M K Stalin
#Mission200 : “200க்கு ஒரு தொகுதி கூட குறையக்கூடாது"- தி.மு.க நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் "மிஷன்-200 என்ற இலக்கை நோக்கி டிசம்பர் 23 முதல் கழகத்தினர் பிரச்சாரத்தைத் துவங்கிட வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
அவரது உரை வருமாறு :
“மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த அரங்கத்தில் 1,659 பேர் கூடியிருக்கிறீர்கள். உங்கள் கையில் தான் 234 தொகுதிகளும் அடங்கி இருக்கிறது. அதனால் தான் இதை மிக மிக முக்கியமான பொதுக்கூட்டம் என்றேன்.
234 தொகுதிகளின் வெற்றி உங்கள் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சொல்வதற்காகத்தான் உங்களை நான் இன்று இங்கு அழைத்திருக்கிறேன்!
நம்மைத் தாண்டி நமக்கு இரண்டு பலம் இருக்கிறது. அதுதான் பேரறிஞர் அண்ணா! முத்தமிழறிஞர் கலைஞர்! அவர்கள் இருவரும் நம்மை எல்லாம் நமக்குள்ளே இருந்து உணர்வால், ரத்தத்தால் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில் - திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாக விளங்கக் கூடிய மாவட்டக் கழக - ஒன்றியக் கழக - நகரக் கழக – பகுதிக் கழக - பேரூர்க் கழகச் செயலாளர்களும் - சட்டமன்ற உறுப்பினர்களும் - நாடாளுமன்றக் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள இந்தக் கூட்டத்தின் மூலமாக நான் சொல்ல விரும்புவது, “அடுத்து அமையப் போவது நமது ஆட்சி தான்! நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும்! நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும்! நம்மால்தான் தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை – சாதனைகளைப் படைத்திட முடியும்! அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்!”
பொதுக்குழுவாக இருந்தாலும், செயற்குழுவாக இருந்தாலும், மாவட்டக் கழகச் செயலாளர் கூட்டமாக இருந்தாலும் ஒரு கருத்தை நான் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறேன்; “நாம் தான் வெற்றி பெறுவோம்! ஆனால் அந்த வெற்றியை சாதாரணமாக அடைந்துவிட முடியாது” என்று சொல்லி வருகிறேன்.
மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடாது என்பதைப் போல, நாம் சாதாரணமாக வென்றுவிட முடியாது. அதற்கான உழைப்பை, அதற்கான செயலை, அதற்கான பிரச்சாரத்தை - நாம் எந்தளவுக்கு முடுக்கிவிடுகிறோமோ, அந்தளவுக்கு நம்முடைய வெற்றியை முழுமையாக அடைவோம்!
உங்களது உழைப்பை முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிக் கொடுத்தால் மட்டுமே முழு வெற்றியைப் பெற முடியும்!
ஒரு கட்சி, ஆட்சி அமைக்க 117 இடங்கள் தான் தேவை. 117 இடத்தை மட்டுமே பெறுவதற்காக நாம் தேர்தலைச் சந்திக்கவில்லை. 117 இடங்களுக்காக நாம் கட்சி நடத்தவில்லை. அது பெருமை அல்ல.
பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற 1971-ஆம் ஆண்டு தேர்தலில் - தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்திய அந்த தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஒரு பெரும் சரித்திர சாதனையை நாம் படைத்தோம். அந்த வெற்றியை நாம் அடைய வேண்டும்!
1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும்! 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி நீங்கலாக அனைத்துத் தொகுதிகளிலும் வென்றோம் அல்லவா, அந்த வெற்றியைப் பெற வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி. அதுதான் முழுமையான வெற்றி!
அத்தகைய முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு என்ன வழியோ அதை நீங்கள் செய்யவேண்டும். அத்தகைய முழு வெற்றியை அடைய எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட வேண்டும்.
அதற்கு உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு பொது நோக்கம் தான் இருக்க வேண்டும்.
யார் வேட்பாளர்? உதயசூரியன்தான் வேட்பாளர்!
