M K Stalin
"ஊழல்களை மறைக்க ஆகாய அளவிற்குப் பொய் சொல்லும் அமைச்சர் தங்கமணி” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
“அமைச்சர் வேலுமணி கொள்ளை அடிப்பது வெளியில் தெரிந்து விடும். அமைச்சர் தங்கமணி எதையும் வெளியில் தெரியாமல் செய்துவிடுவார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (19-01-2021) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் – குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாதரையில் இப்போது மக்கள் கிராம சபை கூட்டத்தை நாம் நடத்தப் போகிறோம். கிராம சபை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று எடப்பாடி அரசு உத்தரவு போட்டது. அந்த உத்தரவு போட்டவுடன், ‘கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரை நாம் மாற்றி, ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்று அறிவித்து அதை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் எல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு, ஆர்வத்தோடு, எழுச்சியோடு வந்திருக்கிறீர்கள். அவ்வாறு வந்திருக்கும் உங்களையெல்லாம் நான் மகிழ்ச்சியோடு, இன்முகத்தோடு வருக… வருக… வருக… என வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த பாதரை ஊராட்சியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை மிக சிறப்பான வகையில், ஒரு மாநாடு போல நடத்திக் கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக அளவில் இருக்கிறீர்கள். ஆண்கள் எல்லாம் உங்களைச் சுற்றி நிற்கிறார்கள்.
உங்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பாக இருக்கிறோம். உங்களுக்கு நாங்கள் தான் எப்போதும் பாதுகாப்பு, அதேபோல எங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு. அதையும் நாங்கள் மறந்து விட மாட்டோம்.
சிறப்பான மாநாடு போல இந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை, நம்முடைய மாவட்டக் கழக செயலாளர், பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர், செயல்வீரர், அருமை நண்பர், கே.எஸ்.மூர்த்தி அவர்கள் இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்.
அவர் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் களத்தில் இறங்கி விட்டால் கில்லி போல எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றலைப் பெற்றவர். அவரைத் தான் நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக பரமத்தி வேலூர் தொகுதியில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மாவட்டக் கழகத்தின் செயலாளராக பொறுப்பேற்று மிக சிறப்பான வகையில் பணியாற்றி கொண்டிருக்கும் நம்முடைய மூர்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு முழு காரணமாக இருந்து இதை நடத்திக்கொண்டிருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் அவருக்கு துணை நின்று இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கும அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய சார்பிலும், தலைமை கழகத்தின் சார்பிலும் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லி இந்த நிகழ்ச்சியை நாம் தொடங்கப் போகிறோம். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தபோது, இதேபோல் ஊராட்சி சபை கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம். இதேபோல் நான் பல ஊராட்சிப் பகுதிகளுக்குச் சென்றேன். 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு நான் சென்றேன்.
12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த 12,600-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் நாம் கிராமசபை கூட்டத்தை நடத்தினோம். அதனுடைய பலன் தான், நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே இன்றைக்கு டெல்லியில் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி நம்முடைய தி.மு.க தான். அங்கே 3-வது இடம் பெற்றது மட்டுமல்லாமல் அதற்கு பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
எப்போதும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் தான் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார்கள். பல்வேறு அராஜகம் நடைபெற்றது. அக்கிரமம் நடைபெற்றது. கலவரத்தை ஏற்படுத்தினார்கள். வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் பல்வேறு அட்டூழியங்களை செய்தார்கள். அதன் பிறகு வாக்கு எண்ணும் இடத்தில் கலவரங்களை செய்தார்கள். வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றர்களாக அறிவித்தார்கள். தோல்வியுற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்தார்கள்.
அவ்வளவு அக்கிரமத்தையும் மீறி, நாம் கிட்டத்தட்ட 70% இடங்களில் பெரிய வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் பெற்றோம். அதற்கெல்லாம் காரணம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் தான். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கு காரணமும் இந்த கிராமசபை கூட்டம் தான்.
