M K Stalin
“வெற்று நடை போடும் தமிழகத்தை கெத்து நடை போடவைக்க தி.மு.க ஆட்சியால் மட்டுமே முடியும்” : மு.க.ஸ்டாலின்
“கோடிகளைக் கொட்டி பொய்யான விளம்பரங்களைக் கொடுக்கும் பழனிசாமி ஆட்சியில் தமிழகம் வெற்றிநடை போடவில்லை; வெற்று நடைபோடுகிறது” “தமிழகத்தை கெத்து நடை போட வைக்க தி.மு.கழக ஆட்சியால் மட்டுமே முடியும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
இன்று (12-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை – திருச்சி நெடுஞ்சாலை - இராதாகிருஷ்ணன் நகரில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதன் விவரம் வருமாறு:
பேபி ரிஹானா என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து கழகத் தலைவர் கூறியதாவது: மாநில அளவில் பல வாலிபால் வீரர்களை உருவாக்கிய உடற்கல்வி ஆசிரியரின் மனைவி தான் இப்போது பேசினார்கள். அவர்கள் பேசியபோது கொரோனா நோயினால் அவர் கணவர் இறந்துவிட்டார். அவர் இறந்த காரணத்தினால் 2 பிள்ளைகளை வைத்துக்கொண்டு தவித்துக் வருவதாக சொன்னார். அவரது கணவர் 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர் என்பதால் ஓய்வூதியமும் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு சொன்னார்கள். கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில், புதிதாக கொண்டு வரப்பட்டிருக்கும் ஓய்வூதிய முறை ஒழிக்கப்பட்டு பழைய ஓய்வூதிய முறை தி.மு.க ஆட்சி வந்தவுடன் கொண்டு வருவோம் என்று சொன்னோம். ஆனால் ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டது. கவலைப்படாதீர்கள். 3 மாதத்தில் நடக்கும் தேர்தலில் நாம் ஆட்சிக்கு வந்து பழைய முறையை கொண்டு வந்து உங்கள் கஷ்டம் நிச்சயமாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
(தி.மு.க தலைவர் அவர்கள் இவ்வாறு பதிலளித்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்று அமர்ந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, பேபி ரிஹானாவின் மகளின் படிப்புச் செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.)
இந்தத் தகவலைத் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “இங்கு தொடக்கத்தில் பேசிய பேபி ரிஹானா ஒரு கோரிக்கை வைத்தார். வாலிபால் பயிற்சியாளரின் மனைவியான அவர், மகளின் படிப்பு செலவிற்கு கஷ்டப்பட்டு வருவதாக சொன்னார். அந்த கோரிக்கையை நான் இங்கு சொன்னேன். இங்கு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி அவர்கள் எனக்கு ஒரு சீட்டு எழுதி அனுப்பி வைத்திருக்கிறார். தமிழ்நாடு வாலிபால் அசோசியேஷன் தலைவரான கௌதம், பேபி ரிஹானா அவர்களது மகளின் படிப்புச் செலவை முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக அதில் தெரிவித்திருக்கிறார். எனவே 100 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 100 நிமிடத்திலேயே உங்கள் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது என்பதை பேபி ரிஹானாவுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறினார்.
