M K Stalin
“தமிழர்களின் பெருமையை சீரழித்த அ.தி.மு.க-வை நிராகரிப்போம்” : கிராமசபை கூட்டத்தில் முழங்கிய மு.க.ஸ்டாலின்!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தைச் சீரழித்த ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ எனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சியில் தீர்த்து வைக்கப்படும்!” என உரையாற்றினார்.
இன்று (23-12-2020) காலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் இந்த கிராம சபைக் கூட்டத்தை நாம் இப்போது நடத்தப் போகிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் வார்டு பகுதிகளிலும் இந்த கிராம சபைக் கூட்டத்தை நாம் நடத்தப் போகிறோம்.
கடந்த 19-ஆம் தேதி இதை நாம் முறையாக அறிவித்தோம். அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற உணர்வை மக்களிடத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும். பத்து நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, நம்முடைய மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாரையும் அழைத்துக் கலந்து பேசி முடிவெடுத்திருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் 16,500 ஊராட்சிகளில் இந்தக் கூட்டம் நடைபெறப் போகிறது. இந்தப் பணியை முதன் முதலாகத் தொடங்க நான் இங்கு வந்திருக்கிறேன். நம்முடைய பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்கள், வேலூர் மாவட்டத்தில் இன்றைக்குத் தொடங்கி வைக்க இருக்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். அதைப்போல் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். முதன்மைச் செயலாளர் நேரு அவர்கள், திருச்சி மாவட்டத்திலும், துணைப் பொதுச் செயலாளர் ராஜா அவர்கள், சென்னையில் ராயபுரம் தொகுதியிலும் தொடங்கி வைக்கிறார்கள். நம்முடைய அந்தியூர் செல்வராஜ் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்.
இப்படி, தலைமையில் இருக்கக்கூடிய நாங்கள் எங்கே தொடங்குகிறோம் என்பதைச் சொன்னோம். அதேபோல் அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கழகத்தினுடைய முன்னோடிகள், நகரச் செயலாளர்கள், பேரூர்ச் செயலாளர்கள், ஆங்காங்கே அவர்கள் ஊரில் தொடங்கி 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, நான் உங்களுடைய பகுதிகளில் உங்களிடத்தில் தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த குன்னம் ஊராட்சி என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு முக்கியமான மாவட்டம், அண்ணா பிறந்த ஊர் இருக்கின்ற மாவட்டம். அண்ணாதான் இந்த இயக்கத்தை உருவாக்கினார். 1949-இல் கொட்டுகின்ற மழையில் வடசென்னை பகுதியில் இருக்கக்கூடிய ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிவைத்தார். அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை 1949இல் தொடங்கி, 1967ல்தான் ஆட்சிக்கு வந்தார்.
கட்சி தொடங்கியபோது, “கட்சி தொடங்குவது ஆட்சிக்காக அல்ல; மக்களுக்காக – நாட்டுக்காக” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார். குறிப்பாக ஏழை, எளிய, விவசாயப் பெருங்குடி மக்களுக்காக, நெசவாளர்களுக்காக, தொழிலாளர்களுக்காக, நாட்டு மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்திருக்கக்கூடிய மக்களுக்காக, நம்முடைய கழகம் தொடங்கப்பட்டது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குப் பணியாற்றுவோம் என்ற அந்த உணர்வோடுதான், ஆட்சியில் இருந்தபோது கலைஞர் அவர்கள் செய்த திட்டங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். இப்போது கடந்த பத்து ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நேரத்திலும் நாம் மக்கள் பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். மக்களுக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களுக்காகத் தான் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். மக்களுக்காகத்தான் உண்ணாவிரதம் இருக்கிறோம். மக்களுக்காகத்தான் களத்தில் இருக்கிறோம். மக்களுக்காகத்தான் இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு வந்து இருக்கிறோம்.
ஆகவே அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரக் கூடிய தேர்தலில் உங்களின் அன்போடு, ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைத் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எங்களை விட உங்களுக்கு அதிகமாக உள்ளது. ஏனென்றால் உங்களை எல்லாம் நான் பார்க்க வரும்போது, தாய்மார்கள் எல்லாம், "அடுத்தது நீங்கள்தான், அடுத்தது நீங்கள் தான்" என்று சொல்லக் கூடிய நிலைமை நாட்டில் வந்துள்ளது.
