M K Stalin
“அரிசியை கூட விட்டுவைக்காமல் ஊழல் செய்யும் நச்சுக்கூட்டத்துக்கு முடிவு கட்டுவோம்” - மு.க.ஸ்டாலின் சூளுரை!
“நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல் - நீர்ப்பாசன கால்வாய்களைத் தூர் வாருவதில் ஊழல் - குடிமராமத்து பணிகளில் ஊழல் - பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல் போன்றவற்றை மறைப்பதற்காகவே தன்னைப் பற்றி, ‘காவிரி காப்பான்’ என்றும், ‘நானும் ஒரு விவசாயி’ என்றும் சொல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி” என தஞ்சை ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
இன்று (26-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தஞ்சை மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“சோழர்கள் ஆட்சியின் தலைநகர். தமிழகத்தின் நெற்களஞ்சியம். காவிரி பாயும் மண். எத்தனை பெரிய கோவில்கள் இருந்தாலும், தஞ்சையில் இருப்பதுதான் சொல்லும் போதே, பெரிய கோவில். எத்தனை அணைகள் இருந்தாலும் தஞ்சையில் இருக்கும் கல்லணைதான் அணைகளுக்கு உதாரணமாகச் சொல்லப்படுவது! இலக்கியமா? இசையா? நாடகமா? நாட்டியமா? கலையா? கட்டடக் கலையா? அனைத்தும் செழித்த பகுதி இந்த தஞ்சைப்பகுதி!
தண் என்றால் குளிர்ச்சி என்று பொருள். காவிரி நீர் பாய்ந்து எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பகுதி என்பதால் தஞ்சை எனப் பெயர் பெற்றது என்று தமிழறிஞர்கள் சொல்வார்கள். இத்தகைய பெருமை பொங்கும் தஞ்சை தரணியில் இன்று தமிழகம் மீட்போம் என்ற மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழின் கோட்டையாகவும், திராவிட இயக்கத்தின் கோட்டையாகவும் விளங்குவது இந்த தஞ்சை. கழகம் தோன்றிய நாள் முதல் கம்பீரமாய் வளர்ந்த மாவட்டம் இது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் போராடிப்போராடி வளர்த்த மாவட்டம் இது. 1948-இல் திருவையாறு கருப்புக் கொடி போராட்டம், 1951 - இராஜாஜிக்கு கருப்புக் கொடி போராட்டம், 1959 - போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம், 1962 - விலைவாசி உயர்வு போராட்டம், 1964 - சட்ட எரிப்புப் போராட்டம் - இப்படி கலைஞரின் போராட்டத் தழும்பேறிய ஊர் இந்த தஞ்சை! அவரது கால்படாத மண், இந்த மாவட்டத்தில் இல்லை என்கிற அளவுக்கு இயக்கம் வளர்த்தார்.
பட்டுக்கோட்டை அழகிரி, மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம், மயிலாடுதுறை நடராசன், நாகை மணி, மதுக்கூர் காளியப்பன், குடந்தை நீலமேகம், மன்னை நாராயணசாமி, தஞ்சை பெத்தண்ணன், தஞ்சை நடராசன், தத்துவமேதை டி.கே.சீனிவாசன், தாழை மு.கருணாநிதி, ஏ.வி.பதி, கோ.சி.மணி - ஆகிய தளகர்த்தர்களால் தஞ்சை மாவட்டத்தில் இந்தக் கழகம் வளர்க்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் இன்று தஞ்சை வடக்கு கல்யாணசுந்தரம், தஞ்சை மத்தி துரை. சந்திரசேகரன், தஞ்சை தெற்கு ஏனாதி பாலசுப்பிரமணியன் - ஆகிய ஆற்றல் மிக்க செயல்வீரர்களால் வளர்க்கப்படுவது, இந்த தஞ்சைக்கு இன்னும் பெருமையைக் கூட்டியிருக்கிறது.
