M K Stalin

தமிழகத்தின் இருண்டகாலமான பழனிசாமி ஆட்சியை போக்கி திமுக அரசு எனும் எழுச்சிதீபம் ஏந்துவோம் : மு.க.ஸ்டாலின்

"தமிழகத்தின் இருண்ட காலமான பழனிசாமி ஆட்சியை போக்கி - கொள்கை சார்ந்து, மக்கள் சேவையாற்றும் தி.மு.க அரசு எனும் அரசியல் எழுச்சித்தீபத்தை இம்மண் ஏந்தட்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்ட கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று தலைமையுரை ஆற்றினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது உரை வருமாறு :

“பொன்னூர்மலை, பர்வதமலை, கவுத்திமலை, திருவண்ணாமலை - இப்படிப் பல மலைகள் சூழ்ந்த மாவட்டம் இந்த திருவண்ணாமலை!

நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலை என்று பக்தர்களால் போற்றப்படும் திருவண்ணாமலை பகுதியானது, தஞ்சை மன்னர்களாலும் பின்னர் விசயநகர மன்னர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. 217 அடி கொண்ட இராஜகோபுரம் கொண்ட இந்த திருவண்ணாமலைக்குப் புகழ் சேர்க்கும் வகையில் 1989-ஆம் ஆண்டு இதனைத் தனி மாவட்டமாக உருவாக்கியதே முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தான்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 ஆயிரத்து 850 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நான்கரை மணிநேரத்துக்கு மேல் நின்று நானே சுழல் நிதி வழங்கிய அந்த நாள் இன்று என் நெஞ்சில் நிழலாடுகிறது!

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சமுதாய தீபம் ஒளிபெற எல்லாக் காலக்கட்டத்திலும் துணை நின்ற ஊர்தான் இந்த திருவண்ணாமலை. திருவண்ணாமலையையும் தீபத்தையும் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதுபோல் திருவண்ணாமலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது.

நினைத்துப் பார்க்கிறேன்... கழகம் உருவான அன்று நடந்த முதல் பொதுக்கூட்டத்தில் 1,451 ரூபாய் வசூல் ஆனது. அதில் 100 ரூபாய் திருவண்ணாமலையைச் சேர்ந்த ப.உ.சண்முகம் அவர்கள் வழங்கியது. அந்தளவுக்கு கழகத்துக்குக் கால்கோள் நாட்ட அடித்தளமாக அமைத்த ஊர் இந்த திருவண்ணாமலை.

கழகம் முதன்முதலாகத் தேர்தலில் போட்டியிட்ட 1957-ஆம் ஆண்டு தேர்தலில் 15 பேர் வெற்றி பெற்றார்கள். அதில் 3 பேர் இந்த மாவட்டத்தில் இருந்து வெற்றி பெற்று வந்தார்கள். ப.உ.சண்முகம், எஸ்.சந்தானம். எம்.அண்ணாமலை ஆகிய மூவரும் வென்றார்கள். கழகம் போட்டியிட்ட முதல் நாடாளுமன்றத்தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றோம். அதில் ஒன்று திருவண்ணாமலை. இரா.தர்மலிங்கம் அவர்கள் வென்றார்கள்.

கழக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த புலவர் கோவிந்தன், முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம், போளூர் சுப்பிரமணியம், எம்.அண்ணாமலை, இரா.தர்மலிங்கம், ஏ.செல்வரசு, பாபு ஜனார்த்தனம், எஸ்.முருகையன், த.பொன்முடி, எனப் பலரால் வளர்க்கப்பட்ட மாவட்டம் இது.

இந்த வரிசையில் கடந்த 24 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருக்கிறார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்கள். “நான் என்ன நினைப்பேன் என்பதை நான் சொல்லாமலேயே என் கண் ஜாடையைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதில் எ.வ.வேலு முன்னிலையில் இருக்கிறார்" என்று தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்டவர் அவர். அதையே இந்த மேடையில் நானும் வழிமொழிகிறேன். அவரது மகன் கம்பன் திருமணத்தின் போது, 'எதிலும் வல்லவர் வேலு, அதனால் தான் அவர் எ.வ.வேலு' என்று நான் குறிப்பிட்டேன். எனக்கு அடுத்துப் பேசிய கலைஞர் அவர்கள், 'என்னுடைய அமைச்சரவைக்கு மகுடம் சூட்டியதைப் போல உச்சநீதிமன்றமே பொதுவிநியோகத் திட்டத்தைப் பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்னுடைய தம்பி வேலு' என்று பாராட்டினார்கள்.

