M K Stalin
“மினி கிளினிக் எனும் பழனிசாமியின் வாழைப்பழ காமெடி!” - தமிழகம் மீட்போம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கிண்டல்!
“கொரோனா காலத்தில் வழங்க மறுத்த 5,000 ரூபாயினை, தற்போது புயல், மழையாலும் பாதிக்கப்பட்ட நிலையிலாவது மக்களுக்கு வழங்க முதலமைச்சர் பழனிசாமி முன்வரவேண்டும்” என திருவள்ளூர் ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (19-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுச் சிறப்புரையாற்றினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! அனைத்துக்கும் மேலாக பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில் தான்!
பழவேற்காடுக்கு வந்தவர்கள், மேடான ஒரு இடம் தேடி வந்தார்கள். அந்த இடத்தில் கோட்டை அமைத்தார்கள். அதுதான் இன்று சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஆகும். எனவே, கோட்டைக்கு பாதை அமைத்த மாவட்டம் இந்த திருவள்ளூர்.
மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது திருத்தணியை ஆந்திர மாநிலத்தவர்கள் கேட்டார்கள். தமிழகத்துக்குத் தான் திருத்தணி சொந்தம் என்று ம.பொ.சி. அவர்கள் தலைமையில் பெரும் போராட்டம் நடந்தது. அதில் திராவிட முன்னேற்றக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டு போராடியது.
சித்தூர் திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில் திருத்தணி, தமிழகத்துக்குத் தான் சொந்தம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்லாமல், வட ஆர்க்காடு மாவட்டத்தினரை முழுமையாக இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
இப்போராட்டத்தை முன்னெடுத்த ம,பொ.சி. அவர்களை அன்றைய பிரதமர் நேரு அவர்கள் கடுமையாக விமர்சித்தார் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தவர் நம்முடைய அண்ணா அவர்கள்.
திருத்தணியைக் காக்க தமிழகம் முழுக்க ரயில் மறியல் போர் நடத்தி கைதான இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அப்போது அண்ணா, கலைஞர் உள்ளிட்ட அனைவரும் சிறை வைக்கப்பட்டதால் கழகத்தின் பொறுப்பாளராக ஏ.ஜி.என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமியிடம் அண்ணா அவர்கள் ஒப்படைத்தார்கள்.
தி.மு.கவினரின் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் 17 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் கழகத் தொண்டர்கள் நான்கு பேர் மரணம் அடைந்தார்கள்.
இப்படி திருத்தணி கோவிலோடு சேர்த்து ஊரையும் காத்த இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
கழகத்தின் நிர்வாக வசதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் திருவள்ளூர் மாவட்டமானது மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
மத்திய மாவட்டச் செயலாளராக ஆவடி நாசரும்- மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக பூபதியும் - கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக கோவிந்தராசனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இன்றைய தினம் திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் தமிழகம் மீட்போம் என்ற பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூபதி, கோவிந்தராசன் ஆகிய இருவருக்கும் புதிதாக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலம் கழகத்தில் அவர்கள் ஆற்றி வந்த பணியைப் பாராட்டும் வகையில் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது!
அவர்கள் இருவரும் மூத்தோரை மதித்து, இளையோரை அரவணைத்து கழகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இது ஒரு தொடர் ஓட்டம்! இப்போது உங்கள் கையில் தீப்பந்தம் தரப்பட்டுள்ளது. அது எழுபது ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட தமிழ் ஒளி.
இன்னும் பல நூற்றாண்டுகள் அந்த ஒளி தமிழ்ச்சமுதாயத்துக்கு வழங்கப்பட வேண்டும். அதுதான் பேரறிஞர் அண்ணாவின் ஆசை! முத்தமிழறிஞர் கலைஞரின் ஆசை!
தங்களது ரத்தத்தை கழக விளக்குக்கு எண்ணெய்யாய் வார்த்தவர்கள் தான் அண்ணாவும் கலைஞரும்! எதற்காக?
கழகம் வாழ்ந்தால் தான், தமிழகம் வாழும்!