“நேற்று நான் வேளாண்துறை அமைச்சர். இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர். நாளை என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய நிரந்தர வேலை ஒன்று உண்டு. அதுதான் கலைஞருக்கு காவலர். அதனை யாரும் என்னிடம் இருந்து பறிக்க முடியாது" என்று சொன்னார் இந்த மண்ணின் மாவீரன் அண்ணன் கோ.சி.மணி அவர்கள். அந்த வழியில் கழகத்தின் காவலர்களாகக் கழகத்தை வளர்த்து வரும் கல்யாணசுந்தரம், துரை. சந்திரசேகரன், ஏனாதி பாலசுப்பிரமணியன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். அவர்களோடு இணைந்து செயல்படும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தஞ்சை என்றால் பெரிய கோவிலும் கும்பகோணம் என்றால் மகாமகமும் நினைவுக்கு வரும்! மாமன்னன் என்பதற்கு அடையாளமாக பெருவுடையார் கோவிலை அமைத்தார் மன்னர் இராசராசன். 1000 ஆண்டுகளுக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை 1000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தினான். இன்றும் அதிசயங்களில் ஒன்றாக அது இருக்கிறது. அதனைப் போற்றும் வகையில் ஆரூர் சோழனாகிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள், இராசராசன் சிலையைக் கோவிலுக்குள் வைக்க நினைத்தார். ஆனால் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. கோவில் கட்டியவர் சிலையைக் கூட கோவிலுக்குள் வைக்க அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி, கோவில் வாசலில் சிலையைத் திறந்தார் முதலமைச்சர் கலைஞர். அந்த வேதனையைப் போக்கும் வகையில் தஞ்சை பெரிய கோயிலின் 1000-ஆவது ஆண்டு விழாவை 2010-ஆம் ஆண்டு நடத்தினார். மாமன்னன் புகழை மீட்டெடுத்தார்.
இதேபோல் தான் மகாமகம் விழாவையும் தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடத்திக் கொடுத்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார்கள். தி.மு.க. அப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. மகாமகம் திருவிழாவை எப்படி நடத்திக் கொடுப்பார்கள் என்று அனைவரும் காத்திருந்தார்கள். அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞரை அழைத்த அண்ணா அவர்கள், அந்த திருவிழாவுக்கு வேண்டிய அடிப்படைக் கட்டமைப்புகள் அனைத்தையும் செய்து கொடுக்குமாறு என்று கட்டளையிட்டார்கள்.
கும்பகோணம் வந்த அமைச்சர் கலைஞர் அவர்கள், அந்த விழாவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். வாய்க்கால், கொள்கால் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். அப்போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்.காசிராமன் அவர்கள். ராமன் அண்ட் ராமன் பஸ் கம்பெனி உரிமையாளர் அவர். மகாமகம் முடிந்த பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசைப் பாராட்டி நெடுநேரம் பேசினார். மகாமகம் விழா சிறப்பாக நடைபெற கலைஞர் செய்து கொடுத்த ஏற்பாடுகள் அனைத்தையும் சொன்னார்.
சிறு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை, சாதாரண பிக்பாக்கெட் புகார் கூட பக்தர்களிடம் இருந்து வரவில்லை என்று சொன்னார். அப்போது மைசூர் மகாராஜா, கும்பகோணம் வந்திருந்தாராம். அவருக்கு தனிப்பாதை அமைத்து காவல்துறையினர் அழைத்துச் சென்றார்களாம். இது 1968 கழக ஆட்சிக் காலம்!
1992-ஆம் ஆண்டு இதே மகாமகத்தில் - அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் என்ன நடந்தது என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. அரசாங்கத்தின் கணக்கின் படி 48 பக்தர்கள் இறந்து போனார்கள். இந்த பக்தர்கள் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று வழக்குப் போட்ட கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
இதனை நான் சொல்வதற்குக் காரணம் பெரிய கோவிலாக இருந்தாலும் எந்தத் திருவிழாவாக இருந்தாலும் அதனைத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகப் பார்த்து எடுத்து நடத்திக் கொடுத்த அரசு தான் தி.மு.க அரசு. அதற்குத் தஞ்சை மாவட்டமே சாட்சி!
