M K Stalin
“ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.கவினர் செய்துவரும் ரவுடியிஸத்தை ஒடுக்குவதே முதல் வேலை” - மு.க.ஸ்டாலின் உறுதி!
“அமைச்சர் வேலுமணி மீதான புகார்களுக்கு வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன; ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கைப் போன்ற வழக்கு தி.மு.க அரசு அமைந்தவுடன் வேலுமணி மீது பாயும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இன்று (19-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மாவட்டம், சிங்காநல்லூர் – ஜென்னி கிளப் எதிரில், கொடிசியா அரங்கம் அருகில் நடைபெற்ற, கோவை மாநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து கழகத் தலைவர் அவர்கள் பேசியதன் விவரம் வருமாறு:
வசந்தகுமார் என்பவரது கோரிக்கைகளுக்கு பதிலளித்து தி.மு.க தலைவர் கூறியதாவது:
‘தொழில் நகரம்’, ‘தென்னகத்தின் மான்செஸ்டர்’ என்று வர்ணிக்கப்படுவது இந்த கோவை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மத்திய அரசின் தவறான கொள்கையால் எப்படி இது முடங்கிப் போயிருக்கிறது என்பது பற்றி நம்முடைய வசந்தகுமார் அவர்கள் இங்கே குறிப்பிட்டுப் பேசினார். மனுவிலும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். பல லட்சம் மக்கள் சங்கிலித் தொடராக பல மாவட்டங்களில் இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய ஆட்சியில் நிச்சயமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மேம்பாட்டிற்கு தேவையான கொள்கை முடிவுகளை எடுப்போம். அதுமட்டுமின்றி மத்திய அரசிடம் இதை வலியுறுத்தி முனைப்போடு செயல்படுவோம்.
கணேசன் என்பவர் முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் கூறியதாவது:
பாரதியார் பல்கலைக்கழகத்தின் நிலத்தை இழந்திருக்கும் சங்கத்தை சேர்ந்தவர் கணேசன். அவர் பல ஆண்டுகளாக தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதைப் பதிவு செய்திருக்கிறார். அதற்குப் பிறகு உயர் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கியிருப்பது பற்றியும் இங்கு சொன்னார். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் சொன்ன தொகையை அரசு வழங்கவில்லை. அதற்காக தொடர்ந்து மக்களை திரட்டி பல போராட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பதையும் வேதனையோடு சொன்னார். இந்தப் பிரச்சினை கூடிய விரைவில் சரி செய்யப்படும். பொறுத்தது பொறுத்தீர்கள். இன்னும் மூன்று மாத காலம் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நிச்சயமாக அது சரி செய்யப்படும்.
விஜயா என்பவரது கோரிக்கைக்கு பதிலளித்து தி.மு.க தலைவர் கூறியதாவது:
14 வருடங்களாக துப்புரவுப் பணியாளராக வேலை செய்து கொண்டு வருகிறேன். தன்னுடைய பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று சகோதரி விஜயா அவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார். கொரோனா காலத்திலும் சலிக்காமல் மக்களுடைய உயிரைக் காப்பாற்ற உழைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி இருக்கிறார். ஆனால் அதை அரசு கண்டு கொள்ளவே இல்லை. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது யார் போராடினாலும் உடனடியாக அங்கே நேரடியாக வந்து அதை பேசி தீர்த்து வைத்திருக்கிறார். குறைகளை தீர்த்து வைத்திருக்கிறார். அதுவும் துப்புரவு பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற எளியவர்களின் போராட்டம் என்றால் உடனே அந்த இடத்திற்கு வருவது முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் மட்டும்தான். ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே கலைஞரால் வளர்க்கப்பட்டவன் நான். அவர் வழியில் நிச்சயமாக உங்கள் கோரிக்கையை உறுதியாக நிறைவேற்றுவேன். இன்றைக்கு காலையில் கூட ஒரு மோசமான செய்தியை பத்திரிகையில் ஒன்றில் படித்தேன். மிகவும் சோகமான செய்தி, மோசமான செய்தி. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர் வேல்முருகன் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற அந்தச் செய்தியைப் படித்தபோது உள்ளபடியே நான் வேதனைப்பட்டேன். 8 மாதங்களாக சம்பளம் வழங்காமல் இருந்த காரணத்தினால் விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது பற்றி அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனால்தான் நான் சொல்கிறேன், இந்த ஆட்சியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு தான் 3 மாதத்தில் வரவிருக்கும் தேர்தல். அந்த தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தி.மு.க. ஆட்சியை மலரச் செய்வதற்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கண்ணம்மாள் என்பவரது கோரிக்கைக்கு தி.மு.க தலைவர் அளித்த பதில் விவரம் வருமாறு:
விடுதலைப் போராட்ட வீரரின் மகள் கண்ணம்மாள், தங்களுக்கு ஓய்வுதியம், பஸ் பாஸ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு எல்லாம் கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்டது. அந்த நன்றியை பல குடும்பங்கள் இன்னும் மறக்காமல் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட நிலத்தை இப்போது அ.தி.மு.க.வினர் அபகரித்து விட்டதாக புகாரில் சொல்லி இருக்கிறார். நாட்டுக்காக உழைத்த தியாகி குடும்பத்திடம் கூட இப்படி ரவுடித்தனம் காட்டுவதற்கு அவர்கள் உள்ளபடியே வெட்கப்பட வேண்டும். ஆனால் நாம் வேதனைப்படுகிறோம். கவலைப்படாதீர்கள். நம் கழக ஆட்சி அமைந்ததும் அனைத்து ஊர்களிலும் அ.தி.மு.க. செய்துவரும் ரவுடியிஸத்தை ஒழிப்பதுதான் நம் முதல் வேலை. அதை ஒழிப்போம். நீங்கள் சொன்ன பிரச்சினைகளும் தீர விசாரிக்கப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாந்தி என்பவர் முன்வைத்த கோரிக்கைக்கு தி.மு.க தலைவர் அளித்த பதில் விவரம் வருமாறு:
சிறிய ஓட்டல் ஒன்று நடத்திக்கொண்டிருக்கும் சாந்தி அவர்கள் விலைவாசி ஏற்றத்தினால், குறிப்பாக சமையல் எரிவாயு விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதை மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். அதனை இப்போது பேசும்போதும் சொல்லி இருக்கிறார். அண்மையில் நம்முடைய பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தார். அப்போது வாய்கிழிய பேசினார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டுவார். அவ்வையாரை மேற்கோள் காட்டிப் பேசுவார். ஆனால் அவர் போனதற்குப் பிறகு சமையல் எரிவுவாயு விலை உயர்ந்து விட்டது. அதை நீங்கள் எல்லாம் கண்கூடாக பார்க்கிறீர்கள். அதனால்தான் வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை தி.மு.க. நடத்தப் போகிறது என்பதை அறிவித்திருக்கிறோம். அந்தப் போராட்டத்திற்கு எல்லா மாவட்டக் கழகங்களும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக செய்வோம். அதுமட்டுமின்றி கோவையில் பெண்களுக்கு இரவில் பாதுகாப்பு இல்லை. ரேஷன் வினியோகம் சரியாக இல்லை என்று புகார் சொல்லியிருக்கிறீர்கள். அவை எல்லாம் சாதாரண விஷயம். அதையெல்லாம் உடனடியாக முழுமையாகத் தீர்த்து வைத்து விடுவோம். கவலைப்படாதீர்கள். ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நிச்சயமாக உறுதியாக உங்கள் கோரிக்கைகைள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்.
இவ்வாறு பதிலளித்துப் பேசினார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் நிறைவாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
கொங்குத் தமிழால் அன்பைச் செலுத்துகிற மக்கள் வாழும் இந்த மண்டலத்தில்- தொழில்வளர்ச்சி காரணமாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த கோவையில்- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோவையில்- ஈராயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்கு செம்மொழித் தகுதியை ஏற்படுத்தி செம்மொழி மாநாடு நடத்திய இந்த மாநகரத்தில் - உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிக்காக வருகை தந்து உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமை அடைகிறேன்.
