M K Stalin
“தமிழகமே கருப்புக் கடலாகட்டும்! டெல்லி போல குலுங்கட்டும்!" - அறப்போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
"விவசாயி வேடம் போட்டு - பசுமை தழைக்கத் தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட- கருப்புக் கொடிகள் உயரட்டும்! தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்! டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்!” எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
அவரது மடல் வருமாறு :
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
மக்களும் அவர்களுக்கான அரசியலும், தேர்தல் நேரத்தில் திடீர் அறிவிப்புகளை வெளியிடுவதற்கான பொழுதுபோக்குகள் அல்ல. முழுநேரமும் கடினமான உழைப்பும், இலக்கு தவறாத முனைப்புமே பொதுவாழ்விற்கான பண்பு. 71 ஆண்டுகளைக் கடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் இன - மொழி உணர்வுப் போராட்டங்கள் எந்த அளவுக்குத் தீவிரமான முயற்சிகளுடன் நடத்தப்பட்டனவோ, அதே அளவுக்கு விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம், நெசவாளர் துயர் துடைப்புப் போராட்டம், விவசாயிகள் நலன் காக்கும் போராட்டம், தொழிலாளர் உரிமைக்கான களங்கள், அரசு ஊழியர் - ஆசிரியர் உரிமைக்கான குரல்கள் என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களுக்குமான அறப்போர்க்களங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே உணர்வு கலந்த நோக்கத்துடன்தான், விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கழகம் தொடர்ந்து போராடி வருகிறது.
கொரோனா பேரிடர் காலத்தில் எவ்வித சேதாரமும் இன்றி மக்களைப் பாதுகாப்பதற்கான மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய மத்திய பா.ஜ.க அரசு, வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. நீண்டகால விளைவுகளை உள்ளடக்கிய மசோதாக்களை மிகக் குறுகிய கால இடைவெளியில் நிறைவேற்றியது. ஜனநாயகம் எனும் நாணயத்தின் மற்றொரு பக்கமான எதிர்க்கட்சிகளின் குரலைக் கிஞ்சித்தும் செவிமடுக்காமல், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையைப் புறக்கணித்து - அவர்களை வெளியேறச் செய்து - தீர்மானங்களை நிறைவேற்றிச் சட்டமாக்கிய ஜனநாயக விரோதப் போக்கையும் சேர்த்தே நிறைவேற்றிக் கொண்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு.
இந்த வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து, அவை வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதால், நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். அவர்களின் காயம் பட்ட நெஞ்சத்தைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றில், மத்திய அரசின் இந்தத் திருத்தச் சட்டங்களை ஏற்கமாட்டோம் எனச் சட்டமன்றத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. தமிழ்நாட்டிலோ மத்திய ஆட்சியாளர்களின் கண்ணசைவில் நடைபெறும் அடிமை ஆட்சியாளர்கள், ‘தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரியைப் போல’, மோடி அரசின் குரலையே எதிரொலித்து, விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து - அவற்றை நிறைவேற்றிக் கொடுத்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தனர். ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் மனதை ஆளும் பேரியக்கமான தி.மு.கழகத்தின் சார்பில் இந்தத் திருத்தச் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நீதியையும் ஜனநாயகத்தையும் அவமதிக்கும் போக்கினைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மோடி அரசு, விவசாயிகள் நலன் குறித்துக் கவலைப்படாமல் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி, தங்கள் ஆட்சியை வழிநடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளைநிலங்களைத் தாரை வார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வதிலேயே குறியாக இருக்கிறது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிரோமணி அகாலிதளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது எதிர்ப்பை அவையிலேயே பதிவு செய்ததுடன், அந்தக் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது.
தோழமைக் குரலுக்கும் மதிப்பில்லை; எதிர்க்கட்சிகள் குரலையும் கேட்பதில்லை என்கிற பெரும்பான்மை அகம்பாவமும் ஆணவமும் கொண்ட மத்திய அரசின் போக்கினை உணர்ந்த பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் இந்திய ஒன்றியத்தின் தலைநகரை முற்றுகையிடும் வகையில், ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நடத்தி, இலட்சக்கணக்கான வாகனங்களில் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் திரண்டு, இந்தியத் தலைநகரில் தொடர் முற்றுகைப் போராட்டதை கடுங்குளிரிலும் மேற்கொண்டு வருகிறார்கள். தங்கள் கோரிக்கை நிறைவேறி - வாழ்வுரிமையை மீட்கும்வரை டெல்லியை விட்டுச் செல்ல மாட்டோம் என முகாமிட்டு அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு ஆண்களும் பெண்களுமாகக் குழந்தைகளுடன் சேர்ந்து போராட்டத்தை நடத்துவதை நாடே வியப்புடனும் வேதனையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறது.