யார் வேட்பாளர்? கலைஞர்தான் வேட்பாளர்!
- என்ற ஒற்றை எண்ணம் தான் உங்களுக்கு இருக்க வேண்டும்!
200 பேர் சட்டமன்ற உறுப்பினராவதற்கும் - 30 பேர் அமைச்சராவதற்குமான தேர்தல் அல்ல இது! அப்படி நினைத்தால் அதை மறந்துவிடுங்கள்! கழக ஆட்சி மலர வேண்டும் – அதுதான் கொள்கையாக இருக்க வேண்டும்!
உங்கள் அனைவரது எண்ணமும், இன்னாருக்கு உழைக்கிறோம், அவர்தானே எம்.எல்.ஏ., ஆகப் போகிறார், இவர்தானே அமைச்சர் ஆகப் போகிறார், நமக்கென்ன என்று நினைக்காதீர்கள்!
கழகம் ஆட்சிக்கு வந்தாக வேண்டும்! கலைஞரின் கனவு நிறைவேற வேண்டும்! கலைஞரின் உடன்பிறப்புகள் நாம் என்பதை நிரூபித்தாக வேண்டும்! - அதற்காக நான் உழைக்கிறேன், என்கிற எண்ணம் உங்கள் அனைவருக்கும் வர வேண்டும்!
நான் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் நினைத்தால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வர முடியும்!
ஒரு கை, ஓசையாகாது. தனிமரம் தோப்பாகாது. தனி வீடு ஊர் ஆகாது. தனி மனிதன் குடும்பம் ஆகமாட்டான்! 'நான்' என்பதை விடுங்கள்! 'நாம்' என மாறுங்கள்! நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும்!
பொதுவாகச் சிலர் பேசும் போது, வாழ்வா சாவா என்பது மாதிரி என்று சொல்வார்கள். அந்த உதாரணமே தவறானது என்பது என் கருத்து! வாழ்வதற்காகத்தான் அனைவரும் முயற்சிக்கிறார்கள். வாழ்வா சாவா என்பது முயற்சிக்காதவர்கள் சொல்லும் சமாதானம். தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல் இது!
ஐந்து முறை ஆட்சியில் இருந்தோம் என்று பெருமைபடச் சொல்கிறோம். உண்மைதான். ஆறாவது முறையும் நாம்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற பெருமையைப் பெற்றாக வேண்டும்!
இந்தத் தேர்தலில் நாம் அடைய இருக்கிற வெற்றி என்பது, இதுவரை ஐந்து முறை பெற்ற வெற்றிக்குச் சமம்! இதன் உண்மையான பொருளை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! ஐந்து முறை வெற்றி பெற்றதற்குச் சமம்தான் இப்போது அடையப் போகும் வெற்றி. அதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்!
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி, அதன் அதிகார பலம் ஒரு பக்கம்! மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி, அதன் பண பலம் மறுபக்கம்! இவர்கள் இருவரும் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து ஊடகங்களையும் வளைத்துவிட்டார்கள். நமக்கு எதிரான செய்திகளை இந்த ஊடகங்கள் போடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, பா.ஜ.க., அ.தி.மு.க.வின் ஊதுகுழல்களாக அனைத்து ஊடகங்களும் மாறிவிட்டன. இது இன்னொரு பக்கம்! இந்த மும்முனைத் தாக்குதலை நாம் எதிர் கொண்டாக வேண்டும்.
இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல; இவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோல ஏதாவது புதுப்புது அஸ்திரங்களை நாம் எதிர்கொண்டுதான் வருகிறோம். நம்மை எதிர்கொள்ள முடியாமல் புதிது புதிதாக பலரை உருவாக்குகிறார்கள். சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள். எல்லாச் சதிகளையும் செய்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
இப்படி தாக்குதல் நடத்துகிறார்களே என நாம் பலவீனம் ஆகிவிடக்கூடாது. சோர்ந்துவிடக் கூடாது. மேலும் மேலும் உழைக்க வேண்டும். ஆறாவது முறை வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஆறு மடங்கு உழைக்க வேண்டும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்களே, “உண்மையான வீரனுக்குத் தெரியவேண்டியது கிளியின் கழுத்துதானே தவிர, கிளியல்ல, கிளையல்ல, மரமல்ல!”.