தேர்தலுக்காக வருபவன் அல்ல நான். அரசியலுக்காக வருபவன் அல்ல நான். எப்போதும், என்றும், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் நான். மக்களோடு மக்களாக இருப்பவன் நான். தமிழக மக்களுக்கு நான் ஒரு வாக்குறுதியை அளித்துள்ளேன். அ.தி.மு.க அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை 100 நாட்களில் தீர்த்து வைப்பேன் என்பது தான் நான் அளித்துள்ள வாக்குறுதி.
என்னை நம்பி நீங்கள் உங்கள் மனுக்களைக் கொடுத்துள்ளீர்கள். இன்னும் மூன்றே மாதத்தில் நடக்க இருக்கும் ஆட்சி மாற்றம் உங்கள் குறைகளைக் களையும். தமிழகம் முழுவதும் வாங்கிய மக்களின் மனுக்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசில் தனித்துறை உருவாக்கப்படும். அந்த துறை, மாவட்ட ரீதியாக இந்த மனுக்களை பிரித்து, பரிசீலித்து அதனை உடனடியாக நிறைவேற்றித் தரும் என்ற வாக்குறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன். தொகுதிவாரியாக - கிராம வாரியாக முகாம்கள் அமைத்து இப்பிரச்னைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றியே தீருவோம். அதாவது அ.தி.மு.க அரசாங்கம் செய்யத் தவறிய கடமையை- தி.மு.க அரசாங்கம் நிச்சயம் செய்து கொடுக்கும்!
இந்தக் கடமையை தி.மு.க அரசு நிறைவேற்றி முடிக்கும் போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக் குடும்பங்களின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டு இருக்கும். ஒரு கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணையாக- தலைவர் கலைஞர் மீது ஆணையாக- தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக - நான் உறுதியேற்றுள்ளேன்!
இன்றைக்கு தமிழகத்தில் ஒரு அரசாங்கம் இருக்கிறது. இது அரசாங்கமே அல்ல. சில ஊழல்வாதிகள் சேர்ந்து, தாங்கள் சம்பாதிப்பதற்காக ஒரு ஊழல் கோட்டையை எழுப்பி இருக்கிறார்கள். இதில் மிக முக்கியமானவர் ஊழலாட்சித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய வேலுமணி! வேலுமணி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எப்படி இருந்தார்? இப்போது எப்படி இருக்கிறார்? என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை.
சுண்ணாம்பு பவுடர் வாங்குவதில், பினாயில் வாங்குவதில் ஊழல் செய்யும் ஒருவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் வேலுமணி. உள்ளாட்சி அமைப்புகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டானியல் ஜேசுதாஸ் என்பவர் பல தகவல்களை வாங்கி இருக்கிறார்.
25 கிலோ கொண்ட சுண்ணாம்பு பவுடர் தனியார் கடைகளில் 170 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் 842 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். பினாயில் ஒரு பாட்டில் 20 ரூபாய்க்கு கடையில் கிடைக்கிறது. அதை 130 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். சாக்கடை அடைப்பை சரி செய்யும் டிச்சு கொத்து 130 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் அதை 1,010 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள். 1,500 மதிப்புள்ள மோட்டாரை 25 ஆயிரத்து 465 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
1,712 ரூபாய் மதிப்பிலான காப்பர் வயரை 8,429 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்கள். 870 ரூபாய் மதிப்பிலான லைட் பிட்டிங்கை 2,080 ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்கள்.
இந்த வகையில் ஒரு ஊராட்சிக்கு வாங்கிய பொருட்களில் 1 கோடி ரூபாய் கொள்ளை அடித்துள்ளார்கள் என்றால் தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்து 500 கோடி ஊராட்சிகளில் மொத்தம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அரசாங்க பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் டேனியல் ஜேசுதாஸ் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார் வேலுமணி!
சில நாட்களுக்கு முன்னால் 123 ஜோடிகளுக்கு வேலுமணி திருமணம் நடத்தி வைத்துள்ளார். அப்போது வாழும் காமராசர் என்று பழனிசாமியை புகழ்ந்துள்ளார். இதை விட பெரிய அவமானம் பெருந்தலைவர் காமராசருக்கு இருக்க முடியுமா? இப்படி வேலுமணி இலவச திருமணம் நடத்தி வைத்த அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மீதான ஊழல் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.
