M K Stalin
“எடப்பாடி பழனிசாமி ‘ஊழல் நாயகர்’; ராஜேந்திர பாலாஜி ஒரு பஃபூன்” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (07-12-2020), கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
முன்னதாக கொளத்தூர் தொகுதி வார்டு 69 அ, மைலப்பா தெருவில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தங்கராஜா அவர்களின் மறைவிற்கு, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்ததுடன், ஆறுதலும் கூறினார்.
பின்னர், வார்டு 65 - ஜி.கே.எம் காலனி 34-ஆவது தெருவில் 500 பேருக்கும், வார்டு 64 - பூம்புகார் நகர் 2-ஆவது மெயின் சாலை போலீஸ் பூத் அருகில் 500 பேருக்கும், அஞ்சுகம் நகர் 11-ஆவது தெருவில் 500 பேருக்கும், வார்டு 64அ - ஜெயராம் நகரில் 500 பேருக்கும், 200 அடி சாலை கண்ணகி நகரில் 500 பேருக்கும், 200 அடி சாலை டாக்டர் அம்பேத்கர் தெருவில் 500 பேருக்கும்,
அரிசி - 5 கிலோ
பாய் - 1
போர்வை - 1
சர்க்கரை – 1 கிலோ
மைதா - 1 கிலோ
பிஸ்கட் - 1 பாக்கெட்
எண்ணெய் - 500 கிராம்
துவரம் பருப்பு - 500 கிராம்
ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
“டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளுடைய போராட்டத்திற்கு ஆதரவாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகர் பகுதிகளில் நாங்கள் நடத்தி இருக்கிறோம்.
ஏற்கனவே இந்த மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு சட்டமாக நிறைவேற்றுகின்ற நேரத்தில், இதை கடுமையாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் வன்மையாக கண்டித்திருக்கிறோம். கண்டித்து மட்டுமல்ல, அதை எதிர்த்தும் வாக்கினை வழங்கியிருக்கிறோம். அதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதனை கண்டித்து தீர்மானம் போட்டோம். கடந்த செப்டம்பர் மாதமே அதற்காக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடத்தி முடித்திருக்கிறோம்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி படையெடுத்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை கடந்த 15 நாட்களாக விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதை ஆதரிக்கின்ற விதத்தில், ‘மத்திய அரசு அந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்’ என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை நடத்தி இருக்கிறோம். சேலத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு நானே சென்றிருந்தேன். சேலம், முதலமைச்சர் பழனிசாமியினுடைய மாவட்டமாக இருக்கின்ற காரணத்தால், அங்கே போராட்டம் வெற்றி பெற்று விடக்கூடாது; அதிகமான அளவிற்கு அங்கு திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் - விவசாய பெருங்குடி மக்களும் - பொதுமக்களும் திரண்டிடக்கூடாது என்கிற ‘நல்ல எண்ணத்தோடு’ சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய கழகத் தோழர்களும் விவசாயப் பெருங்குடிமக்களும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்த நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது மட்டுமல்ல, அவர்களையெல்லாம் கைது செய்து அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் திருமண மண்டபங்களில் காலையிலிருந்து மாலை வரை அவர்களை சிறைபிடித்து அடைத்து வைத்திருக்கிறார்கள்.