இளைஞர் அணிக்கான அறக்கட்டளை அமைக்கப்பட்ட போது 55 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதைப் போல, சென்ற ஆண்டு முப்பெரும் விழாவை மாபெரும் மாநாட்டைப் போல நடத்தி கலைஞர் அறக்கட்டளைக்கு 55 லட்சம் ரூபாய் நிதியை அளித்தவர் எ.வ.வேலு! நிதியளித்ததை விட, தன்னை கலைஞருக்காகவும் எனக்காகவுமே ஒப்படைத்துக் கொண்டவர் வேலு.

வடக்கு மாவட்டப் பொறுப்பாளரான தரணி வேந்தன், கழகத்தின் மூத்த ஒன்றியச் செயலாளராக இருந்தவர். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது ஒன்றியக்குழுத் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றினார். இப்போது மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

எ.வ.வேலு, தரணி வேந்தன் ஆகியோரையும் அவர்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டு வரும் தோழர்களையும் பாராட்டுகிறேன்.

முன்னிலைப் பொறுப்பு வகிக்கும் பிச்சாண்டி அவர்கள் இளைஞரணியில் இருந்து செயல்பட்டு - கழக அமைச்சரவையில் இடம்பெறும் அளவுக்கு உயர்ந்தவர்! ஒரு முறையல்ல ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வென்றவர். இதில் இருந்தே அவரது மக்கள் செல்வாக்கை அறியலாம். கழக சட்டமன்றத் துணைக் கொறடாவாக இருக்கும் பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்டக் கழகச் செயலாளராகவும் இருந்து திறம்படச் செயல்பட்டவர். இந்த மாவட்ட வளர்ச்சிக்கு எப்போதும் துணை நிற்பவர்!

* திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கிய கலைஞர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைத்துக் கொடுத்தார்.

* சாத்தனூர் அணையைப் புனரமைப்பு செய்ததும் கழக ஆட்சியே!

* திருவண்ணாமலையை தனிப் போக்குவரத்து மண்டலமாக ஆக்கியதும் கழக ஆட்சியே!

* 120 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி

* செய்யாரில் சிப்காட் தொழிற்சாலை

* ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம்

* காரப்பட்டில் அரசு பட்டயக் கல்லூரி

* திருவண்ணாமலை நகருக்கு புதிய பாதாளச் சாக்கடைத் திட்டம்

* திருவண்ணாமலை நகராட்சிக்கு 36 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நான் தான் அமைத்துக் கொடுத்தேன்.

* புதிய விளையாட்டு அரங்கம், புதிய நீச்சல் குளம் அமைத்தோம்.

* கலசப்பாக்கம் - மிருகண்டாநதி நீர்த்தேக்கம்

* செங்கம் - குப்பநத்தம் அணை

* போளூர் - செண்பகத் தோப்பு அணை

* தண்டராம்பட்டு தனி தாலுகா ஆனது

* தண்டராம்பட்டுவில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு

* புதுப்பாளையத்துக்கு சாத்தனூர் அணை கூட்டுக் குடிநீர் திட்டம்

* அம்மாபாளையத்தில் 60 கோடியில் பால் பவுடர் தொழிற்சாலை

* வந்தவாசியில் அரசு கல்லூரிக்கு 8 கோடியில் புதிய கட்டடம்

* ஆரணியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி

- இப்படி பல்வேறு திட்டங்களைச் செய்து கொடுத்த அரசு தி.மு.க. அரசு.

இதில் மிக முக்கியமானது, 1975-ஆம் ஆண்டு அண்ணாமலையார் கோவில் திருப்பணியை முழுமையாகச் செய்தது கழக அரசுதான். இத்திருப்பணிக்காக தனிக்குழுவை, கலைஞர் அவர்கள் அமைத்தார்கள். 7 லட்சத்து 25 ஆயிரம் நிதி ஒதுக்கினார்கள். ஆணையர் பொது நல நிதியில் இருந்து 1.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்கள். தமிழகத்தின் பல்வேறு அரசு கோவில்களில் இருந்து நன்கொடைகள் கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்தார்கள். 1976-ஆம் ஆண்டு பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்த இருந்த நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து குடமுழுக்கு நடந்தது என்பது மூத்தவர்களுக்குத் தெரியும்.