தமிழகத்தை, இந்தத் தமிழினத்தை கழகம் தான் வாழ வைக்கும் என்று அவர்கள் இருவரும் நினைத்தார்கள்! தி.மு.க என்ற மூன்றெழுத்து- தமிழகம் என்ற ஐந்தெழுத்தைக் காப்பாற்றிவிடும் என்று திட்டமிட்டார்கள்! எனவே, கழகம் வளர்த்தல் என்பது தமிழகம் வளர்த்தல்! தமிழகத்தை காத்தல் என்பதை யாரும் மறவாதீர்கள்!
இன்றைக்கு தமிழகம் மீட்போம் என்று நாம் புறப்பட்டு இருக்கிறோம் என்றால் - இது நாம் உருவாக்கிய தமிழகம்! அந்தத் தமிழகத்தை மீட்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்குத் தான் இருக்கிறது! உருவாக்கிய தமிழகம் என்று நான் சொல்கிறேன் என்றால் தைரியமாக, கம்பீரமாக, இன்னும் சொன்னால் ஒரு வித கர்வத்தோடு நான் சொல்கிறேன்.
நீங்களும் சொல்லுங்கள், 'நாம் உருவாக்கிய தமிழகம் இது' என்று சொல்லுங்கள்! எப்படிச் சொல்கிறீர்கள் என்று யாராவது கேட்டால் திருவள்ளூரைச் சுற்றிலும் மட்டுமே சுற்றிக் காண்பியுங்கள்!
ஶ்ரீபெரும்புதூரில், இருங்காட்டுக் கோட்டையில், கும்மிடிப்பூண்டியில் முதல்வர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தொழில் வளாகங்களைக் காட்டுங்கள்!
அம்பத்தூரை, மணலியை, திருவள்ளூரை, மறைமலை நகரைச் சுற்றிக் காண்பியுங்கள். எத்தனை தொழிற்சாலைகள், எத்தனை நிறுவனங்கள், எத்தனை புதுப்புது திட்டங்கள். அத்தனையும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவை.
கார் உற்பத்தி தொழிற்சாலைகள் முதல் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலைகள் வரை கலைஞர் காலத்தில் தொடங்கப்பட்டவை. உலோகத் தகடு முதல் ஏர் கண்டிஷன் வரை தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் திறந்து வைத்துள்ளோம். திருவள்ளூர், காஞ்சிபுரம் எல்லையைச் சுற்றி வந்தாலே தி.மு.க.வின் சாதனைகள் தெரியும்.
வல்லூர் அனல்மின் நிலையம் உருவாக்கியது கழக ஆட்சி! மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் காட்டுப்பள்ளியில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் கொண்டு வந்தது கழக ஆட்சி!
தொழில் வந்தது, தொழில் வளர்ந்தது, தொழிலாளர்கள் வளர்ந்தார்கள், தமிழகம் வளர்ந்தது. அதன் மூலமாக இந்தியாவும் வளர்ந்தது. இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சொல்ல முடியும்!அதனால் தான் இது நாங்கள் உருவாக்கிய தமிழ்நாடு என்று நான் சொன்னேன்!.
இவை அனைத்தையும் விட முக்கியமாகத் தமிழகத்தின் இளைஞர் சக்தியை உருவாக்கிய அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதைப் பெருமையோடு சொல்வேன்!
இளைஞர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம், இளைய சக்தியை உருவாக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
அத்தகைய இளைஞர் சக்தியை உருவாக்கிய ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
* தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது!
* தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் கழக ஆட்சியில் உருவாக்கப்பட்டது!
* ஏழைப்பிள்ளைகளுக்கு இளங்கலை வரை இலவசக் கல்வி!
* கல்வி வளர்ச்சியைப் பற்றி ஆலோசனை சொல்ல மால்கம் ஆதிசேஷய்யா தலைமையில் ஆணையம்!
* மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்!
* ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு!
* பெண்களுக்கு இடஒதுக்கீடு!
* அரசுப்பணியில் சேர வயது வரம்பை திமுக அரசு கூட்டியது
* மாதம் ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்றார் முதலமைச்சர் கலைஞர்!
* பத்து கிராமங்களுக்கு ஒரு தொழிற்சாலை தொடங்க உத்தரவிட்டார்!
* சாலைப்பணியாளர்களை நியமித்தார்!
* மக்கள் நலப்பணியாளர்களை நியமித்தார்!
