M K Stalin
4 ஆண்டுகளில் பாஜக அரசிடம் இருந்து எதைப்பெற்றார்? பட்டியலிட முடியுமா? - பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
“தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்க ‘ஷோ’ நடத்த சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - நீட் தேர்வு விலக்கு - எழுவர் விடுதலை - காவிரிப் பிரச்சினை - மேகதாது அணை கட்டும் விவகாரம் - ஜி.எஸ்.டி. இழப்பீடு - புயல் நிவாரணம் உள்ளிட்டவை குறித்து பழனிசாமி கேட்பாரா?” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (14-02-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், பூம்புகார் - திருக்கடையூர் பிரதான சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற நாகை வடக்கு - தஞ்சை வடக்கு மாவட்டக் கழகங்களுக்குட்பட்ட, சட்டமன்றத் தொகுதிகளுக்கான, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
''சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தை, என் தம்பி கருணாநிதி தனது சொல்லாற்றலால், இலக்கியத் திறத்தால் நாடகக் காப்பியம் ஆக்கித் தருவது பொருத்தமானதே” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை பேரறிஞர் அண்ணா அவர்கள் பாராட்டினார்கள். சிலப்பதிகார நாடகக் காப்பியம் என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரையில் தான் இப்படி குறிப்பிட்டார்கள்.
காவிரிப்பூம்பட்டினமாம் இந்த பூம்புகாரை மையமாக வைத்துத்தான், பூம்புகார் என்ற படத்தையே கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள்.
ஈராயிரம் ஆண்டுக்கு முன்னால் தமிழர்களின் வணிகத்தையும் கலைச்சிறப்பையும் பறைசாற்றும் கூடல் நகரமான இந்த பூம்புகாரை மீண்டும் 1973-ஆம் ஆண்டு நம் கண்ணில் கொண்டு வந்து தலைநகரமாக ஆக்கியவர் கலைஞர் அவர்கள். அத்தகைய பண்பாட்டு பெருமையும், சிறப்பும் கொண்ட பூம்புகார் மண்ணில் அ.தி.மு.க. ஆட்சி மீதான உங்கள் புகார்களை வாங்குவதற்காக நான் வந்துள்ளேன்!
தவறு செய்தவன் மன்னவன் ஆனாலும் அதனை துணிச்சலாக வந்து கண்ணகி கேள்வி கேட்டதைப் போலக் கேட்கக் கூடியவர்களாக இந்த பூம்புகாரில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள்.
பாண்டிய நெடுஞ்செழிய மன்னன் அறியாமல், அவசரத்தில் தவறு செய்து விட்டான். அதனால் கண்ணகி கேட்டதும் அவன் தனது தவறை உணர்ந்தான். நான் தவறு செய்து விட்டேன் என்று அந்தக் காலத்து மன்னன் சொன்னான்.
ஆனால் அத்தகைய செயலை இந்தக் காலத்து, இன்றைய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது. பழனிசாமியாக இருந்தாலும் அவரது அமைச்சரவை சகாக்களாக இருந்தாலும் தெரிந்தே தவறு செய்பவர்கள். அந்த தவறை கூச்சமில்லாமல் செய்பவர்கள்.
முதலமைச்சரும் அமைச்சர்களும்தான் தமிழகத்தை பொருளாதார ரீதியாக - தொழில் ரீதியாக 50 ஆண்டுகளுக்கு பின்னால் இழுத்துத் தள்ளியவர்கள். ஊழல் செய்வதற்கே தலைமைச் செயலகத்திற்கு வந்தவர்கள். பினாமி கம்பெனிகளை வைத்து கொள்ளையடித்தவர்கள். கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியவர்கள். அதனால் தான் அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின்னால் - சசிகலா சிறைக்குப் போனதால் - ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என ஒரு நாடகத்தை நடத்தியதால் - முதலமைச்சராக ஆக்கப்பட்டவர் தான் இந்த பழனிசாமி. அவரைப் பொறுத்தவரை அவருக்கு இது லாட்டரியில் விழுந்த பணம் போல, ஒரு லக்கி ப்ரைஸ்.
