M K Stalin
"விவசாய விரோத இடஒதுக்கீட்டிற்கு எதிரான பா.ஜ.க அரசுதான் ஊழல் அ.தி.மு.க அரசுக்கு பாதுகாவலன்": மு.க.ஸ்டாலின்
"நெஞ்சுரம் மிக்க தன்மானமிக்க தளகர்த்தர்களாகிய தி.மு.க.வினர் வீறுகொண்டு எழுவோம்; தமிழக விரோதிகளை விரட்டியடிப்போம்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (16-10-2020) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் - கழகத்தின் முப்பெரும் விழாவில் 'பெரியார் விருது' பெற்ற (மறைந்த) 'மானமிகு' மா.மீனாட்சிசுந்தரம் அவர்களது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:
"எல்லோரும் தன் பெயருக்கு முன்னால் “திரு” போடுவதைப் பெருமையாக நினைப்பார்கள். ஆனால் “மானமிகு” என்று தன் பெயருக்கு முன்னால் போட வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் திராவிட இயக்கத் தொண்டர்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் “மானமிகு” மீனாட்சிசுந்தரம் அவர்கள்.
1954-ஆம் ஆண்டு தனது பதினேழாவது வயதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் ஒரு சுயமரியாதைக்காரர்.
தஞ்சை மாவட்டம், வேதாரண்யம், ஆலத்தம்பட்டி கிளைக் கழகச் செயலாளர்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு முதலில் சிறை சென்றவர்.
ஆயக்காரன்புலம் - 2-ஆம் சேத்தி ஊராட்சி மன்றத் தலைவர் – பிறகு, வேதாரண்யம் நகர்மன்றத் தலைவர்.
மூன்று முறை - 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் வேதாரண்யம் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
கழகப் பொதுக்குழு உறுப்பினர், மாவட்டத் துணைச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர், கீழத்தஞ்சை மாவட்டச் செயலாளர், திருவாரூர் மாவட்ட அவைத்தலைவர் - இறுதியாக நாகை தெற்கு மாவட்ட அவைத்தலைவராகப் பொறுப்பு வகித்த நேரத்தில் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார்.
இவரை “மா.மீ” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அன்புடன் அழைப்பார்கள்.
1976-ஆம் ஆண்டு மிசாவில் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவித்தவர்.
கழகம் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று சிறை சென்ற தியாகச் செம்மல் மா. மீ அவர்கள்.
அவரது கழகப் பணியை - சுயமரியாதைப் பணியை - திராவிட இயக்கக் கொள்கைகளை ஏந்தி கிராமம் தோறும் சென்று - கழகத்தை வளர்த்த பணியைப் பாராட்டி அவருக்கு முப்பெரும் விழாவில் “பெரியார்” விருதினை வழங்கிக் கவுரவித்தோம்.
அந்த விருதினைப் பெற அவர் வர இயலவில்லை. அப்போதே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
விருது வழங்கியது பற்றித் தெரிவித்த போது - எனக்கு என்ன ஆனாலும் சரி, அறிவாலயம் வருவேன்; விருதினை உங்கள் கையால் பெறுவேன் என்று என்னிடம் சொன்னார்.
ஆனால் அவர் நேரில் வந்து வாங்க முடியவில்லை. அதனால் அவருடைய மகன் நகரச் செயலாளர் புகழேந்தி அவர்களிடம் விருதினை கொடுத்தேன்.
இப்படி கொள்கைப் பிடிப்பு உள்ள தொண்டர்களை - தொண்டர்களாக இருந்து வந்த தலைவர்களைக் கொண்ட மாபெரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அதனால்தான் இன்றைக்கு அவரது நினைவகத்தையும் - படத்தையும் திறந்து வைத்துள்ளேன்.
கழகத்தில் ஒவ்வொரு தொண்டனுக்கும் மரியாதை கொடுக்கும் இயக்கம் இந்த திராவிட முன்னேற்றக் கழகம்.
இப்போது ஒவ்வொரு பகுதியிலும் பொற்கிழி வழங்கி கழகத்தின் மூத்த உறுப்பினர்களைக் கவுரவித்து வருவது அதன் அடையாளம்தான்!