இதை விட முக்கியமாக இன்னொன்று, அண்ணாமலையார் கோவிலைப் பாதுகாத்ததும் கழக அரசு தான். அண்ணாமலையார் கோவிலானது பழம் பெருமையும், அழகியலும் பிரமாண்டமும் கொண்டது ஆகும். அதனுடைய தொன்மை கம்பீரம் காரணமாக மத்திய தொல்பொருள் துறை 2004-ஆம் ஆண்டு கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது. அப்போது நாடாளுமன்றப் பிரச்சாரத்துக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்களை ஊர் பொதுமக்களும், பக்தர்களும் வந்து சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் போனால், ஆன்மீகப் பணிகள் தொய்வடையும் என்று சொன்னார்கள். அந்த தேர்தலில் கழகம் 40-க்கு 40 பெற்றது. அப்போது அமைந்த காங்கிரஸ் அரசுடன் பேசி அண்ணாமலையார் கோவிலைப் பக்தர்களின் எண்ணத்துக்கு ஏற்ப மீட்டுக் கொடுத்தது தி.மு.க. கழகம் தான்.

இன்றைக்கு ஆன்மீகத்தின் பேரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறுகள் தெரியாது. அண்ணாமலையார் கோவில் என்பது தமிழ்நாட்டின் சொத்து. பண்பாட்டின் சின்னம். அதைக் காத்தது கலைஞர் அரசு; கழக அரசே!

ஆனால் இன்றைய அ.தி.மு.க. அரசு திருவண்ணாமலைக்கு என்ன செய்தது? அ.தி.மு.க. ஆட்சியில் தரப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது?

* திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள். பணமும் ஒதுக்கினார்கள். ஆனால் திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

* ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூரில் இருந்து மேல்பட்டு கிராமத்திற்கு தார் சாலை அமைத்து பல ஆண்டுகளாகியும் தற்போது வரை பேருந்துகள் இயக்கப்படவில்லை.

* மேல்செங்கம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று வாக்குறுதி கிடப்பில் கிடக்கிறது.

* திருவண்ணாமலை செங்கம் இணைப்பு சாலை கிடப்பில் கிடக்கிறது.

* ஆரணியில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என்ற வாக்குறுதி கிடப்பில் கிடக்கிறது.

* திருவண்ணாமலையில் சென்ட் தொழிற்சாலை என்றார்கள். செய்தார்களா? என்றால் இல்லை!

* திண்டிவனம் - திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கான கடிதம் கொடுக்காமல் எட்டு ஆண்டுகளாக இழுத்தது இந்த அ.தி.மு.க. அரசு!

* சாத்தனூர் அணை - செய்யாறு இணைப்பை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு அதனைக் கிடப்பில் போட்டுவிட்டது. 10 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கிறது. ஆனால் 2013-ஆம் ஆண்டு ஒரு முறையும், 2019-ஆம் ஆண்டு ஒருமுறையும் புது திட்டம் போல அ.தி.மு.க. அறிவிக்கிறது.

இதுதான் தி.மு.க. ஆட்சிக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்குமான வித்தியாசம்!

அவர்கள் சொன்னதைச் செய்யமாட்டார்கள். தி.மு.க. தான் சொன்னதைச் செய்யும். செய்வதைத் தான் சொல்லும்!

அனைத்து அரசுகளையும் இரண்டு விதமாகப் பிரிப்பார்கள். ஒன்று கொள்கை சார்ந்த அரசு. மற்றொன்று சேவை செய்யும் அரசு. நிறையக் கொள்கை பேசும் அரசு, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைச் செய்வதில் சுணக்கம் காட்டக் கூடும். மக்களுக்குச் சலுகைகள் தருவதில் அக்கறை செலுத்தும் ஒரு அரசாங்கம், தனது இயக்கத்தின் லட்சியங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் இருக்கக் கூடும்.

ஆனால் ஒரு அரசு கொள்கை சார்ந்த அரசாகவும் - மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்யும் அரசாகவும் இருக்கிறது என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான்.

திராவிட இயக்கத்தின் எந்தக் கொள்கையையும் விட்டுத் தர மாட்டோம்; அதேநேரத்தில் கொள்கையை மட்டும் பேசிக் கொண்டு இருந்துவிட மாட்டோம். மக்களுக்கு அன்றாடம் தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம்.