ஆகவே இப்போது இந்த கிராம சபைக் கூட்டத்தை நாம் நடத்தப்போகிறோம். இந்த கிராம சபைக் கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால் சொல்ல விரும்புவது, கிராமத்தில் இருந்துதான் நம்முடைய வாழ்க்கையைத் தொடங்குகிறோம், மறந்துவிடக்கூடாது. கிராமங்கள் இல்லை என்றால், நாடு இல்லை.
ஏனென்றால் கிராமத்தில்தான் விவசாயிகள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் குடவோலை முறை கடைப்பிடிக்கப்பட்டது. யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று எழுதி, ஒரு குடத்தில் போட்டு விடுவார்கள். அந்த குடத்திலிருந்து ஓலையை எடுத்து யார் வெற்றி பெற்றார்கள் என்று அறிவிப்பார்கள். அப்படித்தான் கடந்த காலத்தில் நடந்து கொண்டிருந்தது. அதற்கு அத்தாட்சியாக அண்ணா பிறந்த இந்த காஞ்சிபுரம் மாவட்டம் இருக்கிறது. பின்னர் இது தேர்தலில் ஓட்டுச் சீட்டாக மாறியது; இப்போது எலக்ட்ரானிக் மிஷின் வந்து விட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போது ஒரு ஆட்சி வந்து விட்டது; அ.தி.மு.க. ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த பத்து ஆண்டுகளில், முதலில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தார்; அவர் உடல் நிலை நலிவடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அந்தப் பிரச்சினைகளுக்குள் நான் போகவில்லை. அவர் எப்படி இறந்தார் என்று என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அது இன்றைக்கும் மர்மமாகவே உள்ளது. தயவு செய்து நினைத்துப் பாருங்கள், ஜெயலலிதா நமக்கு எதிரி தான்; நாம் அவர்கள் கொள்கையை ஒருநாளும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், அவர்கள் நம் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு நாம் எதிரி, நமக்கு அவர்கள் எதிரி. என்றாலும், அது வேறு. ஆனால் நாட்டினுடைய முதலமைச்சராக அவருடைய மரணம் மர்மமாகவே உள்ளது. எப்படி இறந்தார்கள்? என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது. இதைக் கூட நாங்கள் சொல்லவில்லை, இப்போது துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான் சொன்னார். விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. எத்தனை வருடம் ஆகி விட்டது பாருங்கள்.
கிட்டத்தட்ட பத்து தடவை விசாரணைக் கமிஷனை நீட்டித்து இருக்கிறார்களே தவிர, இதுவரைக்கும் அதற்கு ஒரு முடிவு வரவில்லை. அதைப்பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. எதற்காகச் சொல்கிறேன் என்றால், அதற்குப் பிறகு ஓ.பி.எஸ். சிறிது காலம் முதலமைச்சராக இருந்தார். அதற்குப் பிறகு எடப்பாடியை உட்கார வைத்தார்கள். எடப்பாடி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு என்னென்ன கொடுமைகள் நடந்து இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்; நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.
ஒரு பச்சைத் துண்டைப் போட்டுக்கொண்டு, பெரிய விவசாயி என்று சொல்லிக் கொண்டு பச்சை துரோகம் செய்து கொண்டிருப்பவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால் 3 வேளாண் சட்டங்கள் என்ன ஆகின? விவசாயிகளுடைய வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடிய சட்டங்கள். அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கொண்டு வந்தபோது அ.தி.மு.க. அதைக் கண்மூடித்தனமாக ஆதரித்தது.
