M K Stalin
“ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார்- தி.மு.க ஆட்சியில் விசாரணை உறுதி” : மு.க.ஸ்டாலின் பேச்சு!
“2001-ல் இருந்ததை விட பல ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்துக் குவிப்பு புகார் குறித்து தி.மு.க அரசு அமைந்ததும் விசாரணை நடத்தப்படப்படுவது உறுதி. வெற்றிக் கோட்டையைக் கைப்பற்ற வியூகம் அமைப்பதற்கான கழகத்தின் மாநில மாநாடு தீரர்களின் கோட்டமாம் திருச்சியில் வரும் மார்ச் 14-ஆம் தேதி நடைபெறும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (18-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி மாவட்டம், கம்பம் – உத்தமபாளையம் பேரூர், கோகிலாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற்ற, தேனி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். நிகழ்வை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“கண்களில் கனவுகளோடும், கையில் மனுக்களோடும், இதயத்தில் ஏக்கத்துடனும் - இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் தமிழ்மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயபூர்வமான வணக்கத்தையும் நன்றியையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்!
உங்களது நீண்ட காலப் பிரச்னைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவது தான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார், இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் - என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத் தான் என்னுடைய சொத்தாக கருதுகிறேன்.
இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல! நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ - அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்! உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவிகிதம் உண்மையாக இருப்பேன்!
இன்னும் மூன்றே மாதங்கள் தான். காத்திருங்கள்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மலர இருக்கிறது. அப்போது உங்கள் முகங்கள் மலரும்! என்ற தேன் போன்ற இந்த வாக்குறுதியை தேனி மாவட்ட மக்களுக்கு நான் வழங்க விரும்புகிறேன்!
தேனி என்பது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருக்கக் கூடிய ஓ.பன்னீர்செல்வம் பிறந்த வட்டாரம்! இந்த நாட்டுக்கு மூன்று முறை முதலமைச்சராக வரக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இன்றைக்கு துணை முதலமைச்சராக இருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது செய்தாரா என்றால் இல்லை!
இதுவும் அ.தி.மு.க ஆட்சியால் புறக்கணிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட வட்டாரமாக, மாவட்டமாகத் தான் இருக்கிறது என்பது உங்கள் பலரது கோரிக்கைகள் மூலமாகத் தெரிகிறது.
* முல்லைப்பெரியாறு உரிமையை நிலைநாட்டி உள்ளாரா என்றால் இல்லை!
* பி.டி.ஆர். கால்வாயை விரிவுபடுத்துவதற்கான வாக்குறுதியை பத்தாண்டு காலமாக அவர் நிறைவேற்றவில்லை.
* பல்வேறு கிராம பஞ்சாயத்துகளுக்கு நிரந்தரக் குடிநீர் வசதியை செய்து தரவில்லை!
* போடிநாயக்கனூரில் வசிப்பவர்கள் கோட்டகுடி நதிக்கு தடுப்பு அணை அமைக்கக் கோரி வருகின்றனர். அது அமைக்கப்படவில்லை!
* கதிர்வீச்சு ஏற்படுத்தக் கூடிய நியூட்ரினோ திட்டத்தால் இந்த வட்டாரத்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவில்லை!
* பெரிய தொழிற்சாலைகளை உருவாக்கவில்லை!
* புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவில்லை!
* நெல் கொள்முதல் மையம் உருவாக்கித் தரவில்லை!
* மா விவசாயிகளின் கோரிக்கையான மாம்பழக் கூழ் பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வரவில்லை!
* குமுளியில் பஸ் டிப்போ இல்லை!
* அரண்மனை புதூர், கொடுவிலார்பட்டி, நாகலபுரம், ஸ்ரீரங்கபுரம், வெங்கடச்சலபுரம், குப்பினநாயக்கன்பட்டி, அம்பசமுத்திரம், கோவிந்தநகரம், ஜங்கல்பட்டி, கட்டுனாயாகம்பளபூண்டு ஆகிய ஊர்களின் பாசனம் மேம்படுத்தப்படவில்லை!
* முதியோர் பென்சன் பிரச்னையைக் கூட பன்னீர்செல்வம் தீர்க்கவில்லை!
