M K Stalin
“அதிமுக அரசு மாலுமியில்லாத கப்பல்; அதற்கெதிராக சுனாமியை போல் எதிர்ப்பு அலை வீசுகிறது” - மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (19-01-2021), ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளர் கோலப்பன் அவர்களுக்கு அளித்துள்ள பேட்டியின் முதல் பாகம் வெளியாகியுள்ளது.
அதன் தமிழாக்கம் பின்வருமாறு:
1. நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிளைக் கைப்பற்றி, வெற்றி பெறுவோம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அத்துடன் ஆளும் அ.தி.மு.க. எதிர்க்கட்சிக்கான இடத்தைக் கூட கைப்பற்ற முடியாது என்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையின் அடிப்படை என்ன?
200 தொகுதிகள் என்று முதலில் சொன்னேன். இப்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று தி.மு.க. முன்னணியினர் நடத்தி வரும் மக்கள் கிராம சபைகளில் ஆண்களும் பெண்களும் மிகுந்த ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும், திரளாக வந்து கலந்து கொள்வதன் மூலமாகவும், பெருகிவரும் எழுச்சி மற்றும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டும், ஆளும் அ.தி.மு.க.வின் மீது பொதுமக்கள் வெளிப்படையாகவே காட்டும் கோபம் - வெறுப்பு இவற்றை வைத்தும், இதனைச் சொல்ல முடிகிறது!
பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அனைத்து முனைகளிலும் தாழ்ந்து, பின்தங்கிவிட்டது. குறிப்பாக பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் வரவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. நிதி நிர்வாகம் வரலாறு காணாத வகையில் பின்னுக்குச் சென்று 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தமிழ்நாடு தத்தளித்து நிற்கிறது. ஆட்சி நிர்வாகத்தில் அமைச்சர்களின் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தொடர்ந்து கடன் வாங்கி கடன்வாங்கி எல்லாவற்றையும் சுரண்டி, கொள்ளை அடித்துவிட்டார்கள். முதலமைச்சரே சிபிஐ விசாரணைக்கு உள்ளானவர் தான். உச்சநீதிமன்றத் தடையின் மூலமாக பதவியில் நீடிக்கிறாரே தவிர தார்மீக அடிப்படையில் அல்ல!
இது “எம்.ஓ.யூ” என்கிற வெறும் ஏட்டளவில் உள்ள புரிந்துணர்வு புள்ளிவிவரக்கணக்கு ஆட்சியே தவிர, நிதி ஆதாரத்தைப் பெருக்கும் “முதலீடுகளைப் பெற்ற” ஆட்சியல்ல. 10 ஆண்டுகளில் புதிதாக ஒரு மின்சாரத் திட்டத்தைக் கூட நிறைவேற்ற முடியாமல், புதிதாக ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யாமல், விடைபெறும் ஆட்சி.
பதவியைத் தக்க வைத்துக் கொள்வதே பெரும்பாடு என்கிற நிலையுடன் தினமும் நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருப்பதால் - முதலமைச்சரால் நிர்வாகத்தை வழிநடத்த இயலவில்லை. மாநில உரிமைகளைப் பாதுகாக்க இயலவில்லை. தமிழ் கலாச்சாரத்திற்கு வரும் ஆபத்தைத் தட்டிக் கேட்க இயலவில்லை. பொருளாதார முன்னேற்றம் அ.தி.மு.க. ஆட்சியில் கானல் நீராகிவிட்டது. ஆளுமை இல்லாத ஒரு முதலமைச்சரால் - விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், மாணவர்கள், ஏழை- எளிய நடுத்தர மக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஆட்சி எப்போது முடியும் என்ற மனப்பான்மையில் – அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டதை கிராம சபைக் கூட்டங்களில் என்னால் காண முடிகிறது.
எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றத்தை ஜனநாயக இயக்கமான தி.மு.கழகம் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனாலும், மக்களின் எழுச்சியினை- அ.தி.மு.க. ஆட்சியின் மீது இருக்கும் வெறுப்பினை பார்த்தே அக்கட்சி எதிர்கட்சியாகக் கூட வர இயலாது என்று கூறுகிறேன். தகுதியற்ற மனிதரிடம் கோட்டை சிக்கி இருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த கோபம், இந்த ஆட்சியை மட்டுமல்ல அ.தி.மு.க.வையும் முற்றிலுமாக வீழ்த்தும்! மொத்தத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மாலுமி இல்லாத கப்பல் போலவும், அ.தி.மு.க. அமைச்சர்களை கடல் கொள்ளைககாரர்கள் போலவும், தமிழக மக்கள் கருதுகிறார்கள்.
2. திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. அந்த வகையில் நடைபெறவிருக்கும் தேர்தல் உங்கள் கட்சிக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. உங்கள் வியூகம் என்ன?
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களே நமக்கு எஜமானர்கள் என்று கொண்டு மக்களோடு இணைந்து கலந்து இருப்பது தி.மு.க.! ஆட்சியில் இல்லாவிட்டாலும் - இந்த பத்தாண்டு காலத்தில் மக்கள் பிரச்சினைகளை, அவற்றின் தீர்வுகளுக்காக முன்னிறுத்துவதில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதில், திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சட்டமன்றத்திலும் - பொது வெளியிலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தேவைப்படும் போதெல்லாம் போராடியிருக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி வரைவுத் திட்டம், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, சேலம் எட்டுவழிச்சாலைத் திட்டம்- ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு, அஞ்சல் துறையின் தேர்வு உள்பட அகில இந்தியத் தேர்வுகளை தமிழில் நடத்துவது, கொரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ மூலம் கோடிக்கணக்கான மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியது என அனைத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடும், போராட்டங்களும்தான் வெற்றிக்கு வித்திட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தினால்தான் தமிழகத்தின் உரிமைகள் ஓரளவுக்காவது இப்போது காப்பாற்றப்பட்டுள்ளது என்று மக்கள் எண்ணுகிறார்கள். ஆகவே இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக, எங்கள் பக்கம் மக்கள் இருப்பதே முதன்மையாக அமைந்திருக்கும் வியூகம். மற்ற வியூகங்களை தேர்தல் அறிவிக்கட்டும்; செயல் வடிவத்தில் காணுங்கள்.
3. மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறீர்கள். மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?
மக்கள் கிராம சபை கூட்டங்களில் மக்கள் எழுப்பும் கோரிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி செயல்படவே இல்லை என்பதற்கு சான்றுகளாக இருக்கின்றன. அடிப்படைப் பிரச்சனைகள், அன்றாடப் பிரச்னைகளைக் கூட இவர்கள் தீர்க்கவில்லை என்பதும், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதையும் மக்கள் கோபமாக வெளிப்படுத்துகிறார்கள்.
பத்து ஆண்டுகள் ஒரு கட்சிக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததை அ.தி.மு.க.வின் முதலமைச்சரும் அமைச்சர்களும் மக்களுக்காக பயன்படுத்தவில்லை. தங்களின் சுயநலத்திற்காக, பினாமிகளின் வளர்ச்சிக்காக, சொந்தக் காரர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி, தமிழகத்தின் முன்னேற்றத்தை 50 ஆண்டு காலம் பின்னுக்குத் தள்ளி விட்டார்கள் என்பதை மக்கள் கிராம சபை கூட்டங்களில் உணர முடிந்தது.
ஊழலற்ற - நல்லாட்சி தரும் வெளிப்படையான ஜனநாயக அரசு உருவாக வேண்டும்; அதை திராவிட முன்னேற்றக் கழகத்தால்தான் தர முடியும் என்று மக்கள் நம்பிக்கையுடன் உணருவதை - மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் எதிரொலிப்பதை என்னால் நேரில் காண முடிந்தது.
முதலமைச்சர் பழனிசாமியே தனது எடப்பாடி தொகுதிக்கான தேவைகளை தீர்த்து வைக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அமைச்சர்களும் அப்படித்தான் தங்கள் தொகுதிகளை வைத்துள்ளார்கள். இவையே இப்படித்தான் இருக்கிறது என்றால் மற்ற தொகுதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
4. கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு சாதகமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் அமைந்தது. தற்போது அப்பகுதியைச் சேர்ந்தவரே முதலமைச்சராக இருக்கிறார். அதை எதிர்கொள்ள தி.மு.க. என்ன செய்யப் போகிறது?