ஆதரித்தது மட்டுமல்லாமல், ஓட்டுப் போட்டது மட்டுமல்லாமல், இப்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதில் எந்தத் தவறும் இல்லை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறார். தயவு செய்து நீங்கள் நினைத்துப் பாருங்கள். விவசாயப் பெருங்குடி மக்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
விவசாயிகள் தொடர்ந்து கடந்த 25 நாட்களுக்கும் மேலாக, ஏறத்தாழ ஒருமாத காலமாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு பல்வேறு மாநிலங்களிலிருந்து டிராக்டரில் வந்து குடும்பம் குடும்பமாக வந்து அங்கேயே குடில் அமைத்து, அங்கேயே சமைத்து, அங்கேயே சாப்பிட்டுக்கொண்டு, கடுமையான குளிரில் அந்த குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் அந்த விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் குழந்தைகளோடு அங்கேயே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் பிரதமர் மோடி அவர்கள், அந்த விவசாயிகளை அழைத்துப் பேசினாரா? அதைத் தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா? இல்லை. அவர்கள் வைக்கிற கோரிக்கைகள் என்ன? அந்த மூன்று வேளாண் சட்டங்களை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலையில் பா.ஜ.க. அரசு இருந்துகொண்டிருக்கிறது. அதையும் நம்முடைய எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார். இந்த நான்கு ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் - ஏற்கனவே அ.தி.மு.க. செய்த ஊழல்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். இப்போது இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்துகொண்டிருக்கும் ஊழல்களைப் பற்றியும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
நேற்றைக்குக் கூட நான் ஆளுநரைச் சென்று சந்தித்தேன். நான், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் எல்லாம் சென்று அவர்களைச் சந்தித்தோம். 97 பக்கங்கள் கொண்ட ஒரு ஊழல் பட்டியலைக் கொடுத்திருக்கிறோம். முதலமைச்சர் செய்திருக்கக்கூடிய ஊழல்களை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியிருக்கிறோம். 6133 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டில் ஊழல் செய்திருக்கிறார்கள், என்று அதனுடைய ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டோம். எந்த பதிலும் இதுவரை இல்லை.
உடனே என்ன செய்தோம். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நம்முடைய அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் மூலமாக உயர்நீதிமன்றத்திற்குச் சென்றோம். இப்படி ஒரு ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இதனை உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நாங்கள் விசாரித்தால் உண்மை வெளியே வராது. எனவே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டது. எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்திருக்க வேண்டும். சி.பி.ஐ. அல்ல எந்த விசாரணை வந்தாலும் நான் சந்திக்கத் தயார் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் என்ன செய்தார்? அவர் ஒரு தடை வாங்கினார், அதை விசாரிக்கக் கூடாது என்று. இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றிக் கூட நாங்கள் விளக்கமாக விரிவாக ஆதாரங்களோடு, எங்கெங்கே என்னென்ன நடந்திருக்கும் என்பதைத் திரட்டி அத்தனையையும் குறிப்பெடுத்து அந்த ஊழல் பட்டியலில் சேர்த்து ஆளுநரிடம் கொடுத்திருக்கிறோம்.
அதேமாதிரி துணை முதலமைச்சர் வருமானத்திற்கு மீறி சொத்து வாங்கியிருக்கிறார். பல்வேறு வெளிநாடுகளில், எங்கெங்கோ தீவுகளில் எல்லாம்கூட வாங்கி இருக்கிறார் என்ற விவரம் கிடைத்திருக்கிறது. அதையெல்லாம் தொகுத்து ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம். கொடுத்து விட்டு வெளியில் வந்து சொல்லி இருக்கிறேன். இப்போது நான் கொடுத்திருப்பது பகுதி ஒன்று, விரைவில் பகுதி-2 வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்னும் அமைச்சர்களின் பல ஊழல்கள் வந்துகொண்டிருக்கிறது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் இந்த நாட்டை குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா என்பது எப்படிப்பட்ட நோய். வெளியில் வரமுடியாது, வாழ்வாதாரம் இழந்து போய் விட்டது, சாப்பிட வழியில்லை, தொழில் செய்ய முடியவில்லை, வேலைக்குப் போக முடியவில்லை, கூலி வேலை செய்ய முடியவில்லை, நண்பர்களைப் பார்க்க முடியவில்லை, உறவினர்களைப் பார்க்க முடியவில்லை, மருத்துவமனைக்குப் போக முடியவில்லை, அந்த நிலையிலிருந்த ஒரு நோய். இப்பொழுது கூட அந்த நோய் இருந்துகொண்டிருக்கிறது. அந்த நோயைப் பயன்படுத்தி அதற்கு வருகிற நிதியைக் கூட கொள்ளை அடித்துக் கொண்டிருக்கக் கூடிய ஆட்சிதான், இந்த அ.தி.மு.க ஆட்சி. இதற்கெல்லாம் தயவு செய்து விசாரணை வைக்க வேண்டும் என்று சொல்லி நாங்கள் நேற்று சென்று ஆளுநரிடத்தில் புகார் மனு கொடுத்திருக்கிறோம், ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார். ஒருவேளை அவர் நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்கினால் நிச்சயமாக, உறுதியாக நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். நீதிமன்றத்தை நாடுவது மட்டுமல்லாமல், விரைவிலேயே உங்கள் அன்போடு, ஆதரவோடு தி.மு.க ஆட்சிக்கு வரப்போகிறது. வந்த பின்பு முதன் முதலாக இந்தப் பணியைச் செய்வோம் என்பதை உங்கள் முன்னிலையில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது யாருடைய பணம்? அரசாங்கத்தினுடைய பணம், உங்களுடைய வரிப்பணம். அதைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை சும்மா விடக்கூடாது என்ற உணர்வோடுதான் நாங்கள் இருக்கிறோம்.
