M K Stalin
“மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றுவது போகாத ஊருக்கு வழியாகும்” - மு.க.ஸ்டாலின்
"சென்னை மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றுவோம் என அறிவித்திருப்பது, அதன் கட்டுமானத்தைக் குலைத்து, அபரிமிதமான காலதாமதத்தை ஏற்படுத்தும், போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும்" என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழக உள்கட்டமைப்பின் உன்னத சிற்பியாக விளங்கிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை அமைக்கும் பணிக்கு மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்றன. 1815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட 19 கி.மீ. தொலைவினை கனரக வாகனங்கள் அரை மணிநேரத்திற்குள்ளாகக் கடந்து, துறைமுகத்தினை அடைய முடியும் என்பதால் ஏற்றுமதி உள்ளிட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் சேர்த்தே அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதா காழ்ப்புணர்வு காரணமாக, பறக்கும் சாலைப் பணியினை முடக்கிப் போட்டார். அவர் முன்வைத்த காரணங்கள் பொருந்தாதவை என்பதை ஆய்வுக்குழுக்களின் அறிக்கைகளும் தெரிவித்தன.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்பதை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய இணையமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் இப்பணி விரைவுபடுத்தப்படும் என அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது மத்திய தரைவழிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்த பிறகு, இதனை 5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலமாக மாற்ற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பறக்கும் சாலை மேம்பாலத்திற்காக ஏற்கனவே தூண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரடுக்கு மேம்பாலம் என்பது இதன் கட்டுமானத்தை முற்றிலும் மாற்றி அமைத்து, குலைக்கின்ற-மேலும் அபரிமிதமான கால தாமதம் ஏற்படுத்தும் அறிவிப்பாகும். அத்துடன், போகாத ஊருக்கு வழியைக் காட்ட நினைக்கிறது, டெண்டர் ஊழலுக்காகவே ஆட்சி செய்து கொண்டிருக்கும் பழனிசாமி அரசு.
தமிழகத்தின் தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் - எதிர்கால வளர்ச்சியைக் கருத்திற்கொண்டும் தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தினை அதன் இயல்பான வடிவிலேயே தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மா.சுப்ரமணியன் தலைமையில் கழகத்தினர் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
எழுச்சிமிக்க இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தியபடி, பறக்கும் சாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்துகிறேன். இல்லையென்றால், அதனை விரைந்து நிறைவேற்றுகிற காலம் வேகமாக வருகிறது என்ற நிலைமையை பொது மக்கள் நன்கு அறிவார்கள்!” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!