சுந்தரமூர்த்தி என்பவரது கோரிக்கைக்கு பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது:
சுந்தரமூர்த்தி அவர்கள் கூட்டுறவு வங்கியிலிருந்து 17 கிலோ நகை அ.தி.மு.க ஆட்சியின் துணையோடு கொள்ளை அடிக்கப்பட்ட கேவலத்தையும், அதில் நகைகளை இழந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு சேர வேண்டிய தொகை வந்து சேரவில்லை என்ற அவலத்தையும் இங்கு வேதனையோடு குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். நீங்கள் குறிப்பிட்ட அந்த கூட்டுறவு கொள்ளையை தகுந்த விசாரணை மேற்கொண்டு நகைகளை இழந்த பாதிக்கப்படுவோருக்கு மிகக்கூடிய விரைவில் ஞாயம் கிடைப்பதற்கான நடவடிக்கையை 3 மாதத்தில் அமையவிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சி நிச்சயம் நிறைவேற்றுவோம் என்ற அந்த நம்பிக்கையை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது குறையைக் கேட்டு அதற்குப் பதிலளித்து தி.மு.க தலைவர் அவர்கள் கூறியதாவது: முருகன் அவர்கள் பேசியதை கேட்டீர்கள். கரும்பிற்கு சரியான விலை வேண்டும். இந்தப் பகுதியில் தொழில் வளர்ச்சி வேண்டும். கரும்பு ஆலையில் இருந்து வரவேண்டிய 75,000 நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை எல்லாம் அவர் குறிப்பிட்டிருக்கிறார். குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு, 3 மாதத்திற்குள் நிலுவைத் தொகையை வழங்குவது, போக்குவரத்து செலவுகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவது போன்றவற்றை நிச்சயமாக கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க ஆட்சி நிறைவேற்றும் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றை உறுதி செய்யும் வகையில் கரும்பு விவசாயிகள் - ஆலை உரிமையாளர்கள் - அரசு அதிகாரிகளுடன் ஒரு சீரான இடைவெளியில் முத்தரப்பு கூட்டங்களையும் நிச்சயம் நடத்துவோம். எனவே உங்களுடைய எண்ணம் - உங்களுடைய உணர்வு நிச்சயம் வீண் போகாது என்ற நம்பிக்கையோடு தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும் என்ற அதே நம்பிக்கையோடு இருங்கள். ஆட்சிக்கு வருவது மட்டும் இன்றி நீங்கள் சொன்ன கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகள் நிச்சயமாகத் தீர்க்கப்படும் என்ற உறுதியையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கணவரை இழந்து இரண்டு குழந்தைகளோடு வறுமையில் வாடும் குணவதி என்ற பெண்ணின் குறைகளைக் கேட்டு, கழகத் தலைவர் அவர்கள் கூறிய பதில் வருமாறு: நீங்கள் கணவனை இழந்து உங்கள் 2 குழந்தைகளோடு வறுமையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பதாக உங்கள் மனுவில் நான் படித்து தெரிந்து கொண்டேன். 100 நாள் வேலைத்திட்டத்தை நம்பித்தான் நீங்கள் இருக்கிறீர்கள். அங்கன்வாடி வேலை கேட்டு நீங்கள் சென்றபோது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள். கணவனை இழந்து தவித்துக் கொண்டு இருக்கும் இந்தச் சகோதரியிடம் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். அதனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. கவலைப்படாதீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக உங்களுக்கு அந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்து தெரிவித்துக் கொள்கிறேன்.
உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஹரி கோவிந்தன் என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்துக் கழகத் தலைவர் அவர்கள் கூறியதாவது:
உங்கள் பெயரில் யாரோ கடன் வாங்கிய காரணத்தினால் நிறைய பிரச்சினையை நீங்கள் சந்தித்திருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். தொகையும் வரவில்லை. கடன் வாங்கவும் முடியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். தீரவிசாரித்து உங்களுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும்.