* தொழிற்பேட்டைகள் அமைத்தார்!
* ஏராளமான கல்லூரிகள் அமைத்தார்!
* பல்கலைக்கழகங்களை உருவாக்கினார்!
இப்படி இளைய சக்தியை கல்வித் தகுதி உள்ளவர்களாக, வேலைக்கு தகுதி படைத்தவர்களாக உருவாக்குவதில் அக்கறை கொண்ட அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்தது.
பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை கணினி மயம் ஆவதற்குக் காரணம் தி.மு.க அரசு.
வளர்ந்து வரும் கம்யூட்டர் துறையை தொடக்கத்திலேயே அதாவது 1996 ஆம் ஆண்டே அடையாளம் கண்டு கம்யூட்டர் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க அடித்தளம் அமைத்து - உலகளாவிய பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வர அடித்தளம் அமைத்தது தி.மு.க. தரமணியில் உள்ள டைட்டல் பார்க், முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்டது!
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தது தி.மு.க!
மக்களின் அன்றாடப் பயன்பாட்டுக்காகவும் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும்....
திருத்தணி நெமிலி கூட்டுக்குடிநீர் திட்டம்!
ஆவடி,திருவள்ளூர் நகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள்!
திருத்தணியில் புதிய நீதி மன்றக்கட்டிடம்,
திருவள்ளூர், பட்டாபிரம், வேப்பம்பட்டு, ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள்,
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்,
பூவிருந்தவல்லி புறவழிச் சாலை ஆகியவை அமைக்கப்பட்டன.
பழவேற்காடு பகுதி மக்களின் 100 ஆண்டுக் கனவான பழவேற்காடு எரியில் மேம்பாலம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இதன் மூலம் 20 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.
ஆனால் அ.தி.மு.க அரசு என்ன செய்தது?
இந்தப் பத்தாண்டு காலத்தை பாழடித்துவிட்டது.
திருவள்ளூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி வரும் என்றார்கள். வரவில்லை!
திருவள்ளூர் பேருந்து நிலையம் அமைப்போம் என்றார்கள். இதுவரை இல்லை.
திருவள்ளூரில் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். செய்யவில்லை!
திருத்தணியில் பேருந்து நிலையம் அமைப்போம் என்றார்கள். நிறைவேறவில்லை!
கனகவல்லி புரத்தில் 110 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்க சட்டமன்றத்தில் ஜெயலலிதாஅறிவித்தும் இன்றுவரை அத்திட்டம் நிறைவேற்றப்பட வில்லை.
இதுதான் அ.தி.மு.க ஆட்சி!
தமிழகத்தை உருவாக்கிய ஆட்சி தி.மு.க ஆட்சி! தமிழகத்தை உருக்குலைத்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சி!
தி.மு.க என்ன சாதனை செய்தது என்பதை வருங்காலத் தமிழகம் பட்டியல் போடும்!
அ.தி.மு.க என்ன ஊழல் செய்தது என்பதைத் தான் வருங்கால வரலாறு பட்டியல் போடும்!
சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நான் வீடியோ கான்பரன்சில் கட்சிக் காரர்களிடம் பேசிக் கொண்டு இருப்பதாகவும், அவர் மக்களைச் சந்திப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
கொரோனா காலம் என்பதால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு இந்தத் தமிழக அரசுதான் தடை விதித்துள்ளது. தடைவிதித்த முதலமைச்சரே, என்னை ஏன் மக்களைச் சந்திக்கவில்லை என்று கேட்பதைப் பார்க்கும் போது அவர் நிதானத்தில்தான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது.
ஒரு மாவட்டத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தால் ஒரு லட்சம் பேர், ஒன்றரை லட்சம் பேர் கூடுவார்கள்.
அத்தகைய கூட்டத்தை நடத்த முடியாது என்பதால் காணொலிக் காட்சி மூலமாக நடத்தி வருகிறோம்.
திறந்த வெளியில் அரசியல், கலாச்சார, மதக் கூட்டங்களை நடத்துவதற்கு இன்று முதல் தான் அனுமதி என்று அறிவித்ததும் இதே பழனிசாமிதான். ஏன் ஸ்டாலின் பொதுக்கூட்டம் பேச வரவில்லை என்று கேட்பதும் அதே பழனிசாமி தான்.
