M K Stalin

“மக்கள் நம் பக்கம்; 200 தொகுதிகளை வென்றெடுப்போம்; தமிழகத்தை மீட்டெடுப்போம்!” - மு.க.ஸ்டாலின் மடல்!

“இலக்கும் - நோக்கும் 200!” எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவரது மடல் வருமாறு :

"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

மகேசர்களாம் மக்களின் பேராதரவுடன் அடிமை ஆட்சியாளர்களிடமிருந்தும், அவர்களைப் பொம்மைகளாக்கி ஆட்டி வைத்து அதிகாரம் செலுத்துவோரிடமிருந்தும், தமிழகத்தை மீட்பதற்கு ஏற்ற வகையில், சட்டமன்றத் தேர்தல் களத்தில் மகத்தான வெற்றி பெற்று, கழக ஆட்சியினை அமைத்து, வெற்றியையும், ஆட்சியையும் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓய்விடத்தில், அவரது உன்னதத் திருவடிகளில் காணிக்கை ஆக்குவது ஒன்றுதான் நமது இலக்கு. அதற்கான செயல் திட்டமே “இலக்கும் - நோக்கும் 200” என்பது. 20-12-2020 ஞாயிறு அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த செயல்திட்டத்தினை முழுமையாக விளக்கி உரையாற்றியது, கழக உடன்பிறப்புகளிடம் உற்சாக வரவேற்பினைப் பெற்றிருப்பதுடன், அனைவருடைய நெஞ்சிலும் அழியாத ஓவியமாய்ப் பதிந்திருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறேன். 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு உயரவேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் துளியளவும் குறைந்துவிடக்கூடாது என்பதை என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் சொல்லவில்லை; உங்களில் ஒருவனாகத்தான் உள்ளக் கிடக்கையைத் தெரிவித்துள்ளேன்.

இந்தத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா - சாவா என்று சிலர் விவாதிக்கிறார்கள். எனக்கு அதில் எள்ளளவும் உடன்பாடு இல்லை என்பதை அன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் தெரிவித்தேன். ‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற முத்திரை வரிகளைத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரது மூத்த பிள்ளையான “முரசொலி” ஏட்டின் முகப்பில் இப்போதும் அது மிளிர்கிறது; நமது இலட்சியத்தை நாட்டுக்குப் பறை சாற்றுகிறது. இந்தத் தேர்தல் களம் என்பது, கழகம் வாழுமா - வீழுமா என மனப்பால் குடித்தபடி, மார்தட்டிக் காத்திருப்போருக்கான களம் அல்ல. தமிழ்நாடு மீள வேண்டுமா - வாழ வேண்டுமா என்பதற்கான தேர்தல் களம் என்பதைக் கழகத்தினரும், பொதுமக்களும், தமிழக முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

“அ.தி.மு.கவை நிராகரிப்போம்” என ஒவ்வொருவர் மனதிலும் அடிக்கோடிட்டு எழுதி பசுமையாக வைத்துக்கொண்டால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் தன் இலக்கை எளிதாகவே எட்டிவிடும்; தமிழகம் வாழும். இது ஒன்றுதான் நமது குறிக்கோள். அதற்கான முதல்கட்ட செயல்திட்டம்தான், 16 ஆயிரத்து 500 ஊராட்சி மற்றும் வார்டுகளில் கழகம் நடத்தவிருக்கும் ‘கிராமசபை மற்றும் வார்டு’க் கூட்டங்கள்.

“மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்குத் தொண்டாற்று. அவர்களுடன் இணைந்து திட்டமிடு”என நமது பொதுப் பணிக்கான பாதையை வகுத்துத் தந்திருக்கிறார் பேரறிஞர் அண்ணா. அந்தப் பாதையில், நிமிர்ந்த நன்னடையுடன் நேர்கொண்ட பார்வையுடன், கவனம் சிறிதும் சிதறாமல், நம் அனைவரையும் விரல்பிடித்து அழைத்துச் சென்று வழி நடத்தியிருக்கிறார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். அவர்கள் கற்றுத் தந்த பாடத்தையும் படிப்பினையும் கருத்தில் ஏந்தி, கிராமசபை/வார்டு கூட்டங்கள் டிசம்பர் 23-ல் தொடங்கி ஜனவரி 10 வரை நடைபெறுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 12 ஆயிரத்து 500 கிராமசபைக் கூட்டங்களைக் கழகம் நடத்தியது. மக்களைத் தேடிச் சென்று, அவர்களுடன் உரையாடியது. அவர்களின் தேவைகளை – பிரச்சினைகளை - கோரிக்கைகளை அவர்களுடன் அமர்ந்து அமைதியாகக் கேட்டது. அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை முழு மூச்சுடன் மேற்கொண்டது. மக்களின் நல்ல நம்பிக்கையைப் பெற்றது. அதன் விளைவாக, நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றோம். அது மட்டுமல்ல, ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வின் அராஜகத்தையும், அதன் கைப்பாவையான மாநிலத் தேர்தல் ஆணையத்தின் சட்டமீறல்களையும் கடந்து தி.மு.கழகம் வென்றது.

நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். ஆனால், அந்த வெற்றியை எளிதாகப் பெறுவதற்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். எல்லா வகையிலும் தடுப்புகளையும் தடைகளையும் ஏற்படுத்துவார்கள்.

வாக்குகளைச் சிதைப்பதற்குப் பணபலம்-அதிகாரபலம் என அனைத்தையும் பயன்படுத்துவார்கள். அதனை நேரடியாக எதிர்கொள்வதற்கு நம்மிடம் இதயம் நிறைந்த வலிமை இருக்கிறது; பலமான ஆயுதம் இருக்கிறது; அந்த ஆயுதத்தின் பெயர், திராவிடம். நம்மிடையே யாராலும் பிரிக்க முடியாத ஒற்றுமையே அதன் வலிமை.

தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வாரே, மகாபாரதத் கதையில் அர்ஜுனன் கண்ணுக்கு அம்பின் நுனியும் பறவையின் கழுத்தும்தான் தெரிந்தது என்று! அதுபோல, நமக்கு தி.மு.க.வின் வெற்றியும், தமிழகத்தின் மீட்சியும்தான் தெரிந்திட வேண்டும். நம் கவனத்தைச் சிதைக்க - சிதறடிக்க, களத்தில் புதிது புதிதாகப் பலரும் வருவார்கள்.

ஜனநாயகத்தில் எல்லோருக்கும் இடம் உண்டு. எனினும் வெற்றி மட்டும் தி.மு.கழகத்திற்குத்தான் கிட்டும். அந்த வெற்றிக்கு அடிப்படையானவர்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். எத்தனை கட்சிகள் களம் கண்டாலும், அது அவர்களின் ஜனநாயக உரிமை என மதிப்பளித்து, நம் கவனம் முழுவதையும் வெற்றியை நோக்கியே குவித்திட வேண்டும். நேரடியாகவும் - மறைந்திருந்தும் தி.மு.கழகத்தின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் மீதும், தாக்குதல் நடத்தும் எதிரிகளை வீழ்த்திட உறுதி பூண்டிட வேண்டும். அதற்கேற்ப, மக்களின் உறுதியான நம்பிக்கையை உளப் பூர்வமாகப் பெற்றிட ஓயாது உழைத்திட வேண்டும்.

இந்தியாவின் உயிர்நாடியாக விளங்குபவை கிராமங்கள். அதில், தமிழகத்தின் கிராமங்கள் சிறப்பு வாய்ந்தவை. அவை பாரம்பரிய இயற்கைத் தன்மை மாறாமல், அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பெற்றிருப்பவை. அத்தகைய அற்புதமான கட்டமைப்புக்குக் காரணம் தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை பெருமையோடு சொல்ல முடியும். மின்வசதி, போக்குவரத்து, குடிநீர், மருத்துவமனை, சுகாதார நிலையம், பள்ளிகள், மகளிர் சுய உதவிக்குழு, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் எனக் கிராமத்தின் வளர்ச்சிக்கும் அங்கே வாழும் மக்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் பல திட்டங்களைத் தலைவர் கலைஞர் அவர்கள் போல வேறெவரும் சிந்தித்துச் சிந்தித்துச் செயல்படுத்தியதில்லை. மீண்டும் அந்த நிலை உருவாகிட, கிராசபை/வார்டு கூட்டங்கள் உயர்வான நோக்கோடு அமையட்டும்; வெற்றிக்கான நெடும்பயணத்தின் தொடக்கமாக இருக்கட்டும். மக்களின் நம்பிக்கைக்குரிய கழகம் அதனைச் செய்யட்டும். தலைமையிலிருந்து மாவட்டக் கழகத்திற்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவை ஒன்றியம், பேரூர், நகர, வார்டு, கிளைக் கழகங்கள் வழியே செயல்படுத்திட வேண்டும். விரிவான செயல்பாடுகளுக்காகவும், பணிச் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காகவும், அண்மையில் சில மாவட்டக் கழக நிர்வாகங்கள் பிரிக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் 77 கழக மாவட்டங்கள் உள்ளன. இவையே தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான மாவட்டங்களாகும். நிர்வாக வசதிக்காக மேலும் மாவட்டங்களைப் பிரிப்பது என்பது, தேர்தல் களத்தில் கழகம் மகத்தான வெற்றி பெற்ற பிறகு நடைபெறும்.

