M K Stalin
“கோவையை மொத்தமாக கொள்ளையடிக்க வேலுமணிக்கு குத்தகைக்கு விட்டுள்ளாரா பழனிசாமி?" - மு.க.ஸ்டாலின் விளாசல்!
“இந்தியாவிலேயே, ‘அக்மார்க் ஊழல் அரசு’ பழனிசாமி அரசுதான் என்பதை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தி.மு.க.வால் நிரூபிக்க முடியும்; அதற்கு முன்னால் மக்கள் மன்றத்தால் பழனிசாமி தண்டிக்கப்பட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (19-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – காரமடை அருகில் நடைபெற்ற, கோவை வடக்கு மற்றும் நீலகிரி மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
இயற்கை எழில் கொஞ்சும் இந்த உதகை மாவட்டத்தில் - மணம் கமழும் மேட்டுப்பாளையத்தில் உங்களை எல்லாம் சந்திக்கும் உன்னதமான வாய்ப்பை இந்த மாலை வேளையில் நான் பெற்றிருக்கிறேன்!
தமிழகத்தை பூந்தோட்டம் என்றார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இந்தப் பூந்தோட்டத்தில் எத்தனை விதமான மலர்கள் இருக்கிறது என்பதையும் அவரே வர்ணித்தார்.
அதன்பிறகு சொன்னார், ''இத்தகைய சீர்குலுங்கும் நந்தவனத்தின் ஒரு மூலையில் கள்ளிச் செடியும் இருக்கிறது" என்றார். அத்தகைய கள்ளிச் செடிகளை அகற்றுவதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல்!
கோவையில் நடக்கும் பல விஷயங்கள் மர்மமாக இருக்கின்றன. அதில் ஒன்று கோவையின் குடிநீர் விநியோகம்.
உள்ளாட்சித் துறையில் மிக முக்கியப் பணியே குடிநீர் விநியோகம் தான். அதையே தனியாருக்கு தாரை வார்த்துவிட்டார் வேலுமணி. இதைக் கூட உங்கள் துறையால் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக துறையை வைத்துள்ளீர்கள்? அதைக் கலைத்து விட வேண்டியதுதானே!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துக்கு 3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் அதிகாரப்பூர்வமான செய்திகள் அல்ல. சொல்லப்படும் தகவல்கள் தான்.
ஒரு அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது என்றால் வெளிப்படைத் தன்மை வேண்டாமா? தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது சம்பந்தமாக கேட்டபோதும் உண்மையைச் சொல்லவில்லை. குடிநீர் திட்டத்தை தனியாரிடம் கொடுக்கவில்லை, குடிநீர் குழாய்களை சரி செய்யச் சொல்லி இருக்கிறோம் என்று மாநகராட்சி சொன்னது. அதன்பிறகு விநியோகம் செய்யும் உரிமையை கொடுத்துள்ளோம் என்றார்கள்.
இப்போது கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 72 வார்டுகளிலும் அந்த நிறுவனம் பணியைத் தொடங்கி நடத்தி வருகிறது. அப்படியானால் இனி தண்ணீர் விநியோகம் அவர்கள் தான் செய்யப் போகிறார்களா? செய்தால் குடிநீர் கட்டணத்தை அவர்கள் தான் நிர்ணயிப்பார்களா? எவ்வளவு நிர்ணயிப்பார்கள்? அதற்கு அவர்களுக்கு இந்த அரசால் என்ன உத்தரவாதம் தரப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை!
ஆனால் இந்த சூயஸ் திட்டத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பினால் கைது நடவடிக்கை என்று வேலுமணியின் வட்டாரம் விளம்பரம் கொடுத்து மிரட்டுகிறது என்றால் கோவை என்பது வேலுமணியின் குத்தகை பூமியா?
கோவையை மொத்தமாக கொள்ளையடிக்க வேலுமணிக்கு பழனிசாமி குத்தகைக்கு விட்டுள்ளாரா?
பாலம் கட்டினால் மட்டும் தான் துட்டு அடிக்க முடியும் என்பதால், தேவையில்லாத இடத்தில் எல்லாம் பாலம் கட்டத் தொடங்கி இருக்கிறார்கள் பழனிசாமியும் வேலுமணியும்.
சேலத்திலும் கோவையிலும் பழனிசாமியும் வேலுமணியும் கட்டி இருப்பது மக்கள் பயன்பாட்டுக்கான பாலங்கள் அல்ல, ஊழல் பாலங்கள்.
அரசாங்கத்தை விமர்சித்தால் கைது செய்வேன், நடவடிக்கை எடுப்பேன், மிரட்டுவேன், பொய் வழக்கு போடுவேன் என்றால் வேலுமணியின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா?