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த இனம்! ஒரு காலத்தில் பாராண்ட இனம்! கடல் கடந்து சென்றும் தமிழர்களின் ஆட்சியை விரிவுபடுத்தினான் சோழன்! தமிழர்களை இழிவு செய்த கனக விசயர் தலையில் சுமக்க வைத்து கல் கொண்டு வந்தான் சேரன்! பாண்டிய நாட்டின் வர்த்தகம் உலகம் முழுக்க பரவியது! - இப்படி தமிழ் மன்னர்கள் பெருமையை எல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்தகைய பெருமை கொண்ட இனம் இடையில் நுழைந்த சாதியால், மதத்தால், ஆரியத்தால், வருணாசிரம வேறுபாட்டால் சிதைக்கப்பட்டது; அழிக்கப்பட்டது; வளர்ச்சி பெறாமல் தடுக்கப்பட்டது. எல்லா வகையிலும் முன்னேறிய இனம் முடக்கப்பட்டது. இத்தகைய இனத்தை மீண்டும் முதுகெலும்பு கொண்ட இயக்கமாக ஆக்கிய பேரியக்கம் தான் திராவிட இயக்கம்!
சிந்திக்க மறந்த இனத்தைச் சிந்திக்க வைத்தார் தந்தை பெரியார்! சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தார் பேரறிஞர் அண்ணா! அந்தச் செயல் வடிவத்தை எதிர்காலத் திட்டமிடுதலோடு இணைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்! முடக்கப்பட்ட தமிழினத்துக்கு மூளையாக இருந்தார் தந்தை பெரியார்! இதயமாக இருந்தார் பேரறிஞர் அண்ணா! இரண்டு கைகளாக இருந்தார் கலைஞர்!
ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு முதலில் தேவை கல்வி. அதனை முதலில் கொடுத்தது திராவிட இயக்கத்தின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி. கல்விப் புரட்சியை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி.
* புகுமுக வகுப்புவரை இலவசக் கல்வி என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களே, 'எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கலைஞர் கருணாநிதியிடம் சொல்லுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்கள்.
* தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளை அதிகப்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர்!
* அனைத்துப்பள்ளிகளிலும் நூலகம் அமைத்தார்!
* உடற்கல்வியைக் கட்டாயம் ஆக்கினார்!
* அறிவியல் பாடங்களை அதிகப்படுத்தி, அறிவியல் கூடங்களை அமைத்தார்!
* பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார்!
* தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அமைத்தார்!
* கிராமப்புற மாணவர்களுக்கும், குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கும் சலுகைகள் கொடுத்தார்!
* அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார்!
* தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்!
* கணினி பாடத்தை அறிமுகம் செய்தார்!
* தி.மு.க.வின் முதல் ஆட்சிக் காலத்திலேயே தமிழகத்தில் ஏராளமான அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.
1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டுகாலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் 68 தான். ஆனால் கலைஞர் முதலமைச்சராக இருந்த 1969 முதல் 1976 காலக்கட்டத்தில் 97 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது.
* கோவையில் வேளாண் பல்கலைக் கழகம்!
* சென்னையில் கால்நடைப் பல்கலைக் கழகம்!
* டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்!
* உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம்!
* நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்!
* சேலம் பெரியார் பல்கலைக் கழகம்!
* கோவை, திருச்சி, மதுரை, நெல்லையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள்!
* ஏராளமான மருத்துவக் கல்லூரிகள்!
* நுழைவுத்தேர்வு ரத்து!
- இப்படி கல்விப் புரட்சியைச் செய்த ஆட்சி, கலைஞரின் ஆட்சி! கழகத்தின் ஆட்சி!
கல்வியைக் கொடுத்துவிட்டால் அந்த மனிதனின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்று நினைத்து, அதற்கான மொத்த அடித்தளத்தையும் அமைத்தது கழக ஆட்சி!