இப்போது சொல்கிறேன், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கு அடையாளம்தான் இந்த கூட்டம். இந்த கிராம சபை கூட்டத்திற்கு நீங்கள் ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள். அமைதியாக, கட்டுப்பாட்டோடு நீங்கள் இருக்கின்ற காட்சியை பார்க்கின்றபோது நிச்சயமாக நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
இங்கு எல்லோரையும் பேச வைப்பதற்கு வாய்ப்பில்லை. 10 பேரை பேச வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். ஏனென்றால் நான் மாலை நிகழ்ச்சிக்காக திருச்சிக்கு செல்ல வேண்டும். அதே போல நீங்களும், வீடுகளில் பல வேலைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். நீங்களும் வீடு சென்று சேர வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாது. எனவே ஒரு அடையாளத்திற்காக 10 பேரை மட்டும் பேச வைக்கப் போகிறோம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதைத்தான் அந்த 10 பேர் பேசப் போகிறார்கள்.
பொதுவாக இந்த ஊராட்சியை பொறுத்தவரைக்கும் என்ன பிரச்சினை இருக்கப்போகிறது? கைத்தறி நெசவாளர்கள் நிறைந்து இருக்கும் பகுதி, இந்த பகுதி. விசைத்தறி நெசவாளர்கள் இருக்கும் பகுதி இந்த பகுதி.
எனவே அந்த பிரச்சினை பற்றி சொல்லப் போகிறீர்கள். அடுத்தது பட்டா பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சனை, சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், தெரு விளக்கு பிரச்சினை, மருத்துவமனை பிரச்சினை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், முதியோர் உதவித் தொகை, 100 நாள் வேலை திட்டம், இதுபோன்ற பிரச்சினைகள் தான். அந்த பிரச்சனைகளை தான் இங்கு சொல்லப் போகிறீர்கள். அதை நீங்கள் சுருக்கமாக சொல்லவேண்டும்.
இந்த குமாரப்பாளையம் தொகுதியைப் பொறுத்தவரைக்கும், குமாரப்பாளையம் பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகள் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதி, இந்த பகுதி. இந்த விசைத்தறி தொழிலாளர்கள் இருக்கும் இந்த இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கிறார், தங்கமணி.
அவர் எதாவது இது பற்றி சிந்தித்து, அந்த தொழிலாளர்களுடைய குறைகளைப் போக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாரா என்பது தான் கேள்விக்குறியாக இருந்து கொண்டிருக்கிறது.
இந்த 10 ஆண்டுகளில் அவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கந்து வட்டி வாங்கும் நிலை. வட்டிக்கு வட்டி செலுத்தும் நிலை. இந்த கொடுமைகளை அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்களோ, அதுபோல நெசவாளர்களும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் நெசவாளர்களை பொறுத்தவரைக்கும் 4 தற்கொலைகள் நடந்து இருக்கிறது. இது மிகவும் வேதனைக்குரிய ஒன்று.
நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக, அரசு கடன் உதவி செய்தது. மானியங்கள் தந்தது. சுழல் நிதி தந்தோம். அதையும் இந்த ஆட்சி கிடப்பில் போட்டு விட்டது. அதனால் இன்றைக்கு பெண்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு, மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள் என்பது தான் உண்மை.
அதேபோல நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய நூலின் விலை தற்போது 40% உயர்ந்திருக்கிறது. ஒரு கிலோ 150 ரூபாய்க்கு இருந்தது. ஆனால் இப்பொழுது 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 60 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இதனால் துணி உற்பத்தி வெகுவாக குறைந்திருக்கிறது என்று நெசவாளர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
பருத்தியின் விலை உயராத நிலையில், நூலின் விலை ஏறுவது ஏன்? அடுத்து குமாரபாளையத்தைப் பொறுத்தவரைக்கும், பள்ளிபாளையம் பகுதியில் 400 சாயப்பட்டறைகள் இருக்கின்றன. இதில் இருந்து வெளிவரக்கூடிய கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கின்ற காரணத்தினால், நீர் மாசுபடுகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. அதனால் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்ட மன்றத்தில் பேசி இருக்கிறோம். மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதற்காக பல்வேறு வகைகளில் போராட்டங்கள் எல்லாம் நடத்திக் இருக்கிறோம்.