அமைதிக்குப் பேர் போன கோவையை கொந்தளிக்கும் நகரமாக மாற்றிய வேலுமணிக்கு தக்க பாடம் புகட்டுங்கள்!
அ.தி.மு.க என்ற அரசியல் இயக்கத்தை எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கினார்கள். ஜெயலலிதா அதனை நடத்தினார்கள். அரசியல் ரீதியாக அவர்களுக்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு.
அது வேறு. ஆனால் இருவருக்கும் ஆளுமைத் திறன் இருந்தது. அத்தகைய ஆளுமைத் திறன் இல்லாதவர் பழனிசாமி. அவரை முதலமைச்சர் ஆக்குவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை.
வேறு வழியில்லாமல் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் பழனிசாமி. அந்தப் பதவியை வைத்து தமிழ்நாட்டுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறாரா என்றால் இல்லை!
கெடுதலை மட்டுமே அதிகமாகச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டின் மானத்தையே அடமானம் வைத்துவிட்டார். டெல்லி பாஜக தலைமைக்கு கொத்தடிமையாக அடிமைசாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார். சாதாரண பழனிசாமி, யாருக்கு அடிமை ஆனாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் அவர் சாதாரண பழனிசாமி அல்ல, முதலமைச்சர் பழனிசாமி! தமிழ்நாட்டின் முதலமைச்சர். தமிழகத்தின் உரிமையை அடமானம் வைத்து முதலமைச்சராக நீடித்து வருகிறார்.
தமிழின் உரிமையை தமிழரின் உரிமையை, தமிழ்நாட்டின் உரிமையை பற்றி பேசக்கூடாது. அப்படி பேசாமல் இருந்தால் உங்களை ஆதரிப்போம் என்று மிரட்டுகிறது பா.ஜ.க.
சிறுபான்மை சமூகத்தை காவு வாங்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தால் உங்களை நாங்கள் ஆதரிப்போம் என்று மிரட்டுகிறது பா.ஜ.க.
மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தால் உங்களை நாங்கள் ஆதரிப்போம் என்று மிரட்டுகிறது பா.ஜ.க.
இப்படி பா.ஜ.க சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக பழனிசாமி இருப்பதால் மட்டும் தான் அவரது ஆட்சி இத்தனை ஆண்டுகள் நீடித்தது.
தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்ள தமிழகத்தை, தமிழக உரிமைகளை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி என்பதால் தான் அவரது ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாடே அந்த முடிவுக்கு வந்துவிட்டது.
நீலகிரி மாவட்டத்து மக்களின் கோரிக்கைகள், தேவைகள் என்னவென்பதை நானறிவேன், குன்னூர், உதகை, கூடலூர் வட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல், குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். தேயிலைக்குக் குறைந்தபட்ச விலை தரப்பட வேண்டும். எஸ்டேட் தொழிலாளர்கள் ஊதியம் முறைப்படுத்தப்பட வேண்டும். கட்டட அனுமதி வழங்குவதை ஒழுங்குபடுத்த வேண்டும். இதுபோன்றவைதான் மிக முக்கியமான பிரச்சினைகளாக உள்ளன. இதனைக் கழக அரசு நிச்சயமாகத் தீர்க்கும் என்று நான் உறுதி கூறுகிறேன். உலகச் சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு பணிகள் செய்து தரப்படும். மலைநகரமாக இருப்பதால் அதற்கான சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும் என்ற உறுதிமொழியை உங்களுக்கு நான் வழங்குகிறேன்.
இந்த கொங்கு மண்டலத்தில் சில தொகுதிகளையாவது கைப்பற்றி விடலாமா என்ற நப்பாசையில் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் வேலுமணியும் அலை பாய்ந்து கொண்டு இருக்கிறார்கள். அடித்து வைத்த பணத்தைக் கொண்டு வெற்றி பெற முடியுமா என்று பார்க்கிறார்கள். அது மக்கள் பணம் என்பது மக்களுக்குத் தெரியும். அது கொள்ளையடித்த பணம் என்பதும் மக்களுக்குத் தெரியும். தமிழநாட்டு மக்களை குறைத்து எடை போடாதீர்கள் என்று பழனிசாமி கூட்டத்துக்கு எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.
கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.கவின் எஃகு கோட்டை என்று சில நாட்களுக்கு முன்னால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். இந்த எஃகு கோட்டையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே ஓட்டை போட்டுவிட்டோம் பன்னீர் அவர்களே!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு தொகுதி தவிர அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற்றது தி.மு.க கூட்டணி. அதுவும் சாதாரண வெற்றி அல்ல. 5 லட்சம், 4 லட்சம், 3 லட்சம், 2 லட்சம் என்று வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கூட்டணி தான் தி.மு.க கூட்டணி.
