M K Stalin
“தமிழ்ச்சமூகத்தின் அமைதியைக் குலைக்க முயலும் சக்திகளை முறியடிப்போம்!”- கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின்
“தமிழ்ச்சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை முறியடிப்போம்!” என ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (20-12-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை - மயிலாப்பூரில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட – அனைத்து மதத் தலைவர்களும் கலந்துகொண்ட ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி தலைமை உரையாற்றினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
இந்த விழா ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ விழாவாக எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் நம்முடைய இனிகோ அவர்கள் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார் என்றால், அதில் ஒரு முத்திரை இருக்கும். அது எல்லோராலும் பேசப்படக்கூடிய வகையில் அமைந்துவிடும். ஏறக்குறைய 11 ஆண்டுகாலமாக அவர் அப்படித்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் நடத்தக்கூடிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அவரைத் தொடர்ந்து இப்போது நான் கலந்து கொண்டிருக்கிறேன். இனிமேலும் நான்தான் கலந்து கொள்வேன் என்று நம்பிக்கை கொள்கிறேன். அந்தவகையில் மகிழ்ச்சியோடு பெருமையோடு இந்த விழாவில் பங்கேற்கிறேன்.
இனிகோ அவர்கள் எப்போதும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பவர். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில், மாவட்ட கழக - ஒன்றியக் கழக - நகரக் கழக - பேரூர் கழகச் செயலாளர்கள், இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கூட்டத்தை நடத்தி, அந்த கூட்டத்தின் மூலமாக ஒரு முடிவு எடுத்து அறிவித்திருக்கிறோம். அது என்னவென்றால் எதிர்வரும் தேர்தல் விரைவாக வரப்போவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனவே தேர்தல் பிரச்சாரத்தை விரைவாக ஆரம்பித்துவிட வேண்டும். நான் ஏற்கனவே காணொலி காட்சி வாயிலாகத் ‘தமிழகம் மீட்போம்’என்கிற பிரச்சாரக் கூட்டங்களில் பங்கு எடுத்து வருகிறேன். அது காணொலிக் காட்சி வாயிலாக நடக்கக்கூடிய பிரச்சாரம். மக்களை நேரடியாகச் சென்று சந்திக்கும் பிரச்சாரத்தை வருகின்ற 23 ஆம் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறோம். அதை நாங்கள் தொடங்குவதாகக் காலையில் அறிவித்த உடனேயே அதனைச் செயல்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. அதனை இனிகோ நடத்திக்கொண்டிருக்கிறார். அதில் உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி! அதேபோல் உங்களுக்கும் அந்த மகிழ்ச்சி இருக்கும் என்று நம்புகிறேன்.
‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ என்ற தலைப்பில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து சமயத் தலைவர்களும் பங்கெடுக்கும் மாபெரும் சமத்துவ நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள இனிகோ இருதயராஜ் அவர்களை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்!
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கி, பல்வேறு வகை உதவிகளைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செய்து கொடுத்தோம். அந்த 'ஒன்றிணைவோம்' என்ற சொல்லை இனிகோ அவர்களும் பயன்படுத்தி இருக்கிறார். நாம் எல்லோரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இயேசு பெருமான் அதிகம் வலியுறுத்தியது அன்பும் இரக்கமும் தான்! நாங்கள் நடத்திய 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் அடிப்படையே அன்பும் இரக்கமும் தானே! இன்று இனிகோ சொல்லும் 'ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்' என்பதன் அடிப்படையும் அன்பும் இரக்கமும் தானே!
இந்த நாட்டுக்கு முதலில் தேவையானது, 'ஒன்றிணைதல்' தான்! பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைதல்! ஏழைகளுக்கு உதவுவதற்காக ஒன்றிணைதல்! அடக்கப்பட்ட மக்களுக்காக ஒன்றிணைதல்! அநியாயத்துக்கு எதிராகப் போராடுவதில் ஒன்றிணைதல்! எந்த ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற உணர்வோடு ஒன்றிணைதல்! விவசாயிகளுக்காக ஒன்றிணைதல்!
இந்த ஒன்றிணைதல் தான் இப்போதைய தேவை என்பதை இனிகோ அவர்கள் உணர்த்துவதற்காக இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்துள்ளார்!
இன்று இந்த நாட்டுக்கு முதலில் தேவையானது ஒற்றுமை! ஒற்றுமை! ஒற்றுமை!