2016-ஆம் ஆண்டு தேர்தலில் தங்கமணி அவர்கள், மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு, பொதுமக்களிடம் வாக்குறுதிகள் தந்தார். நான் வெற்றி பெற்றால், நிச்சயமாக, உறுதியாக இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு காண்பேன் என்று உறுதி தந்தார்.
அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியது. அதற்காக எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை என்பதை தயவு செய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நான் வெற்றி பெற்றால் ஓராண்டிற்குள் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பேன், இல்லை எனில் என் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்வேன் என்று சொன்னார். அவர் அமைக்கவும் இல்லை, ராஜினாமாவும் செய்யவில்லை. இது தான் இன்றைக்கு இருக்கும் நிலை.
முக்கியப் பிரச்சினைகளை நான் எடுத்துக் கூறி விட்டேன். எனவே, இங்கு இருக்கும் ஊரக பிரச்சினைகளைத்தான் நீங்கள் பேசப் போகிறீர்கள். பேசுகிறவர்கள் சுருக்கமாக பேச வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“மீண்டும் உங்களுக்கு எல்லாம் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கிராம சபை கூட்டம் என்ன நோக்கத்திற்காக நடக்கிறது என்பதை தொடக்க உரையின் போது நான் சுருக்கமாக எடுத்துச் சொன்னேன். அதை நீங்களும் புரிந்து கொண்டு உங்களுடைய குறைகளை கிட்டத்தட்ட 10 பேர் பேசி இருக்கிறீர்கள்.
சாயக்கழிவினால் ஏற்படக்கூடிய துன்பங்களை, இன்னல்களை சொல்லியிருக்கிறீர்கள். டாஸ்மாக் கடைகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சொல்லி இருக்கிறீர்கள். இந்த மதுபானக் கடைகளைப் படிப்படியாக குறைப்பேன் என்று சொன்னார்கள். ஆனால் இந்த ஆட்சியில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த ஆட்சியில் இங்கு இருக்கக்கூடிய அமைச்சர் தங்கமணிதான் அதற்கான துறையைக் கையில் வைத்திருக்கிறார். ஆனால், அவர் அதை பற்றி கவலைப்படவில்லை. அவருக்கு கமிஷன் வந்துவிடுகிறது. எவ்வளவு அதிகமாக விற்கிறதோ, அந்த அளவிற்கு அவருக்கு லாபம். அதனால் தான் அவர் கண்டும் காணாமல் இருக்கிறார் என்பது தான் உண்மை.
மேம்பாலத்தை பற்றி பேசினீர்கள். ஒரு நம்பர் லாட்டரி பற்றி பேசினீர்கள். அருந்ததியினர் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு சகோதரி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வரலாற்றில் பதிவாகி இருக்கக்கூடிய ஒரு செய்தியைச் சொன்னார்கள்.
உங்கள் ஆட்சி காலத்தில் தான் உள்ஒதுக்கீடு 3% கொடுத்தீர்கள். அதனால் தான் இன்றைக்கு நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த மாணவ - மாணவியர்கள் எல்லாம் இன்று படித்து விட்டு மருத்துவர்களாக, பொறியாளர்களாக வர முடிகிறது. மேற்படிப்புக்கு செல்ல முடிகிறது என்று மகிழ்ச்சியாக சொன்னார்கள்.
2009-ஆம் ஆண்டு நாம் ஆட்சியில் இருந்தோம். அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்தார். நான் துணை முதலமைச்சராக இருந்தேன். அப்போது கலைஞருக்கு உடல்நலம் சரியில்லை. முதுகில் வலி ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து விட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அன்றைக்குத் தான் சட்டமன்றத்தில் இந்த உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு கலைஞர் அவர்களால் சட்டமன்றத்திற்கு வர முடியவில்லை. சட்டமன்றத்திற்கு வர முடியாமல், அவர் எனக்கு கைப்பட எழுதிக் கொடுத்தார். “இந்த தீர்மானத்தை நீதான் சட்டமன்றத்தில் படிக்க வேண்டும்” என்று எனக்கு உத்தரவிட்டார்.