தமிழ்நாடு முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில் முறைகேடு செய்ததாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு புகார் அளித்திருந்தார்.
இது பற்றி லஞ்ச ஒழிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான விளக்கத்தை அரசு தரப்பால் தரமுடியவில்லை. அப்படி ஊழல் நடக்கவில்லை என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அப்படி தமிழக அரசால் சொல்ல முடியவில்லை. அரசுத்தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உள்ளாட்சித் துறை அமைச்சர் மீதான புகார் குறித்து லோக்ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். அப்படியானால் முறைகேடு நடந்திருப்பதை அரசு தரப்பே ஒத்துக் கொண்டது என்று தானே அர்த்தம்? இப்படி ஊழல் செய்பவர் தான் வேலுமணி! அவர் ஊழல் மணி தான் என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டு விட்டது.
வேலுமணி ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை இந்த கோவையில் நிறுவி உள்ளார். இதில் அவரது சகோதரர்கள், பினாமிகள் நீங்கலாக யாரும் உள்ளே நுழைய முடியாது. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் ஆளும்கட்சியைச் சேர்ந்த மற்ற காண்ட்ராக்டர்கள் கூட கோவை மாநகராட்சிக்கு உள்ளேயோ, இந்த மாவட்ட டெண்டர்களுக்கு உள்ளேயோ நுழைய முடியாது. அத்தகைய ஊழல் கோட்டையை உருவாக்கி வைத்துள்ளார்.
வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு சொந்தமான செந்தில் அண்ட் கோவும் - வேலுமணியின் பினாமியான ராஜன் என்பவரும் சேர்ந்து கோவை மாநகராட்சியை சுரண்டி முடித்துவிட்டார்கள். மிகச் சிறு டெண்டர்களை ஆரம்ப காலத்தில் எடுத்து வந்த அன்பரசன், வேலுமணி அமைச்சரான பிறகு கோடிக்கணக்கான மதிப்பிலான டெண்டர்களை எடுக்க ஆரம்பித்துள்ளார். கோவையின் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
கோவை ஸ்மார்ட் சிட்டி பணிகளை, இந்த அன்பரசனுடன் மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்ததாக அதிகாரபூர்வ செய்திக்குறிப்பே வெளியிடப்பட்டது.
வேலுமணி எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பு, கான்ட்ராக்ட் பிசினஸ் செய்துகொண்டிருந்தார். அப்போது அவருடன் நண்பர் ஆனவர்களை வைத்து இப்போது அதே காரியத்தைச் செய்து வருகிறார். இவர்களோடு தனது சகோதரர் அன்பரசனையும் சேர்த்து விட்டு காண்ட் ராக்ட் எடுத்து வருகிறார் வேலுமணி.
எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆன பிறகு, துடைப்பம், ப்ளீச்சிங் பவுடர் வாங்குவதில் தொடங்கி பல கோடி ரூபாய்களுக்கான டெண்டர்கள் வரை அனைத்தும் மையப்படுத்தப்பட்டு, அமைச்சருக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்கள் விடப்படுகின்றன.
வேலுமணிக்கு வேண்டிய ஒரு நிறுவனத்தில் 2011-12 ஆண்டு வருவாய் 17 கோடி ரூபாய்தான் இருந்தது. வேலுமணி அமைச்சர் ஆனபிறகு அந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 3,000 சதவிகிதம் அதிகமாகியுள்ளது.
டான்சி வழக்கும் இப்படித்தான் ஆரம்பித்தது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடங்கப்பட்டபோது, ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்து 1991-92ல் ஆரம்பித்தனர். அதே ஜெயா பப்ளிகேஷன்ஸ் மூலமாக டான்சி நிறுவனத்தை வாங்கினர். ‘எப்படி அவ்வளவு பணம் ஜெயா பப்ளிகேஷனுக்கு வந்தது’ என்பதுதான் எங்களின் பிரதானக் கேள்வியாக இருந்தது. எனது வழக்கின் விளைவாக டான்சி நிலத்தை ஜெயலலிதா திருப்பிக் கொடுத்தார். அதே போல, எஸ்.பி.வேலுமணிக்கும் சில நிறுவனங்களுக்குமான தொடர்புகளுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. அது போன்ற வழக்கு தான் தி.மு.க அரசு அமைந்ததும் அமைச்சர் வேலுமணி மீது நிச்சயமாகப் பாயும்! பாயும்! பாயும்!
