M K Stalin
“முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று விவசாய - நகை - கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்” : மு.க.ஸ்டாலின் உறுதி!
“தலைவர் கலைஞர் வழிநின்று விவசாயக் கடன் மற்றும் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம்” என சமத்துவப் பொங்கல் விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (13.01.2021) திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.
அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“நாளை தமிழர் திருநாள், பொங்கல் திருநாள், உழவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய திருநாள், தலைவர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்ட, தை 1 தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுகிற நாள். ஆகவே பொங்கல் நாளுக்கு முன்பு நத்தம் பகுதியில் இருக்கக்கூடிய உங்களையெல்லாம் சந்திக்கும் நல்ல வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி, உங்களின் வாழ்த்துகளைப் பெறுவது வழக்கம். ஆனால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்துப் பெறுவதற்கு, வாழ்த்துச் சொல்வதற்கு முதல் நாளே இந்த நத்தம் பகுதியில் இருக்கும் உங்களிடம் நான் வந்திருக்கிறேன். ஆகவே, இந்த வாய்ப்பைப் பெற்றமைக்கு உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
இந்த வாய்ப்பை உருவாக்கித் தந்து இருக்கக்கூடிய மாவட்ட பொறுப்பாளர் உட்பட்ட அத்தனை நண்பர்களுக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழர்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகக் கொண்டாடப்படுகிற விழாவாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் அத்தனை பேரும் இந்த விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த நேரத்தில்தான் இதை, சமத்துவப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்று நமக்கெல்லாம் அறிவுரையாக எடுத்துச் சொன்னார்கள். சமத்துவம் என்பது அனைவரும் ஒருங்கிணைந்து சாதி, மதங்களைக் கடந்து ஒற்றுமை உணர்வோடு, ஒருமித்த கருத்தோடு இதைக் கொண்டாட வேண்டும் என்ற அந்த உணர்வோடுதான் எடுத்துச் சொன்னார்கள். அதைத்தான் நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். விழாவில் மட்டுமல்ல கல்வியிலும் - அனைவருக்கும் சமமான கல்வியைத்தர வேண்டும் என்பதற்காகத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் ‘சமச்சீர் கல்வி’ என்ற ஒரு அற்புதமான திட்டத்தைக் கொண்டு வந்து ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாத வகையில் அனைவருக்கும் ஒரே கல்வி என்ற நிலையைக் கலைஞர் அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். ஆனால், இன்றைக்கு அதற்கு என்ன ஆபத்து வந்து கொண்டிருக்கிறது என்பது உங்கள் அத்தனை பேருக்கும் நன்றாகத் தெரியும்.
அதில் குறிப்பாக, “நீட்” என்பதை மட்டும் உங்களுக்கு நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏழை, எளிய குடும்பத்து, நடுத்தரக் குடும்பத்து பிள்ளைகள் படித்து, மருத்துவராக வர முடியாத சூழ்நிலையை இன்றைக்கு இருக்கும் மத்திய அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. அரியலூர் பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற ஒரு சகோதரி கண்ட கனவு தான் என்பது மருத்துவராக வர வேண்டும். அந்த கனவு கனவாகவே போய்விட்டது என்று கருதி மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்ட கொடுமை நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் 4 பேர் 5 பேர் என்று இதுவரை பலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளில் மதிப்பெண் எடுத்தாலும், மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்று சொன்னால் அதற்கு தனியாக நீட் என்ற ஒரு தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை. இந்த நிலை தமிழ்நாட்டிற்கு இருக்கக்கூடாது, நம்முடைய தமிழகத்திற்கு இதற்கு விலக்களிக்க வேண்டும் என்று சொல்லி சட்டமன்றத்தில் நான் பலமுறை பேசியிருக்கிறேன்.
பேசியது மட்டுமல்ல, இதைத் தீர்மானமாகக் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி இருக்கிறேன். அதற்குப் பிறகு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு விலக்கு வேண்டுமென்று கேட்டு ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பார்க்காமல் அங்கு இருக்கக்கூடிய எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒற்றுமை உணர்வோடு அந்த 2 மசோதாவை ஒருமனதாக ஆதரித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அதன் நிலை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியாத புதிராக இருக்கிறது.