அர்ஜூனன் வைத்த குறி தப்பாது என்பதைப் போல, தி.மு.க.வினர் வைத்த குறி தப்பாது என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும்.
கடந்த தேர்தலிலேயே நாம்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கும் ஒரு சதவிகிதம்தான் வித்தியாசம். ஒரு சதவிகித வித்தியாசத்திலேயே ஆட்சிக்கு வர முடியாத நிலைமை ஆகிவிட்டது. நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்பு இருந்தது. அதனால்தான் சில தொகுதிகளை இழக்க வேண்டியதாயிற்று. அத்தகைய மிதப்பு கூடாது. நமக்குள்ளே உள்ள மாறுபாடுகள், வேறுபாடுகள், சண்டைகள், சச்சரவுகளைக் களையுங்கள். அதுவே வெற்றிக்கு முதல் அடித்தளம்.
“தி.மு.க.வை யாரும் வீழ்த்த முடியாது, தி.மு.க.வினர் தான் வீழ்த்த முடியும்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதற்கு என்ன காரணம்? உட்பகை!
நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள், கலைஞரின் உடன்பிறப்புகள், கருப்பு சிவப்பின் காவலர்கள், உதயசூரியனின் ஒளிவிளக்குகள்! இவை தான் நமக்குள்ள ஒற்றுமை. இதுதான் நம்மை இந்த அரங்கத்துக்குள் உட்கார வைத்துள்ளது.
உங்களில் பலர் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம்! உங்களில் சிலர் எம்.எல்.ஏ. ஆகலாம்! ஆனால் இந்தப் பெருமைகள் தனிப்பட்ட உங்களால் மட்டும் ஆனது அல்ல. சட்டமன்றத்தின் படிக்கட்டை மிதிக்காமல், அண்ணா அறிவாலயத்துக்கே வராமல் ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஏதோ ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டு கழகத்தை அவரது கிளையில் வளர்த்து வைத்திருக்கிறானே ஒரு தொண்டன் - அவனை நீங்கள் மதிப்பதாக இருந்தால் அவனது உழைப்புக்கு நீங்கள் மரியாதை செலுத்துவதாக இருந்தால் - கழக நிர்வாகிகள் உங்களுக்குள் உள்ள வேறுபாடுகள், மாறுபாடுகளை இன்றோடு, இந்த இடத்தோடு, இந்த நொடியோடு விட்டுவிடுங்கள்.
கெட்டுப் போன நிலத்தில் எந்தப் பயிரும் எப்படி முளைக்காதோ, அதுபோல மனமாச்சர்யங்கள் உள்ள மனம் கொண்டவர்களால் அடுத்தவருக்காக உழைக்க முடியாது. எல்லோரும் - எல்லோருக்காகவும் உழைத்தால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வர முடியும்!
நம்மவர்களே நம்மவர்களை வீழ்த்த நினைத்தால், அது உண்ட வீட்டுக்குச் செய்யும் துரோகம்! இவர்களைத் தான் கழகத்தின் புற்றுநோய் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.
சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்து, ஆளும்கட்சிக்கு அனுசரணையாக இருப்பவர்கள், அதைவிட மோசமானவர்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு!
இந்தத் தேர்தலில் அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கான வீயூகங்களை நாங்கள் அமைத்திருந்தாலும்; நீங்களும் அதற்கான தனி வியூகங்களை அமைத்திட வேண்டும். இவர்கள் நிற்கும் தொகுதியில் பணம் அதிகம் விளையாடும். அதனை நாம் நமது பலத்தால் வெல்ல வேண்டும்.
தேர்தலுக்கு பணம் முக்கியம்தான்; பணம் மட்டுமே முக்கியமல்ல! பணம் கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்றால், பணம் கொடுத்த பல தேர்தல்களில் அ.தி.மு.க தோற்றும் உள்ளது. அப்படியானால் அதையே காரணமாகச் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.