- இப்படி ஏராளமான கோரிக்கைகளை இந்த வட்டாரத்துக்கு நிறைவேற்றிக் கொடுக்காத பன்னீர் செல்வம் தான் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்!
இந்த வட்டாரத்து மக்களுக்குக் கூட உண்மையாக இல்லை!
ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் உண்மையாக இல்லை! ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருக்கிறாரா? இல்லை! அவருக்கு இரண்டு முறை முதலமைச்சர் பதவி கொடுத்தவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவுக்கும் உண்மையாக இல்லை.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் சேர்ந்தார். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை இதுவரை தீர்க்கவில்லை. மூன்றாவது முறை அவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தவர் சசிகலா. அவருக்கும் உண்மையாக இல்லை. அவரை எதிர்த்தே தனியாக போனார்.
அடுத்து பழனிசாமியிடம் போய் சேர்ந்து துணை முதலமைச்சர் ஆனார். இப்போது அவருக்கும் உண்மையாக இல்லை. தான் முதலமைச்சர் ஆவதற்காக பழனிசாமியை எதிர்த்துக் கொண்டு இருக்கிறார்!
ஊரை ஏமாற்றுவதற்காக 'அயோத்திக்கு கிடைத்த பரதனைப் போல தமிழகத்துக்கு கிடைத்த ஓ.பி.எஸ்' என்று விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.
ராமன், பரதன், அயோத்தி என்று சொன்னால் தான் பா.ஜ.கவுக்கு புரியும் என்பதால் இப்படி விளம்பரம் கொடுக்கிறார். இவர் பரதன் என்றால் அதை பக்தர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அயோத்தியைப் பற்றி பேசுவதற்கு பன்னீர்செல்வத்துக்கு அருகதை இருக்கிறதா? என்பது தான் முக்கியமான கேள்வி!
அயோத்தி நாடு எப்படி இருந்தது என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் சொல்கிறார்:
''வண்மையில்லை, ஓர் வறுமை இன்மையால்!
திண்மையில்லை, நேர் செறுநர் இன்மையால்!
உண்மையில்லை, பொய் உரை இன்மையால்!" என்கிறார் கம்பர்.
‘அயோத்தி நாட்டில் வறுமையே இல்லை, அதனால் வள்ளல் தன்மை – கொடைக்கான தேவையே இல்லை! அயோத்தி நாட்டில் உண்மை என்று தனியாக பிரித்துச் சொல்ல எதுவுமே இல்லை. காரணம், பொய் என்று அடையாளத்துக்கு காட்டுவதற்கு ஒரு பொய் கூட மக்களிடம் கிடையாது’ என்று இலக்கிய நயத்துடன் கம்பர் எழுதி இருக்கிறார்.
இப்படிப்பட்ட அயோத்தியை பல்வேறு பகல்வேஷங்கள் போடும் பன்னீர்செல்வம் உச்சரிக்கலாமா?
கடந்த மாதத்தில் போடியில் கிராம சபை கூட்டம் நடத்தினேன். அதில் கலந்து கொண்ட ஒரு பெண், பன்னீர்செல்வம் மீதான கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். உடனே அதை வாபஸ் வாங்கச் சொன்னேன். அவரும் வாபஸ் வாங்கிவிட்டார். இப்போது அவர் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இதுதான் பன்னீர்செல்வத்தின் ஜனநாயகம். இதைப் பார்த்த பன்னீர்செல்வம் என்ன செய்திருக்க வேண்டும்?
அந்தப் பெண் சொன்ன கோரிக்கை என்ன என்று கவனித்திருக்க வேண்டும். உண்மையான பரதனாக இருந்திருந்தால் அதைத் தான் செய்திருப்பார். ஆனால் கூனியின் பாத்திரத்துக்கு பொருத்தமான பன்னீர்செல்வம் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் பணம் கொடுத்து அந்தப் பெண்ணை நான் பேச வைத்தேன் என்று சொல்லி இருக்கிறார். இதுதான் பன்னீர்செல்வத்தின் மூளை. இப்படித்தான் குறுக்கு வழியில் யோசிக்கும்.