அது வேற வாய்... இது வேற வாயா?
ஊரடங்கைத் தளர்த்தினால் தி.மு.கவினர் கூட்டம் போட்டுவிடுவார்கள் என்பதற்காகவே ஊரடங்கை நீடித்துக் கொண்டே இருந்தார் பழனிசாமி என்பது எங்களுக்குத் தெரியாதது அல்ல.
நேற்றைய தினம் விவசாயிகளுக்காக மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தைச் சென்னையில் நடத்தினோம். அதனுடைய எழுச்சியை, உணர்ச்சியை இந்த அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அனுமதி தரவில்லை.
விவசாய முதலமைச்சர் ஆட்சியில், விவசாயிகளுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு தடை விதித்தார்கள். தடையை மீறி நடத்தினோம். உடனே வழக்கு போட்டுவிட்டார்கள். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு போட்டுள்ளார்கள்.
என்ன பொது அமைதி கெடுகிறது? வழக்கமாகக் கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதிக்கும் இடத்தில் தான் நடத்தினோம். இதனால் பொது அமைதி எங்கே கெட்டது? எதற்காக அனுமதி தர மறுக்கிறீர்கள்?
அனுமதி மறுப்பதும் அவர்கள் தான், ஏன் ஸ்டாலின் வெளியில் வரவில்லை என்று சொல்வதும் அவர்கள் தான்! 19ம் தேதியில் இருந்து கூட்டம் நடத்தலாம் என்று அறிவித்துவிட்டு- 19 ஆம் தேதி அன்று நான் பிரச்சாரம் தொடங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்ததைப் போல சுயநலம் இருக்க முடியுமா?
சட்டத்தை உங்கள் விருப்பத்துக்கு தகுந்த மாதிரி வளைப்பீர்களா?நீங்கள் பிரச்சாரம் தொடங்கும் நாள் வரைக்கும், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே வந்தது ஜனநாயக விரோதம் அல்லவா?
பழனிசாமி என்ற தனிமனிதருக்காக இத்தனை நாட்களாக மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் எத்தனை? எத்தனை விழாக்கள், நிகழ்ச்சிகள் இதனால் கொண்டாட முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்? அவர்களுக்கு எல்லாம் பழனிசாமி என்ன பதில் சொல்கிறார்?
இப்படி தனது சுயநலத்துக்காக மட்டுமே, அனைத்தையும் செய்யும் பழனிசாமி, தி.மு.கவை சுயநலக் கட்சி என்று சேலத்தில் பேசி இருக்கிறார். இப்படிப் பேசினாரே? அது அ.தி.மு.க. கூட்டமா? இல்லை. அரசு நிகழ்ச்சி!
அரசு நிகழ்ச்சி என்ற பெயரால் கொரோனா காலத்தில் அ.தி.மு.க. கூட்டத்தை அவர் தான் நடத்தி வந்தார். தினமும் அரசு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து எதற்காக அரசியல் பேச வேண்டும்?இது முதலமைச்சருக்கு அழகா?
இந்த நாட்டில் சுயநலத்தின் மொத்த உருவமே பழனிசாமிதான். அது அ.தி.மு.க.வினருக்கே தெரியும். முதலமைச்சர் பதவியை அடைவதற்காக சசிகலாவின் காலை நோக்கி பழனிசாமி ஊர்ந்து போகக் காரணம் என்ன? சுயநலமா? பொதுநலமா?
தனக்கு பதவி கொடுத்த சசிகலாவின் காலை வாரி விட்டது பழனிசாமியின் சுயநலமா? பொதுநலமா?
தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மத்திய பா.ஜ.க அரசின் காலில் பழனிசாமி மண்டியிட்டுக் கிடப்பதற்குக் காரணம் சுயநலமா? பொதுநலமா?
தனது நாற்காலி நிலைத்தால் போதும் என்பதற்காக தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் தாரை வார்த்த பழனிசாமியின் செயல்பாடு சுயநலமா? பொதுநலமா?