அ.தி.மு.க. ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டதே மேற்கு மாவட்டங்கள் தான். அங்குள்ள பல ஆயிரம் சிறு – குறு - நடுத்தர தொழில்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மான்செஸ்டரான கோயம்புத்தூர், அ.தி.மு.க. ஆட்சியில் முற்றிலும் அனைத்து துறைகளிலும் பின்தங்கி விட்டது. முதலமைச்சர் உள்ளிட்ட அந்த பகுதியில் இருந்து அமைச்சர்களாக இருக்கும் அனைவரும் சுய லாபம் அடைந்திருக்கிறார்களே தவிர- அப்பகுதி மக்கள் எந்த பயனையும் அடையவில்லை.அமைச்சர் வேலுமணி, கோவை மாநகராட்சியைச் சூறையாடிவிட்டார்.
அமைச்சர்கள் அந்தப் பகுதிக்கு உருப்படியான எந்தத் திட்டத்தையும் செய்து தரவில்லை. பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தனித்த திட்டங்கள் இல்லை. அதுமட்டுமின்றி, பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்கு நடந்த பாலியல் கொடூரத்தை அப்பகுதி மக்கள் மறக்கவில்லை. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆளுந்தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களைக் காப்பாற்ற அ.தி.மு.க. அரசே முயற்சித்தது என்பதையும் மேற்கு மாவட்டங்களின் மக்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் மறக்கவில்லை.
மேற்கு மண்டலம் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கான பகுதி என்பது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் உடைக்கப்பட்டு விட்டது. ஒரு தொகுதியில் கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எத்தனை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர்கள் தோற்றுள்ளார்கள் என்பதை நீங்களே எடுத்துப் பாருங்கள். மேற்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் தமிழகத்தின் நலன் - ஒட்டுமொத்த முன்னேற்றம் கருதியே வாக்களிப்பார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருந்த நேரத்தில் எல்லாம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு - முன்னேற்றத்திற்கு பாடுபட்டு இருக்கிறது. அந்த வரிசையில் மேற்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து- அங்கு சிறு - குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் - பெரிய தொழில் நிறுவனங்களையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறது. அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பெருவாரியான வெற்றியை மேற்கு மண்டல மக்கள் கொடுத்தார்கள். அந்த வெற்றி சட்டமன்ற தேர்தலிலும் மேற்கு மண்டலத்தில் தொடரும்!
5. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிபந்தனை விதித்தீர்கள். அவரோ நான் தயாராகத்தான் இருக்கிறேன், எதிர்க்கட்சித் தலைவர்தான் ஏதோ சாக்குப் போக்கு காட்டி தவிர்க்கிறார் என்கிறாரே?
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தக்க ஆதாரங்களுடன் தமிழக ஆளுநருக்கு ஊழல் புகார்களை கொடுத்திருக்கிறோம். அதை அமைச்சர்கள் யாரும் இதுவரை மறுக்கவும் இல்லை. எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்குப் போடும் முதலமைச்சரோ, அமைச்சர்களோ “எங்கள் மீது பொய்ப் புகார்கள் கொடுத்து விட்டார்” என்று என் மீது அவதூறு வழக்கும் போடவில்லை. முதலமைச்சர் தனது சம்பந்திக்கு நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கொடுத்ததில் உலக வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளன. அதன் மீது சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றது முதலமைச்சர்தான். அதை அவர்தான் வாபஸ் பெற முடியும். அதே போல் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களுக்கு அனுமதி கொடுத்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டியதும் முதலமைச்சர்தான். ஆகவேதான் இந்த இரு நடவடிக்கைகளையும் எடுத்து விட்டு - தன் மீதுள்ள வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு புகார் மீதும் விசாரணை நடத்த ஆளுநருக்கு அனுமதி அளித்துவிட்டு வாருங்கள். எந்த தேதி, நேரம் சொல்லுங்கள் - நான் வருகிறேன் என்று கூறிவிட்டேன். ஆனால் உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையை வாபஸ் பெற முதலமைச்சருக்கு தைரியம் இல்லை.
6. அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, பெரிய எதிர்ப்பு இல்லை என்கிறார்கள். கொரானாவைக் கட்டுப்படுத்துவதில் மாநில அரசு சிறப்பாகச் செயல்பட்டது என்கிறார்கள். அதை ஏற்கிறீர்களா?
தி.மு.க.வுக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத அரசியல் எதிரிகளால், சில பிற்போக்கு சக்திகளால், இப்படியொரு மாய பிம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. அரசுக்கு “எதிர்ப்பு அலை” என்பது சுனாமி போல் வீசுகிறது. 1991-1996ல் எப்படி அ.தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலை இருந்ததோ அதை விட பன்மடங்கு அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் எதிர்க்கிறார்கள். அதனால்தான் எதிர்கட்சியாகக் கூட அ.தி.மு.க. வர முடியாது என்கிறேன். “எப்போது போகும் இந்த ஆட்சி” என்பதுதான் எல்லா திக்குகளிலும் இன்றைக்கு தமிழகத்தில் கேட்கும் ஒரே குரல்.
கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டார் பழனிசாமி என்று யார் சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் ஒரே ஒருவருக்கு கொரோனா வந்தால் கூட அம்மாவின் அரசு அவரை காப்பாற்றும் என்று சட்டமன்றத்தில் சொன்னவர் பழனிசாமி. இதுவரை பன்னிரண்டாயிரம் பேருக்கும் அதிகமானோர் இறந்துள்ளார்கள். 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸ் பற்றிய புரிதலே இல்லாமல் முதல் மூன்று மாத காலம் அனைத்து வகையிலும் மறைத்தவர் பழனிசாமி. இறந்தவர் கணக்கில் பொய்க்கணக்கு காட்டியவர் பழனிசாமி. கொரோனாவில் ஊழல் செய்தவர் பழனிசாமி. இந்த அத்தனை கேவலங்களும் மக்களுக்குத் தெரியும்!
கொரோனா பரிசோதனை கருவி வாங்குவதில் செய்த ஊழல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிரித்தது. கொரோனா ஊரடங்கு அறிவிப்பதில் முதலில் தாமதம், முகக்கவசம் பற்றி சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது அதற்கு முதலமைச்சரும் அமைச்சர்களும் செய்த நையாண்டி, உயிர்காக்கும் கருவிகள் கொள்முதலில் செய்த ஊழல் இங்கு சந்தி சிரித்தது. கோயம்பேடு மார்கெட் மூடுவது, டாஸ்மாக்கை திறப்பது, பள்ளிகளை திறப்பது, மாணவர்களின் அரியர்ஸ் பாடங்களில் தேர்வு என்று அறிவிப்பதில் குளறுபடிகள் என கொரோனா நோய்த் தொற்று காலத்தில் அ.தி.மு.க. அரசு - குறிப்பாக முதலமைச்சர் திரு பழனிசாமி செய்த நிர்வாகக் குழப்பத்தை இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் - எந்த மாநில முதலமைச்சரும் செய்யவில்லை. ஆனால் பிரதான எதிர்கட்சியாக ஒன்றிணைவோம் வா பிரச்சாரத்தை தொடங்கி- ஒரு கோடி பேருக்கு உணவளித்து - மருத்துவ உதவிகளைச் செய்து- மகத்தான பணியாற்றியது திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்களுக்குத் தெரியும்.
பழனிசாமி கையாலாகதவர் என்பதை இந்த கொரோனா காலம் தான் மக்களுக்கு முழுமையாக காட்டியது. மக்கள் மீது அக்கறை இல்லாதவர் என்பதையும் வெளிச்சப்படுத்தியது.இது தேர்தல் முடிவுகளில் தெரியும்!
7. புதுச்சேரியில் தி.மு.க. முதலமைச்சர் பதவியைக் குறிவைத்து, முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனை களம் இறக்க முயற்சி நடக்கிறது என்ற செய்திகள் வருகின்றனவே?
தமிழகத்தின் அரசியலை விட புதுச்சேரியின் அரசியல் மாறுபட்டது என்ற வகையில், கழகத்தை வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுவை தி.மு.க. அப்பகுதிக்குச் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இது கழகப் பணிகள்தான்; தேர்தல் பணிகள் அல்ல. புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளிவரவில்லை. இதனை கூட்டணியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
நன்றி - The Hindu
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!