கொரோனாவில் கொள்ளையடிக்கும் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் வேலை இழந்திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு 5000 ரூபாய் ரொக்கமாகக் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். கேட்கவில்லை இந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அறுவடை செய்த நெல் மழையில் அழிந்து போகிறது - நெல்லை வாங்க நேரடி கொள்முதல் நிலையங்களை அதிக எண்ணிக்கையில் திறக்கவில்லை. நெல்லுக்குரிய விலையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட உயர்த்திக் கொடுக்க முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமில்லை.
சன்ன ரக நெல், குவிண்டால் ஒன்றுக்கு 1,958 ரூபாய். சாதாரண ரக நெல்லுக்கு, 1,918 ரூபாய். இந்த விலை எப்படி கட்டுப்படியாகும்?
நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால் அதுபற்றி முதலமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை.
அதேநேரத்தில் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலையையும் ரத்து செய்யும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்திருக்கிறது அ.தி.மு.க. இன்றைக்கு அந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்குத் தொடுத்திருக்கிறது.
அந்த வழக்கினை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம் “இதற்குப் பதில் சொல்லுங்கள்” என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஆனால் அ.தி.மு.க.-வுக்கு, அந்த வழக்குகளில் தன்னையும் ஒரு பார்ட்டியாக சேர்த்துக் கொள்ளக் கூட தைரியம் இல்லை.
அப்படி வழக்குத் தொடுத்தால் பழனிசாமி வீட்டில் ரெய்டு நடக்கும். இங்குள்ள அமைச்சர் காமராஜ் வீட்டில் ரெய்டு நடக்கும். ஏன், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வீட்டிலும் ரெய்டு நடக்கும்.
ரெய்டுகளுக்குப் பயந்து - விவசாயிகளின் நலனை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்துள்ள அரசு - பழனிசாமி அரசு.
நேற்றைக்குக் கூட பாருங்கள். மருத்துவம் மற்றும் மருத்துவ மேல் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துவிட்டது.
இந்த ஆண்டே இந்த ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது - மத்திய பா.ஜ.க. அரசு இந்த ஆண்டு 27 சதவீதமும் கொடுக்க முடியாது; 50 சதவீதமும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது.
இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை கொடுங்கள் என்று தி.மு.க. மூத்த வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதையும் ஏற்க மத்திய பா.ஜ.க. அரசு மறுத்து விட்டது.
இன்னொரு செய்தி வந்திருக்கிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டிலிருந்து 10 சதவீதத்தை எடுத்து முன்னேறிய வகுப்பினருக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
வங்கிப் பணியாளர் தேர்வில் இந்த அநியாயம் நடந்திருக்கிறது. மத்திய சட்டப் பல்கலைக்கழகத்தில் 27 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்கிறார்கள். மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த முடியாது என்கிறார்கள்.
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக விடாமல் தடுக்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் தட்டிக் கேட்க மறந்து – “கமிஷன், கலெக்சன், கரெப்ஷனில்” மூழ்கிக் கிடக்கிறது அ.தி.மு.க. அரசு.
இடஒதுக்கீட்டிற்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசு. விவசாயிகளுக்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசு - இது டெல்லியில்.
இடஒதுக்கீடு உரிமை பறிபோவதைத் தட்டிக் கேட்க முடியாமல் - விவசாயிகள் விரோத திட்டங்களை ஆதரிக்கும் அரசு அ.தி.மு.க. அரசு - இது தமிழகத்தில்!
ஆகவே விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பா.ஜ.க. அரசுதான், அ.தி.மு.க. என்ற ஊழல் அரசுக்கு பாதுகாவலன்; விசுவாசமிக்க பாதுகாவலன்!
இந்த விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பா.ஜ.க. அரசையும் - “விவசாயி” “விவசாயி” என்று சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அ.தி.மு.க. அரசையும் விரட்டி அடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதற்கு “மா.மீ” போன்ற நெஞ்சுரம் மிக்க தொண்டர்களைக் கொண்ட தி.மு.க.காரர்களாகிய நாம் - தன்மானமிக்க தளகர்த்தர்களாகிய நாம் வீறுகொண்டு எழுவோம்; தமிழக விரோதிகளை விரட்டியடிப்போம்."
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!