அதனால் தான் படிப்பு சம்பந்தமான பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பது கழகம் தான். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். நுழைவுத்தேர்வு எந்த ரூபத்திலும் நுழைந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் காவிக் கொள்கை வருகிறது என்று தடுக்கப் போராடுகிறோம். இருமொழிக் கொள்கை தான் ஏற்ற கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பது மாணவர்களை முடக்கும் கொள்கை என்று தொடர்ந்து முழங்கி வருகிறோம். இந்தித் திணிப்பு தமிழ் மாணவர்களின் வளர்ச்சியை மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சியையும் தடுக்கும் தந்திரம் என்பதை எச்சரித்தே வருகிறோம். தமிழக இளைஞரின் வேலைவாய்ப்புகளை மத்திய அரசு தடுக்கும் ஆபத்தை எச்சரித்துக் கொண்டே இருக்கிறோம்.
எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் கழகத்தின் ஒரே கொள்கை. அந்தக் கொள்கைக்காகவே இயக்கம் தோன்றியது. ஆளும்கட்சியாக இருந்தால் இதனைச் செயல்படுத்துவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் இதனைச் செயல்படுத்த வைப்போம். அதனால் தான் தமிழ்நாட்டு மக்களின் இதயச் சிம்மாசனத்தில் கழகம் நிரந்தரமாக அமர்ந்துள்ளது.
இன்றைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி, மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு இளைஞர்களின் கல்வி உரிமையை, வேலை உரிமையைச் சிதைக்கும் ஆட்சியாக இருக்கிறது.
நீட் தேர்வைக் கொண்டு வந்து மருத்துவக் கனவைச் சிதைத்தார்கள். புதிய கல்விக் கொள்கை மூலமாகப் பள்ளி, கல்லூரிக் கனவுகளையும் சிதைக்கப் பார்க்கிறார்கள். இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள். தமிழை அழிக்கப் பார்க்கிறார்கள். ரயில்வே, அஞ்சல்துறை போன்ற மத்தியத் துறைகளில் தமிழக இளைஞரின் வேலை வாய்ப்புகளைச் சதி செய்து தடுக்கிறார்கள். இவை அனைத்துக்கும் அ.தி.மு.க அரசு தலையாட்டிக் கொண்டு இருக்கிறது. இது தொடருமானால் மீண்டும் 200, 300 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமைக்குத் தமிழர்கள் தள்ளப்படுவோம்!
தங்களது ஊழல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் அடமானம் வைத்துவிட்டார்கள். எல்லாவற்றையும் அடமானம் வைத்து முடித்துவிட்டு, கூட்டணி வேறு - கொள்கை வேறு என்று புதுமாதிரியான விளக்கங்களை பழனிசாமி சொல்ல ஆரம்பித்துள்ளார். இனிமேல் அவருக்கு கொள்கை இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?
நான்கு ஆண்டுகாலத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சி, இந்தி எதிர்ப்பு, நிதி தன்னாட்சி, சமூகநீதி, மதச்சார்பின்மை - ஆகிய அனைத்தையும் பா.ஜ.க. அரசுடன் சேர்ந்து சிதைத்துவிட்டார் பழனிசாமி. இனி அவர் அடகு வைப்பதற்கு எதுவும் இல்லை. பதவி நாற்காலி காலியாகும் நிலையில் கொள்கை பேசத் தொடங்கி இருக்கிறார் பழனிசாமி. அவருக்கும் கொள்கைக்கும் ரொம்ப தூரம். துரோகத்துக்கும் அவருக்கும்தான் ரொம்ப நெருக்கம்!
காவிரிப் பிரச்சினையிலேயே ஏராளமான துரோகத்தை அவர் செய்துள்ளார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, நாங்கள் காவிரி தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள் என்ற ஒரு கர்வம் இருக்கும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே காவிரி தண்ணீர் குடித்து வளர்ந்தவர் தான். அதனால் தான் காவிரி உரிமையை மீட்க அயராது பாடுபட்டார். கலைஞர் அவர்களே சொல்வார்கள், 'நான் பிறந்தபோதுதான் காவிரி ஒப்பந்தமும் உருவானது' என்று சொல்வார்கள்.