எனவே, அவரவர் மாவட்டக் கழகத்தின் கீழ் நிர்வாக அமைப்புகளில் ஒருங்கிணைந்தும் கிராம சபை / வார்டு கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். கூட்டங்களை நடத்துவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது வகுக்கப்பட்டிருக்கிறது. அதனைச் சரியாகவும் முறையாகவும் பின்பற்றிட வேண்டும் என உங்களில் ஒருவனான நான் விரும்புகிறேன். காலையிலேயே கிராமம் / வார்டுகள் வாரியாக வீடு வீடாகச் செல்லுதல்; குறைந்தபட்சம் தினமும் ஐந்நூறு வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.

கைகளில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏந்தி, ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’என்ற பதாகைகள் தாங்கி, தி.மு.கழக ஆட்சியின் சாதனைகள் அடங்கிய துண்டறிக்கைகள், பத்தாண்டுகளாகத் தமிழகத்தைப் பாழ்படுத்திய அ.தி.மு.க ஆட்சி மீதான குற்றப் பத்திரிகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்று ஒவ்வொரு வாக்காளருக்கும் வழங்கிட வேண்டும்.

பதாகைகள், சுவரொட்டிகள் என எதிலும் பெரியார், அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் தவிர வேறு யாருடைய படங்களும் இடம்பெறக் கூடாது.

பகுதி, ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் முழுமையாகச் சென்று சந்திப்பு நடத்திட வேண்டும். (பத்து நாட்களில் அனைத்து வார்டு, ஊராட்சிகளை முழுமையாக சந்தித்து இருக்க வேண்டும்). குரல் வாக்கெடுப்பு மூலம், ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தீர்மானத்தைப் பலத்த ஒலியுடன் நிறைவேற்ற வேண்டும்.

கழகத்தின் சார்பில் வழங்கப்படும் தொப்பிகள், ஆட்சி மீதான குற்றப்பத்திரிகைகள் ஆகியவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

தி.மு.க.வுடன் இணையவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விருப்பமுள்ளோர் 9171091710 என்ற எண்ணை அழைக்க வேண்டும் என்பதையும் அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

வீட்டுக்கு ஒரு கையடக்க நாட்காட்டி மற்றும் மொபைல் ஸ்டிக்கர் வழங்க வேண்டும். கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவதை பொதுமக்கள் அறியும் வகையில் முக்கிய இடங்களில் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும்.

தங்களின் பெயருடன் வார்டு/கிராம வாரியாக கூட்டம், திண்ணை பரப்புரை ஆகியவற்றின் படங்களை 9171091710 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

அனைத்து நிகழ்வுகளையும் சமூக ஊடகத் தொடர்பாளர் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, வெற்றிப் பாதைக்கான முதற்கட்டப் பயணத்தைக் கழகத்தினர் அனைவரும் தொடர்ந்திட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளே.. உங்களில் ஒருவனான நானும் கிராம சபை / வார்டு கூட்டங்களில் பங்கேற்கிறேன். களத்தில் ஒருங்கிணைவோம்; கழகத்தின் வெற்றிக்கு, கண்ணுங் கருத்துமாய், கட்டுப்பாடாய் உழைத்திடுவோம்.

மக்கள் நம் பக்கம்; ஆட்சி மாற்றம் நிச்சயம். 200 தொகுதிகள் இலட்சியம்; அதை வென்றெடுப்போம்; தமிழகத்தை மீட்டெடுப்போம்!"

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: அதிமுக ஊழல்: இது வெறும் Part 1 மட்டுமே.. Part 2 இருக்கிறது.. மீண்டும் ஆளுநரை சந்திப்போம் - மு.க.ஸ்டாலின்