இந்தப் பகுதியில் இங்கு வந்து, அந்த கல்வெட்டு பக்கத்தில் அதைப் பார்த்துப் படித்து எனது மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டேன். என்ன கல்வெட்டு என்று பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குத் தெரியும் இது ஒரு விளையாட்டு மைதானம் கட்டவேண்டும் என்று சொல்லி இங்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கு நிதியும் ஒதுக்கி இருக்கிறார்கள். எல்லாம் அதில் உள்ளது. இதெல்லாம் உங்கள் ஊர் மக்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும். மற்ற ஊர் மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக இப்போது சொல்கிறேன். எல்லாம் விவரமாக இந்த கல்வெட்டில் உள்ளது. 2018 டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இப்போது 2020 டிசம்பர் மாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை.
இது மாதிரி எவ்வளவோ பணிகள் - நம் ஊரில் இருக்கக்கூடிய குளம், 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் கூலி முறையாகச் சென்று சேரவில்லை, மகளிர் சுய உதவிக்குழு பிரச்சனை, பேருந்து வசதி பிரச்சனை, பள்ளிக்கூட பிரச்சினை. இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கிறது.
அந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முடிவு காணவேண்டும் என்பதற்காகத் தான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன். உங்கள் குறைகளை நேரடியாகக் கேட்க வந்திருக்கிறேன்.”
இவ்வாறு உரையாற்றினார்.
கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
“கூட்டத்தினுடைய நோக்கத்தைப் பற்றி நான் தொடக்கத்திலேயே சொன்னேன். அதையும் நீங்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, மனதில் உள்வாங்கிக் கொண்டு, உங்கள் கருத்துக்களை, இந்த ஊரில் உள்ள பிரச்சினைகளை, சுருக்கமாக எங்களிடத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள்.
விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இலவச மின்சாரம் 1989- 1990 ஆண்டுகளில் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் இந்தத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபொழுது விவசாயச் சங்கத்தின் தலைவராக இருந்து மறைந்த நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. விவசாயத்திற்கான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. எவ்வளவு குறைக்க வேண்டும்? என்று போராட்டம் நடத்தினார்கள் என்றால், ’ஒரு பைசா குறைக்க வேண்டும்’ என்று போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அன்றைக்கு இருந்த அ.தி.மு.க ஆட்சி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கலவரம் நடைபெற்றது. நாராயணசாமி நாயுடு அவர்களை போலீசார் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபோல கொடுமைகள் எல்லாம் நடைபெற்றது. அதற்குப்பிறகு கலைஞர் முதலமைச்சராக வந்தார். சட்டமன்றத்தில் கலைஞர் அறிவித்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க. அரசு மின்சார கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று நீங்கள் போராடினீர்கள். இப்போது போராட்டம் நடத்தவில்லை, கோரிக்கை வைக்கவில்லை, மனு என்னிடத்தில் வந்து கொடுக்கவில்லை, கோட்டைக்கு வந்து யாரும் சொல்லவில்லை. ஆனால் நான் இப்போது சொல்கிறேன். இனிமேல் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தாங்கள் பயன்படுத்துகிற மோட்டார் பம்ப் செட்டுக்கு ஒரு பைசா கூட தர வேண்டிய அவசியம் இல்லை. இலவச மின்சாரம் என்பதைச் சட்டமன்றத்தில் அறிவித்தார். இது வரலாறு!