இதுதான் அண்ணா வடிவமைத்த பாதை! தலைவர் கலைஞர் காட்டிய பாதை!

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்த அண்ணா அவர்கள், பெரியாருக்குப் போட்டியாக அல்ல, பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளுக்கு அரசியல் வடிவம் கொடுப்பதற்காகவும், அதனைச் செயல்படுத்துவதற்காகவும் தான் அரசியலில் குதித்தார். சீர்திருத்ததைப் பேசிக் கொண்டே இருக்க முடியாது. செயல்படுத்தும் இடத்துக்குச் சீர்திருத்தக்காரர்கள் வந்தாக வேண்டும் என்று அண்ணா அவர்கள் நினைத்தார்கள். தனது கனவை நிறைவேற்றும் தம்பிமார்களுடன் சேர்ந்து அரியணை ஏறினார் அண்ணா. காலம் அவரை அடுத்த இரண்டே ஆண்டுகளில் நம்மிடம் இருந்து பிரித்தது.

பேரறிஞர் அண்ணாவின் கனவுகளையே தனது கனவுகளாகக் கொண்டு கலைஞர் அமைத்த ஆட்சி, ஒரு திராவிடக் கொள்கை ஆட்சி, தமிழின மேம்பாட்டு ஆட்சி எதையெல்லாம் செயல்படுத்துமோ, அவை அனைத்தையும் செய்தது.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கொள்கை அரசு அமைந்ததால் தான் -

* தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கிடைத்தது!

* சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் தரப்பட்டது!

* தமிழும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கை வகுக்கப்பட்டது!

* தமிழுக்கு செம்மொழித் தகுதி தரப்பட்டது!

* உலகத்தமிழ் மாநாடு நடத்தினோம்! தமிழறிஞர் சிலைகளைச் சென்னைக் கடற்கரை முழுமையும் வைத்தோம்!

* மாநில சுயாட்சித் தீர்மானம் கொண்டு வந்தோம்!

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வந்தோம்!

* மனோன்மணீயம் சுந்தரனார் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்து எல்லா விழாக்களிலும் ஒலிக்க வைத்தோம்!

* வள்ளுவருக்குக் கோட்டமும், 133 அடியில் சிலையும் வைத்தோம்!

* பூம்புகாரில் கலைக்கூடம் அமைத்தோம்!

* சமத்துவபுரங்கள் அமைத்தோம்!

* தஞ்சை பெரிய கோவில் வாயிலில் மாமன்னன் இராசராச சோழனுக்குச் சிலை வைத்தோம்! தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாண்டு விழா நடத்தினோம்!

* தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தோம்!

* செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனம் அமைத்தோம்!

*கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவினோம்!

* பொங்கல் தினத்துக்கு மறுநாளை திருவள்ளுவர் தினமாக அரசு விடுமுறையுடன் அறிவித்தோம்!

* பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று சட்டம் கொண்டுவந்தோம்!

* ஜனநாயகம் காக்க 1976-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தோம்!

* ஈழத்தமிழரைக் காக்க 1991-ஆம் ஆண்டு ஆட்சியை இழந்தோம்!

* அனைத்து சமூக மக்களின் உயர்வுக்காகவும் இடஒதுக்கீடு கொடுத்தோம். சமூகநீதியைக் காத்தோம்!

- இப்படி தமிழ் வாழ, தமிழினம் வாழ, தமிழ்நாடு செழிக்க எத்தனையோ கொள்கை சார்ந்த திட்டங்களைக் கொண்டு வந்த ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. அடுத்து அமையும் ஆட்சியும் கொள்கை பூர்வ ஆட்சியாகத் தான் அமையும் என்பதால் இப்போதே அதற்கான திட்டமிடுதல்களைத் தொடங்கி இருக்கிறோம்.

இப்படி கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்துவதிலும் கழக அரசு அக்கறையுடன் இருந்தது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.

அதில் ஒரே ஒரு துறையை மட்டும் நான் சொல்கிறேன். அதுதான் உணவுத் துறை. மனிதனுக்கு மிக முக்கியமானது உணவுதான்! அந்த ஒன்றைப் பற்றிச் சொன்னாலே, அதிலேயே அனைத்துத் துறையும் அடங்கி உள்ளது.

