M K Stalin
OBC இடஒதுக்கீடு : இரட்டை வேடம் போடாமல் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுங்கள் - மு.க.ஸ்டாலின் அறிவுரை!
"இரட்டை வேடம் போடாமல் கண் துடைப்பு நாடகம் நடத்தாமல், மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும்" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
“அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்விக்கான இடங்களில், இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது” என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. “பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு இந்த ஆண்டு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது” என்று எழுத்துப்பூர்வமாக மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வைத்த வாதத்தாலும், “இந்த ஆண்டே இடஒதுக்கீடு கொடுங்கள்” என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட நால்வர் குழுவில் அ.தி.மு.க அரசு துணிச்சலுடன் வாதிடாமல் போனதாலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டே இடஒதுக்கீடு கிடைத்து விடும் என்று நினைத்த பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் மருத்துவக் கனவை மத்திய பா.ஜ.க அரசும் - அ.தி.மு.க அரசும் கைகோர்த்து கூட்டணி வைத்து இன்றைய தினம் திட்டமிட்டுக் கலைத்திருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாநில அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவில்லை. பட்டியலின மாணவர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கவில்லை. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும் அளிக்கவில்லை. இதனால் தமிழகத்திலும் - அகில இந்தியாவிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மாணவர்களின் இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசும் - அ.தி.மு.க. அரசும் போட்டி போட்டுக் கொண்டு பொறுப்பற்ற முறையில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் செயல்பட்டு - சட்டபூர்வமான உரிமையைத் தட்டிப்பறித்துள்ளன”. "இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று கூறும் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு பிடிவாதமாக உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் மூலமும், சத்தியப்பிரமாண வாக்குமூலமாகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தது - இந்திய சமூகநீதி வரலாற்றில் கரும்புள்ளி!
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 21 நாளில் இடஒதுக்கீடு அளித்து - அதைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி - பல நூறாண்டுக் காலமாக வஞ்சிக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு உரிமைகளில் எல்லாம் தாராளமாக ஆக்கிரமிப்பு நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.
பா.ஜ.க. ஆட்சியில் மண்டல்குழு பரிந்துரையின்படி 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வேலைவாய்ப்பில் முழுமையாகவும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுப்பதில்லை. மத்திய கல்வி நிறுவனங்களில் சட்டக் கல்வி, மருத்துவக் கல்வியிலும் இடஒதுக்கீடு கொடுப்பதில்லை. மன்னிக்க முடியாத சமூக அநீதியைத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க. அரசு எவ்வித தயக்கமும் இன்றி செய்து வருகிறது. இதை பிற்படுத்தப்பட்ட - பட்டியலின சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்வு ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் உள்ளங்களிலும் கொதித்துக் கொண்டிருப்பதை மத்திய பா.ஜ.க அரசு உணரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றே கருதுகிறேன்.
மகாபாதகமான இந்தச் சமூக அநீதிக்கு மனமுவந்து துணை போகும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு “இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று கூறி உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து விட்டு - அதற்காக அமைக்கப்பட்ட நால்வர் கமிட்டிக் கூட்டத்தில் அது பற்றியே வாய் திறக்காமல் அமைதி காத்து இரட்டை வேடம் போட்டது. 69 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தொடர்பான அறிக்கை அந்தக் கமிட்டிக் கூட்டத்தில் கேட்கப்பட்டும் - அதைக் கடைசி வரை கொடுக்காமல் இழுத்தடித்தது.
ஆகவே “நான் அடிப்பது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் அழு” என்ற பாணியில் மத்திய பா.ஜ.க. அரசும் - அ.தி.மு.க. அரசும் இணைந்து கூட்டணி வைத்து இடஒதுக்கீடு உரிமை மீது இடி விழுவது போன்ற தாக்குதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஆகவே திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே வலியுறுத்தியது போல் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக் கல்வியிடங்களில் இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும் - பட்டியலின சமூகத்திற்காகவும் பிரதமர் காட்ட வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது; பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டத்திற்காகக் காத்திராமல் - ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சட்ட உரிமையாக உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே செயல்படுத்தி - பிறகு கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
எல்லாவற்றிலுமே இரட்டை வேடம் போடாமல் - சமூகநீதியைக் காப்பதிலும் கண்துடைப்பு நாடகம் நடத்தாமல் - மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய அழுத்தத்தை அரசியல் ரீதியாகப் பிரதமருக்குக் கொடுக்க வேண்டும் என்றும் - இந்த ஆண்டு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!