அதேபோலத்தான் அடுத்த முறை ஆட்சிக்கு வருகிற பொழுது கலைஞர் ஒரு உறுதிமொழி கொடுத்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயப் பெருங்குடி மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் அனைத்தையும் நான் முழுவதுமாக தள்ளுபடி செய்வேன் என்று சொல்லி இருந்தார். ஒரு கோடி - இரண்டு கோடி அல்ல; 7,000 கோடி! கலைஞர் ஆட்சிக்கு வந்தார். கோட்டைக்குக் கூட போகவில்லை. பதவிப் பிரமாணத்தை நேரு ஸ்டேடியத்தில் ஆளுநர் செய்து வைக்கிறார். கலைஞர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு முதல் கையெழுத்துப் போட்டார்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் கலைஞரிடத்தில் நாங்கள் சொன்னோம், நீங்கள் வங்கிகளில் விவசாயிகளின் கடனை முழுவதுமாகத் தள்ளுபடி செய்வதாகக் கூறிய 7,000 கோடியில், அ.தி.மு.க.காரர்கள்தான் அதனை அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். 5 லட்சம் 10 லட்சம் கூட வாங்கி இருக்கிறார்கள். தி.மு.க.காரர்கள் ஆயிரம், இரண்டாயிரம் வரை தான் வாங்கி இருக்கிறோம். அதை ஏன் தள்ளுபடி செய்தீர்கள் என்று நாங்கள் எல்லாம் கேட்டோம். உடனே கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா? நான் விவசாயப் பெருங்குடி மக்களை அ.தி.மு.க. - தி.மு.க. எனப் பார்க்கவில்லை, காங்கிரஸ், பா.ம.க. எனப் பார்க்கவில்லை, கம்யூனிஸ்டாகப் பார்க்கவில்லை. அத்தனை பேரையும் இந்த நாட்டினுடைய விவசாயப் பெருங்குடி மக்களாகப் பார்க்கிறேன். இப்போது 25 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். வடமாநிலத்தில் இருந்து பஞ்சாபிலிருந்து, உத்தரப் பிரதேசத்திலிருந்து, ஹரியானாவில் இருந்து, எல்லா மாநிலங்களிலிருந்தும் புறப்பட்டுச் சென்று அங்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கேயே தங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள், பெண்கள் எல்லாம் சேர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் ஒரு முடிவு வரவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. அதை வேதனையோடு நான் இங்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
2018-இல் சட்டமன்றத்தில் அறிவிக்கிறார்கள் இங்கே விளையாட்டுகளில் கட்டப் போகிறோம் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கிறார்கள். அதற்குப் பிறகு 2019ல் அடிக்கல் நாட்டு விழா நடத்துகிறார்கள். இப்போது 2020 டிசம்பர், இதுவரைக்கும் ஒன்றும் நடைபெறவில்லை. 2021 டிசம்பரில் இது மைதானமாக இருக்கும், விளையாட்டுத் திடலாக இருக்கும் தி.மு.க ஆட்சியில் என்பது நிச்சயம். அந்த உறுதியை நான் உங்களிடத்தில் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நரேந்திர மோடி அவர்கள், அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் முதல் முறை பிரதமராக வந்த போது என்ன சொன்னார்? நான் பிரதமராக வந்தால் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை எல்லாம் மீட்டுக் கொண்டு வரப்போகிறேன். மீட்டுக்கொண்டு வந்து தலைக்கு 15 லட்சம் ரூபாய், வங்கியில் செலுத்தப்படும் என்று கூறினார். நான் பலமுறை கேட்டேன், எல்லோரும் பல முறை கேட்டார்கள். 15 லட்சம் வேண்டாம், பதினைந்தாயிரம் போதும், போட்டார்களா? இல்லை. ஒரு பதினைந்து ரூபாய், இல்லை. ஒரு பதினைந்து காசு, இல்லை.
உறுதிமொழி கொடுத்தால் அதை நிறைவேற்றுகிறவர் தலைவர் கலைஞர் ஒருவர் மட்டுமே. ’சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று மத்திய அரசு அறிவித்தது. நான் கேட்கிறேன்; நீ யாருக்காவது மத்திய அரசின் சார்பில், மோடி அறிவித்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு வந்திருக்கிறதா? இல்லை.