நான் கலந்துகொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் - போராட்டத்தில் கருப்பு கொடியோடு சற்றேறக்குறைய 25 ஆயிரம் பேர் பங்கேற்று இருக்கிறார்கள். இன்னுமொரு 25 ஆயிரம் பேர் அதில் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழ்நிலையை எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, காவல்துறையை வைத்துகொண்டு, அந்தப் பணியை செய்து முடித்து இருக்கிறது. அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இருந்தாலும், போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி முடித்திருக்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில், கடற்கரையோரத்தில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களில் - இராமநாதபுரத்தில் இருந்து தொடங்கி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து, அந்த மழையின் காரணமாக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்ற செய்தியையும் நானறிந்து, சேலத்தில் இருந்து உடனடியாக நான் கடலூர் மாவட்டத்திற்குச் சென்று, குறிஞ்சிப்பாடி பகுதியிலும் கடலூர் பகுதியிலும் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட மக்களை நான் சந்தித்தேன். நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திலும் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களைச் சந்தித்தும், வெள்ளம் சூழ்ந்து இருக்கக்கூடிய பகுதிகளையும் நேரடியாக பார்வையிட்டேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தி.மு.க. சார்பில் செய்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து, உடனடியாக தேங்கி இருக்கக்கூடிய நீரை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
ஆனால் இந்த அரசு இதில் அதிகமான அளவிற்கு தீவிரம் காட்டவில்லை. அவர்கள் ஊழலில் - கொள்ளை அடிப்பதில் - லஞ்சம் வாங்குவதில் - கமிஷன் பெறுவதில் - கரப்ஷன் செய்வதில் காட்டுகின்ற வேகத்தை இதில் காட்டியிருந்தால், நிச்சயமாக ஓரளவுக்கு கட்டுப்படுத்தி இருக்க முடியும். நாங்கள் சென்று பார்த்த நேரத்தில் அங்கு இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களெல்லாம் எங்களிடத்தில் சொன்னது, ‘தூர் எடுக்கிறோம் - தூர் எடுக்கிறோம் என்று சொல்லி பெயருக்கு அறிவிப்பை விளம்பரத்தை செய்துவிட்டு காண்ட்ராக்ட் கமிஷன் அடித்து கொண்டிருக்கிறார்கள்’ என்று ஆதங்கப்பட்டனர். குடிமராமத்து பணியில் பெரிய அளவில் சாதனை செய்து விட்டோம்; அதற்காக விருது வாங்கி விட்டோம் என்று முதலமைச்சர் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் அந்த குடிமராமத்து பணியைப் பயன்படுத்திக்கொண்டு அதன் மூலமாக கமிஷன் அடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு கொடுமையான ஆட்சி தான் இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நாங்கள் இன்று மக்களிடத்தில் போய் எடுத்து பேசினால், முதலமைச்சருக்கு மிகவும் கோபம் வருகிறது - ஆத்திரம் வருகிறது. ‘எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலையே இல்லை எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்’ என்கிறார். நாங்கள் அரசியல் செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய நான் அதைத்தான் செய்ய முடியும்.
அவர் செய்து கொண்டிருக்கும் ஊழலையெல்லாம் ஆதாரத்தோடு நாங்கள் பல்வேறு கூட்டங்களில் எடுத்துச் சொல்கிறோம்; அறிக்கையிலும் வெளியிடுகிறோம். அதைத் தாங்கிக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘அறிக்கை விடுவது அவரது வேலையாக போய்விட்டது. காலையில் ஒரு அறிக்கை - மாலையில் ஒரு அறிக்கை - இரவு ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்’ என்று சொல்கிறார். எதிர்க்கட்சித் தலைவரின் வேலையே அதுதான்! ஆளும்கட்சி என்னென்ன தவறு செய்கிறதோ, அதனைச் சுட்டிக்காட்டி வெளிப்படுத்துவதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் வேலை. அதுதான் ஜனநாயகத்தில் இருக்கக்கூடிய மரபு! அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
அதுமட்டுமில்லாமல் எனக்கு பெரிய பட்டத்தையும் கொடுத்து இருக்கிறார். அது என்னவென்றால், நான் அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி ‘அறிக்கை நாயகர்’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார். மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். அறிக்கை விடுவது தவறில்லை! எனவே, முதலமைச்சர் அந்தப் பட்டத்தை பெருந்தன்மையோடு கொடுத்திருக்கிறார். அதனை நான் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்கிறேன்.
எனக்கு பட்டம் கொடுத்துள்ள அவருக்கு நான் ஒரு பட்டம் கொடுக்க வேண்டாமா! ‘ஊழல் நாயகர்’ – ‘கரப்ஷன் நாயகர்’ – ‘கமிஷன் நாயகர்’ – ‘கலெக்ஷன் நாயகர்’ இதுதான் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நான் தரக்கூடிய பட்டம்”
இவ்வாறு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
செய்தியாளர் :தி.மு.க. ஒரு அரசியல் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : வாய்கூசாமல் எதையும் பேசுகிறார். கார்ப்பரேட்டுகளுக்கு மத்திய அரசு எந்த அளவுக்கு பணிந்து போகிறது - எந்த அளவுக்கு துணை நிற்கிறது? அதற்கு அடிபணிந்து ஆதரித்து கொண்டிருப்பவர் யார் என்றால், இந்த ஊழல் நாயகர் எடப்பாடி பழனிச்சாமி தான்!
செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லோருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு கொள்கைகளை அறிவிக்கட்டும். அதற்குப் பிறகு அதுபற்றி என்னுடைய கருத்துகளை சொல்கிறேன்.
செய்தியாளர்: தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்று ரஜினியிடம் தமிழருவி மணியன் சொன்னதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அதைப் பற்றி உங்களுடைய கருத்து?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : எனக்கு அது போன்ற செய்திகள் வரவில்லை.
செய்தியாளர்: தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தற்போது ஒரு ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து இருக்கிறார்கள். அது பற்றி?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : பத்து ஆண்டுகளாக இல்லாமல் தற்போது அறிவித்து இருக்கிறார்கள் என்றால், அதெல்லாம் தேர்தலுக்காக நடத்துகின்ற ஸ்டன்ட்; அவ்வளவுதான்!
செய்தியாளர்: தி.மு.க கூட்டணி எப்படி இருக்கிறது?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : தி.மு.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலின் போது எப்படி இருந்ததோ அப்படித்தான் இருக்கிறது; அதைவிட சிறப்பாக இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் எப்படிப்பட்ட வெற்றியை பெற்றோமோ, அதைவிட பலமடங்கு வெற்றியை சட்டமன்ற தேர்தலில் பெறுவோம்
செய்தியாளர்: பாரத் பந்த் குறித்து?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : இதுகுறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அனைத்து கட்சிகளும் அந்த பந்த்-ஐ ஆதரிக்கிறோம்.
செய்தியாளர்: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் முதலமைச்சரை விவாதத்திற்கு அழைத்து இருக்கிறாரே?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
செய்தியாளர்: ஆனால் அதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நான் வருகிறேன், முதலமைச்சர் வரத் தேவையில்லை என்று கூறியிருக்கிறாரே?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : அவர் ஒரு பபூன்! அவரைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை.
செய்தியாளர்: அ.தி.மு.க.வினர் மீது நீங்கள் ஊழல் குற்றச்சாட்டு சொல்லும்போதெல்லாம் அவர்கள் திரும்பத்திரும்ப சர்க்காரியா கமிஷன், 2ஜி என்று கூறி திசைதிருப்பிக் கொண்டே இருக்கிறார்களே?
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : அதைத்தான் ராசா அவர்கள் சொன்னார். சர்க்காரியா கமிஷனில் ஏதாவது நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? எம்.ஜி.ஆர். மூலமாக போடப்பட்டது தான் சர்க்காரியா கமிஷன். அவர்தான் புகார் கொடுத்தார். அதன் பிறகுதான் அந்தக் கமிஷன் போட்டார்கள். சேலம் கண்ணன் சொன்னார் அதை வைத்து தான் நான் சொன்னேன் என்று தப்பித்து போனார். எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் ஸ்பெக்ட்ரம் வழக்கை பொறுத்தவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்படாதது மட்டுமல்ல, விடுதலையும் ஆகி விட்டார்கள்.
ஆனால், ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு - சசிகலா மீது போடப்பட்ட வழக்கு - திவாகரன் மீது போடப்பட்ட வழக்கு - சுதாகரன் மீது போடப்பட்ட வழக்கு இதிலெல்லாம் தான் 4 ஆண்டு தண்டனை 100 கோடி ரூபாய் அபராதம். இதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கு. அதையெல்லாம் மறந்துவிட்டு, விடுதலையானது பற்றி கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இதையெல்லாம் நிரூபிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்; தன்னந்தனியாக வருகிறேன்; கோட்டைக்கு வருகிறேன்; முதலமைச்சரை எனக்கு மூன்று நாட்களுக்குள் ‘டைம்’ கொடுக்க சொல்லுங்கள் என்று சொன்னார். இதுவரை முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.
இவ்வாறு பதிலளித்தார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!