இந்த ஊழல்களைக் கண்டுபிடிக்கும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள் என்றால் கோவை என்பதை தனது குத்தகைக்கு எடுத்துவிட்டதாக அராஜகம் செய்து கொண்டு இருக்கிறார் வேலுமணி. உங்கள் அராஜகம் முடிவுக்கு வரும் நாள் நெருங்குகிறது வேலுமணி அவர்களே!
ஊழல் செய்வது, அராஜகம் செய்வது, போலீஸை வைத்து மிரட்டுவது - கடைசியாக மக்களுக்கு பணத்தை கொடுத்து வோட்டு வாங்கலாம் என்று வேலுமணி நினைக்கிறார். மக்கள் சொத்தைக் கொள்ளையடித்து மக்களுக்கே கொடுப்பது கேவலமாக இல்லையா?
இன்றைக்கு அமைச்சர் பதவியில் இருக்கிறார்- அதனால் அரசாங்க அதிகாரிகளும் காவல்துறையும் வேலுமணிக்கு தலையாட்டிக் கொண்டு இருக்கின்றனர். ஆட்சி மாறும். அன்று காட்சியும் மாறும். வேலுமணியின் ஊழலாட்சிக்கு முடிவுகட்ட- அராஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் கழகம் வென்றாக வேண்டும்.
கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.கவின் கோட்டை என்று சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதில் ஓட்டை விழுந்துவிட்டது. இந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக ஆழக் குழிதோண்டிப் புதைப்போம்! மக்கள் பேராதரவுடன் அதை நடத்தி முடிப்போம். இது உறுதி!
தலைவர் கலைஞர் நினைவிடத்தில் அந்த வெற்றியைக் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். தலைவர் கலைஞரின் கடைசி ஆசை – ஆட்சிக்கு வரவேண்டும் என்பது கூட அல்ல, இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் கலைஞரின் கடைசி ஆசை. அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னால் – அவர் இன்றைக்கு நம்மிடையே இல்லை என்று சொன்னாலும் – அவருடைய எண்ணங்கள், உணர்வுகள், எழுத்துகள், பேச்சுகள், உழைப்பு, கடமைஸ கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் நமது உள்ளத்தில் இருக்கிறது.
அவர் மறைந்தபோது, அண்ணா அருகே ஓய்வெடுக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை நிறைவேற்ற தடை போட்டார்களே! மறுத்தார்களே! இடம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமா சொன்னார்களே இந்த நயவஞ்சகர்கள்! அவர்களுக்கு நாம் பாடம் புகட்டிட வேண்டாமா? தலைவர் கலைஞர் அவர்களைக் கடைசி நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகமிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மைச் சமுதாயங்களுக்கு இடஒதுக்கீடைப் பெற்றுத் தந்த கலைஞருக்கு ஆறடி நிலம் கிடைக்கவில்லை; கொடுக்க முடியாது என மறுத்தார்கள். நீதிமன்றம் சென்று போராடி, வாதாடி, வெற்றி பெற்று அதற்குப் பிறகு அண்ணாவின் அருகிலே தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்க வைத்திருக்கிறோம். இந்த நாட்டிற்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த, பல பிரதமர்களை உருவாக்கிய, குடியரசுத் தலைவர்களையே உருவாக்கித் தந்த தலைவர் கலைஞருக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த இந்தக் கயவர்களுக்கு தமிழ்நாட்டிலே நாம் இடம் கொடுக்கலாமா? அதற்குப் பதில் சொல்கிற நாள்தான் வரும் தேர்தல் என்பதை மனதில் வைத்து, நீங்கள் அத்தனை பேரும் கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!