இங்கு இருக்கக்கூடிய தொழிற்சாலைகள் எல்லாம் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் அதற்கு கமிஷன் கேட்கிறார்கள். கமிஷன் கொடுத்தால் தான் நீங்கள் தொழிற்சாலை நடத்த முடியும் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். லஞ்சம் கொடுத்து தொழில் வீணாகிவிடும் என்று அடுத்த மாநிலத்திற்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படித்தான் பல தொழிற்சாலைகள் இங்கு சென்று விட்டன.
மினி கிளினிக் என்று ஆரம்பித்தார்? என்ன ஆயிற்று? இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சீர்படுத்தினாலே போதும். இங்கு கிளினிக் என்று ஒன்று தேவை இல்லை. கொள்ளையடிப்பதற்காகக் கொண்டுவந்த திட்டம் அது. அதை வைத்துக்கொண்டு, இருப்பதை சுருட்டிக் கொண்டு போக அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அது மக்களுக்குப் பயன்பட வில்லை. அது முறையாக நடத்தப்படவில்லை. மருத்துவர்கள், நர்ஸ்கள் யாரும் அங்கு இல்லை.
இப்போது, இதுதான் ஆரம்ப சுகாதார நிலையம், இதுதான் கிளினிக் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கக் கூடிய தொற்று நோய் மருந்து மாத்திரைகளை தரவேண்டும்.
ப்ளீச்சிங் பவுடர் மற்றும் துடைப்பத்தில் ஊழல் செய்த ஆட்சி, இந்த ஆட்சி. இப்படி ஒரு மோசமான நிலையில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, கடன் கிடைத்தது, மானியம் கிடைத்தது. ஆனால் இப்பொழுது எதுவும் இல்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது - கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நான் துணை முதலமைச்சராக இருந்தேன். துணை முதலமைச்சர் மட்டுமில்லை, உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பு என்னிடம் இருந்தது.
சுய உதவிக் குழு என்பது சமூக நலத்துறையிடம் முதலில் இருந்தது. உள்ளாட்சித் துறையிடம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி என்னிடம் ஒப்படைத்தார்கள். நான் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, அரசு நிகழ்ச்சிகள் நடத்தினேன், நலத்திட்ட உதவிகளைக் கொடுப்பேன், பல அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வேன், திறப்பு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன், கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். அப்படி எல்லாம் செல்கின்ற போது கட்டாயமாக மகளிர் சுய உதவிக் குழுக்களை மேடைக்குக் கூப்பிட வேண்டும். அவர்களுக்கு என்று தனியாக ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு சுழல் நிதி கொடுக்க வேண்டும், வங்கிக் கடனைக் கொடுக்க வேண்டும், மானியத் தொகை கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே வங்கியில் இருக்கக்கூடிய நிர்வாகிகளும் கூப்பிட்டு அவர்களிடத்தில் ஆலோசனை நடத்திக் கலந்து பேசி அவர்கள் மூலமாக அந்தக் கடன்களைப் பெற்று வேண்டிய அளவிற்கு கலைஞர் தலைமையில் பெற்று அதனை எல்லாம் ஒருவருக்குக் கொடுத்தேன்.
அதைக் கொடுக்கிறேன் என்று சொன்னால் குறைந்தது 2,000 பேர் முதல் 5,000 பேர் வரை கொடுத்திருக்கிறேன். மேடையில் வரிசையாக உட்கார வைத்துக் கொடுப்பேன்.
5,000 பேருக்குக் காலையில் ஒன்பது மணிக்கு ஆரம்பித்து, மதியம் 3 மணி 4 மணி வரை ஆகும். ஏன், எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் கூட உட்கார்ந்து இருப்பார்கள். நான் நின்றுகொண்டே கொடுப்பேன். இப்போதும் நின்று பேச நான் தயார். இது ஒரு கிராம சபைக் கூட்டம் அங்கு உட்கார்ந்தால் தான் சரியாக இருக்கும் என்பதால்தான் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறேன்.