'ஸ்டாலின் போய் கிராமசபைக் கூட்டத்தில் சம்மணம் போட்டு உட்காருகிறார். நான் கூட அவர் இலை போட்டு சாப்பிடப் போகிறாரோ என்று பார்த்தேன்' என்று கிண்டல் செய்துள்ளார் பன்னீர். பன்னீர்செல்வத்துக்கு தெரிந்த ஒரே வேலை அது தான். அதனால் தான் தன்னைப் போலவே மற்றவர்களையும் நினைத்துக் கொள்கிறார்.
பன்னீர்செல்வம் திறமை இல்லாதவர் என்பதை நாம் சொல்லவேண்டியது இல்லை. ஜெயலலிதாவே சொல்லி இருக்கிறார். 7.3.2002-ஆம் நாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து அதில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதா சொல்கிறார்:
''முறையான திட்டமின்மை மற்றும் மந்தமான செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக மத்திய அரசு வழங்கும் நிதி முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளது என்பதை அறிந்து நான் கவலை அடைந்துள்ளேன். அனைத்து துறைகளும் மத்திய அரசால் தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தி கூடுதல் நிதி பெற்றிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அரசு செயலாளர்கள் மத்தியில் நிலவும் இந்த ஆரோக்கியமற்ற போக்கு குறித்து நான் மிகுந்த அதிருப்தி அடைகிறேன்" - என்று ஜெயலலிதா எழுதி இருக்கிறார். நிர்வாகத் திறமை அற்றவர் பன்னீர்செல்வம் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை!
இன்றைக்கு துணை முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருக்கலாம். ஆனால் இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வாக்களித்தவர் பன்னீர்செல்வம். அப்படி வாக்களித்த 11 பேரில் ஒருவர். சட்டப்படி பார்த்தால் அவர் துணை முதலமைச்சராக இருக்க முடியாது. ஏன் எம்.எல்.ஏ.,வாகக் கூட இருக்க முடியாது. நாங்கள் தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னது யார்? ஜெயலலிதா சமாதியில் போய் தியானம் செய்து ஆவியோடு பேசியது யார்? தர்ம யுத்தம் நடத்துவதாகச் சொன்னது யார்? இந்த தர்ம யுத்தத்தை திடீரென்று ஒருநாள் வாபஸ் வாங்கிவிட்டு எடப்பாடியுடன் கை கோர்க்க, கை மாறியது என்ன?
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றால், அந்த மர்மத்தில் பன்னீருக்கும் பங்கு இல்லையா? அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது சசிகலாவும் தினகரனும் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஒன்றாகத் தானே இருந்தார்கள்? இவர்களுக்குத் தெரியாமல் என்ன நடந்திருக்க முடியும்? இன்றைக்கு உங்களுக்குள் பிரிந்து போய்விட்டீர்கள் என்றால் அதற்காக கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு பங்கு இல்லை என்று ஆகிவிடுமா?
சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் முடக்கப்படுகிறது என்றால் அவர்களுக்கு அப்போது வசூல் செய்து கொடுத்தவர்கள் யார்? இந்த பழனிசாமியும் பன்னீரும் தானே? ஜெயலலிதா மரணம் அடையும் வரை, சசிகலா சிறைக்குப் போகும் வரை இவர்களிடம் கைகட்டி நின்றவர்கள் தானே பழனிசாமியும் பன்னீரும்? இன்றைக்கு பிரிந்து விட்டதால் உங்கள் இருவருக்கும் அவர்களது பாவத்தில் பங்கில்லை என்று ஆகிவிடுமா?
இப்போதும் தன்னை நரேந்திர மோடி முதலமைச்சர் ஆக்கிவிட மாட்டாரா? சசிகலா முதலமைச்சர் ஆக அறிவித்துவிட மாட்டாரா என்று துடிக்கிறார் பன்னீர்செல்வம்!