இந்த தொகுதியில் எம்.எல்.ஏ., ஒருவர் இருக்கிறார். அவர் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர், பெயர் குமரகுரு. அவர் சாதாரண ஆள் இல்லை. அவர் வெறும் எம்.எல்.ஏ. மட்டும் இல்லை. முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த நட்பை வைத்துக் கொண்டு இந்தத் தொகுதிக்கு ஏதாவது நன்மை செய்திருந்தால் உள்ளபடியே நாம் அவரை பாராட்டலாம். அவ்வாறு அவர் எதையும் செய்யவில்லை. ஆனால் தன்னை மட்டும் அவர் வளர்த்துக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.காரர்களே என்ன சொல்லுகிறார்கள் என்றால் குமரகுரு அண்ணன்தான் முதல்வர் பழனிசாமிக்கு ‘ஆல் இன் ஆல்‘. முதலமைச்சரின் பினாமி என்று சொன்னால் கூட ஆச்சரியம் இல்லை. அந்த அளவிற்கு அவர் நெருக்கமானவர். இந்த வட்டாரத்தில் இருக்கும் ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, பல மாவட்டங்களுக்கும் ஒப்பந்தங்கள் - காண்ட்ராக்ட்களை எல்லாம் தீர்மானிப்பவர் இந்த குமரகுரு தான். அவ்வளவு அதிகாரம் படைத்தவராக அவர் இருக்கிறார். இவ்வளவு அதிகாரம் படைத்தவர் இந்த தொகுதிக்கு ஏதாவது நன்மை செய்திருந்தால் இந்த தொகுதியாவது பயனடைந்து இருக்கும். இந்த தொகுதி மக்களுக்கு பலன் கிடைத்திருக்கும். அவருக்கும் நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, கொரோனா காலத்திலும் அவர் மக்களைப் பார்த்து எதுவும் செய்யவில்லை. நான் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். பரித்தல் என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் அவர் நலத்திட்ட உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறார். அங்கு முழுமையாகக் கொடுக்கவில்லை. அவ்வாறு முழுமையாகக் கொடுக்காத காரணத்தினால் சில இளைஞர்கள் அவரிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். கேள்வி கேட்ட காரணத்தினால் அவர்களைப் பிடித்து உள்ளே போடுங்கள் என்று காவல்துறையினருக்கு உத்தரவு போட்டிருக்கிறார். காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யப் போனபோது ஊர் முழுவதும் ஒன்று சேர்ந்து அவர்களைக் கைது செய்யக் கூடாது என்று போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதற்குப்பிறகு அவர்களை விட்டு விட்டு சென்று விட்டார்கள் என்ற செய்தியை நான் அப்போது தொலைக்காட்சிகளில் பார்த்தேன். நக்கீரன் பத்திரிகையிலும் இந்த செய்தி வந்தது. இந்த உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. இப்போது, அடுத்த முதலமைச்சர் நான்தான் என்று அவரே சொல்லிக் கொண்டிருக்கிறாராம். ஓ.பி.எஸ். பாவம், அவர் என்ன ஆகப்போகிறார் என்று தெரியவில்லை. இப்போது அப்படி ஒரு நிலைமை எல்லா பகுதிகளிலும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. தன்னை கேள்வி கேட்ட அவர்களை கைது செய்ய சொன்னவர். இந்த ரோஷத்தை எல்லாம் அவர் மக்களிடத்தில் காட்டாமல் மக்கள் பணியாற்றுவதில் காட்டியிருந்தால் உள்ளபடியே நாம் பாராட்ட கூடியதாக இருந்திருக்கும். இந்த நிலையில்தான் அவர் இருந்து கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த நேரத்தில் இங்கே நான் தெரிவித்துக் கொண்டு, இப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் சரியான பாடத்தை வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து உரையாற்றினார்.
‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நிறைவு செய்து தி.மு.க தலைவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
''அரசியல் பாடத்தை நீதிக்கட்சியிடம் இருந்தும் - சமுதாய சீர்திருத்த பகுத்தறிவுக் கருத்துக்களை தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தும் நான் கற்றுக் கொண்டேன்'' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
சமூகநீதி - சுயமரியாதை ஆகிய இரண்டு கொள்கைகளின் அடித்தளத்தில் தான் கழகம் உருவாக்கப்பட்டது. ஏழைகள், மத்திய தர வர்க்கத்தினர், பாட்டாளிகள், பழங்குடிகள், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வுக்காக சமூகநீதியையும் - அந்த வகையில் கல்வியையும் வேலை வாய்ப்பையும் பெற்ற மக்கள் சுயமரியாதை உணர்வுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களையும் உருவாக்கிய ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.
கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பேரறிஞர் அண்ணா அவர்கள், இரண்டு ஆண்டுகளில் மறைந்தார்கள். இது கழகத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே ஏற்பட்ட பேரிழப்பு. பேரறிஞர் அண்ணா அவர்களது மறைவுக்குப் பிறகு ஆட்சியையும் கட்சியையும் ஒருசேரச் சுமக்கும் கடமை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது தோளில் விழுந்தது.