பணத்தைக் கொடுத்து அ.தி.மு.க வெற்றி பெற்றுவிட்டது, போலீசை வைத்து வெற்றி பெற்றுவிட்டது என்று நாம் காரணம் சொல்ல முடியாது. ஆளும்கட்சியிடம் ஏராளமான பணம் இருக்கிறது, கொள்ளையடித்து வைத்துள்ளார்கள்.
கொள்ளையடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த ஆட்சியால் பயனடையும் தொழிலதிபர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பணமும் கொடுப்பார்கள். இந்த பணமலையை உடைத்து நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.
பணமா, மக்கள் மனமா? என்றால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனத்துக்கு உள்ளது. மக்கள் மனதை நீங்கள் வென்றாக வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பிரச்சார வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தியது மிகப்பெரிய காரணம் என்று சொன்னார்கள். கழக முன்னோடிகள் – நிர்வாகிகள் - மாவட்ட கழகங்களை சேர்ந்தவர்கள் - கழக தளகர்த்தர்கள் எல்லாம் அந்த கூட்டங்களுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அதனால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. அதனால் இன்றைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பிரச்சார வியூகத்தை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சி, கடந்த பத்து ஆண்டுகளாக இருக்கிறது. பத்து ஆண்டுகளாக இந்த ஆட்சி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை, தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என்ற கோபம் மக்களுக்கு நிரம்ப இருக்கிறது. அந்தக் கோபம்தான் தேர்தல் நேரத்தில் அதிகமாக வெளிப்படும். கடந்த பத்தாண்டு காலத்தில் அனைத்துத் துறைகளிலும் இந்த தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்களை, சரிவுகளை, தோல்விகளை மக்களுக்கு நாம் நினைவூட்டும் பிரச்சாரத்தை உடனடியாகத் தொடங்கியாக வேண்டும்.
ஏற்கனவே ‘தமிழகம் மீட்போம்’ என்று மாவட்ட அளவிலான கூட்டங்களில் நான் பங்கேற்று வருகிறேன். ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரைக் கூட்டத்தை கழக மகளிரணிச் செயலாளர், இளைஞரணிச் செயலாளர், அந்தியூர் செல்வராஜ் அவர்கள் உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னோடிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்ததாக, நீங்கள் இப்போது நடத்தவுள்ள பிரச்சாரம். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக நீங்கள் செய்த பிரச்சாரங்கள் எப்படி பயன்பட்டதோ, அப்படி இந்தப் பிரச்சாரத்தையும் நீங்கள் சிறப்பாக நடத்தித் தர வேண்டும்.
அது மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும், தி.மு.க மீது பலத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அதேபோல்தான், ‘அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்’ என்ற இந்தக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.
இந்தக் கூட்டத்தை மாவட்டக் கழகச் செயலாளர்கள், மாநகரக் கழகச் செயலாளர்கள், நகர - ஒன்றிய - கிளை - பகுதிக் கழகச் செயலாளர்கள் நடத்த இருக்கிறீர்கள். டிசம்பர் 23-ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பத்து நாட்கள் உங்கள் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு, பிரச்சாரம் செய்ய வேண்டும்.
அந்த கிராமத்தில் 'அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அ.தி.மு.க.வை நிராகரிக்கும் எண்ணத்தோடு இருக்கும் மக்களிடம் அதை தீர்மானமாக நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை - குடிநீர் வசதி கிடைக்கவில்லை - பள்ளிகளில் வசதிகள் இல்லை - ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை - ரேசன் கடைகள் இல்லை; கடைகள் இருந்தாலும் பொருட்கள் இல்லை - முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை - அரசு உதவித் தொகைகள் வரவில்லை - என்று அடுக்கடுக்கான கோரிக்கைகளை கிராமப்புற மக்கள் சொல்வார்கள். அவை அனைத்தையும் பொறுமையாக நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், குறைகள் களையப்படும் என்ற நம்பிக்கையை நீங்கள் அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.
மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் சொல்லுங்கள். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அந்த பகுதிகளுக்கு செய்த நன்மைகளை எடுத்துக் கூறுங்கள். இப்போது செய்யக்கூடிய பணிகளையும், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் செய்யவுள்ள பணிகளையும் எடுத்துக் கூறுங்கள்.
ஒரு நகரச் செயலாளர் செல்லும் போது அந்த நகரக் கழகத்தின் முக்கியப் பொறுப்பாளர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். கிளைக்கழகத் தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிட்டார் என்பதற்காக அவரை அழைக்காமல் சென்றுவிடாதீர்கள். அந்த வட்டாரத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்கள் - மக்கள் மன்றங்கள் ஆகியோரையும் அங்கு வரவழையுங்கள்.
ஒரு ஒன்றியச் செயலாளர், அந்த ஊருக்கு பிரச்சாரத்துக்கு வருகிறார் என்றால் கிளைச் செயலாளராக இருப்பவர், ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை அந்தக் கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டும். உங்கள் வீட்டுத் திருமணத்துக்கு அழைப்பதைப் போல - ஊர்த் திருவிழாவுக்கு அழைப்பதைப் போல அழைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர் மனதிலும் 'அ.தி.மு.க-வை நிராகரிக்கிறோம்' என்ற உணர்வை விதைக்க வேண்டும்.
அ.தி.மு.கவால் கடந்த பத்தாண்டு காலம் பாழாகிவிட்டது என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். அ.தி.மு.கவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று மக்கள் மனதில் உருவாக்க வேண்டும். இதுதான் முதல் படி.
அதனால்தான் 234 தொகுதியும் உங்கள் கையில் இருக்கிறது என்று நான் சொன்னேன்!
கடந்த ஆறு மாத காலம் கொரோனா பாதிப்பு காலம்! அந்த நேரத்திலும் நாம் சும்மா இல்லை! ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தோம்.
கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவிவரும் காலமாக இருந்தாலும், ‘ஒன்றிணைவோ வா’ திட்டத்தைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறோம். உயிரையே பணயம் வைத்து பணியாற்றிய உங்களுக்கு நன்றி. அப்படிப்பட்ட பணிகளைச் செய்த நீங்கள், இந்தப் பணியையும் வெற்றிகரமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையை 20-க்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் நடத்தி வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் மக்கள் தரும் வரவேற்பு தருகிறார்கள்.
காணொலி மூலமாக 'தமிழகம் மீட்போம்' என்ற எனது பிரச்சாரக் கூட்டங்கள் மிகுந்த எழுச்சியோடு நடந்து வருகின்றன. லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்றும், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிகள் மூலமாக உலகம் முழுவதும் அனைவரும் கண்டும் வருகிறார்கள். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் இருந்து என்னுடைய பிரச்சாரப் பயணத்தை தொடங்க இருக்கிறேன். தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்றும் சொல்கிறார்கள். அதனால் நாம் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்பதற்காக இப்போதே தயாராகிறோம்.
யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி, யார் வேட்பாளர் - என்பதை எல்லாம் தலைமை முடிவு செய்து கொள்ளும். வெற்றி பெறக்கூடியவர்கள்தான் வேட்பாளர்கள். உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது, 'வெற்றி' என்ற ஒற்றை வார்த்தைதான்!
அந்த வெற்றிக்கான சூத்திரங்களை மட்டும் பயன்படுத்துங்கள்! எந்த வாக்குப்பெட்டியைத் திறந்தாலும் உதயசூரியன் உதிக்கவேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்க உங்களால் முடியும். உங்களால் மட்டுமே முடியும்!
அ.தி.மு.க.வை நிராகரிக்க வைப்போம்! தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்போம்!
நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல் தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். ‘மிஷன் – 200’ என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும்., 200-க்கு ஒரு தொகுதி அல்ல; ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது!
இன்று முதல் ஒவ்வொரு 24 மணிநேரமும் உழைத்தால்தான் 200-க்கும் மேல் என்பது சாத்தியம்.
நம்மால் முடியும்! நம்மால் மட்டும்தான் முடியும்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?