அன்றைய மைசூர் அரசுக்கும் - சென்னை மாகாணத்துக்குமான காவிரி ஒப்பந்தம் 1924-ஆம் ஆண்டுதான் உருவானது. அதுதான் கலைஞர் அவர்கள் பிறந்த ஆண்டு. 1968-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஹேமாவதி அணையைக் கர்நாடகம் கட்ட ஆரம்பித்தது. அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞரை அழைத்து இந்தப் பிரச்சினையை அண்ணா அவர்கள் ஒப்படைத்தார்கள்.
அன்றைக்கு கர்நாடக முதலமைச்சராகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த வீரேந்திர பாட்டீலுடன் கலைஞர் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் அவர்கள் முதலமைச்சர் ஆனார்கள். கர்நாடக அரசு ஒத்துழைக்காத நிலையில் 1970-ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதினார். காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலாக கலைஞர் அவர்கள் முன்வைத்தார்கள்.
இதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1971-ஆம் ஆண்டு தீர்மானமும் நிறைவேற்றினார்கள். ஹேமாவதி அணை கட்டுவதை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தது தி.மு.க அரசு. முரசொலி மாறன் அவர்களும் தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள விவசாயச் சங்கங்களும் இதற்குத் துணை நின்றன.
மத்திய அரசே முன்னின்று இருமாநில அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை நடத்தும் என்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் வாக்குறுதி தந்ததை அடுத்து அந்த வழக்கு நல்லெண்ண அடிப்படையில் வாபஸ் பெறப்பட்டது. அப்படி வாபஸ் பெறும் முடிவைக் கூட தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுக்கவில்லை.
அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒப்புதலோடுதான் எடுத்தார்கள். ஆனால் எதிர்பார்த்த பயனை அந்தப் பேச்சுவார்த்தைகள் தரவில்லை. இந்நிலையில் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக வந்தார்கள். பேச்சுவார்த்தை இனி பயன்படாது, காவிரி நடுவர் மன்றம் அமைத்தாக வேண்டும் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பினார்.
தமிழக அரசின் கருத்து எதுவோ, அதை மத்திய அரசின் கருத்தாக உச்சநீதிமன்றத்தில் சொல்ல வைத்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். இதைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் அமைத்தார் பிரதமர் வி.பி.சிங் அவர்கள். அதற்குக் காரணம் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்!
காவிரி நடுவர் மன்றம் அமைத்தாலும் உடனடியாக தீர்ப்பு சொல்லி விட முடியாது. எப்படியும் ஐந்தாறு ஆண்டுகள் ஆகிவிடும், எனவே இடைக்கால தீர்ப்பு ஒன்றைத் தாருங்கள் என்று வலியுறுத்தியதும் முதலமைச்சர் கலைஞர் தான்.
இடைக்கால தீர்ப்பு தரும் அதிகாரம் இந்த மன்றத்துக்கு உண்டா என்ற பிரச்சினை எழுந்தது. உடனே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் முதலமைச்சர் கலைஞர். இடைக்காலத் தீர்ப்புத் தர நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்ற தீர்ப்பையும் வாங்கிக் கொடுத்தார். 25.6.1991-ஆம் நாள் இடைக்கால தீர்ப்பு வந்தது. ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்ற இடைக்கால தீர்ப்பை வாங்கித் தந்தவர் கலைஞர் அவர்கள்.
இப்படி அறிவிக்கப்பட்ட தண்ணீரைக் கர்நாடக அரசு ஒழுங்காக வழங்குகிறதா என்று யார் கண்காணிப்பது? அதற்கான ஒரு கண்காணிப்பு ஆணையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை 1997-ஆம் ஆண்டு செய்தவரும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான்.