பா.ஜ.கவின் தயவுக்காக, விவசாயிகளுக்கு துரோகமான மூன்று சட்டங்களை நித்தமும் ஆதரித்து பேசி வரக் காரணம் பழனிசாமியின் சுயநலமா? பொதுநலமா? பொதுநலனைப் பற்றி பழனிசாமி பேசலாமா? அவரது அரசியல் குணம் இரண்டு தான்! ஒன்று சுயநலம்! இன்னொன்று நம்பிக்கைத் துரோகம்!
சுயநலத்தால் அரசியலுக்குள் நுழைந்து- நம்பிக்கைத் துரோகத்தால் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பழனிசாமிக்கு தி.மு.க.வைப் பற்றியோ என்னைப் பற்றியோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
தியாகத்தால் தழும்பேறி-உழைப்பால் முன்னேறி கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற என்னை விமர்சிப்பதற்கான தார்மீக அருகதை பழனிசாமிக்கு இல்லை என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்!
கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறது. திடீர் திடீரென்று ரெய்டு போகிறார்கள். பணங்களைப் பறிமுதல் செய்கிறார்கள். தங்கம் எடுக்கிறார்கள். நகைகளைப் பறிமுதல் செய்கிறார்கள்.
'தமிழகத்தில் லஞ்சத்தை ஒழிக்கப் போராடும் போலீஸ் படை' என்று பத்திரிகைகள் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன. ஆர்.டி,ஓ. அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள், மின்சார வாரிய அலுவலகங்கள் என மக்களோடு நேரடித் தொடர்பு உள்ள அலுவலகங்களில் தமிழக லஞ்சஒழிப்புப் படையினர் குறிவைத்துச் செயல்பட்டு ஊழல் அதிகாரிகளைக் கைது செய்து வருகிறார்கள்.
கடந்த 17 ஆம் தேதி வரைக்கும் அரசு அதிகாரிகள் 33 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளார்கள். கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்த லஞ்சஒழிப்புத் துறை என்ன செய்தது? லஞ்சத்தை ஒழித்ததா? இல்லை!
ஆட்சி முடியப் போகின்ற நேரத்தில், நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காட்டுவதற்கு அ.தி.மு.க அரசு திட்டமிட்டு நடத்தும் நாடகங்கள் தான் இவை.
'தமிழக அரசு நிர்வாகத்தை சுத்தமாக வைக்கவே இதனைச் செய்கிறது' என்று முதலமைச்சர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
ஒரு சில அதிகாரிகள், அலுவலர்களைக் கைது செய்வதன் மூலமாக நாங்கள் தூய்மையான நிர்வாகத்தைத் தருகிறோம் என்று காட்ட நினைக்கிறார்.
அதிகாரிகள், அலுவலர்கள் மீதான ஊழல்களை மட்டும் தான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பிடிக்குமா? ரெய்டு நடத்துமா?அமைச்சர்கள் வீட்டுக்குள் இந்த லஞ்ச ஒழிப்புத் துறை போகாதா?இதுதான் நான் எழுப்பும் கேள்வி!
கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றவர்களும் அளித்த புகார்கள் மீது இந்த லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக்கை என்ன நடத்திய விசாரணை என்ன?
*தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் 2018 ஆம் அக்டோபர் மாதம் புகார் சொன்னோம். காற்றாலை மின் உற்பத்தியிலும், நிலக்கரி வாங்கிய விவகாரத்திலும் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினோம். இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? எதுவும் இல்லை!
* தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றம் போனோம்! அந்த வழக்கு தான் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தடை வாங்கி உள்ளார்!
* ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக வருமான வரி சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்தோம். இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? எதுவும் இல்லை!
* துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகாரை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளித்தோம். என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? எதுவும் இல்லை! நீதிமன்றம் சென்றோம். முறையாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
* லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மறுப்பதாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையிடம் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புகார் சொன்னோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூரப்பாவின் ஆட்டம் அதிகமான பிறகு இன்று வேறு வழியில்லாமல் விசாரணைக் கமிஷனை கடந்த மாதம் போட்டுள்ளது தமிழக அரசு!
*2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழக காவல்துறைக்கு சிசிடிவி, லேப்-டாப், வாக்கி-டாக்கி போன்ற உபகரணங்கள் வாங்கிய விவகாரத்தில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை!
