M K Stalin
10 ஆண்டுகளாக முடக்கி வைத்துவிட்டு தேர்தல் நேரத்தில் பட்டா மேளாவை அதிமுக அரசு நடத்துவது ஏன்? மு.க.ஸ்டாலின்
"தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை பத்தாண்டுகளாக முடக்கி வைத்துவிட்டு, தற்போது தேர்தல் அவசரத்தில் 'பட்டா மேளா'-வை அ.தி.மு.க. அரசு நடத்துவது ஏன்?" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தைப் பத்தாண்டுகளாக முடக்கி மூலையில் செயலிழக்க வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக ஆட்சியில் இந்தத் திட்டத்தின் மூலம் 6.70 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட அற்புதமான திட்டம் இது. அதுமட்டுமின்றி- சென்னை மாநகருக்குள் “கிராம நத்தம்” என்ற பிரிவே வருவாய்த் துறை ஆவணங்களில் இருக்கக் கூடாது என்ற உயரிய சிந்தனையில் முத்தமிழறிஞர் கலைஞர், சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நிலங்களையும் ரயத்துவாரி பட்டா மனைகளாக வழங்கத் தனி தாசில்தார்களை நியமித்துத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அந்தத் திட்டத்தையும் சேர்த்தே அ.தி.மு.க. அரசு முடக்கிப் போட்டு வைத்து விட்டது.
“புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகள் குடியிருந்தால் மட்டுமே பட்டா” என்ற நிலையை மாற்றி; 5 ஆண்டுகள் தொடர்ந்து குடியிருந்தால் போதும் என்று மாற்றி, ஏழை எளியோர்க்குப் பட்டா கிடைப்பதற்குரிய ஆணையைப் பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அப்படித்தான் பெரும்பாலான ஏழைகள், பட்டா கிடைத்திடப் பெற்று, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளானார்கள். அதன் விளைவாக, சொந்த வீட்டில் வசிக்கும் சுதந்திரத்தைப் பெற்றார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கான “ஆண்டு வருமான நிபந்தனைகள்”, “நில மதிப்பு நிபந்தனைகள்” போன்றவற்றை மாற்றி, யாருக்கும் இந்தப் பட்டா கிடைத்து விடக்கூடாது என்ற நோக்கில் திட்டமிட்டுச் செயல்பட்டது.
அரசு நிலப் பதிவேட்டை முழுமையாகவும் முறையாகவும் பதிவு செய்யவில்லை. உண்மையான பயனாளிகளை அடையாளம் கண்டு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க முன்வரவில்லை. சென்னையிலும், தமிழகம் முழுவதும் பல இடங்களிலும், பட்டா கோரி மக்கள் போராடியதைப் பார்க்க முடிந்தது. ஏன், இப்போது கூட கழக சட்டமன்ற உறுப்பினர் திரு மா.சுப்பிரமணியன், “ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிக்கும் குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்” என்று மாபெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக, 'டெண்டர்’ காரியங்களில் மட்டும் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த முதலமைச்சர் பழனிசாமி, திடீரென்று “தேர்தல் அறிவிப்புகளை”யும், “தேர்தல் கால அடிக்கல் நாட்டு விழாக்களை”யும் நடத்திக் கொண்டிருக்கிறார். மாவட்டங்களில் எல்லாம் “பட்டா வழங்கும் மேளா” நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல், தேர்தல் நடத்தை விதிகள் அமலாவதற்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், இது மாதிரி ஒரு கண்துடைப்பு மேளாவை நடத்தத் திட்டமிட்டுள்ளார். அப்படியாவது உண்மையான ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை கிடைக்கப் போகிறதா? லஞ்ச லாவண்யம் கோரத் தாண்டவம் ஆடும் தற்போதைய நிலையில், வீட்டு மனைப் பட்டா அவர்களுக்குக் கிடைக்குமா? அதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பது போலவே எனக்கு வரும் செய்திகள் உள்ளன.
வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கு எவ்வித முறையான கணக்கெடுப்பும் இதுவரை நடத்தப்படவில்லை. அ.தி.மு.க.வினர், சில பல காரணங்களுக்காக, கைகாட்டும் நபர்களுக்கு மட்டும் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் பட்டியல் தயாராகிறதாம். பெயர் “இலவச வீட்டு மனைப் பட்டா”! ஆனால் ஒவ்வொரு தாசில்தாரையும் அ.தி.மு.க.வினர் மிரட்டி, கிராம அளவில் 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்று வசூல் செய்து கொண்டு, இது போன்ற இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது. மாவட்டங்களில் உள்ள அரசு நிலப் பதிவேடுகள் இரண்டு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படவில்லை. எனவே, அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் யார் என்பது பற்றிய தகவலும் அரசிடம் முழுமையாக இல்லை என்பதே தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் “இலவச வீட்டுமனைப் பட்டாவின்” எதார்த்த நிலைமை. ஆகவே, இது போலிப் பயனாளிகளுக்கு மட்டுமே வழி வகுப்பதற்காகவும், உண்மையிலேயே நீண்ட நாட்களாகக் குடியிருப்போரைப் புறக்கணிப்பதற்காகவும், “தேர்தல் அவசரத்தில்” ஒரு “பட்டா மேளாவை” முதலமைச்சர் நடத்தத் திட்டமிடுவது கவலைக்குரியது.
ஆகவே ஆட்சேபணை இல்லாத நிலங்களில் குடியிருப்போருக்கும், ஏழைகளுக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் அ.தி.மு.க. அரசு நடந்து கொள்ள வேண்டும் என்றும்; போலிகளைத் தவிர்த்து, நீண்ட நாட்களாக ஆட்சேபணை இல்லாத குடியிருப்புகளில் வசிப்போருக்குப் பட்டா வழங்கிட இனியும் கால தாமதம் செய்யாமல் முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பத்தாண்டுகாலமாக தூங்கி வழிந்து கொண்டிருந்த அ.தி.மு.க. அரசு நடத்த விரும்பும் “பட்டா மேளா”, உண்மையான பயனாளிகளுக்கு உதவுவதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!