பிரதமர் வாஜ்பாய் அவர்களது ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. 'வரவேற்கத்தக்க ஒப்பந்தம்' என்று தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பத்திரிகைகளும் எழுதியது. அத்தகைய ஒப்பந்தம் உருவாகக் காரணமாக இருந்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
'அரசியல்வாதிகளால் காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்பதைக் கலைஞர் அவர்கள் பொய்யாக்கிவிட்டார்' என்று முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் பாராட்டினார்கள். விவசாயச் சங்கங்கள் அனைத்தும் கலைஞரையும் தி.மு.க. அரசையும் பாராட்டினார்கள்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான் – 2007-ஆம் ஆண்டு வந்தது. 192 டி.எம்.சி.தான் என்று தான் தீர்ப்பு வந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு அனைவர் முடிவின் படி நீதிமன்றத்துக்கும் போனோம். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னோம்.
இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், காவிரிக்காகக் கழகம் நித்தமும் உழைத்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான். காவிரித் தண்ணீர் குடித்து வளர்ந்த நீங்கள், இதனை மறந்திருக்க மாட்டீர்கள். ஆனாலும் நினைவூட்ட வேண்டியது என்னுடைய கடமை. ஆனால் இன்று நிலைமை என்ன?
2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது தமிழக அரசு சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை. நமது மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை இது என்பதைச் சொல்லவில்லை. இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு 2018-ஆம் ஆண்டு வந்தது. அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தின் தேர்தலை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க அரசு இதனைச் செயல்படுத்தவில்லை. தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் மத்திய அரசைக் கேட்கவில்லை.
உடனே அமைக்க வேண்டும் என்று போராடியதும் தி.மு.கதான். தமிழகம் வந்த பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டினோம். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நான் மேற்கொண்டேன். இரண்டு குழுக்களாக இந்தப் பயணத்தை தி.மு.க. நடத்தியது. திருச்சி முக்கொம்பில் இருந்து நான் பயணம் மேற்கொண்டேன்.
காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரால் டெல்லியில்தான் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சொன்னோம். மத்திய அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பைத் தொடங்கி இருக்கிறது. அதனை எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. மத்திய அரசின் ஜல்சக்தி துறையோடு இதனைச் சேர்த்துவிட்டார்கள். அதையும் எடப்பாடி அரசு தட்டிக் கேட்கவில்லை. அதைவிட மிக மோசமாக மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான தண்ணீர் வரத்து குறைந்துவிடும். கர்நாடக அரசியல் கட்சிகளை அழைத்துக் கொண்டு பிரதமரைப் பார்க்கிறது கர்நாடக அரசு. ஆனால் தமிழகக் கட்சிகளை அழைத்துச் சென்று பிரதமரை எடப்பாடி பழனிசாமி பார்க்கவில்லை.
கிருஷ்ணராஜசாகர் அணையை விட மேகதாது அணை பெரியது. இது காவிரியை மொத்தமாக தடுத்துவிடும். இந்த உண்மையை எடப்பாடி அரசு உணரவில்லை. முதுகெலும்பு இல்லாமல் பா.ஜ.க. அரசுக்குத் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி. காவிரி என்ற ஒரே ஒரு விவகாரத்திலேயே இவ்வளவு துரோகம்!
