். வழக்கமாக இதுதான் நடக்கிறது என்று ஒரு நாளிதழ் எழுதி இருக்கிறது. இது என்ன மாதிரியான நிகழ்ச்சி என்றே அவர்களது மூளைக்குள் இன்னும் புரியவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?
அனைத்து தொகுதி மக்களிடமும் மனு வாங்க வேண்டும் என்றால் 234 தொகுதியிலும் அதைத்தானே செய்ய வேண்டும்? வேறு என்ன செய்யச் சொல்கிறது அந்த நாளிதழ்? கல்லூரி பேராசிரியர் வருகிறார், பாடம் நடத்துகிறார், தேர்வு வைக்கிறார், பாஸ் போடுகிறார் - இது எல்லாம் ஒரு கல்லூரியா என்று எழுதினால் மூளை வளர்ச்சி இல்லை என்று எப்படிச் சொல்வோமோ அப்படித்தான் அந்த நாளிதழ் எழுதுகிறது. நீங்கள் விமர்சித்து எழுதுங்கள். எழுதுவதன் மூலமாக நாங்கள் சரியாகச் செயல்படுகிறோம் என்று அர்த்தம்.
எப்படியாவது தி.மு.க வெற்றியைத் தடுத்துவிட அவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்கள் இப்படி எழுத எழுதத்தான் திமுகவினர் உற்சாகமாக, எழுச்சியாக பணியாற்றுகிறார்கள். இன்னும் சில வாரங்களில் இந்த ஆட்சியின் கதை முடியப் போகிறது. இது நம்மைவிட பழனிசாமிக்கு நன்கு தெரியும். அதனால் தான் தினமும் அபத்தமான க்ளைமாக்ஸ் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார். இதுவரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பழனிசாமிக்கு, இப்போதுதான் நாம் முதலமைச்சர் பதவியில் இருக்கிறோம், இந்த நாட்டு மக்களிடம் வாக்குக் கேட்டு போகவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது, என்று உணர்ந்துள்ளார்.
கல்வெட்டுக்களைத் திறந்து கொண்டு இருக்கிறார். இரண்டு மாதத்தில் அவரால் என்ன செய்ய முடியும்? எதையும் செய்ய முடியாது. பதவியைக்காலி செய்வதைத் தவிர வேறு எதற்குமே நேரமில்லை இப்போது.
இடைக்கால நிதிநிலை அறிக்கை என்ற பெயரால் ஒரு அறிக்கையை பழனிசாமியும், பன்னீர்செல்வமும் வெளியிட்டு உள்ளார்கள். ஏராளமான கற்பனை அறிவிப்புகளை அறிவித்துள்ளார்கள். இந்தக் கற்பனைகள் எல்லாம் ஏன் கடந்த ஆண்டு வரவில்லை? அதற்கு முந்தைய ஆண்டு எதனால் எழவில்லை? ஆட்சி முடியும் போதுதான் ஞானோதயம் வருகிறதா? தமிழக நிர்வாகத்தை சீரழித்துவிட்டார்கள். நிதி நிர்வாகத்தையும் நிர்மூலம் ஆக்கி விட்டார்கள். பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தெரிந்த ஒரே வழி, கடன் வாங்குவது.
கடன் வாங்கி கடன் வாங்கி தமிழ்நாட்டின் கடன் தொகையை 5.70 லட்சம் கோடியாக ஆக்கிய கடனாளி அரசு தான் இந்த பழனிசாமி அரசு. அந்தப் பணத்தை தனது பினாமிகளுக்கு டெண்டர் விட்டு பங்கிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இது மட்டும் தான் பழனிசாமிக்குத் தெரிந்த ஒரே நிதி நிர்வாகமாக இருந்துள்ளது. தனது சுய விளம்பரத்துக்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்து வருகிறார்.
தேர்தலுக்கு சில வாரங்கள் இருக்கும் நிலையில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து- அரசு கஜானாவை காலி செய்துள்ளார் முதலமைச்சர். கொரோனா நிதியிலும் ஊழல் செய்து - உயிர் காக்கும் நிதியில் கூட வேட்டை ஆடியிருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். தமிழ்நாட்டுப் பக்கமாக அடிக்கடி வர ஆரம்பித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். தேர்தல் வரப்போவதால் இனி அடிக்கடி வருவார் என்று நான் சில வாரங்களுக்கு முன்னால் சொன்னேன். அதே மாதிரிதான் அவரும் வருகிறார்.