அப்படிக் கிடைத்த பதவியை 4 ஆண்டு காலமும் வீணடித்துவிட்டார் பழனிசாமி என்பது தான் வேதனை தரக்கூடியது. தனது பதவியைப் பயன்படுத்தி குண்டூசி அளவு நன்மையைக் கூட செய்யாதவரைத் தான் நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. செய்யவில்லை என்றால் செய்யத் தெரியவில்லை, செய்யவும் மனமில்லை.
தேர்வுக்கு முந்தைய நாள் மாணவன் படிப்பதைப் போல - தேர்தலுக்கு முந்தைய மாதத்தில் மட்டும் ஏதோ இந்த நாட்டுக்கு நன்மை செய்பவரைப் போல பழனிசாமி நடித்துக் கொண்டு இருக்கிறார். இவை நடிப்பு என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
2 நாட்களுக்கு முன்னால் உடுமலைப்பேட்டையில் பேசிய பழனிசாமிக்கு இப்போது தான் தனக்கு கொஞ்சம் ரோஷம் உண்டு என்பதைப் போல பேசி இருக்கிறார். ''பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடிமையாக இல்லை. எதைத் தட்டிக் கேட்க வேண்டுமோ அதைத் தட்டிக் கேட்போம்" என்று பேசி இருக்கிறார்.
இன்னும் பதவிக்காலம் முடிய சில வாரங்கள் தான் இருக்கிறது, அதனால் பா.ஜ.க.விடம் அடிமையாக இல்லை என்கிறார். 4 ஆண்டு காலம், அவர் பா.ஜ.க. அரசிடம் இருந்து எதைப் பெற்றார்? அதனை இவரால் பட்டியல் போட முடியுமா?
இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அவர்கள் வருகிறார்கள். தங்கள் கட்சி தமிழ்நாட்டில் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக மோடியும் ஒரு ஷோ காட்டுவதற்காக வருகிறார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே! 2015 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை என்னாச்சு என்பது தான் உங்களிடம் நான் கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி!
ஒரு செங்கலை கூட வைக்கவில்லையே என்பது தான் நான் எழுப்பும் கேள்வி! பா.ஜ.க.விடம் நான் அடிமையாக இல்லை என்று சொல்லும் பழனிசாமி, இந்தக் கேள்வியை மோடியிடம் கேட்பாரா?
* நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தீர்மானம் போட்டோம். 1 முறையல்ல, 2 முறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாகப் போட்டு அனுப்பினோம்! விலக்கு பெற முடிந்ததா பழனிசாமியால்? தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானத்தை மத்திய அரசே நீ ஏன் மதிக்கவில்லை என்று கேட்க முடியுமா பழனிசாமியால்?
* 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. தமிழக அமைச்சரவை தீர்மானம் போட்டு அனுப்பி விட்டது. ஆனாலும் ஆளுநர் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார். இது பா.ஜ.க. அரசு சொல்லிக் கொடுத்து நடத்தும் நாடகம் தான். ஏன் இந்த நாடகம் நடத்துகிறீர்கள் என்று பிரதமரிடம் கேட்க முடியுமா பழனிசாமியால்?
* உச்சநீதிமன்றம் உத்தரவு போட்ட பிறகும் காவிரி நடுவர் மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் போன்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்காமல் மத்திய அரசின் ஜல்சக்தி துறையில் ஒரு பிரிவாக தமிழகத்தின் காவிரி உரிமையை மூடிவைத்துவிட்டது மத்திய பா.ஜ.க. அரசு. ‘காவிரி காப்பான்’ என்று பட்டம் போட்டுக் கொள்ளும் பழனிசாமி, இதை பாரதப் பிரதமரிடம் தட்டிக் கேட்க முடியுமா? தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களின் உரிமையைக் காக்க அதிகாரம் பொருந்திய காவிரி ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று போராடுவதற்கு பழனிசாமி தயாரா?