* கோவை மற்றும் சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணி மீது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் தரப்பட்டது. நடவடிக்கை இல்லை!
* அமைச்சர் வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தது. இதுவரை நடவடிக்கை இல்லை!
* அமைச்சர் வேலுமணி மீது சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தரப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை!
* துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகாரை 2017 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்தது. இதுவரை நடவடிக்கை இல்லை!
* அரசுக்கு சொந்தமான இடத்தை அமைச்சர் வேலுமணி அறக்கட்டளையின் அம்மா IAS அகாடமி என்று மாற்றியது தொடர்பாக அறப்போர் இயக்கம் 2019 புகார் அளித்தது. இதுவரை நடவடிக்கை இல்லை!
இதுதான் தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்கும் லட்சணம்! முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க மறுத்தால் லஞ்ச ஒழிப்புத் துறையை எதற்காக வைத்திருக்க வேண்டும்? அதிகாரிகளை, அலுவலர்களை மட்டும் தான் கைது செய்வீர்களா? இது என்ன சட்டம்? என்ன நியாயம்? தேர்தல் வருகிறது என்பதற்காக நடிக்கிறீர்களா?
அப்படி எடப்பாடி பழனிசாமி நடத்தும் இன்னொரு நாடகம் தான் மினி கிளினிக் நாடகம்!
கடந்த சில நாட்களாக ஏதோ பெரிய சாதனையைச் செய்து விட்டதாக பெருமையில் வலம் வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் தொடங்கி விட்டதாகச் சொல்லி வருகிறார். உண்மையில் அப்படித் தொடங்கி இருந்தால் அதனைப் பாராட்டலாம். ஆனால் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடி போல இருக்கிறது பழனிசாமியின் மினி மருத்துவமனை திட்டம்.
2,000 மருத்துவமனைகளை பழனிசாமி உருவாக்கி இருக்கிறார். அப்படியானால் இந்த மருத்துவமனைகளுக்காக எத்தனை மருத்துவர்களை புதிதாக வேலைக்கு எடுத்துள்ளீர்கள்? இல்லை!எத்தனை செவிலியர்களை வேலைக்கு எடுத்துள்ளீர்கள்? இல்லை!எத்தனை மருத்துவமனைகளைப் புதிதாகக் கட்டி இருக்கிறீர்கள்? இல்லை!
அப்படியானால் எங்கே இருக்கிறது மருத்துவமனைகள்? என்றால்...
ஏற்கனவே இருக்கிற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை, துணை சுகாதார மருத்துவமனை செவிலியர்களைக் கொண்டு வந்து இதில் உட்கார வைத்து புதிய மருத்துவமனை என்று காட்டுகிறார்கள்.
'இன்னொரு வாழைப்பழம் எங்க?' என்று கவுண்டமணி கேட்பார். 'அதுதாண்ணே இது' என்பார் செந்தில்.
அதுபோல, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை மினி மருத்துவமனைகளுக்கு அனுப்பி விட்டு இதுதாங்க அது என்கிறார்கள்.
மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் அமைப்பின் படி இதுபோன்ற மினி கிளினிக்குகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்கள்.
அதற்கு அம்மா பெயரை வைத்து புது பெயிண்ட் அடித்து, புது போர்டு மாட்டிக் கொள்கிறார் பழனிசாமி.
கிராமத்தில் சொல்வார்கள், 'ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்' என்பதைப் போல! பழனிசாமி கொண்டாடிக் கொள்கிறார்.
இன்றைக்கு அரசு மருத்துவமனைக் கட்டமைப்புகள் இருக்கிறது என்றால் அதற்கு முழுக் காரணம் தி.மு.க ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனைகள்தான் என்பதை, பாவம் நேற்றைக்கு நடந்த விபத்தில் முதலமைச்சரான பழனிசாமி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மினி மருத்துவமனையை கடந்த நான்கு ஆண்டு காலத்தில் ஏன் அமைக்கவில்லை? ஆட்சி முடியப் போகும் போது தான் இவை எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதா? ஆட்சி முடியப் போகும் போதுதான் தூர் வார நினைக்கிறார்! அணைகட்ட நினைக்கிறார்!ஒப்பந்தம் போடுகிறார்!