கடந்த முறை வந்தவர் ஒரு பக்கம் பழனிசாமி கையையும் இன்னொரு பக்கம் பன்னீர்செல்வம் கையையும் தூக்கி காண்பித்தார். இரண்டுமே ஊழல் கைகள். அதைப் பிடிப்பதன் மூலமாக இந்த ஊழலுக்கு தானும் உடந்தை என்பதைப் போல காட்டினார்.
தனது தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறுகுறு தொழில் துறையை மொத்தமாக மோடி சிதைத்துவிட்டார் என்று கோவை, திருப்பூர் வட்டாரத்து வர்த்தகர்களுக்கே தெரியும். எனவே மோடி சொல்வது கடைந்தெடுத்த பச்சைப் பொய் என்பதை அவர்களே சொல்வார்கள்.
கொட்டும் பனியில் 90 நாட்களைக் கடந்தும் போராடும் விவசாயிகள் மீது கொஞ்சமும் இரக்கம் பிறக்காத பிரதமர் மோடி, இந்திய நாட்டின் வேளாண்மையைக் காக்க வந்த நவபுருஷரைப் போல பேசிவிட்டு போயிருக்கிறார்.
தான் ஒரு பிரதமர் என்பதையும் மறந்து தரமற்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து மோடி செய்துள்ள விமர்சனங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்துபட்டது எனவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள் தான் என்று சொல்லி இருக்கிறார் மோடி. என்ன ஆதாரத்தை வைத்துக் கொண்டு மோடி இப்படி பேசினார்? அவருக்கு தரப்பட்ட புள்ளிவிவரம் என்ன?
அராஜகத்தை பற்றி யார் பேசுவது? 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பச்சைப்படுகொலைகளை இந்திய நாடு இன்னும் மறக்கவில்லை. குஜராத்தை விட்டு மோடி டெல்லிக்கு வந்துவிட்டார் என்பதற்காக அந்தப் பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது.
மூன்று வேளாண் சட்டத்தைக் கொண்டு இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளை துன்பத்தில் தள்ளிய மோடிக்கு திமுகவை குற்றம் சாட்ட உரிமை இருக்கிறதா? இதுவரைக்கும் பல விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். அவர்களது மரணத்துக்கு யார் காரணம்?
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்து லட்சக்கணக்கான மக்களை நிம்மதி இல்லாமல் ஆக்கியது யார்? அத்தகைய மோடிக்கு தி.மு.கவை பற்றி பேச உரிமை உண்டா?
கொள்ளை அடிப்பதைத் தொழிலாகக் கொண்ட டெண்டர் பழனிசாமியையும் பாதபூஜை பன்னீர்செல்வத்தையும் மிரட்டி பணிய வைத்து அப்பாவி அ.தி.மு.க தொண்டர்களின் வாக்கை பா.ஜ.கவுக்கு திருடிப் போக வந்திருக்கும் மோடிக்கு தி.மு.கவை பற்றி பேச உரிமை இல்லை!
இந்திய நாட்டின் அதிகாரம் பொருந்திய பதவியில் இருக்கும் மோடி அவர்களே! சமீப காலமாக தமிழக - புதுவை பா.ஜ.கவில் சேரும் சிலரது பின்னணி என்ன என்பதை மத்திய உளவுத்துறை மூலமாக விவசாரித்துப் பாருங்கள்.
1) புளியந்தோப்பு அஞ்சலை - கொலை உள்ளிட்ட பத்து குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளது.
2) கல்வெட்டு ரவி – 6 முறை குண்டர் சட்டத்தில் கைது, 8 கொலை வழக்குகள் உள்ளிட்ட 30 குற்ற வழக்குகள்.
3) புதுவை எழிலரசி – புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலைவழக்கில் சிறைக்குச் சென்றவர்.