இந்த துரோகத்தை மறைக்கத்தான் ‘காவிரி காப்பான்’ என்றும், ‘நானும் ஒரு விவசாயி’ என்றும் சொல்கிறார் பழனிசாமி! அவர் உண்மையான விவசாயியாக இருந்தால் வேளாண்மையைச் சிதைக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிப்பாரா? ஆதரிக்க மாட்டார். அதை மீறி ஆதரிக்கிறார் என்றால் அவர் உண்மையான விவசாயி அல்ல என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வருகிறார்கள். இதுவரை குறைந்தபட்ச ஆதார விலை என்ற எம்.எஸ்.பி. வேளாண் சட்டங்களில் இருக்கிறது. அது நீக்கப்படவில்லை என்று பிரதமரும், மத்திய அமைச்சர்களும் கூறி வந்தார்கள். ஆனால் நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி “குறைந்தபட்ச ஆதார விலை பற்றி விவசாயிகளுக்குச் சந்தேகம் இருக்கலாம்” என்று முதன்முதலாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆனால் நம்மூர் முதலமைச்சர் பழனிச்சாமி வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் சட்டம் என்கிறார். டெல்லியில் விவசாயிகள் கடும் குளிரில் போராடுகிறார்கள். அரை வயிறும் குறை வயிறுமாக நின்று திறந்த வெளியில் போராடுகிறார்கள். அரை நிர்வாணப் போராட்டம் நடத்துகிறார்கள். ரத்தத்தில் கையெழுத்திட்டு தங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி போராடும் விவசாயிகளைப் பார்த்து தரகர் என்று கூசாமல் திட்டுகிறார். டெல்லிக்குச் சென்று போராடும் விவசாயிகளிடம் இதைச் சொல்ல முடியுமா?
நேற்றைய தினம் மரக்காணத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். “அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்” என்ற இக்கூட்டத்தைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்குக் கலக்கம். கிராம மக்கள் அதிகம் கூடுவதைப் பார்த்து அமைச்சர்களுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் முதலமைச்சர் தனது பினாமிகள் பெயரில் சொத்துக்களைக் குவித்திருப்பதைப் பட்டியலிடுகிறோம்.
அமைச்சர்கள் ஊழல் செய்திருப்பதைப் பட்டியல் போடுகிறோம். அ.தி.மு.க. ஊழல் கிராம அளவில் சந்தி சிரிக்கிறதே என்பதைத் தடுக்க வழக்குப் போடுகிறார்கள். நேற்றுகூட மரக்காணத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்காக வழக்குப் போட்டிருக்கிறார்கள். தி.மு.க. இந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படாது. எடப்பாடி பழனிசாமியின் ஊழலைப் பேசுவதற்காக வழக்கு என்றால், இந்த இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் இந்த வழக்கைச் சந்திக்கத் தயார்.
ஆனால் மக்களோடு மக்களாக இணைந்து மக்கள் கிராம சபைக் கூட்டம் நடக்கும்; நடந்தே தீரும். அ.தி.மு.க. ஆட்சி குடிமராமத்து பணி - தூர்வாரும் பணி என்று கொள்ளையடிக்கிறது. எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு மட்டும் 1600 கோடி ரூபாய்க்கு மேல் தூர்வாருவதற்கும் - குடிமராமத்து பணிகளுக்கும் செலவிட்டதாகக் கணக்குக் காட்டுகிறார்கள். ஆனால் மேட்டூரில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடைக்குப் பகுதிக்குக் கூடப் போகவில்லை.
இந்த லட்சணத்தில்தான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் நிர்வாக லட்சணம் இருக்கிறது. விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல் நடந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. கேட்டால் ஒப்பந்த ஊழியர்கள் செய்து விட்டார்கள் என்று திசை திருப்பினார்கள். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை “போலி விவசாயிகளுக்கு” கொடுத்தது பழனிசாமி. அவர் எப்படி உண்மையான விவசாயியாக இருக்க முடியும்?
நெல் கொள்முதல் நிலையங்களில் ஊழல், உயர்நீதிமன்றமே கண்டித்தது. விவசாயிகளுக்கான நீர்ப்பாசன கால்வாய்களைத் தூர் வாருவதில் ஊழல். விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல். விவசாயிகளின் நீர் ஆதாரத்திற்கான குடிமராமத்து பணிகளிலும் ஊழல். இதுதான் போலி விவசாயி பழனிசாமி ஆட்சியின் வேதனைப் பட்டியல்!
இன்றைக்குச் சுனாமி நினைவு தினம். இதே தேதியில்தான் பல்வேறு உயிர்களை இயற்கை பேரிடர் பறித்துக் கொண்டு சென்றது. அப்போது முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர். சுனாமி நிதியாக 21 லட்சம் ரூபாய் அறிவித்து, அதை நான்தான் நேரில் கொண்டு போய் அம்மையார் ஜெயலலிதாவைக் கோட்டையில் சந்தித்துக் கொடுத்தேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பணிகளும் செய்யவில்லை. வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டித் தரப்படவில்லை.