கோரிக்கைகளைப் புறக்கணித்து, பேச்சுவார்த்தை என்ற பெயரிலான மத்திய அரசின் திசை திருப்பல்களையும் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் ஏற்கவில்லை. எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போட்டு, மதச்சாயம் பூசிப் போராட்டத்தை நசுக்கலாம் என்கிற ஆட்சியாளர்களின் சதித்திட்டமும் எடுபடவில்லை. நாளுக்கு நாள் வலிமை பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் ஆதரவு பெருகுகிறது. தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டக் களத்தில் இறங்கிவிட்டனர்.
‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்’ என்கிறது தமிழ் மறையாம் திருக்குறள். வேளாண் சிறப்பை நன்கு உணர்ந்த மண், தமிழ்நாடு. பருவமழை - ஆற்று நீர்ச்சிக்கல்கள் என எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் கடந்து, மண்ணையும் வேளாண்மையையும் உயிரெனக் கொண்டவர்கள் தமிழக விவசாயிகள். அவர்கள் விளைவிப்பது உணவுப் பொருள் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரின் உயிருக்கான ஊட்டம். அத்தகைய விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மத்திய அரசின் திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் தி.மு.கழகத்தின் பங்களிப்பு என்பது முக்கியமானது. வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து ஏற்கனவே தி.மு.க.வும் தோழமைக் கட்சியினரும் கொரோனா பேரிடர் கால நெறிமுறைகளுக்குட்பட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தற்போது இந்திய ஒன்றியத் தலைநகர் டெல்லியில் இரவு - பகல் பாராது, குளிர் – வெயில் - மழை பாராது போராடும் விவசாயிகளுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு தெரிவிக்கும் வகையில் தி.மு.கழகம் களம் காண்பது குறித்து, நேற்று (டிசம்பர் 3) மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (டிசம்பர் 5) காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கழகத்தின் சார்பில் - கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து - அறவழியில், ஜனநாயக முறையில் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.கழகம் நடத்துகிற அறப்போராட்டங்கள் மக்களிடம் இந்த ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவதுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. அனைத்து மக்களின் உயிர் காக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கான போராட்டம் என்கிறபோது அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை உளவுத்துறையினர் நிச்சயமாக அறிக்கை தயாரித்து, காவல்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரின் கைகளில் சேர்த்திருப்பார்கள். அந்த அறிக்கை ஏற்படுத்திய பதற்றமோ என்னவோ, டிசம்பர் 3 அன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தி.மு.கழகத்தை எதிர்ப்பதாக நினைத்து, விவசாயிகளுக்கு எதிரான குரலில் உளறிக் கொட்டியிருக்கிறார்.
மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் திருத்தச் சட்டங்கள் பற்றி தி.மு.க.வுக்குப் புரியவில்லையாம். தவறாகப் புரிந்துகொண்டு போராட்டம் அறிவித்திருக்கிறோமாம். யார் சொன்னது தெரியுமா? கோடிக்கணக்கான விவசாயிகள் தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் குடும்பம் குடும்பமாக இந்திய ஒன்றியத் தலைநகரில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ‘நானும் விவசாயி’ என்று வேடம் போட்டு ஏமாற்றுகின்ற போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.
பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்கள் மூன்றிலும் எங்கேயாவது ஓரிடத்திலேனும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று ‘நானும் விவசாயி’ என்கிற எடப்பாடி பழனிசாமி எடுத்துக்காட்டுவாரா?
விவசாயிகள் என்ன விளைவிக்கலாம், யாருக்கு விற்கலாம், என்ன விலைக்கு விற்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையையும் சுதந்திரத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்தச் சட்டங்கள் அள்ளிக் கொடுப்பதை ‘டெண்டர் விவசாயி’ எடப்பாடி அறிவாரா?
தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லி, பெரிய வியாபாரிகள் - பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய விவசாயிகளை அடிமையாக ஆக்குகிறது என்பதை அடிமை ஆட்சி நடத்தும் தலைமை அடிமையான பழனிசாமி எப்படி அறிவார்?
விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்குப் பாதுகாப்பானதாக உருவாக்கப்பட்ட இந்திய உணவுக்கழகம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் ஆகியவை இனி இருக்குமா என்பதையே கேள்விக்குறியாக்கியுள்ள இந்தத் திருத்தச் சட்டங்களை எந்த அடிப்படையில் பழனிசாமி ஆதரிக்கிறார்? விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கான உணவுப் பாதுகாப்பும், பொதுவிநியோகத்திட்டத்தின் வாயிலாக அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகமும் இனி தொடருமா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் வைத்திருக்கிறார்?
இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழகத்தில் தலைவர் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு மூடு விழா நடத்துவதுதான் இந்தத் திருத்தச் சட்டங்களின் நோக்கம். “நாங்களே அவற்றுக்கு மூடுவிழா நடத்திவிட்டோம். இனி மத்திய அரசு எப்படி மூட முடியும்?” என்று பதில் சொல்லப் போகிறாரா முதலமைச்சர் பழனிசாமி?
இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 95 சதவீதம் பேர் சிறு - குறு விவசாயிகள்தான். இவர்கள் விளைவிக்கும் உணவு தானியங்கள் – பழங்கள் - காய்கறிகளுக்குக் குளிர்பதனக்கிடங்கு கிடையாது. குளிர்பதனக் கிடங்கு வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளுக்கு விவசாயம் செல்லும் வகையில் வேளாண் திருத்தச் சட்டம் உள்ளது என்பதாவது உறைக்கக்கூடிய அளவில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறாரா? அல்லது பதவி சுகத்தில் உணர்விழந்து உறைந்து போய்க் கிடக்கிறாரா?
விவசாயிகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் என்கிற திருத்தச் சட்டத்தின் அம்சம் நடைமுறைக்கு எந்த வகையில் சாத்தியம் என்பதை எடப்பாடி பழனிசாமி விளக்குவாரா? கரும்பு ஆலைகளுடன் ஒப்பந்தம் போட்டு, விளைந்த கரும்பைக் கொடுத்துவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் உண்மையான விவசாயிகளுக்குரிய நிலுவைத் தொகையைக் கிடைக்கச் செய்தாரா, ‘நானும் விவசாயி’ என்கிற முதலமைச்சர்?
வேளாண்மை என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ள நிலையில், அது குறித்து கொரோனா காலத்தில் அவசர அவசரமாகத் திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு என்பதாவது, மாநில உரிமைகளை அடமானம் வைத்து ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியுமா?
எந்த லட்சணத்தில் மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார்? போகிற இடத்தில் எல்லாம் ‘நான் விவசாயி’ என்று அவர் சொல்வதே, தன் வேடம் கலைந்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில்தான்! ஏனென்றால், அவர் உண்மையான விவசாயி அல்ல; இடைத்தரகர்தான். அதையேதான் அரசியலிலும் செய்து பதவி சுகம் அனுபவித்து, கஜானாவைக் கொள்ளையடித்து வருகிறார். அதற்கான வெகுமக்களின் தீர்ப்பும் தண்டனையும் நெருங்கி வருகிறது.
அவற்றைத் தமிழக வாக்காளர்கள் கைகளில் ஒப்படைத்துள்ள தி.மு.கழகம், மக்கள் நலனுக்கான அறப்போர்க் களங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும்-தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும் தார்மீக ஆதரவு தரும் வகையில் கழகம் நடத்தும் கருப்புக் கொடி அறப்போராட்டத்தில் சேலத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன்.
வேலூரில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. அவர்களும், மயிலாடுதுறையில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. அவர்களும், திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ அவர்களும், திண்டுக்கல்லில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. அவர்களும், திருவண்ணாமலையில் துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ. அவர்களும், ஈரோட்டில் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களும், நீலகிரியில் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. அவர்களும், நாமக்கல்லில் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி. அவர்களும் பங்கேற்கிறார்கள்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய – நகர – பேரூர் - கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றிகாணட்டும்! விவசாயி வேடம் போட்டு - பசுமை தழைக்கத் தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட- கருப்புக் கொடிகள் உயரட்டும்! தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்! டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்!”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!