அப்போது, ''பல்லாயிரக்கணக்கான ரூபாய் உள்ள பெட்டியாக கருவூலமாக இருந்த அண்ணாவை இழந்தோம். நான் அண்ணா அல்ல. பயணத்துக்கு பயன்படுத்துகிற பத்து ரூபாய் நோட்டாக மதித்து என்னை பயன்படுத்தி இருக்கிறீர்கள்" என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.
பத்து ரூபாய் நோட்டாக தன்னை உருவகம் செய்து கொண்ட கலைஞர் அவர்கள் தான் இந்தநாட்டுக்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்து இந்த தமிழ்நாட்டையே நவீனத் தமிழ்நாடாக மாற்றினார்.
இன்றைய தினம் நாம் பார்க்கும் நிறுவனங்கள், திட்டங்கள், கொள்கைகள், நன்மைகள் ஆகிய அனைத்திலும் முக்கால் பங்கு நம்முடைய முத்தமிழறிஞரால் உருவாக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தலைவர் கலைஞரை இழந்தோம். இதோ எனது தோளில் உங்களது கவலைகளை, கோரிக்கைகளை, விருப்பங்களை, வேண்டுகோள்களை இறக்கி வையுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் வந்திருக்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் பார்க்கும் ஆட்சி உங்கள் கவலைகளைத் தீர்க்கும் ஆட்சியாக இல்லை. உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக இல்லை. உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் ஆட்சியாக இல்லை. மொத்தத்தில் இது ஆட்சியாகவே இல்லை.
வெற்று விளம்பரங்களின் மூலமாக - அரசாங்கப் பணத்தை வைத்து முத்துக்குளிக்கும் ஆட்சியாக இருக்கிறது.
அ.தி.மு.கவினருக்கு சொல்லிக் கொள்வதற்கு எந்தச் சாதனையும் இல்லை. பழனிசாமிக்கு சாதனைகள் செய்யத் தெரியாது. அவருக்கு ஊழல் செய்யத்தான் தெரியும். அல்லது ஊர்ந்து போகத் தெரியும். இவை இரண்டையும் சரியாகச் செய்வார்.
''பழனிசாமி என்ன சாதனை செய்துவிட்டார் என்று ஸ்டாலின் கேட்கிறார். நான் செய்த சாதனைகளைத் தான் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து வருகிறேனே'' என்று பழனிசாமி பதில் சொல்லி இருக்கிறார். பழனிசாமி விளம்பரம் கொடுக்கிறார் என்பது உண்மை. ஆனால் அவை சாதனை விளம்பரங்கள் அல்ல. வேதனை விளம்பரங்கள்.
தி.மு.க்ஃ ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களை எல்லாம் தனது திட்டத்தைப் போலப் பழனிசாமி சொல்லிக் கொள்கிறார்.
*முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தி.மு.க கொண்டு வந்தது!
* சென்னை மெட்ரோ திட்டத்தை கொண்டு வந்தது கழக ஆட்சி!
*டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம் கலைஞரின் திட்டம்!
* 108 ஆம்புலென்ஸ் என்பது கலைஞர் காலத்தின் கொடை!
* அத்திக்கடவு அவிநாசி திட்டம் கழக அரசால் முன்கூட்டியே தொடங்கப்பட்டது தான்!
* குடிமராமத்துப் பணிகள் என்பது கழக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டம் தான்!
* நெசவாளர்க்கு இலவச மின்சாரம் கழக ஆட்சியிலேயே தரப்பட்டு விட்டது!
- இப்படி பல்வேறு பணிகள் கழக ஆட்சியில் செய்யப்பட்டவை. அதற்கும் சேர்த்துச் உரிமை கொண்டாடுகிறார் பழனிசாமி.
பொதுவாக கல்வி வளர்ச்சி, கல்வித் தரம், சமூக வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், வாழ்க்கைத்தரம் ஆகியவை எல்லாம் காலம் காலமாக வளர்ந்து வருவதன் அடிப்படையில்தான் கணக்கீடுகள் செய்யப்படும். இவற்றை அந்தந்த ஆண்டின் வளர்ச்சியாகச் சொல்ல முடியாது. கால் நூற்றாண்டு கால வளர்ச்சியை எல்லாம், தனது நான்காண்டு கால வளர்ச்சியாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் பழனிசாமி.
