M K Stalin

“அரசு மருத்துவர்களுக்கான 69% இடஒதுக்கீட்டை காவு கொடுத்திருப்பது மன்னிக்க முடியாத துரோகம்” : மு.க.ஸ்டாலின்

மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில், சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69% இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (09-11-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு - மிகவும் காலதாமதமாக இப்போது அ.தி.மு.க அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது.

சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அ.தி.மு.க அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டிய அவல நிலைமை தொடர்கிறது.

இந்த உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குரல் எழுப்பிய பிறகே அதற்கு ஒப்புதல் தெரிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த உள் இடஒதுக்கீடு 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் செயல்படுத்தப்படாது என்ற அ.தி.மு.க அரசின் முடிவுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள் இடஒதுக்கீடு என்று அறிவித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் காவு கொடுத்திருப்பது மன்னிக்க முடியாத துரோகம். ஆகவே மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில், சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “மதுரையைப் பாழாக்கிய செல்லூர் ராஜு, உதயகுமார்" - ‘தமிழகம் மீட்போம்’ கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விளாசல்!