நான் நினைத்து பார்க்கிறேன், கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து விட்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் போது கூட, இந்தச் சமுதாய முன்னேற்றத்திற்காக அந்தச் சட்டத்தை கைப்பட எழுதி என் கையில் கொடுத்து, நான் சட்டமன்றத்தில் படித்தேன் பாருங்கள் - அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதைத்தான் அந்த சகோதரி இங்கே பேசுகிறபோது பெருமையாகக் குறிப்பிட்டுச் சொன்னார். நன்றி உணர்வோடு சொன்னார்.
அதேபோல கரும்பு விவசாயத்தை பற்றி சொன்னீர்கள். தி.மு.க ஆட்சியில் எப்படி இருந்தது? இப்பொழுது எப்படி இருக்கிறது? இதையெல்லாம் நீங்க உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
இறுதியாக பேசியவர் கூறியது மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த சகோதரியின் குடும்பத்திற்கு எனது ஆறுதலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நீட் பிரச்சினையினால், அரியலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அனிதா என்ற ஒரு மாணவி முதன் முதலில் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து பலர் இதுவரை இந்த நீட் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டு இறந்து இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாலும். இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக முடியும் என்ற சூழல் வந்து விட்டது. அதை அடைய முடியாத மாணவ மாணவியர்கள் வேதனைக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டு இறக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது.
இந்த ஆட்சியில் நீட் தேர்வைத் தடுக்க வேண்டும் என்ற முயற்சி எடுக்கப்படவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இந்த நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வரவிடவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கி வைத்திருந்தார்.
இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த நேரத்தில் கூட அதைக் கொண்டுவர முடியவில்லை. தடுத்து நிறுத்தி வைத்திருந்தார். அது பாராட்டக் கூடிய ஒன்று தான். நமக்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் துணிச்சலாக அதை உள்ளே கொண்டு வர மாட்டேன் என்று தடுத்து நிறுத்தி வைத்திருந்தார்.
ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு அது உள்ளே வந்துவிட்டது. சட்டமன்றத்தில் நாங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து 2 தீர்மானங்கள் போட்டோம். தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். இதுவரைக்கும் அது என்ன ஆனது என்று தெரியவில்லை. பலமுறை குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை.
அதனால் நான் இப்பொழுது சொல்கிறேன். நிச்சயமாக உங்கள் நம்பிக்கையோடு தி.மு.க ஆட்சிக்கு வரப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சிக்கு வந்தபிறகு, நிச்சயம் நீட் ஒழிப்பிற்காக போராடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
இப்படி பல பிரச்சினைகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறீர்கள். உதாரணமாக இங்கு தொகுதியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி என்பவர் ஒரு மூத்த அரசியல்வாதி. சட்டமன்றத்தில் நல்லபடியாக பேசுவார்.
ஆனால், வேலுமணி, தங்கமணி இவர்கள் இருவரைப் போல இந்த ஆட்சியில் கொள்ளை அடித்தவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் வேலுமணி கொள்ளை அடிப்பது வெளியில் தெரிந்து விடும். இவர் எதையும் வெளியில் தெரியாமல் செய்வார். “வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல” பேசுவார்.
காற்றாலை மின்சார ஊழல், தனியாரிடம் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ததில் ஊழல், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்தது, மின்வாரியத்திற்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் ஊழல் என்று இப்படி பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி உட்பட சில அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம், ஆதாரங்களோடு, ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்.
கொடுக்கப்பட்டு கிட்டதட்ட 2 மாதம் ஆகிறது. இது தவறு என்றால் எங்கள் மீது அவர்கள் வழக்குப் போட்டு இருக்கலாம். ஸ்டாலின் சொல்வது, தி.மு.க சொல்வது அனைத்தும் தவறு. எனவே நாங்கள் வழக்கு போடுகிறோம் என்று சொல்லி வழக்குப் போட்டிருக்கலாம். இதுவரைக்கும் அவர்கள் வழக்குப் போடவில்லை.