இன்று நாட்டுக்கு மிக முக்கியமான தேவை என்னவென்றால் அது சமத்துவம் தான்! மதநல்லிணக்கம் தான்! சகோதரத்துவம் தான் இன்று நாட்டுக்கு அதிக தேவை!
மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்தும் சக்திகள் தங்களது வேலைகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் செய்து வருகிறார்கள். இதிலிருந்து வேறுபட்டு, மாறுபட்டு, மத நல்லிணக்கத்துக்காக இனிகோ இருதயராஜ் போன்றவர்கள் உழைத்து வருகிறார்கள்.
அதனால் தான் மற்றவர்களிலிருந்து உயர்ந்து தெரிகிறார் இனிகோ. அவர் உயரத்தால் மட்டுமல்ல, பண்பாட்டால் உயர்ந்த மனிதராக இருக்கிறார்.
இது கிறிஸ்துமஸ் விழா! ஆனால், கிறிஸ்துவ நெறியாளர்கள் மட்டுமா இந்த மேடையில் இருக்கிறீர்கள்! இந்துமதப் பெரியவர்களும் இருக்கிறீர்கள். கிறித்துவப் பெரியவர்களும் இருக்கிறீர்கள். இசுலாமியப் பெரியவர்களும் இருக்கிறீர்கள். அனைத்து மதமும் இருக்கிறது. இந்த மேடையில் தமிழகத்தைப் பார்க்கிறேன். இந்தியாவைப் பார்க்கிறேன்.
இப்படி பல்வேறு மதத்தவர் சேர்ந்தது தான் தமிழகம். இந்தியா. பல்வேறு மதத்தை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் தான் அது இந்தியா! அதுதான் இந்தியா!
வேறு எதையும் சொல்லித் தங்களது கட்சியை வளர்க்க முடியாதவர்கள், மதத்தைக் காட்டி கட்சியை வளர்க்கப் பார்க்கிறார்கள். மக்களுக்கு நிழல் எது, நிஜம் எது என்பது தெரியும். அவர்கள் மதத்தைக் காப்பாற்ற வரவில்லை, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறார்கள்.
கிறித்துவம் திரும்பத் திரும்பப் போதிப்பது அன்பைத் தான்! உண்மை எங்கே இருக்கிறதோ, அங்குதான் அன்பு இருக்கும்! அன்பு இருக்கும் இடத்தில்தான் உண்மை இருக்கும்! இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதைத்தான் இயேசு பெருமான் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
ஏங்கி நின்ற மனிதர்களுக்கு ஏணியாக இருந்தார். அபலைகளுக்கு ஆதரவாக இருந்தார். நோயாளிகளுக்கு ஒரு மருத்துவராக இருந்தார். அவரது வாழ்வைப் படிக்கிற போது இயேசு பெருமான் அவர்கள், பெரும்பாலும் ஏழைகள், கல்வி அறிவு இல்லாதவர்கள், நோயாளிகள், தொழு நோயாளிகள், பெண்கள், அடித்தட்டு மக்கள், புறக்கணிக்கப்பட்ட மக்கள் - ஆகியோருடன் தான் இருந்துள்ளார். வாழ்ந்து வந்துள்ளார்.
மக்களுக்காக போராடுபவர்களுக்கு ஆதிக்கவாதிகள் கொடுக்கும் பட்டம் தான் கலகக்காரர்கள், தேசவிரோதிகள் என்பதாகும்! அது அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை மாறவில்லை. ஆனாலும் இந்தப் போராட்டம் முற்றுப்பெறவில்லை. தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி தான் இன்றைய விவசாயிகள் போராட்டம்!
இயேசு பெருமான் அவர்கள் ஒரு சிறு கதை சொல்லி இருக்கிறார். ஒரு பண்ணையாருக்கு, திராட்சைத் தோட்டம் இருந்தது. வேலைக்கு ஆள் வேண்டும் என்பதற்காக அதிகாலை 5 மணிக்கே போய் வேலைக்கு ஆட்களை அழைத்து வந்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயம் ஊதியம் தருவதாகச் சொல்லி இருக்கிறார். மதியம் வரை வேலை முடியவில்லை. எனவே மீண்டும் மதிய வேளையில் சென்று மீண்டும் சில ஊழியர்களை வேலைக்காக அழைத்து வந்துள்ளார். மாலையில் அனைத்து ஊழியர்களுக்கும் சமமாக ஒரு வெள்ளி நாணயத்தை ஊதியமாகக் கொடுத்திருக்கிறார் அந்த பண்ணையார்.