தடுப்பூசியை இலவசம் என்கிறார். அரசாங்கத்தால் போடப்படும் அனைத்துத் தடுப்பூசிகளும் இதுவரை இலவசமாகத்தான் போடப்பட்டது.
2 ஆயிரம் மினி கிளினிக் என்று சொன்னார். பழைய கிளினிக்குகளுக்கு பச்சை பெயிண்ட் அடித்துள்ளார் பழனிசாமி! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதாகச் சொல்கிறார். மூன்றாண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்கு பழனிசாமிதானே காரணம்?
மருத்துவக் கல்லூரிகளைக் கடைசி காலத்தில் உருவாக்கினாரே தவிர முன்கூட்டியே உருவாக்கி கல்லூரிகளைத் திறந்துவிடவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் இவை திறக்கப்படும். தி.மு.க ஆட்சியில்தான் இவை திறக்கப்படும்.
காவிரியில் நமது உரிமையை பழனிசாமியால் இழந்தோம். காவிரி ஆணையமோ, மேலாண்மை வாரியமோ அமைக்கப்படாமல், மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் துணை செக்ஷனாக காவிரியை மாற்றிவிட்டார் பழனிசாமி!
டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றியதாகச் சொன்னாரே தவிர, ஹைட் ரோகார்பன் திட்டங்களை பழனிசாமி தடுக்கவில்லை!
தனியாரிடம் கொள்ளை விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிவிட்டு மின் மிகை மாநிலமாக தம்பட்டம் அடிக்கிறார் பழனிசாமி!
கொரோனாவைக் கட்டுப்படுத்த அவரால் முடியவில்லை. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படவும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரது இறப்புக்கும் காரணமான ஆட்சி தான் இந்த அ.தி.மு.க ஆட்சி!
உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து சொல்லப்படுவது அனைத்தும் பொய்யான தகவல்கள். அது குறித்து நான் வெள்ளை அறிக்கை கேட்டேன். இதுவரை பழனிசாமி தரவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்று கோவையையும் சென்னையையும் சொல்லிக் கொள்கிறார் பழனிசாமி. பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதாதா பழனிசாமி ஆட்சியைப் பற்றி சொல்வதற்கு?
தேசிய அளவில் ஆடைகள் உற்பத்தியில் முதலிடத்திலும், துணி உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் தனது ஆட்சி இருப்பதாக பழனிசாமி சொல்கிறார். ஆனால் உண்மை என்ன என்பதை கடந்த 9 ஆம் தேதி 'தினமணி' நாளிதழ் எழுதிவிட்டது. பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் சரிவுகளை விரிவாக எழுதி இருக்கிறார்கள். அதுதான் உண்மையான நிலவரம்.
புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இருந்த வேலைவாய்ப்புகளையும் பலரும் இழந்துள்ளார்கள்.
இதற்கு மாறான பொய்களைத் தான் கோடிகளைக் கொட்டி விளம்பரமாக பழனிசாமி கொடுத்து வருகிறார். இவராக அதில் முதலிடம் இதில் முதலிடம் என்று சொல்லிக் கொள்கிறாரே தவிர, இவர் ஊழலில்தான் முதலிடம்! அது ஒன்றுதான் உண்மை!
இவை எல்லாம் என் சாதனைகள் என்று பழனிசாமி பட்டியல் போடுகிறார். மறுநாளே இதற்கெல்லாம் பணம் ஒதுக்கியது நான் தான் என்று பன்னீர்செல்வம் விளம்பரம் கொடுக்கிறார்.
இவர்கள் கொடுக்கும் விளம்பரச் சண்டையைப் பார்க்கும் போது, ‘அந்தப் பக்கமா போய் விளையாடுங்கப்பா’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
இது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல; வெற்று நடை போடும் தமிழகம்!
வெற்று நடை போடும் தமிழகத்தை எல்லா வகையிலும் கெத்து நடை போடும் தமிழகமாக மாற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால் மட்டுமே முடியும்.
கழக ஆட்சி அமையும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!