M K Stalin
மக்கள் மீது ரவுடிகளை ஏவும் அரசு இயந்திரம்.. யார் உண்மையான குற்றவாளி? -அதிமுக அரசை விளாசும் மு.க.ஸ்டாலின்
“தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் த.செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நியாயம் கிடைக்கப் பாடுபடுவோரை “ரவுடியிசம்” மூலம் அச்சுறுத்தத் துணை போவது, மேலும் பிடிபடாமல் உள்ள “உண்மையான குற்றவாளிகள்” வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:-
“திராவிட முன்னேற்றக் கழக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காரில் கடத்தப்பட்டு, இளைஞர் த.செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் அராஜகங்கள் - அந்த மாவட்டம் இன்னும் தமிழகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா - அல்லது “அ.தி.மு.க. - ஒரு சில உள்ளூர் போலீசார் கூட்டணி”யால் தனித் தீவாக மாறி விட்டதா என்ற மிகப்பெரிய சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது.
அப்பாவி இளைஞரைப் பறிகொடுத்த குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் மிரட்டப்படுவதும் - தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலும் கொலையை மறைக்க அரங்கேற்றப்படும் கொடும் நிகழ்வுகளாகவே தெரிகின்றன. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதும் - தூத்துக்குடி மாவட்டம் அமைதியின்மையின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
கொலை செய்யப்பட்ட செல்வத்தின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், மக்களும் போராடி வருகின்ற நிலையில், அதுபற்றி அ.தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் - போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை - நியாயம் கிடைக்கப் பாடுபடுவோரை “ரவுடியிசம்” மூலம் அச்சுறுத்தத் துணை போவது, செல்வம் கொலையில் மேலும் பிடிபடாமல் உள்ள “உண்மையான குற்றவாளிகள்” வேறு யார் என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆகவே இந்தக் கொலை வழக்கை உடனடியாக சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட்டு - குற்றவாளிகளையும் - தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும், உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியையும் - சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டி - பொதுமக்களைப் பாதுகாத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆட்சி நாளை மாறும். ஆனால் தமிழகக் காவல்துறை, மக்களின் நன்மதிப்பைப் பெற்று, எப்போதும் நடுநிலை வகித்து, எவர் பக்கமும் சாய்ந்துவிடாமல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிட வேண்டிய பொறுப்புள்ள துறை என்பதை உணர்ந்து, தமிழகக் காவல்துறைத் தலைவர் திரிபாதி ஐ.பி.எஸ், தூத்துக்குடி மாவட்டத்தில் நிலவும் அசாதாரணமான சட்டம் ஒழுங்குப் பிரச்சினையில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
செல்வத்தை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு உடனடியாக 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி - அந்த குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!