மதியத்தில் வேலைக்கு வந்தவர்களுக்கு இது ஆச்சரியமாக இருந்துள்ளது. நமக்குக் குறைவாகத் தான் கொடுப்பார் என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அப்போது அந்த பண்ணையார் சொன்னாராம், 'உங்களுக்கு ஒரு வெள்ளி கொடுத்தால் தான் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என்பது எனக்குத் தெரியும். அதனால் தந்தேன்' என்று சொன்னாராம்.
இயேசு பெருமான் சொன்ன இந்தக் கதையை வைத்துத்தான், அறிஞர் ஜான் ரஸ்கின் அவர்கள், 'குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவை' என்ற சமூக இலக்கணத்தை வகுத்தார். இதை வைத்துத்தான் 'கடையனுக்கும் கடைத் தேற்றம்' என்ற புத்தகத்தை எழுதினார் ஜான் ரஸ்கின். அதைத் தென்னாப்பிரிக்காவில் வைத்துப் படித்தார் மோகன் தாஸ் காந்தி. அன்று முதல் அவர் மகாத்மா ஆனார்.
எனவே அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை மக்களின் கோரிக்கையாக இருப்பது குறைந்தபட்ச ஊதியம், குறைந்தபட்சக் கூலி, குறைந்தபட்ச விலை தான். நாம் ஏன் விவசாயிகள் பக்கம் நிற்கிறோம் என்றால் அதனால் தான்!
இயேசு பெருமான் விரும்பிய அன்பும், இரக்கமும், கருணையும் கொண்ட அரசைத்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு ஐந்து முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது சாதனைகளாகச் செய்து காட்டியது. குறிப்பாக, சிறுபான்மை சமூகத்துக்கு மட்டும் திமுக ஆட்சியில் செய்து தரப்பட்ட திட்டங்கள், சலுகைகள், சாதனைகளைச் சுருக்கமான குறிப்புகளாகக் குறிப்பிட விரும்புகிறேன்..
* கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்துவர்களின் முதல் தலைமுறையினர் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு 1972 ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
* 1989 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
* 1990 ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழுவை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
* 1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!
* சமூக சீர்திருத்தத் துறையைத் தோற்றுவித்தவர் முதலமைச்சர் கலைஞர்!
* 2007 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்! சிறுபான்மை சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தனி வாரியம் அமைத்தவர். இலவச பாடப்புத்தகங்கள், இலவச சீருடை, சத்துணவுத் திட்டம் ஆகியவற்றைக் கிறிஸ்துவ சமுதாய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நீட்டித்துத் தந்தார்.
* 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் கொண்டுவந்தவர் முதலமைச்சர் கலைஞர்!
- இவை சிறுபான்மை இன மக்களுக்காகச் செய்யப்பட்டவை மட்டும் தான். இப்படி ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தவர் முதலமைச்சர் கலைஞர்.
* நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்கள் முன்னேற்றத்துக்கான பொறுப்புகளையும் ஏற்றிருந்தேன். அப்போது, வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக ஒரு தனி கட்டடத்தைக் கட்டி, அதன் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் அவர்களை அழைத்த நேரத்தில், அந்தக் கட்டடத்திற்கு ஒரு பெயரைச் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். உடனடியாக, அவர் அந்தக் கட்டடத்திற்கு 'அன்னை தெரசா' என்ற பெயரைச் சூட்டினார்.
* 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை அ.தி.மு.க அரசு முடக்கியது. 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், அதை மீண்டும் செயல்பட வைத்தது தி.மு.க.
- இப்படி என்னால் பட்டியல் மேல் பட்டியல் போட முடியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் சிறுபான்மைச் சமூகம் - பெரும்பான்மைச் சமூகம் என்ற வித்தியாசம் இல்லை. நாம் அனைவரும் ஒருவரே; தமிழர்களே! தமிழினத்தைச் சேர்ந்தவர்கள்! எனவே, தமிழ்ச்சமுதாயத்துக்கு எது நன்மையோ, எது உயர்வோ அதைத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் செய்யும்.
'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே' என்ற புரட்சிக்கவிஞர் வரிகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும்!
இந்த தமிழ்ச்சமுதாயத்தின் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் சக்திகளை நாம் முறியடிப்போம் என்று உறுதியெடுக்கும் நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் அன்போடு கேட்டு, நாடு முழுவதும் மக்கள் மனதில் ஒற்றுமையை விதைக்கும் அரும்பணியை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்! நன்றி. வணக்கம்!”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!