குடிமராமத்து செய்யப் போவதாகச் சொல்கிறார்! மொத்தத்தில் இப்போதுதான் தான் ஒரு முதலமைச்சர் என்ற ஞாபகமே அவருக்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர் ஊராக முதல் தடவை போய் பார்க்கிறார். இந்த நான்கு ஆண்டுகள் தூங்கிக் கொண்டு இருந்தாரா பழனிசாமி?
கோட்டையில் இதுவரை தூங்கிய பழனிசாமியை தட்டி எழுப்பி-வீட்டுக்கு போய் தூங்குங்கள் என்று சொல்வதற்கான தேர்தல் தான் இது!
நான் நினைத்துப் பார்க்கிறேன்... அந்த நாளை நினைத்தால் இப்போது கூடப் பதற்றமாக இருக்கிறது. உடல் லேசாக நடுங்குகிறது!
செங்குன்றம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சென்னைக்கே ஏற்பட இருந்த பாதிப்பை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எப்படித் தடுத்தார் என்பது கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு நினைவில் இருக்கும்!
31.3.1999 அன்று நள்ளிரவு.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கிறார். மறுநாள் சேலம் சென்று ஒரு தொழிற்சாலைத் திறப்புவிழாவில் பங்கெடுக்க வேண்டும்.
திடீரென்று நள்ளிரவில் முதல்வர் கலைஞர் அவர்களைச் சந்திக்க புலனாய்வுத் துறை ஐ.ஜி.வருகிறார். மிக அவசரமான சூழல், அதனால் முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்கிறார். உடனே கலைஞர் அவர்களை எழுப்புகிறார்கள்.
அந்த ஐ.ஜி.சொன்னதைக் கேட்டதும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நடுங்கிப் போய்விடுகிறார்கள். செங்குன்றம் ஏரி உடையப் போகிறது, அது உடைந்தால் சென்னையும் சுற்றுப்பகுதியும் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று சொல்கிறார் அந்த அதிகாரி.
உடனே அரசாங்க இயந்திரம் அனைத்தையும் தட்டி எழுப்பினார். தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அன்றைக்கு நான் சென்னை மேயராக இருந்தேன்.மாநகராட்சி நிர்வாகத்தை முழுமையாக இறக்கிவிட்டோம். அந்த நள்ளிரவில் கோட்டைக்கு புறப்பட்டு விட்டார் முதலமைச்சர் கலைஞர். அவரோடு நானும் சென்றேன்.
அனைவரையும் அங்கே வரச் சொல்லிவிட்டார். பாதி அமைச்சரவை கோட்டைக்கு வந்துவிட்டது. அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் அவர்கள். அவரையும் கோட்டைக்கு முதல்வர் கலைஞர் அழைத்தார்.
உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு அமைச்சர் சுந்தரத்தை அனுப்பி அங்கிருந்து தகவல் சொல்லிக் கொண்டே இருக்கச் சொன்னார் 30 அடி ஆழம்- 20 அடி அகலத்துக்கு ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.ஏரியின் மொத்த கொள்ளளவு அளவுக்கு தண்ணீர் இருந்தது.
ஏற்கனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த காவாங்குளம், கொளத்தூர், லட்சுமிபுரம், தணிகாசலம் நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிக்கு நமது அரசு எச்சரிக்கை செய்திருந்தாலும் இந்த உடைப்பு எதிர்பாராதது.
ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதிகாலையில் ஓரளவு நிலைமை சீரடையத் தொடங்கியதும், செங்குன்றம் போகலாம் என்று முதலமைச்சர் கலைஞர் சொல்லிவிட்டார்கள். நானும் அவரோடு தயாராகி நிற்கிறேன்.
அங்கே போய் பார்த்தே ஆகவேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அவரோடு நாங்களும் சென்றோம். நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை தனது கண்ணால் பார்த்த பிறகுதான் முதல்வர் கலைஞர் அவர்கள் அமைதியானார்கள். இதுதான் கலைஞர்!