* காவிரி பிரச்னைக்காக தங்கள் மாநிலத்துக்கு சலுகை வேண்டும் என்பதற்காக கர்நாடக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போய் பிரதமரை சந்தித்தார்கள். எங்களுக்கு இந்த நன்மைகள் எல்லாம் வேண்டும் என்று கேட்டார்கள். அப்படி தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம், தான் மட்டுமாவது போய் கேட்பதற்கு தைரியம் உண்டா பழனிசாமிக்கு? காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுகிறது கர்நாடகா. அதைத் தடுக்கச் சொல்லி மோடியை வலியுறுத்த பழனிசாமிக்கு முதுகெலும்பு இருந்ததா?
நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யக் கேட்ட நிவாரணம் முழுமையாக கிடைத்துவிட்டதா? இல்லை! புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யக் கேட்ட நிவாரணத்தை முழுமையாக மத்திய அரசு கொடுத்துவிட்டதா? இல்லை!
ஜி.எஸ்.டி. இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய தொகை 19,000 கோடி ரூபாய். அதனை துணிச்சலாகக் கேட்டுப் பெற பழனிசாமியால் முடிந்ததா? இல்லை!
நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி வளர்ச்சிக்காக 14வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு 2,500 கோடி ரூபாய் அனுமதித்தது என்றும், அதனை மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாகத் தரவில்லை என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? இதை ஏன் தட்டிக் கேட்க முடியவில்லை?
இப்படி பல்வேறு திட்டப்பணிகளுக்காக தமிழகம் கேட்ட தொகைகள் அனைத்தும் தராமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. என்ன காரணம்? பழனிசாமி கேட்க மாட்டார், அவர் நம்முடைய கொத்தடிமை தானே என்று மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிறது!
பழனிசாமி கொத்தடிமையாக இருக்க என்ன காரணம்?
தனது குடும்பத்தினருக்கும், பினாமிகளுக்கும் 3,000 கோடி ரூபாய் டெண்டர் கொடுத்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் பழனிசாமி. இவர் ஏதாவது கேட்டால், பா.ஜ.க. அதை கையில் எடுக்கும்.
வருமான வரித்துறையில் - அமலாக்கத்துறையில் - பல்வேறு வழக்குகளில் அமைச்சர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்களால் மத்திய அரசிடம் தலையாட்டித் தான் வாழ முடியும். அப்படிப்பட்ட கொத்தடிமை அ.தி.மு.க.வால் தமிழகத்துக்கு எந்த பெரிய நன்மையும் செய்ய முடியாது.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் - ஒரு அமைச்சர் - ஒரு முதலமைச்சர் செய்ய வேண்டிய குறைந்த பட்ச நன்மைகளைக் கூட ஆளுங்கட்சியினர் செய்யவில்லை என்பதற்கு உதாரணம் தான் நீங்கள் கொடுத்த கோரிக்கை மனுக்கள்.
கண்களில் கனவுகளோடும் - கையில் மனுக்களோடும் - இதயத்தில் ஏக்கத்துடனும் - இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் தமிழ்மக்கள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒன்று தான்! நீங்கள் எத்தகைய நம்பிக்கையை என் மீது வைத்துள்ளீர்களோ - அந்த நம்பிக்கையை நிச்சயமாக கலைஞர் மீது ஆணையாக நான் காப்பாற்றுவேன்!
உங்கள் கவலைகளை - உங்களது கோரிக்கைகளை - உங்களது எதிர்பார்ப்புகளை - என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள்.
இவற்றை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன். இந்த அரங்கத்துக்குள் வரும்போது நீங்கள் கொண்டுவந்த ஃபாரங்களை -இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்!
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ள உங்களுக்கு நான் சொல்வது:
ஆமாம் கழக ஆட்சி தான் அமையும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! நன்றி வணக்கம்!
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!