ஏன் வழக்கு போடவில்லை? ஆகவே தவறு நடந்திருக்கிறது. இது எல்லாம் உண்மை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
அதில் முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் தரமற்ற நிலக்கரி வாங்கியதில், போலி மின்சார கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று நான் சொல்லி இருக்கிறேன்.
தங்கமணி அவர்கள் தமிழகம் ‘மின் மிகை’ மாநிலமாக இருக்கிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இது பொய் மட்டுமல்ல; ஆகாய அளவிற்கான பொய். தன்னுடைய தவறு எல்லாம் வெளியே வரக்கூடாது என்பதற்காகத் தான் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் எல்லாம் ஒரு நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள். எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை விட, தி.மு.க தான் ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நம்பிக்கை உங்களிடத்தில் அதிகமாக இருக்கிறது.
அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து மறைந்தார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அவர் மறைந்தது எப்படி என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது.
ஒரு முதலமைச்சர் மறைந்தார் என்றால் அவருக்கு எந்த வகையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது? என்ன மருந்துகள் தந்தார்கள்? எப்படி இறந்தார்? ஏன் அவரை காப்பாற்ற முடியவில்லை? என்பதை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். அதுதான் மரபு.
சாதாரணமாக ஒருவர் இருந்தால் கூட அவர் எப்படி இறந்தார் என்ற உண்மை நமக்கு தெரிய வருகிறது. ஆனால், அவர் நாட்டினுடைய முதலமைச்சர். நமக்கும் அவருக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
1.1% வித்தியாசத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். 1.1% குறைவாக இருந்ததால் நாம் எதிர்க்கட்சியாக வந்துவிட்டோம். இருப்பினும் நமக்கும் சேர்த்து தான் அவர் முதலமைச்சர்.
ஒரு முதலமைச்சர் மறைந்தார் என்றால், உண்மையாக நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தான் இறந்தார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போதுதான் மறைந்தார்.
அண்ணா மறைந்தபோது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். காலையிலும் மாலையிலும் அவர் எப்படி இருக்கிறார் என்ற செய்தியை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
எம்.ஜி.ஆர். அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது தான் மறைந்தார். அப்போது அவருக்கும் இதேபோல அவ்வப்போது நிலவரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது யாராவது உண்மையை சொன்னார்களா? மந்திரிகள் சென்று பார்த்தார்களா? யாரும் பார்க்கவில்லை, யாரையும் பார்க்கவிடவில்லை.
ஆனால் வெளியில் வந்து மந்திரிகள், “அம்மா இட்லி சாப்பிட்டார்கள். அம்மா எழுந்து உட்கார்ந்தார்கள். அம்மா தொலைக்காட்சி பார்த்தார்கள்”என்று அவரை கேலி பொருளாக வைத்திருந்தார்கள். கேலி செய்யும் வகையில் நமக்கு எல்லாம் நகைப்பு வரும் நிலையில் அவர்கள் வைத்திருந்தார்கள்.
திடீரென்று அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. இதுதான் நமக்கு தெரிந்த செய்தி.
அவர் எப்படி மறைந்தார்? என்பதை விசாரிக்க விசாரணை வேண்டும் என்று கேட்டவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஸ்டாலின் அல்ல. எங்கள் கட்சியை சார்ந்தவர்கள் அல்ல. மற்ற கட்சியை சார்ந்தவர்கள் அல்ல.
அ.தி.மு.க.வை சார்ந்த இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தான். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் உட்கார்ந்து 40 நிமிடம் தியானம் செய்தார். அப்பொழுது அவர் ஆன்மாவோடு பேசினார். “எனக்கு துரோகம் நடந்துவிட்டது. என் பதவியை பறித்து விட்டார்கள். இருந்தாலும் நான் விட மாட்டேன். உங்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு விசாரணை நடத்த வேண்டும். நீதி விசாரணை வேண்டும்” என்று கேட்டது ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்.
அதற்கு பிறகு அவரை அழைத்து சமாதானம் செய்து, அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து, விசாரணை ஆணையம் அமைத்தார்கள்.
ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவருடைய தலைமையில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை கிட்டத்தட்ட 3 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் ஏதாவது ஒரு செய்தி வந்திருக்கிறதா? என்ன விசாரணை நடந்து கொண்டிருக்கிறது? யாரிடத்தில் விசாரணை செய்தார்கள்? என்ற செய்தி இல்லை. இதுவரைக்கும் உண்மை வரவில்லை.
ஓ.பி.எஸ்.க்கு சாட்சி சொல்ல வேண்டும் 8 முறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். ஒரு முறை கூட அவர் வரவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது?
அம்மா படத்தை பாக்கெட்டில் வைத்து விடுகிறார்கள். எங்கு கூட்டத்திற்குச் சென்றாலும் மேடையில் அம்மா படத்தை வைத்து விடுகிறார்கள். அம்மா பெயரில் தான் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த அம்மா எப்படி இறந்தார் என்பது இன்னும் வெளிவரவில்லை.
அவர்களுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. அவர்கள் கவலை எல்லாம் கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன். இது தான் கொள்கையாக அவர்களுக்கு இருந்துகொண்டிருக்கிறது. இதுதான் லட்சியமாக இருந்துகொண்டிருக்கிறது.
இன்னும் 4 மாதம் தான் இருக்கப் போகிறோம். இருக்கின்ற வரையில் அடித்துக் கொண்டு சென்றுவிடலாம். இருக்கும் வரை சுருட்டிக் கொண்டு சென்றுவிடலாம் என்று திட்டமிட்டு இன்றைக்கு எதைப்பற்றியும் கவலைப்படாமல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் படிப்படியாக வளர்ந்து வந்தேன் என்று எடப்பாடி சொல்வார். அவர் படிப்படியாக வரவில்லை. ஊர்ந்து ஊர்ந்து வந்தார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சமூகவலைதளங்களில் பார்த்திருப்பீர்கள்.
அப்படி வந்தவர் மக்களைப் பற்றி கவலைப்படாமல், இருக்கும் வரையில் கொள்ளையடித்து விட்டு சென்று விடலாம் என்பதற்காகத் தான் இன்றைக்கு மத்திய அரசு சொல்லக்கூடிய எந்த அநியாய சட்டமாக இருந்தாலும் அதை ஆதரித்து கொண்டு இருக்கிறார்.
விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் 3 வேளாண் சட்டங்கள் அதை எதிர்த்து 55 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் எல்லாம் கடும் குளிரில், கொட்டும் மழையில், கூடாரம் அமைத்துக்கொண்டு, குடும்பத்தோடு உட்கார்ந்து, அங்கேயே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு கொடுமை அங்கு நடந்து கொண்டிருக்கிறது.
அதை தட்டிக்கேட்க முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது. அவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு இல்லை.
எல்லா மாநில அரசுகளும் அதை எதிர்க்கிறது. ஆனால் எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய இந்த மாநில அரசு அதை ஆதரிக்கிறது. இன்று கூட எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லிக்கு சென்று இருக்கிறார். மோடி மற்றும் அமித் ஷாவை பார்த்திருக்கிறார்.
விவசாய பிரச்சனைக்காகவா? நீட் பிரச்சினைக்காகவா? சசிகலா விடுதலையாகி வெளியே வரப் போகிறார். அவர் வந்துவிட்டார் என்றால் ஆபத்து வந்துவிடும். அந்த ஆபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தான்.
நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், நாம் 4 மாதம் கூட பொறுத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. சசிகலா வெளியே வந்தவுடன் இந்த ஆட்சி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியப் போகிறது என்ற நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில் தான் இன்றைக்கு இந்த ஆட்சி சென்றுகொண்டிருக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு வெற்றி உறுதியாகி இருக்கிறது.
அந்த வெற்றிக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும். நிச்சயமாக நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எவ்வளவோ பிரச்சனைகளை பற்றி சொன்னீர்கள். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். இந்த ஸ்டாலின் இருக்கிறான். நான் பார்த்துக்கொள்கிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!