அதற்காகத்தான் திரும்பத் திரும்ப நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இன்னும் 4 மாதங்கள் தான் இருக்கின்றது. அந்த 4 மாதத்தில் வரப்போகிற தேர்தலில் ஒரு மாற்றத்தை இங்கே எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னது போலத் தமிழக மக்கள் ஏற்படுத்தித் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். அதில் எந்த மாற்றமும் சந்தேகமும் இல்லை. அந்த தேர்தல் மாற்றத்திற்குப் பிறகு, நான் உறுதியோடு கூறுகிறேன், “நீட்” தேர்வைப் பொறுத்தவரைக்கும், எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த வரையில் தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் இருந்ததோ, இன்னும் நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த வரையில் கூட “நீட்” உள்ளே நுழையவில்லை.
ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருந்த நேரத்தில் அது உள்ளே நுழைந்து இருக்கிறது என்று சொன்னால் அந்த அளவிற்கு மத்திய அரசிடம் மண்டியிட்டு ஒரு அடிமையாக, அவர் செய்திருக்கக் கூடிய ஊழலிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதை ஆதரித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆகவே தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வருகிற போது உறுதியோடு சொல்லுகிறேன் “நீட்“ தேர்வை உடனடியாக தமிழகத்திலிருந்து விலக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் கடைசி வரையில், அதில் உறுதியாக இருந்து அதை நிறைவேற்றும் முயற்சியில் நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்குத் தயாராக இருக்கக்கூடியவந்தான் இந்த ஸ்டாலின் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்.
அதேபோலதான் “சமத்துவபுரங்கள்“. தந்தை பெரியார் அவர்கள் பெயரிலே தமிழ்நாடு முழுவதும் கலைஞர் அவர்கள் தான் உருவாக்கினார்கள். தந்தை பெரியார் கண்ட கனவு அது. எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒரே பகுதியில் ஒருங்கிணைந்து வாழவேண்டும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலை இருக்கக்கூடாது. உயர்ந்த குலத்தில் பிறந்து கூடியவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கக்கூடியவர்கள், சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அத்தனை பேரும் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்பதற்காகத் தான் குடியிருப்புகளை அவர்கள் வசதியுடன் வாழ வேண்டும் என்ற நிலையில் தான் “சமத்துவம்“ என்ற பெயரிட்டு தந்தை பெரியார் பெயரில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டது. இந்த ஆட்சி அதையும் இன்றைக்குக் கிடப்பில் போட்டிருக்கிறது. இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக, தலைவர் கலைஞர் அவர்கள் நம்முடைய வாழ்க்கை அமைப்பாக இருந்தாலும் சரி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் சமத்துவம் இருக்க வேண்டும் என்று கருதினார். முதன் முதலில் தலைவர் கலைஞர் அவர்கள் 1957 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகக் குளித்தலை தொகுதியில் நின்று வென்றார்கள். முதன்முதலில் தி.மு.க. தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று முடிவு செய்தது 1957 ஆம் ஆண்டு. முதல் தேர்தல், நாம் சந்திக்கிற தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்றோம். அந்த 15 இடங்களில் 1 இடமாக குளித்தலையில் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக உள்ளே சென்றார். உள்ளே சென்றதும், முதல் முதலில் அவர் சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்று சொல்லக்கூடிய முதல் பேச்சைப் பேசுகிறபோது, யாரும் குறுக்கிடக் கூடாது என்பது ஒரு மரபு. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் அது நன்றாகத் தெரிந்திருக்கும். முதல் பேச்சு அவர்கள் என்ன பேசினார் என்று கேட்டால், விவசாயப் பிரச்சினையைத் தான் முதன்முதலில் சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
அரசியல் வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவராக விளங்கிய மணலி கந்தசாமி அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களை அழைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டியில் ஒரு பெரிய பாராட்டு விழா நடந்தது. எதற்காக என்றால் உச்சவரம்பு சட்டத்தை கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்கள்.
விவசாயிகளுக்கு அவர்கள் விவசாயம் செய்யக்கூடிய நிலத்தை சொந்தமாக்கித் தந்ததற்குப் பாராட்டு விழா நடந்தபோது, கந்தசாமி அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை வைத்துக் கொண்டு என்ன பேசினார்கள் தெரியுமா, இந்த சட்டம் வர வேண்டும், இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்பதற்காக நாங்கள் போராடியிருக்கிறோம், வாதாடி இருக்கிறோம், எத்தனையோ தியாகங்களைச் செய்து இருக்கிறோம், ரத்தம் சிந்தி இருக்கிறோம். நாங்கள் ரத்தம் சிந்திப் பெற முடியாததைக் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் உத்தரவு போட்டு நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். இது வரலாறு.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், தமிழகத்தில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்கள் எல்லாம் பெரும் போராட்டம் நடத்தினார்கள். மறைந்த நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில், இங்கு இருக்கக்கூடிய விவசாய அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு நன்றாக நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அன்றைக்கு அ.தி.மு.க. ஆட்சி இருந்தபோது, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரத்தில் விவசாய பெருமக்கள் என்ன காரணத்திற்காகப் போராடினார்கள். என்ன கோரிக்கை என்றால், இலவச மின்சாரம் கேட்டு அல்ல, நன்றாகக் கவனியுங்கள். மின்சாரம் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று சொல்லிப் போராடினார்கள். அந்த நேரத்தில் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைக்கு எங்குப் பார்த்தாலும் போராட்டம் வெடித்துக் கொண்டு இருந்தது. நாராயணசாமி நாயுடு அவர்கள் திருச்சியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு, காயம் ஏற்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு, திருச்சி மருத்துவமனையில் கைதியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதெல்லாம் வரலாறு.
கலைஞர் ஆட்சிக்கு வருகிறார். ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்றத்தில் அறிவித்தார், விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் போராட்டம் நடத்தினார்கள், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், ஊர்வலம் சென்றார்கள், தடியடிக்கு ஆளாக்கப்பட்டார்கள், பல கொடுமைகளை அனுபவித்தார்கள். இப்போது தி.மு.க. ஆட்சி. யாரும் கோரிக்கை வைக்கவில்லை, போராடவில்லை, ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை, உண்ணாவிரதம் இருக்கவில்லை, கோரிக்கை மனு என்னிடத்தில் கொடுக்க வில்லை இருந்தாலும் உங்களுக்காக ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். நீங்கள் ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று போராடினீர்கள். ஆனால் இனிமேல் நீங்கள் ஒரு பைசா கூட கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இலவச மின்சாரம் என்று கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள்.
அதே போல தான் 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு வாக்குறுதிகளைத் தந்தார். எத்தனையோ வாக்குறுதிகள் தந்து அதில் முக்கியமாக விவசாயிகளை மையமாக வைத்து எவ்வாறு இலவச மின்சாரம் கொடுத்தாரோ, அதேபோல கூட்டுறவு வங்கிகளில் இருக்கக்கூடிய 7,000 கோடி ரூபாய்க் கடனை முழுமையாக நான் ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்கிறேன் என்று அவர்கள் அறிவித்தார்கள். 7,000 கோடி ரூபாய்க் கடனை எப்படி தள்ளுபடி செய்யப் போகிறார் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. அ.தி.மு.க.வினர் தானே அதிகமாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள். எப்படி கடனை தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் இடத்தில் கேட்டோம். நான் அவர்களை தி.மு.க.வினராக அ.தி.மு.க.வினராக காங்கிரஸ்காரர்களாக பா.ம.க.வினராக கம்யூனிஸ்ட்டுகளாக பார்க்கவில்லை; அவர்கள் அத்தனை பேரையும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாய பெருங்குடி மக்களாக நான் பார்க்கிறேன் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்.
இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் போதும், விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்ற இயக்கமாக - பணியாற்றுகின்ற இயக்கமாகச் செயல்படுகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
தலைவர் கலைஞர் அவர்கள் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அதற்கான விழா நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆளுநர் அவர்கள் பதவி ஏற்பு செய்து வைத்தார்கள். பதவியேற்பு விழா நடைபெற்ற அந்த மேடையிலேயே தலைவர் கலைஞர் அவர்கள் கோட்டையிலிருந்து 7,000 கோடி ரூபாய்க் கடன் ரத்துக்கான கோப்புகளை வரவழைத்து அதில் கையெழுத்திட்டார். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை விவசாயப் பெருங்குடி மக்களுக்காகக் கொண்டு வந்து சேர்த்தார். இப்போது இந்த அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு, தலைவர் கலைஞர் எப்படி விவசாயக் கடனை ரத்து செய்தாரோ, அதுபோல் ரத்து செய்யுங்கள் என்று விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உயர்நீதிமன்றமும் உத்தரவு போட்டது. அதனை நிறைவேற்ற முடியாத இந்த அரசு, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றத்தில் போய் தடை கேட்டது. இப்போது நான் சொல்கிறேன். இன்னும் 4 மாதங்களில் ஆட்சிக்கு வரப் போகிறோம். அப்போது தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை ரத்து செய்வதற்கான உத்தரவைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு போடும் என்று நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளைச் சொன்னோம். அதில் குறிப்பாக, ஏழை - எளிய, நடுத்தரக் குடும்பங்களில் பிறந்த சிலர் தங்களது வறுமையின் காரணமாக தங்களது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து அதற்கு வட்டிக்கு வட்டி கட்டும் சூழ்நிலை நிலவுகிறது. அதற்காக 5 சவரன் வரையிலான நகைக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சொன்னோம். இப்போதும் சொல்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர இருக்கிறோம். எப்படி விவசாயிகள் கடனை ரத்து செய்வோம் என்று சொன்னோமே அதுபோல இந்த ஐந்து சவரன் நகைக்கடன் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என்று உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இந்தியாவின் தலைநகராம் டெல்லியில் கடந்த 42 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல முறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்ற செய்திகள் வருகிறது; ஆனால் தீர்வு எட்டப்பட்டு இருக்கிறதா? இந்த நாட்டினுடைய முதுகெலும்பு யார்? விவசாயிகள்! அவர்கள் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்! அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. அவர்கள் போராடுகிறார்கள் என்றால் என்ன காரணம். மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து அடமானம் வைக்கும் செயலை இந்த ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் அனைத்து மாநிலங்களும் அதனை எதிர்க்கிறது. தி.மு.க. காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள் என்று அ.தி.மு.க. தவிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த வேளாண் சட்டங்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கிறோம். அ.தி.மு.க. ஆதரித்தது மட்டுமல்ல; முதலமைச்சர் அந்தச் சட்டங்களுக்குப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வேளாண்மை சட்டங்களில் விவசாயிகளுக்கு எந்த தீமையும் இல்லை; நன்மை தான் இருக்கிறது என்று அபாண்டமான ஒரு பொய்யை "நான் தான் விவசாயி... நான் தான் விவசாயி..." என்று நாள்தோறும் சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய முதலமைச்சர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்!
உச்சநீதிமன்றத்தில் இப்போது என்ன தீர்ப்பு வந்திருக்கிறது? அந்தத் தீர்ப்பைப் பொறுத்த வரையில் நமக்குத் திருப்தி இல்லை. அது வேறு. அந்த வேளாண் சட்டங்களைத் திரும்ப வருகிற வரையில் தொடர்ந்து போராடுவோம் என்று விவசாயிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனை ஆதரிக்கிறோம்; வரவேற்கிறோம். உங்களோடு இணைந்து இறுதிவரை வாதாட - போராட நாங்கள் காத்திருக்கிறோம் என்பதை உறுதியோடு சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
வேளாண் சட்டங்களைத் தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை ஏன் நடத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேட்டது. இப்போது இடைக்காலத் தடையும் விதித்து இருக்கிறார்கள். அதற்கென்று ஒரு குழுவும் அமைத்திருக்கிறார்கள். அதில் யார் யார் இடம்பெற்று இருக்கிறார்கள்? அவர்களுக்கு வேண்டியவர்களை, அவர்களுக்குச் சாதகமான அவர்களை நியமித்து இருக்கிறார்கள். அதனால் நியாயம் கிடைக்காது, நீதி கிடைக்காது என்று நாங்கள் மட்டுமல்ல, போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளும் கருதுகிறார்கள்.
எனவே இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு வழி எதிர்வரும் தேர்தல். தை பிறந்தால் வழி பிறக்கும்! ஒவ்வொரு ஆண்டும் தை பிறக்கிறது ஆனால் இந்த ஆண்டு தை பிறக்கும் போது வழி பிறந்தே தீர வேண்டும்! நீங்கள் ரெடி ஆகி விட்டீர்கள் இல்லையா? நாங்க ரெடி! நீங்க ரெடியா?
இந்த நத்தம் ஊராட்சி மக்கள் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அனைத்து மாநகர, நகர, பேரூர், ஊராட்சி, கிராம மக்கள் அனைவரும் அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே அதனை நிறைவேற்றுகின்ற பொறுப்பை - பணியை - கடமையைச் செய்தே தீருவோம் என்று உறுதி எடுக்கக்கூடிய நிகழ்ச்சியாகத் தான் இந்தச் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியைக் கொண்டாட வேண்டும் என்று உங்களிடம் அன்போடு கேட்டு, உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.” இவ்வாறு தி.மு.கழகத் தலைவர் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!