இந்திய அளவில் உணவுக் கழகம் 1965-ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. பெரியவர்களுக்குத் தெரியும். நினைத்த நேரத்தில், நினைத்த அளவுக்கு அரிசி வாங்க முடியாது. ஆளுக்கு இவ்வளவு தான் என்று அளந்து கொடுப்பார்கள். மிகப்பெரிய அளவுக்கு அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாடிய காலம் அது.

மூன்று படி இலட்சியம், ஒரு படி நிச்சயம் - என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினார்கள். 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தோம். ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு அரிசியை மத்திய அரசாங்கத்திடம் இருந்து நம்மால் பெற முடியவில்லை.

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆனதும் இதற்கான திட்டத்தைத் தீட்டினார்கள். இந்திய உணவுக் கழகத்தைப் போல, தமிழ் நாட்டிலும் ஒரு உணவுக் கழகத்தை உருவாக்கினார்கள். இதன் மூலமாக உணவுப் பொருள்கள் மக்களைச் சென்று அடைவதற்காக நுகர்பொருள் வாணிபக் கழகம், பொதுவிநியோகத் திட்டம் ஆகிய இரண்டையும் பலப்படுத்துகிறார். அனைவருக்கும் குடும்ப அட்டை தரப்படுகிறது.

அதற்கு முன்பு நகர்ப் பகுதிகளில் தான் ரேசன் கடைகள் இருந்தது. கிராமப் பகுதிகளுக்கும் ரேசன் கடைகளை உருவாக்கினார் கலைஞர். விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கினார். இதனால் நெல் உற்பத்தியும் அதிகம் ஆனது. நெல்லை மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்குத் தமிழகத்தை மாற்றினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.

குறைந்தபட்ச ஆதார விலைக்காக இந்த 2020-ஆம் ஆண்டு டெல்லியில் போராடி வருகிறார்கள் விவசாயிகள். ஆனால் 1974-ஆம் ஆண்டே ஆதார விலைக்கும் கூடுதலான விலையைத் தமிழக விவசாயிகளுக்குக் கொடுத்தவர் தான் நம் தலைவர் கலைஞர் அவர்கள்.

விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக்கும் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை என்பதை மத்திய அரசு நிர்ணயித்தது. அந்த விலை போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள்.

1974-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோதும் இதே கோரிக்கையை விவசாயிகள் வைத்தார்கள். அப்போது கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்குக் கலைஞர் அவர்கள் கொண்டு சென்றார்கள். அதாவது கலைஞர் அவர்களே, விவசாயிகளின் பிரதிநிதியாக மாறி டெல்லிக்குச் சென்றார்.

அன்றைக்கு வேளாண் துறை அமைச்சராக இருந்தவர் பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள். அவரைக் கலைஞர் அவர்கள் சந்தித்தார்கள். 'கொள்முதல் விலையை அதிகப்படுத்த வேண்டும், இது குறைவாக இருப்பதாக விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்' என்று கலைஞர் அவர்கள் வாதிட்டார். ஆனால் கொள்முதல் விலையை அதிகப்படுத்த இயலாத சூழல் இருப்பதை பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் சொன்னார்கள். கலைஞர் அவர்கள் இதனை ஏற்கவில்லை.

'விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அவர்களுக்கு நன்மை செய்தாக வேண்டும்' என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விடாமல் வலியுறுத்தினார். அப்போது அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள், கலைஞரிடத்திலே ஒரு ஆலோசனையைச் சொன்னார்கள்.

'விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரால், போக்குவரத்துச் செலவு என்ற பெயரால் மாநில அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துக் கொள்ளுங்கள்' என்று பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

தமிழகம் திரும்பிய கலைஞர் அவர்கள், உடனடியாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை அறிவித்தார். இந்தியாவிலேயே முதன்முதலாக விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்த மாநிலம் தமிழ்நாடு. கொடுத்த ஆட்சி தி.மு.க ஆட்சி. கொடுத்த தலைவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!

குவிண்டால் ஒன்றுக்கு கொள்முதல் விலையையும் சேர்த்து 15 ரூபாயை ஊக்கத்தொகையாக முதலமைச்சர் கலைஞர் வழங்கினார்கள். அதற்கு போனஸ்- ஊக்கத்தொகை- போக்குவரத்து தொகை என்று சொல்லி வழங்கினார்கள்.

இது எமர்ஜென்சி காலட்டத்தில் ரத்து செய்யப்பட்டது. 1977 - தி.மு.க தேர்தல் அறிக்கையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நெல் கொள்முதலுக்குக் கழக அரசு விவசாயிகளுக்கு அளித்து வந்த போனஸ் திரும்பவும் தர ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என்று அறிவித்தது.

மீண்டும் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கலைஞர் அவர்கள், 1990-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்கினார். 1 கிலோ மீட்டருக்குள் ரேசன் கடைகளை அமைத்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுத்தார். கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்தார். உழவர் சந்தைகளை உருவாக்கினார்.

2006-ஆம் ஆண்டு ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று அறிவித்தார் கலைஞர் அவர்கள். ஆட்சிக்கு வந்ததும் ஒரு ரூபாய் ஆக்கினார். ரேசன் அரிசி வாங்குபவர்கள் தொகை அதிகம் ஆனது அதனால் தான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், பட்டினிச் சாவு உள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்தது. அதில் தமிழ்நாடு இல்லை. ஏன் இல்லை?

கலைஞர் அவர்கள் ஆட்சி செய்த மாநிலத்தில் பட்டினி சாவு எப்படி இருக்கும்? அதனால் இல்லை.

தமிழகத்தின் மிக முக்கியமான பொருளாதார அறிஞரான ஜெயரஞ்சன் அவர்கள், இந்தியப் பொருளாதார மாற்றங்கள் என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து அருமையாகப் பேசக் கூடிய பொருளாதார அறிஞர் அவர். உங்களில் பலரும் அவரது பேட்டிகளை - விவாதங்களைத் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.

அவர் எழுதி இருக்கிறார், 'கலைஞர் ஆட்சி மணிமேகலையின் கையில் உள்ள அட்சய பாத்திரத்துக்கு இணையானது' என்று எழுதி இருக்கிறார். கலைஞரை 'நவீன மணிமேகலை' என்று எழுதி இருக்கிறார்! 'உங்களுக்குப் பிடித்த இலக்கிய பாத்திரம் எது?' என்று தலைவர் கலைஞரைக் கேட்டபோது, 'மணிமேகலையின் அட்சயப் பாத்திரம்' என்றார். அவரே மணிமேகலையாக வாழ்ந்தார். அதனால் தான் தமிழகம் பசியற்ற, பஞ்சம் அற்ற சமூகமாக வளர்ந்தது. உயர்ந்தது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மக்கள் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தைப் பறித்துவிட்டு, மீண்டும் பிச்சைப்பாத்திரத்தைக் கொடுத்துவிடத் துடிக்கிறார்கள்.

இலவச அரிசியில் ஊழல்! மக்களுக்காக மத்திய அரசு கொடுத்த அரிசியையே விற்றுவிட்டார் உணவுத் துறை அமைச்சர் காமராஜ்!

பருப்பு ஊழல்! காவிரி விவசாயிகளுக்குத் துரோகம்! மூன்று வேளாண் சட்டத்துக்கு ஆதரவு! பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பைக் கிடப்பில் போட்டார்கள். இப்படி பழனிசாமியின் துரோகத்தை சொல்லிக் கொண்டே போகலாம்!

இரண்டு நாட்களுக்கு முன்னால் நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு தன்னைத் தானே கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

கொரோனா காலத்தில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற அடிப்படையில் ஒரு திட்டத்தைத் தொடங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தோம்! அரசாங்கம் செய்ய வேண்டியதைப் பொதுமக்கள் மனுக்களாக எங்களிடம் கொடுத்தார்கள். அந்த மனுக்களைத் தலைமைச் செயலாளரைச் சந்தித்துக் கொடுத்தோம். உரிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கொடுத்துவிட்டோம். இவை அனைத்தும் அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள். அதனை இந்த அரசு செய்து கொடுத்ததா என்றால் இல்லை! செய்து கொடுக்க முயற்சித்தார்களா என்றால் அதுவும் இல்லை!

“உங்களிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டால், உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டால், அதை யார் கொடுத்தது என்று பார்க்காதீர்கள். என்ன கோரிக்கை என்று மட்டும் பாருங்கள். செயல்படுத்திக் கொடுங்கள்' என்று தலைவர் கலைஞர் அவர்கள் தான் சொல்வார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு, தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை மதிக்கவில்லை.

தி.மு.க.வை மதிக்கவில்லை என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எடப்பாடியிடம் மரியாதை பெற வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்களை பழனிசாமி மதித்தாரா? அந்த மக்களால் தான் அவர் முதலமைச்சராக இருக்கிறார், அவர்கள் வாக்களித்ததால்தான் அ.தி.மு.க ஆளும்கட்சியாக இருக்கிறது. இந்த நன்றியுணர்ச்சி கொஞ்சமாவது அவருக்கு இருந்திருக்க வேண்டும். அவருக்கும் நன்றியுணர்ச்சிக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை என்பதன் அடையாளம் தான் அவரது பேச்சு.

பழனிசாமி பேசி இருக்கிறார். "மக்களிடம் மு.க.ஸ்டாலின் மனுக்களை வாங்கினார். அந்த மனுக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்குத் தான் போனது" என்று சொல்லி இருக்கிறார். மக்களிடம் பெற்ற மனுக்களை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளரிடம் தான் கொடுத்தோம். ஆனால் அது குப்பைத் தொட்டிக்குப் போனது என்று பழனிசாமி சொல்கிறார் என்றால் அவர் ஆட்சி செய்யும் தலைமைச் செயலகத்தை குப்பைத் தொட்டி என்கிறாரா?

தான் உட்கார்ந்து இருப்பதால் அது குப்பைத் தொட்டியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறாரா?

எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்கள் மனு வாங்கினால் அதனைச் சம்பந்தப்பட்ட துறைக்கு தான் அனுப்ப முடியும்? அது மக்களுக்கும் தெரியும். இது கூடவா மக்களுக்குத் தெரியாது.

அமைச்சரிடம் மனு கொடுப்பதற்கும், எதிர்க்கட்சித் தலைவரிடம் மனு கொடுப்பதற்கும் வித்தியாசம் தெரியாதவர்களா தமிழ்நாட்டு மக்கள்? மக்கள் மனு கொடுத்தால் குப்பைத் தொட்டியில் போடுவது பழனிசாமியின் பழக்கமாக இருக்கலாம். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அரசாங்கத்திடம் தான் கொடுத்துள்ளோம். அரசாங்கம் எங்கள் கைக்கு வந்ததும் அந்த மனுக்கள் தூசி தட்டி எடுக்கப்பட்டு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை எனது வாக்குறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வருவோம் என்று முழங்கி இருக்கிறார் பழனிசாமி. அ.தி.மு.க. என்ற கட்சியையே தனது நாற்காலியைக் காக்க, தான் கொள்ளையடிக்க, தான் தப்பிக்க பா.ஜ.க. அரசிடம் அடமானம் வைத்துவிட்ட பழனிசாமிக்கு எம்.ஜி.ஆரைப் பற்றியோ, ஜெயலலிதாவைப் பற்றியோ பேசுவதற்குக் கூட அருகதை இல்லை. இதனை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் உணர்வார்கள். தன் மீதான கொள்ளை வழக்கில் இருந்து தப்புவதற்காக பா.ஜ.கவின் பாதம் தாங்கிக் கிடக்கும் பழனிசாமியை, பா.ஜ.க.வே வஞ்சம் தீர்த்துவிடும்.

கபட நடிப்பால் பதவியைப் பெற்று - வஞ்சகத்தால் துரோகம் செய்து - சுயநலத்தால் அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர் பழனிசாமி என்பதை உண்மை அ.தி.மு.க. தொண்டர்கள் மறக்க மாட்டார்கள். சுயநலத்துக்காக அடமானம் வைக்க அ.தி.மு.க. என்பது பழனிசாமியின் பரம்பரைச் சொத்து அல்ல என்பதை அந்த தொண்டர்கள் உணர்ந்துவிட்டார்கள்.

அ.தி.மு.க. ஆட்சி 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னதாக பழனிசாமி சொல்கிறார். அவர் இறந்த சில நாட்களிலேயே இரட்டை இலையைப் பறிகொடுத்தவர் பழனிசாமி. சில தகிடு தத்தங்கள் மூலமாக திரும்பப் பெற்றவர்.

அ.தி.மு.க. என்ற கட்சிக்கு பொதுச்செயலாளர் போடுவதற்குத் துப்பு இல்லாதவர் பழனிசாமி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் 38 இடம் தோற்றவர் பழனிசாமி!

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தோற்றவர் பழனிசாமி! நடந்து முடிந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவிகித இடங்களில் தோற்றவர் பழனிசாமி! நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முதுகெலும்பு இல்லாதவர் பழனிசாமி! கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலை முறையாக நடத்த முடியாதவர் பழனிசாமி! இப்படிப்பட்ட பழனிசாமி தான், மூன்றாம் முறையாக அ.தி.மு.க.வை ஜெயிக்க வைக்கப் போகிறாராம்.