கோவையில் 1,79,143 வாக்குகள் வித்தியாசம்.
நீலகிரியில் 2,05,823 வாக்குகள் வித்தியாசம்.
ஈரோட்டில் 2,10,618 வாக்குகள் வித்தியாசம்.
திருப்பூரில் 93,374 வாக்குகள் வித்தியாசம்.
கரூரில் 4,20,546 வாக்குகள் வித்தியாசம்.
நாமக்கல்லில் 2,65,151 வாக்குகள் வித்தியாசம்.
பொள்ளாச்சியில் 1,75,883 வாக்குகள் வித்தியாசம்.
சேலத்தில் 1,46,926 வாக்குகள் வித்தியாசம்.
- எங்கே போனது உங்களது எஃகு கோட்டை? அப்படிச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருந்தீர்கள். அதற்கு தக்க பாடத்தை நாடாளுமன்றத் தேர்தலிலேயே மக்கள் கற்பித்தார்களா இல்லையா?
முதலமைச்சர் நம்ம மாவட்டம்! செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் என்று மேற்கு மண்டலத்தில் ஏராளமான அமைச்சர்கள் இருப்பதாக பெருமைப்படுகிறீர்களே? இந்தக் கொங்கு மண்டலத்தை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டீர்களா?
இந்த மாவட்டத்து மக்களுக்கு எந்தக் குறையும் இல்லையா? மக்கள் பிரச்னையை தீர்த்திருந்தால் இத்தனை ஆயிரம் பேர் மனுக்களோடு இங்கே வந்திருப்பார்களா?
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் - மக்களது கவலைகளைத் தீர்க்காமல் - மக்களது விருப்பங்களுக்கு விடை காணாமல் - வெறுமனே ஊர்ப்பெருமை, வட்டாரப் பெருமை பேசுவதால் என்ன பயன்?
கவுண்டர் சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது- அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்- ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி ஒருருபாய்- - இப்படி காலமெல்லாம் ஒரு மனிதனை வாழவைக்கும் திட்டம் கொடுத்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.
ஆட்சி முடிகிற நேரத்தில் தற்காலிக மருத்துவ முகாமை மினி கிளினிக் ஆக்கி மக்களை ஏமாற்றுகிற ஆட்சி தான் பழனிசாமி ஆட்சி. எல்லா அறிவிப்புகளும் வெற்று அறிவிப்புகள். போலி அறிவிப்புகள். ஆயிரம் கோடி செலவு செய்து பக்கம் பக்கமாக கொடுக்கப்படும் விளம்பரம் ஒவ்வொன்றையும் தோண்டிப் பார்த்தால் ஒன்று பொய்யான தகவலாக இருக்கும். அல்லது அது காலம் காலமாக இருக்கும் திட்டமாக இருக்கும்.
தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தைக் கூட தனது பேரைச் சொல்லிக் கொள்கிறார் பழனிசாமி. 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டங்களையும் நிறைவேற்றவில்லை!
2016 தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை! விதி எண் 110 இன் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்ததையும் நிறைவேற்றவில்லை. எதையும் நிறைவேற்றத் துப்பு இல்லாத பழனிசாமி தான், ஊர் ஊராகப் போய் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.
எல்லாவற்றிலும் நம்பர் ஒன் தமிழ்நாடு- நிறைய விருது வாங்கி இருக்கிறேம்- இதை திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறார். பழனிசாமிக்கு விருது தருவதாக இருந்தால் ஊழலில் நம்பர் ஒன் என்ற விருதைத் தான் தரவேண்டும்! கடன் வாங்கி கஜானாவில் சேர்த்து, அதைச் சுருட்டுவதில் வல்லவர் என்பதற்கான விருதைத்தான் தர வேண்டும்!
அகில இந்தியாவிலேயே அக்மார்க் முத்திரை பதித்த ஊழல் அரசு, இந்த பழனிசாமி அரசு தான். இதனை எந்த நீதிமன்றத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிரூபிக்க முடியும்.
அதற்கு முன்னதாக மக்கள் மன்றம், பழனிசாமிக்கு தக்க தண்டனையைத் தர வேண்டும். தண்டனை தரும் தேர்தல் தான் இந்த தேர்தல்.
அத்தகைய தேர்தலுக்கு பிறகு அமையும் கழக ஆட்சியில் உங்களது அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு 100 நாளில் உரிய நடவடிக்கை எடுப்போம்,
கழக ஆட்சி மலரும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! நன்றி வணக்கம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!