நின்றுகொண்டு அத்தனை பேருக்கும் நான் கொடுத்தேன். ஒருத்தர் கூட விட்டுப் போகவில்லை. முதலில் நாங்கள் அவர்களை வரிசையாக நம்பர் போட்டு உட்கார வைத்து விடுவோம். நம்பர் படி வரிசையாகக் கொடுத்து கொண்டிருப்போம் வரிசையாக ஏனென்றால், 5,000 பேருக்குக் கொடுக்க வேண்டும் என்றால் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை ஆகலாம்.
சில தாய்மார்கள் மேடையில் வந்து கேட்பார்கள். நாங்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் கூப்பிடும்போது மேடையில் வந்து வாங்கிக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். எதற்காக சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. முதன் முதலில் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கினார்கள். தொடங்கியபோது சொன்னார்கள், நீங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும், பெண்கள் தன்னந்தனியாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும், தன்னம்பிக்கை பெற்றவர்களாக நீங்கள் வாழ வேண்டும், யாரைப் பற்றியும் நீங்கள் கவலைப் படக்கூடாது, எதற்கும் நீங்கள் துணிந்து நிற்க வேண்டும், அதற்காகத் தான் வங்கியில் கடன் பெற்று நீங்கள் சுய தொழிலில், சிறு சிறு தொழில் செய்து அதன் மூலமாக உங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகத் தொடங்கினார். அதனால்தான் மக்களுக்கு எத்தனையோ சலுகைகளை வழங்கினார்கள். தந்தை பெரியார் கண்ட கனவு. சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு, ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் பெண்களைத்தான் கட்டாயமாக நியமிக்கவேண்டும் என்று ஒரு சட்டம்.
ஒரு ஏழை - எளிய குடும்பத்தில் பிறந்து இருக்கக்கூடிய பெண்ணிற்குத் திருமணம் என்று சொன்னால். ஏழைக் குடும்பத்தில் பிறந்திருக்கக் கூடிய அந்தப் பெண் பிள்ளைகளை எப்படி திருமணம் செய்து கொடுப்பது, யாரிடத்தில் சென்று கடன் கேட்பது, நண்பர்களிடம் கேட்கலாமா? உறவினர்களை கேட்கலாமா? வட்டிக்கு வாங்கலாமா? அந்த வட்டியைத் திருப்பிச் செலுத்த முடியுமா? வீட்டில் இருக்கக் கூடிய தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் வைத்து திருமணம் நடத்தலாமா? என்றெல்லாம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது குடும்பங்கள். அதனால் தான் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு திருமண உதவித் தொகைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். ஆகவே பெண்களுடைய முன்னேற்றம் தான் இந்த நாட்டினுடைய முன்னேற்றம் என்ற அடிப்படையில் கலைஞர் அவர்கள் இந்த அற்புதமான திட்டங்கள் எல்லாம் கொண்டு வந்தார்கள்.
மீண்டும் விரைவில் இன்னும் நான்கு மாதங்களில் வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்பதை விட உங்களுக்கு அதிகமாக நம்பிக்கை உள்ளது.
எனவே அடுத்து வரக்கூடிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி! அந்த தி.மு.க. ஆட்சி வந்தவுடன் இந்த மகளிர் சுய உதவிக் குழு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். அதேபோல் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, மருத்துவமனை பிரச்சினை - குடிநீர்ப் பிரச்சினை - வேலைவாய்ப்புப் பிரச்சினை, இப்படி இருக்கக் கூடிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடிவு காலத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை நான் உங்களிடத்தில் எடுத்துச்சொல்லி இப்பொழுது ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.
என்ன தீர்மானம் என்று கேட்டால், இப்பொழுது ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற ஒரு தீர்மானத்தை நாம் நிறைவேற்ற இருக்கிறோம்.
விவசாயத்தை வஞ்சித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… வேலையில்லாமல் திண்டாடவிட்ட அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… தாகத்தில் தவிக்கவிட்ட அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கச் செய்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… அரசு கஜானாவைச் சுரண்டி காலி செய்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… கல்வியையும் சுகாதாரத்தையும் தரமிழக்கச் செய்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… பெண்களின் உரிமைகளைப் பறித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… சமூக நீதியைச் சீரழித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… தமிழர்களின் பெருமையைச் சீரழித்த அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… ஆட்சி செய்யத் தகுதியற்ற அ.தி.மு.க.வை நிராகரிப்போம்… நன்றி! வணக்கம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!