M K Stalin
"இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடை செய்க" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
"இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிடவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திடவும் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ‘ஆன்லைன்’ சூதாட்டம், 11 பேர் உயிரைப் பறித்துள்ள நிலையில் - அது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு - அது தொடர்பாக முடிவு எடுக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று எடப்பாடி அ.தி.மு.க. அரசு கேட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இது தொடர்பாக வழக்குகள் ஏற்கனவே தொடரப்பட்டு - ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதமே அ.தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க. அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது “எங்களுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் கொடுங்கள்” எனக் கேட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி - வறுமையின் கோரப்பிடியில் சிக்கி - குடும்பத்தை நட்டாற்றில் தவிக்க விட்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் - இது குறித்து அ.தி.மு.க. அரசு கவலைப்படவும் இல்லை; ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவும் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
“சூதாட்டம் கொடுமையானது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளைத் தடுப்பது குறித்து அரசு சட்டமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூலை மாதமே உத்தரவிட்டும், மூன்று மாதமாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேற்றைய தினம் வழக்கு விசாரணையின் போது கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இந்தக் கேள்விக்குப் பிறகாவது முதலமைச்சர் பழனிசாமி உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிறிய தொகையை முதலில் பரிசாகக் கொடுத்து - ஆசை காட்டி - பிறகு பெரிய தொகைக்கு நஷ்டத்தை - இழப்பை ஏற்படுத்தி வாழ்க்கையை இருட்டில் தள்ளும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்துள்ளன. தமிழகத்தில் மட்டும் இதைத் தடை செய்யத் தயங்குவது ஏன்? என்ன உள்நோக்கம்? இயந்திரங்களை (BOTS) வைத்து இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிட வேண்டும் எனவும், தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?