இத்தனை ஆண்டு காலம் இந்த நாட்டுக்கோ, நாட்டுமக்களுக்கோ, இந்த வட்டாரத்து மக்களுக்கோ, தனது தொகுதி மக்களுக்கோ எந்த நன்மையும் செய்யாத பன்னீர்செல்வம், இனியும் தேர்தலில் வெற்றி பெற்று என்ன செய்யப் போகிறார்? சும்மா தான் இருக்கப் போகிறார். அத்தகைய பன்னீர்செல்வம், வீட்டில் சும்மா இருக்கட்டும் என்று மக்கள் தக்க பாடம் கற்பிக்கக் காத்திருக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல்!
தனக்குக் கிடைத்த செல்வாக்கை வைத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வமும் அவர் தம்பி ஓ.ராஜாவும், பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தும் செய்த அதிகாரங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், அநியாயங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டால் அதற்கு நேரம் போதாது.
* கைலாசநாதர் கோயில் பூசாரியின் தற்கொலை மர்மம்!
* லட்சுமிபுரம் கிணற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த ஆக்கிரமிப்புகள்!
* ஏகபோகத்தில் உள்ள ஏலக்காய் வர்த்தகம்
*சட்டவிரோதமான மணல் கொள்ளைகள்
* தெருவிளக்குகள் போடப்பட்டதில் உள்ள முறைகேடுகள்!
* அனைத்துப் பணிகளையும் எடுத்துச் செய்யும் பினாமி காண்ட்ராக்டர்கள்!
- என்று சொல்லிக் கொண்டே போகலாம்!
2001-ம் ஆண்டு, பன்னீர்செல்வம் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல் அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் எனப் பதவி வகித்த ஐந்து வருடங்களில் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. இன்றைக்கு பன்னீரின் சொத்து மதிப்பு பல ஆயிரம் மடங்காக உயர்ந்துள்ளது. இதை விசாரிக்க வலியுறுத்தித்தான், தி.மு.க சார்பில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், நடப்பது அவர்கள் ஆட்சி. லஞ்ச ஒழிப்புத்துறை அ.தி.மு.க அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. எனவே, பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்புக் குற்றச்சாட்டுகள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். அது நமது அரசு அமைந்தவுடன் நிச்சயமாக நடந்தே தீரும்.
அமெரிக்க நிறுவனமே இவருக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்ட விவகாரத்தை நாங்கள், ஆளுநரிடம் புகார் மனுவாகக் கொடுத்துள்ளோம்! இந்த ஊழல் முகத்தை மறைப்பதற்காகத் தான் பரதன் வேஷம் போட்டுக் கொண்டு இருக்கிறார் பன்னீர்செல்வம்!
'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' - என்று சில மாதங்களுக்கு முன்னால் ட்விட்டரில் செய்தி வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்!
இப்போது நான் சொல்கிறேன் ‘இனி எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்’
பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க வேட்பாளர்களும் தோற்கப் போகிறார்கள். தோற்கடிக்கப்பட வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். அது மக்களின் வெற்றியாக அமையும்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை எட்டுவதற்கான பயணத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 11 ஆவது மாநில மாநாட்டை வரும் மார்ச் 14 ஆம் தேதி தீரர்களின் கோட்டமாம் திருச்சியில் நடத்தவிருக்கிறோம் என்ற அறிவிப்பை இந்தத் தேனி கூட்டத்தின் வாயிலாக அறிவிப்பதில் பெருமை அடைகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு 1956-ஆம் ஆண்டும், 6 ஆவது மாநில மாநாடு 1990-ஆம் ஆண்டும், 8 ஆவது மாநில மாநாடு 1996-ஆம் ஆண்டும், 9 ஆவது மாநில மாநாடு 2006-ஆம் ஆண்டும், 10 ஆவது மாநில மாநாடு 2014 ஆம் ஆண்டும் நடைபெற்ற இடமும் தீரர்களின் கோட்டமாம் திருச்சி தான். அங்கேதான் கழகத்தின் 11 ஆவது மாநில மாநாடு வருகிற மார்ச் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. வெற்றி கோட்டையை கைப்பற்ற திருச்சியிலிருந்து வெற்றி வியூகங்கள் தீட்டப்படும்.
கழக ஆட்சி மலரும். உங்கள் கவலைகள் யாவும் தீரும்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.
Also Read
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !