M K Stalin
“மக்களின் வரிப்பணத்தை அ.தி.மு.கவின் கட்சிப் பணத்தை போல வழங்குவதா?” - பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
”தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கும் பொங்கல் பரிசு நிதியை அனைவருக்கும் முறையாக - நியாயமாக – நேர்மையாக வழங்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இராணிப்பேட்டை தொகுதி - அனந்தலை ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் கிராம சபை’ கூட்டத்தில், மிகுந்த எழுச்சியோடு பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றினர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது :
"கிராம சபைக் கூட்டம் என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் எடப்பாடிக்கு கோபம் வந்துவிடும். அவர் அதற்குத் தடை போட்டிருக்கிறார். என்ன தடை போட்டாலும், அந்த தடையைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்.
கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று சொல்லுகிறீர்கள் அல்லவா, நாங்கள் ‘மக்கள் கிராம சபை கூட்டத்தை’ நடத்துகிறோம் என்று சொல்லி நாம் இப்பொழுது நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 23-ஆம் தேதியிலிருந்து நாம் இந்த கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். இங்கே பார்க்கிறேன், இந்தக் கூட்டத்தை இதே கிராம சபைக் கூட்டமா? இது என்ன கிராம சபையின் மாநாடா? என்று வியக்கத்தக்க வகையில் ஆயிரக்கணக்கில் இங்கே திரண்டு இருக்கிறீர்கள். இங்கு கூடி இருப்பதெல்லாம் ஆச்சரியமல்ல; இங்கு இருப்பவர்களில் 99 சதவீதம் பேர் பெண்கள், தாய்மார்கள் தான் இங்குத் திரண்டு இருக்கிறீர்கள்.
ஆண்கள் எல்லாம் சுற்றி நிற்கிறீர்கள். ஆண்கள் எப்பொழுதும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு அடையாளம்.
உங்களை உட்கார வைத்து ஆண்களெல்லாம் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். காலம் மாறிவிட்டது. அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கில் இங்கே பெண்களும், சகோதரிகளும் திரண்டு இருக்கிறீர்கள். இப்படி திரண்டிருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
இந்த அனந்தலை கிராமத்தில் திரண்டு இருக்கக்கூடிய பெண்களும், சகோதரிகளும், தாய்மார்களும் இவ்வளவு அமைதியாக, இவ்வளவு கட்டுப்பாடாக, உட்கார்ந்து இருக்கிறீர்கள். இந்தக் காட்சிகள், நிச்சயமாக வர இருக்கக்கூடிய தேர்தலில் நாம் தான் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போகிறோம் என்பதற்கு அடையாளம்.
கட்டுப்பாடு மட்டுமல்ல; நம்பிக்கையோடு வந்திருக்கிறீர்கள். களத்தில் நிற்கிற எங்களுக்கு நம்பிக்கையை விட இங்கே கூடி இருக்கக்கூடிய உங்களுக்கு தான் அதிக நம்பிக்கை உள்ளது. தி.மு.க.தான் நிச்சயமாக, உறுதியாக ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நம்பிக்கையோடு நீங்கள் வந்திருக்கிறீர்கள்.
இந்த கிராம சபைக் கூட்டம் என்பது கடந்த 23-ஆம் தேதியிலிருந்து நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். கடந்த 23-ஆம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு 10 நாட்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து அதை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அவ்வாறு நடத்தத் தொடங்கிய உடன் மக்கள் திரளக் கூடிய இந்த காட்சிகளை எல்லாம் பார்த்து, அதுவும் பெண்கள் அதிகமாக வந்து உட்கார்ந்து, அவர்கள் சில கேள்விகளைக் கேட்க, இந்த ஆட்சியில் இருக்கக்கூடிய குற்றங்களை, ஊழல்களை இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கக்கூடிய சூழ்நிலைகளை எல்லாம் இந்த மக்கள் சொல்லக்கூடிய காட்சிகளை, தொலைக்காட்சியில், ஆட்சியில் இருக்கக்கூடியவர்களும், அமைச்சர்களும் முதலமைச்சரும் பார்க்கிறார்கள்.
இதை எப்படியாவது தடுக்க வேண்டும், இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று ஒரு உத்தரவு வந்தது. அந்த உத்தரவு வந்த உடன் நம் தோழர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
இப்படி உத்தரவு போட்டு விட்டார்கள். நாம் எல்லா ஏற்பாடும் செய்து விட்டோம். என்ன செய்வது? என்று யோசித்தோம். கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் தடை வாங்கிவிடலாம். அவர்கள் போட்ட உத்தரவை ரத்து செய்ய முடியும் என்று யோசனை சொன்னார்கள். இந்தப் பிரச்சனை எல்லாம் வேண்டாம் என்று நான் முடிவு செய்தேன்?
மக்கள் கிராமசபை என்ற பெயரில் நடத்துவோம் என்று முடிவு செய்து - ஏனென்றால் மக்கள் தானே திரளுகிறார்கள் - எனவே மக்கள் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் நாம் நடத்துவோம் என்று சொன்னேன்.
இன்றைக்கு எல்லா பத்திரிகைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று ஒரு விளம்பரம் போட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் அப்பட்டமான பொய். ஒரு தவறான கணக்கு. ஏதோ ஒரு தனியார் நிறுவனம் ஒரு கருத்துக் கணிப்பை எடுத்து வெளியிட்டு இருக்கிறது. தி.மு.க ஆட்சியில் பெற்ற வளர்ச்சியையும் சேர்த்தே கணக்கில் எடுத்து அவர்கள் அந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்கள்.
ஆனால் அவர்களது ஆட்சி இன்றைக்கும் என்றைக்கும் ஊழலில் முதல் இடத்தில் இருக்கிறது. கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதுதான் அவர்களது கொள்கை, இதில் தான் முதல் இடத்தில் இருக்கிறது.
இப்படி பல பிரச்சனைகள் இருக்கிறது. இந்த 10 ஆண்டுகளாக அதிலும் குறிப்பாக, அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்று முடிவு செய்து தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுத்தார்கள்.
நமக்கும் அவர்களுக்கும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரே 1% தான் வித்தியாசம். அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். நாம் எதிர்க்கட்சியாக இருந்தோம். அவர்கள் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழும் நிலையில் உட்கார்ந்திருந்தார்கள்.
அந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது. அந்த அம்மையாருக்கு என்ன உடல்நிலை என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் காலையில் ஒரு அமைச்சர் சொல்வார், அம்மா இட்லி சாப்பிட்டார், மாலையில் இன்னொருவர் சொல்வார், இட்லியோடு சட்னி சாப்பிட்டார். மறுநாள் இன்னொரு மந்திரி சொல்வார், அம்மா டிவி பார்த்தார்கள். அடுத்த நாள் இன்னொரு அமைச்சர் சொல்வார், அம்மா அரசு அதிகாரிகளுக்கு கையெழுத்துப் போட்டார்கள். அம்மா அதிகாரிகளுடன் கலந்து பேசினார்கள்.
இப்படி மாறி மாறி அறிக்கை கொடுத்தார்களே தவிர, என்ன உடம்பு, என்ன சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்று சொல்லவில்லை. ஒரு நாள் திடீரென்று அந்த அம்மையார் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. உள்ளபடியே அதிர்ச்சிகரமான செய்திதான். என்ன தான் நமக்கு அரசியலில் எதிரியாக இருந்தாலும், நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மறைவு என்பது ஒரு துக்க கரமான நிகழ்வது தான்.
உடனே என்னை அழைத்து தலைவர் கலைஞர் சொன்னார். நீ உடனே மறைந்த அம்மையார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வா என்றார். ஒரு பெண்ணாக இருந்தாலும் தைரியமாக இருந்தார்கள். கட்சியில் எவ்வளவு குளறுபடிகள் இருந்தாலும் தைரியமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை இழந்துவிட்டோம், ஒரு அம்மையாரை இழந்துவிட்டோம்.
அதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கலைஞரின் சார்பில் எங்களது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒருவர் எப்படி இறந்தார் என்பதே இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. தயவு செய்து பெண்கள் சிந்தித்துப்பாருங்கள். மறந்திருக்க மாட்டீர்கள்.
சாதாரணமான ஒருவர் இறந்தால் கூட உண்மை வெளியே வரும். ஆனால் இந்த மாநிலத்தின் முதலமைச்சர், அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பில், இறந்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு வரைக்கும் அவர் எப்படி இறந்தார் என்ற செய்தி வரவில்லை. தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
அப்போது முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். திடீரென்று ஒருநாள் அவரை தூக்கி விட்டு சசிகலா தான் முதலமைச்சராகப் போகிறார் என்று அறிவித்தார்கள். உடனே பன்னீர்செல்வத்திற்கு கோவம் வந்துவிட்டது. கோபம் வந்து என்ன செய்தார்? நேராக ஜெயலலிதா அம்மையாரின் சமாதிக்கு சென்று உட்கார்ந்து தியானம் செய்தார். ஆன்மாவோடு பேசினார். அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது. நான் நீதி கேட்கப் போகிறேன் என்று சொன்னார்.
அதாவது ஜெயலலிதா இறந்து ஒரு சில மாதங்கள் வாயைத் திறக்கவில்லை. முதலமைச்சர் பதவியைப் பறித்த உடனே அவர்கள் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பேசுகிறார்கள்.
இந்த மர்ம மரணத்தை நான் கண்டு பிடிக்க வேண்டும், நீதி விசாரணை வைக்க வேண்டும் என்று கேட்டது பன்னீர்செல்வம். ஆனால் அந்த ஓ.பன்னீர்செல்வத்தின் இப்போதைய நிலை என்ன? துணை முதலமைச்சர். ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அந்த விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணை கமிஷனை ஒரு எட்டு முறை தள்ளி வைத்துக்கொண்டே இருந்தார்கள்.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் உண்மை தெரியவில்லை இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. காலநீட்டிப்பு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அது மட்டுமல்ல பல முறை இதே ஓ.பன்னீர் செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். ‘நீங்கள் வந்து எங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும்’ என்று அழைத்தார்கள். அவர்தானே இதனை முதலில் சொன்னீர்கள். அதனால்தானே இந்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
ஆனால், இதுவரைக்கும் அவர் போகவில்லை. எதற்காகச் சொல்கிறேன் என்றால் அ.தி.மு.க. ஒரு கட்சி. இன்றைக்கும் எடப்பாடியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்திலிருந்து, அமைச்சர்களிலிருந்து, அ.தி.மு.க. எம்.பி.க்கள் எல்லாம் அவரது படத்தை வைத்துக்கொண்டுதான் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கும் அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அம்மையார் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி இன்றைக்குக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சுத்தமாக அம்மையாரை மறந்து விட்டார்கள். வெளி வேஷத்திற்காக, மக்களை ஏமாற்றுவதற்காக அந்தப் படத்தைச் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அந்த மரணத்திற்கு யார் காரணம்? என்பது கண்டுபிடிக்கப்படும். அவர்களைக் கொண்டு வந்து கூண்டில் ஏற்றுவோம். அவர்களைக் கொண்டு வந்து மக்கள் முன்னால் நிற்க வைப்போம்.
இப்படிப்பட்ட ஒரு அக்கிரமம் நடந்து இருக்கிறது. அதை எல்லாம் மூடி மறைத்து விட்டு இப்பொழுது நான்கு வருடமாக எடப்பாடி தலைமையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆக இந்த ஆட்சி மக்களைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத சூழ்நிலையிலிருந்து கொண்டு உள்ளது.
டெல்லியில் கோடிக்கணக்கில் விவசாயிகள் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அங்கே குடும்பம் குடும்பமாக வந்து கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் உட்கார்ந்து கொண்டு, அங்கேயே சமைத்து, அங்கேயே சாப்பிட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட முப்பது நாட்கள் தாண்டி விட்டது. இன்றைக்கு 33வது நாள்.
ஒரு மாத காலமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே போலத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்களுக்கு அதற்கு ஆதரவாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை வைத்துத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தரப்பு மக்களுக்கும் எவ்வளவு பிரச்சனைகள். உங்களை பொறுத்தவரைக்கும் முக்கிய பிரச்சினையாக இருக்கக்கூடிய 100 நாள் வேலைத்திட்டம். அது 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று உறுதிமொழி தருகிறேன்.
கொரோனோ காலம் எப்படிப்பட்ட காலம். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. வாழ்வாதாரத்தை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியவில்லை. நெசவாளர் தொழில் செய்ய முடியவில்லை. வேலைக்குப் போக முடியவில்லை. கூலி வேலை செய்ய முடியவில்லை. பள்ளிக்கூடம் இல்லை. கல்லூரிகள் இல்லை.
நாம் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தோம். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் ஒரு அறிக்கை விட்டேன். வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்க கூடிய மக்களுக்கு உடனே நிவாரணமாக இந்த அரசாங்கம் 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன்.
இதுவரைக்கும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் இப்பொழுது நான்கு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. அதனால் தேர்தல் வரப்போகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு பொங்கலுக்காக 2,500 ரூபாய் கொடுக்கப் போகிறோம் என்று அறிவித்தார்கள். அதனை நான் வரவேற்கிறேன்.
இன்றைக்கு அதனைத் தேர்தலுக்காக எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று தான் நான் இங்கு வந்தேன். ஒரு ஆதாரம் ஒன்று இருக்கிறது.
அதாவது பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள், சில இடங்களில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதில் சில புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஏதோ அ.தி.மு.க. பணத்தை எடுத்துக் கொடுப்பது போல முதலமைச்சர் படத்தை மட்டும் அல்ல அந்த தொகுதி எம்.எல்.ஏ., அந்த மாவட்டத்தின் அமைச்சர் படம் இதையெல்லாம் போட்டு, அ.தி.மு.க.காரர்களாகப் பார்த்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பற்றித்தான் நம்முடைய வழக்கறிஞர் ஆலந்தூர் பாரதி அவர்களும், நம்முடைய வழக்கறிஞர்களும் தேர்தல் கமிஷனில் சென்று புகார் கொடுத்தார்கள். இதனைக் கட்சிக்குப் பயன்படுத்துகிறார்கள், தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘தி.மு.க. இதைத் தடுக்க முயற்சி எடுக்கிறது’ என்று சொல்கிறார். இதை நாங்கள் தடுக்க முயற்சிக்கவில்லை. நியாயமாக கொடுக்க வேண்டும் என்றுதான் கொடுக்கச் சொல்லுகிறோம்.
இந்த நிதியை முறையாகக் கொடுக்க வேண்டும், நியாயமாகக் கொடுக்க வேண்டும், நேர்மையாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.
இப்பொழுது அதிகமான விழிப்புணர்வுடன் நீங்கள் இருக்கிறீர்கள். இப்பொழுது உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன என்பதை கேட்டுக்கொண்டு தெரிந்துகொண்டு, ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் இதே போல ஊராட்சி மன்றக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்தி, ஏறக்குறைய 12,600 ஊராட்சிகளுக்கு சென்றோம்.
அந்த ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திய காரணத்தால் நாடாளுமன்றத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றி தி.மு.க.விற்கு கிடைத்தது. இப்பொழுது இந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தி முடித்து சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கப் போகிறோம்.
நாடாளுமன்றத்தில் எவ்வாறு 39 இடங்களுக்கு 38ல் வெற்றி பெற்றோமோ, அதேபோல் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப் போகிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கையோடுதான் நாங்கள் இருக்கிறோம். அந்த நம்பிக்கை எங்களைவிட உங்களுக்கு இருக்கிறது. மக்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் இருக்கிறது.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!