அவர் முதலமைச்சர் வேட்பாளராகக் கூட நீடிக்க முடியாது என்பதைத் தான் பா.ஜ.க.வினர் தினமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் பயத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள ஏதோ உளறிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமியின் அரசு என்பது கொள்கை அரசு அல்ல; கொள்ளை அரசு. எடப்பாடி பழனிசாமியின் அரசு சேவை அரசு அல்ல; சுரண்டல் அரசு. இது எம்.ஜி.ஆர் அரசு அல்ல; ஜெயலலிதா அரசும் அல்ல!

இந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுதாரணம் இல்லை. அவருக்கு முன்னுதாரணம் அவர் தான். மோசமான பழனிசாமிக்கு உதாரணம், மிக மோசமான பழனிசாமி தான்.

மீண்டும் கொரோனா பரவுகிறது என்ற அச்சம் தலைதூக்கி வருகிறது. புது வைரஸ் வேறுமாதிரியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அது என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், மக்கள் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மார்ச் மாதம் அலட்சியமாக இருந்ததைப் போல, தமிழக அரசு இப்போது அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்!

'கொரோனாவா அது தமிழகத்தில் யாருக்கும் வராது' என்று அலட்சியமாக தமிழக முதலமைச்சரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் இருந்ததால் தான் தமிழகம் இவ்வளவு பாதிப்பை சந்தித்தது.

இதுவரை எட்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 12 ஆயிரம் பேர் இறந்து போயிருக்கிறார்கள். இதற்குத் தமிழக அரசின் அலட்சியம் தானே காரணம்!

இங்கிலாந்தில் இப்படி ஒரு புது வகையான வைரஸ் பரவுகிறது என்பதை அறிந்து தமிழக அரசு எச்சரிக்கையாக இருந்ததா என்றால் இல்லை! இங்கிலாந்தில் இருந்து வந்த 800 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக தமிழக அரசு தேடி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

அப்படியானால் விமானநிலையங்களில் எந்தப் பரிசோதனையும் செய்வது இல்லையா? நிறுத்திவிட்டீர்களா?

'யாரும் அச்சப்படத் தேவையில்லை' என்று முதலமைச்சர் சொல்கிறாரே தவிர, தடுப்புப் பணிகளை அரசு செய்ததாகத் தெரியவில்லை!

கொரோனா கட்டுப்பாடு என்று சொல்லி கொள்ளையடிக்கிறார்களே தவிர, கட்டுப்படுத்தியதாகத் தெரியவில்லை. ரூபாய் 7,544 கோடியை செலவு செய்துள்ளதாகக் கடந்த 28-ஆம் தேதி சொல்லி இருக்கிறார்கள்.

என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள்? அது சம்பந்தமான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் கொள்ளை அடித்துவிடாதீர்கள். மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இப்படிப்பட்ட உதவாக்கரை அரசை உடன்பிறப்புகளின் பலத்தால் உழைப்பால் வெல்வோம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வரலாற்றில் திருவண்ணாமலைக்கு முக்கியமான இடம் உண்டு. கழகம் உருவான போதே நடந்த நகர்மன்றத் தேர்தலில் ப.உ.சண்முகம் அவர்கள் போட்டியிட்டு வென்றார்கள்.

1963-ஆம் ஆண்டு நடைபெற்ற திருவண்ணாமலை இடைத்தேர்தலில் கழக வேட்பாளராக ப.உ.சண்முகம் அவர்கள் போட்டியிட்டார்கள். அந்த இடைத்தேர்தல் வெற்றி தான் 1967 பொதுத்தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. அத்தகைய அரசியல் மாற்றத்துக்கு - ஆட்சி மாற்றத்துக்குத் திருவண்ணாமலை பொதுக்கூட்டமும் அடித்தளம் அமைக்கட்டும்.

பழனிசாமியின் ஆட்சியானது தமிழகத்தின் இருண்டகாலம். இந்த இருண்டகாலம் போக்க அருணை மண், தனது அரசியல் எழுச்சித் தீபத்தை ஏந்தட்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Also Read: “மக்களின் வரிப்பணத்தை அ.தி.மு.கவின் கட்சிப் பணத்தை போல வழங்குவதா?” - பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!