4) சீர்காழி சத்யா – செங்கல்பட்டு பகுதியில் மணல் கொள்ளையைத் தடுப்போரைத் தலையை வெட்டிக் கொலை செய்யும் கூலிப்படைத் தலைவர்.
5) சேலம் முரளி
6) நெற்குன்றம் சூர்யா
7) புதுவை சோழன்
8) புதுவை விக்கி
9) பாம் வேலு
10) மயிலாப்பூர் டொக்கன் ராஜா
11) குரங்கு ஆனந்த்
12) குடவாசல் அருண்
13) சீர்காழி ஆனந்த்
14) சென்னை பாலாஜி
15) குடந்தை அரசன்
16) தஞ்சை பாம் பாலாஜி
17) ஸ்பீடு பாலாஜி
18) அரியமங்கலம் ஜாகிர்
19) தஞ்சை பாக்கெட் ராஜா
20) குடவாசல் சீனு
21) பல்லு கார்த்திக்
22) பல்லு சீனு
23) பூண்டு மதன்
24) மெடிக்கல் காலேஜ் வெற்றி
25) சுரேஷ்
26) மண்ணிவாக்கம் ஜோஷ்வா
- இவர்கள் எல்லாம் யார் என்று விசாரியுங்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் விசாரிக்கச் சொல்லுங்கள். வாய்க்கு வந்த வார்த்தைகளால் தி.மு.க-வை விமர்சிப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
“ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா" என்று பேசி இருக்கிறார் மோடி. நல்லவேளை இதைக் கேட்க ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இல்லை.
மாநிலங்களில் சிறந்த ஆட்சியைக் கொடுத்தது தமிழகத்தைச் சேர்ந்த இந்த லேடியா? குஜராத்தை சேர்ந்த மோடியா? என்று ஜெயலலிதா உரக்கக் கேட்டது இன்னும் தமிழ்நாட்டில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது மோடி அவர்களே!
"ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. ஊழல் நிறைந்த இந்த ஜெயலலிதா ஆட்சியை மாற்ற வேண்டும்" என்று 2016 மே 7 ஆம் நாள் ஓசூரிலும் சென்னையிலும் நீங்கள் தான் பேசினீர்கள் மோடி அவர்களே. மறந்துவிட்டதா?
"குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் முதல் பெரியவர்கள் குடிக்கும் மதுபானம் வரை ஊழல் செய்தவர் ஜெயலலிதா. ஊழல் மேல் ஊழல் செய்யும் ஆட்சிக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா" என்று 2016 ஆம் ஆண்டு மே 5 ம் தேதி மதுரையில் பேசியவர் அமித்ஷா.
அந்த தேர்தலில் தமிழக பா.ஜ.க ஒரு விளம்பரம் வெளியிட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை முதலமைச்சர் ஜெயலலிதா சந்திக்க மறுத்துவிட்டார் என்பதை வைத்து அந்த கார்ட்டூன் வரையப்பட்டு இருந்தது.
"அம்மா! அமைச்சர் பியூஸ் கோயல் வந்திருக்காங்கம்மா. ஏதோ திட்டங்கள் பற்றி பேசனுமாம்" என்று வீட்டுப் பணியாளர் சொல்வார். உடனே சசிகலா சொல்வார், ''இவங்களுக்கு வேற வேலையே கிடையாது. அம்மா பிஸியா இருக்காங்கன்னு சொல்லு'' என்பார். அப்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் சீட்டு விளையாடிக் கொண்டு இருப்பது போல படம் வரையப்பட்டு இருந்தது. அந்த ஜெயலலிதா இறந்து போய்விட்டார் என்பதால் அவரது படத்துக்கு பூ அள்ளிப் போட்டு, அவரது கட்சித் தொண்டர்களை ஏமாற்ற வந்திருக்கிறார் மோடி.
இதுபோன்ற பல நாடகங்களை பார்த்துப் பார்த்து பழகியவர்கள் தமிழ்நாட்டு மக்கள்! தனது கொள்ளையில் இருந்து தப்ப மோடியை ஆதரிக்கிறார் பழனிசாமி. அ.தி.மு.கவின் அப்பாவித் தொண்டர்களை ஏப்பம் விடுவதற்கு வருகிறார் மோடி. இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை மக்கள் அறிவார்கள். ஏமாற மாட்டார்கள்.
பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் எல்லா வகையிலும் பாதாளத்துக்கு போய்விட்டது. இந்த தனது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக புதிய புதிய கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார். பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடித்துக் கொள்கிறார். பழனிசாமி ஆட்சியில் பச்சை பேனர் அடித்தாலே, புதிய திட்டத்தைத் தொடங்கியதைப் போல நினைத்துக் கொள்கிறார்கள்.
கடந்த 11-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது நந்தன் கால்வாய் திட்டம் என்னாச்சு என்று கேள்வி எழுப்பினேன்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்த பழனிசாமி, தெருத்தெருவாய் போய், நந்தன் கால்வாய் திட்டத்தை அமல்படுத்துவேன் என்று சொன்னார். இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை. நகரவுமில்லை.
11ம் தேதி நான் கேள்வி எழுப்பி விட்டு வந்தபிறகு, 15-ஆம் தேதி திட்டத் தொடக்கவிழா என்ற பெயரால் ஒரு பச்சை பேனரை திறந்து வைத்துள்ளார் இந்த வட்டாரத்து அதிமேதாவி மந்திரியான சி.வி.சண்முகம். 15.2.2021 அன்று நடந்த விழாவுக்கு தலைமை வகித்தவர் அமைச்சர் சி.வி.சண்முகம். இதற்கு 26 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார்கள். இந்த பச்சை பேனரில் நந்தன் கால்வாய் திட்டம் என்று இருக்கிறதே தவிர, இது முழுமையான திட்டம் அல்ல.
முழுமையான திட்டத்துக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நந்தன் கால்வாயில் சில குறிப்பிட்ட பகுதிக்கு மேம்பாடு செய்வதற்கான திட்டம் தான் இது. எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு உங்கள் வட்டாரத்து உதாரணம் இது. இப்படித்தான் எல்லா ஊர் மக்களையும் ஏமாற்றுகிறார்கள்.
12 ஆயிரம் கோடிக்கு கடன் ரத்து என்றார்கள். ஆனால் நிதிநிலை அறிக்கையில் 5 ஆயிரம் கோடியைத் தான் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அப்படியானால் 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
காகிதத்தில் எழுதி விட்டால், அது நிறைவேறிவிட்டதாக அர்த்தமா?
இப்படி பொய்யர்கள் கையில் ஆட்சி சிக்கி பத்தாண்டுகாலமாக சீரழிந்து வருகிறது. இவரகள் பெரிய திட்டங்களையும் செய்யவில்லை. மக்களின் அன்றாட தேவைகளையும் செய்யவில்லை. அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சொந்த ஊர் அவ்வையார் குப்பம். இது மயிலம் தொகுதியில் தான் உள்ளது. அந்தப் பகுதி மக்கள் கூட்டேறிப்பட்டு மேம்பாலம் கேட்டு கோரிக்கை வைத்தார்கள். சண்முகம் கட்டிக் கொடுத்தாரா?
இந்த மாவட்டத்தில் பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவைதான். இங்கள்ள ஒரே ஒரு பாலமும் நமது ஆட்சியில் கட்டப்பட்டதுதான்.
இந்த மாவட்டத்து அமைச்சர் என்ற முறையில் திண்டிவனத்துக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க முயற்சித்தாரா? புதிய நீதிமன்றம் செல்லும் வழியில் சிறிய பாலம் கேட்டு வருகிறார்களே மக்கள். அதனை அமைத்துக் கொடுத்தாரா?
தனது பதவியை வைத்து எதுவும் செய்யவில்லை என்பதால் தான் இத்தனை ஆயிரம் பேர் மனுக்களோடு இங்கு வந்துள்ளார்கள்.
கழக அரசு அமைந்ததும் இந்த மனுக்கள் அனைத்தும் பிரித்தெடுக்கப்பட்டு, உடனடியாக நிறைவேற்றப்படும்.
அமைய இருக்கும் அரசு உங்கள் அரசாக இருக்கும்.
உங்களது கோரிக்கையை நிறைவேற்றும் அரசாக இருக்கும்.
நம்பிக்கையோடு செல்லுங்கள்.
கழக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!