பிறகு தி.மு.க. ஆட்சி 2006-ல் பொறுப்பேற்றவுடன் சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியை நானே நேரில் கவனம் செலுத்தி நிறைவேற்றினேன். ஆகவே எந்தப் பேரிடராக இருந்தாலும் முதலில் களத்தில் நிற்பது, மக்களுக்கு உதவ நேசக்கரம் நீட்டுவது தி.மு.க.
இப்போது நிவர் புயல் பாதிப்பிலிருந்து இன்னும் விவசாயிகள் மீளவில்லை. பாதிக்கப்பட்ட ஏழை - எளிய மக்கள், மீனவர்களின் சோகம் இன்னும் நீங்கவில்லை. விவசாயிகளின் பாதிப்புகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். அதை ஏற்கவில்லை. இன்றைக்கு முழு நிவாரணமும் வழங்கவில்லை. தி.மு.க.வின் விவசாய அணி போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு இன்று ஒரு செய்தி வருகிறது. பாதிப்புகளைப் பார்வையிட மீண்டும் ஒரு மத்தியக் குழு வருகிறது என்கிறார்கள். ஏற்கனவே ஒரு மத்தியக்குழு வந்து விட்டுப் போய் விட்டது. ஒரு பாதிப்பைக் கணக்கிட இன்னும் எத்தனை குழுக்கள் வரும்? இடைக்கால நிவாரணத்தைக்கூடப் பெற விவசாயிகள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டுமா?
சில நாட்களுக்கு முன்னால் தமிழக ஆளுநரைச் சந்தித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலைக் கொடுத்தோம். முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் புகார்களைக் கொடுத்துள்ளோம்.
இதில் மிகமிக முக்கியமானது - வேதனையானது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீதான புகார் தான். இந்த அ.தி.மு.க. அரசுக்கு கொஞ்சம் கூட இரக்கம் கிடையாது என்பதற்கு உதாரணமான ஊழல் தான் காமராஜ் செய்துள்ள ஊழல். இந்த கொரோனா காலத்து பாதிப்புகள் குறித்து நான் உங்களுக்குச் சொல்லத் தேவை இல்லை.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இலவசமாக அரிசி கொடுக்கிறது. அந்த அரிசியை வெளிச்சந்தையில் விற்று ஊழல் செய்துள்ளார் உணவு அமைச்சர் காமராஜ். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு சொன்னது. இதன்படி தமிழகத்துக்கு மத்திய அரசு மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரிசியை வாங்கி அனைவருக்கும் கொடுத்து விட்டதாகப் பேட்டி தரும் அமைச்சர் காமராஜ்தான், இவ்வளவு அரிசியை வைக்க இடமில்லை என்று மத்திய அரசிடம் சொன்னதாகவும் பேட்டியும் தருகிறார். எது உண்மை? இந்த அரிசியைத்தான் இவர்கள் வெளிச்சந்தையில் விற்றுள்ளார்கள். இப்படி அரிசி எடுத்துச் செல்லப்பட்டபோது தூத்துக்குடியில் பிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிக்கைகள், அறிவிப்புகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றன. அதாவது சாப்பிடும் சாப்பாட்டில் ஊழல் செய்யும் ஆட்சி தான் இந்த அ.தி.மு.க ஆட்சி.
'சோழ நாடு சோறுடைத்து' என்பார்கள். இப்படி அரிசியைக் கூட விட்டு வைக்காமல் ஊழல் செய்யும் இந்த நச்சுக்கூட்டத்துக்கு முடிவு கட்ட தஞ்சைத் தரணி தயாராகட்டும்.
அ.தி.மு.க. அரசை நிராகரிப்போம்! தி.மு.க அரசை மலர வைப்போம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!