அதிகாலையில் கோட்டைக்கு வருகிறார் முதல்வர் கலைஞர் அவர்கள். லிப்ட் ஆபரேட்டர்கள் இல்லாததால் லிப்ட் இயங்கவில்லை. படியில் ஏறினார். அந்த ஐந்தாறு மணி நேரமும் காபியோ, தண்ணீரோ கூட குடிக்கவில்லை. அதுதான் கலைஞர். அவர் தான் நம்முடைய தலைவர்.
ஒரு சம்பவம் நடந்ததும் உடனே அந்த இடத்துக்கு போய்விட வேண்டும், மக்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு நாமும் இருக்க வேண்டும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால் அதற்குக் காரணம் கலைஞர் ஊட்டிய உணர்வு. அவர் உருவாக்கிய மனிதாபிமானம், மக்கள் பற்று.
எங்கே - எந்த மாவட்டத்தில் - எந்தப் பேரிடர் நடந்தாலும் அந்த மாவட்டத்தின் செயலாளருக்கு முதலில் போகிற ஃபோன் என்னுடைய ஃபோனாக இருக்கும். அதனை தி.மு.கவின் அனைத்து மாவட்டத் தலைவர்களும் அறிவார்கள்!
நீலகிரியில் மலைச்சரிவா?
கடலூரில் புயலா?
தஞ்சையில் மழையா?
நாகையில் வெள்ளமா? - எங்கும் முதலில் போய்ப் பார்த்தவன் நானாகத்தான் இருப்பேன். இதனைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. அப்படி வார்ப்பிக்கப்பட்டவன் நான்.
சமீபத்தில் நடந்த மழை, வெள்ளம் காரணமாக சென்னையும், புறநகரும் தண்ணீரால் சூழப்பட்டது. உடனடியாக, மறுநாளே வந்து பார்வையிட்டேன். நிவாரணப் பொருள்களை வழங்கினோம். அதுதான் தி.மு.க!
தி.மு.க தொண்டனுக்கு மழை தெரியாது! வெயில் தெரியாது! புயலை எதிர்கொள்வான்! வெள்ளத்தில் மிதந்தும் மக்களைக் காப்பாற்றுவான்! அவன் தான் தி.மு.க. தொண்டன்!
கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி தமிழ்நாட்டு மக்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது. எடப்பாடி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் இதுவரை 8,04,650 லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். 11,954 உயிர்களை நாம் இழந்தோம்.
பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று நான் திரும்பத் திரும்பச் சொன்னேன். அதை எடப்பாடி அரசு தரவில்லை.
ஆனால், இன்று திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பண்டிகைக்காக 2,500 ரூபாய் தரப்போவதாக அறிவித்துள்ளார். மக்கள் கஷ்டப்படும் போது தராமல், தற்போது நான்கு மாதங்களில் தேர்தல் வருவதால், தனது சுயநலத்திற்காகத் தருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடுக்கட்டும் பரவாயில்லை. கொரோனாவிலும் பாதிக்கப்பட்டு, அண்மையில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியை இப்போதாவது வழங்குங்கள் என்று தி.மு.க சார்பிலும், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும் மீண்டும், மீண்டும் முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்களுக்காக 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கி அவர்களுக்குத் தேவையான பொருட்களை கழக நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அரிசி,பருப்பு ஆகிய உணவுப் பொருட்களைக் கொடுத்தோம் உணவாகவும் தயாரித்துக் கொடுத்தோம்!
பல ஊர்களில் நிதி உதவியும் செய்யப்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை விதைத்தோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம். இந்தக் கொரோனா காலத்திலும் மக்களைக் காத்தோம்.
இத்தகைய கருணை உள்ளம் கொண்ட உடன்பிறப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் என்பதில் நான் மகிழ்ச்சியில் திளைக்கிறேன்!
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை, எதிர்க்கட்சியாக இருந்த போதே செய்யும் வல்லமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு. திமுக தொண்டனுக்கு உண்டு. அப்படியானால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையில் ஆட்சி இருந்தால்... மக்களை இன்னும் பல மடங்கு மகிழ்ச்சியில் வைக்க முடியும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த திருவள்ளூர் மாவட்டப் பொதுக்கூட்டத்தின் வாயிலாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று தான்!
உங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் ஓடி வருபவன் உதயசூரியன் என்பதை மறவாதீர்கள்! இது நிரூபிக்கப்பட்ட உண்மை!"
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!