M K Stalin
“நீட் தேர்வை நாடே எதிர்க்கும்போது, முதுகெலும்பை தொலைத்துவிட்டு நிற்கும் பழனிசாமி”- மு.க.ஸ்டாலின் விளாசல்!
இன்று (12-9-2020) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் (மறைந்த) விருத்தாசலம் முன்னாள் கழக சட்டமன்ற உறுப்பினரும், கழக தீர்மானக்குழுச் செயலாளருமான குழந்தை தமிழரசன் அவர்களது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:
“விருத்தாசலம் முன்னாள் கழகச் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் - அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடியவர். சாமான்ய மக்களுடன் இரண்டறக் கலந்து, அவர்களின் நலன்களுக்காகப் பாடுபட்டவர். அவரது திருவுருவப் படத்தினை இன்றைக்கு நான் திறந்து வைத்துள்ளேன்.
கழகத் தீர்மானக்குழு உறுப்பினராகவும் இருந்த அவர், கழகத்தின் வளர்ச்சிக்கு அந்தப் பகுதியில் அரும்பாடுபட்டவர். பட்டி தொட்டிகளில் எல்லாம் கழகத்திற்கு நற்பெயர் ஈட்டித் தந்தவர். கழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நேரத்தில், தொகுதி மக்களின் குரல் மட்டுமே அவரது குரலாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
எப்போதும் தன் தொகுதி மக்களின் நலத் திட்டங்களைப் பற்றியே யோசிப்பதிலும்- அதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடமும், என்னிடமும் வலியுறுத்தி- வாதாடி நிறைவேற்றிக் கொடுப்பதிலும் தன்னிகரற்றவர். அந்தப் பகுதியில் ஒரு போராட்டத்தை கழகம் அறிவித்தால்- அதில் முதல் ஆளாக நின்று பங்கேற்பார்- கைதுக்கு அஞ்சாதவர் அவர்!
அதனால்தான் அவரது மறைவின் போது, “கழகத்தின் தீரமிகு கொள்கை வீரர்களில் ஒருவரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்” என்று எனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தேன். கழக வளர்ச்சிப் பணிகளில் மட்டுமின்றி- வழக்கறிஞர் பணியிலும் சமூக அக்கறையுடன் செயல்பட்டவர் அவர். ஏழை - எளியவர்களுக்கு நீதி கிடைக்கப்பெறப் பாடுபட்டவர்.
அவர் ஒரு மிகச்சிறந்த “பொது நல ஊழியராக” மக்களின் “பொது சேவகராக”ப் பணியாற்றினார் என்றால், அது மிகையாகாது!
அப்படிப்பட்டவருக்கு - அவரது சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நான் இன்று அவரது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துள்ளேன்.
இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களும் - முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கிறார்கள்.
கொரோனாவில் மக்களை அல்லாட விட்டு விட்டு, மாவட்டம் மாவட்டமாக கட்சிக்காரர்களைச் சந்தித்து வருகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
அவர் ஒரு மாவட்டத்திற்குச் சென்று திரும்பிய பிறகு- அந்த மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றும் அதிகமாகிறது. அந்த நோயால் இறப்பும் அதிகரித்து விடுகிறது. இந்த லட்சணத்தில்தான் அவரது ஆட்சி இருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சி இன்று ஒரு மக்கள் விரோத ஆட்சி! மக்களின் உயிரைப் பறிக்கும் ஆட்சி! யார் எப்படிப் போனால் என்ன, கமிஷன் அடிப்பது மட்டுமே நமக்கு முதல் கடமை என்று செயல்படும் அமைச்சர்களையும், முதலமைச்சரையும் கொண்ட ஆட்சி!
இன்றைக்கு “நீட்” அரக்கன், ஒவ்வொரு மாணவியின் உயிராகப் பறித்துக் கொண்டிருக்கிறது. இன்று மதுரையில் ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி, நீட் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் எனும் அதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது.
அரியலூர் அனிதா, விழுப்புரம் ப்ரதீபா, விழுப்புரம் மோனிஷா, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, பெரம்பலூர் கீர்த்தனா, கோவை சுபஸ்ரீ, சென்னை ஏஞ்சலின், புதுக்கோட்டை ஹரிஷ்மா, நெல்லை தனலட்சுமி, அரியலூர் விக்னேஷ் என நீட் தேர்வால் பலியான மாணவ மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் முதலமைச்சர் பழனிசாமியோ “நீட் தேர்வுக்கு” விலக்களித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வாங்க முடியாமல் மத்திய பா.ஜ.க. அரசிடம் கூனிக் குறுகி நிற்கிறார்.
நாளைய தினம் நீட் தேர்வு நடக்கப் போகிறது. நாடே எதிர்க்கிறது. ஆனால் முதலமைச்சர் பழனிசாமியோ, அதனை எதிர்க்க தைரியம் இல்லாமல் முதுகெலும்பைத் தொலைத்து விட்டு நிற்கிறார்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அவர், அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தைக் கூடச் செயல்படுத்த முடியாமல், கையாலாகாத முதலமைச்சராக தவித்து நிற்கிறார். ஆகவே இந்த ஆட்சி மாணவ - மாணவிகளுக்கு விரோதமான ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் தயாராகக் காத்திருக்கிறார்கள்.
என்றைக்குத் தேர்தல் வந்தாலும் - அ.தி.மு.க. அமைச்சர்களும், முதலமைச்சரும் தங்கள் தொகுதிக்குள் ஓட்டுக் கேட்டுக் கூடப் போக முடியாது. அந்த அளவிற்கு மக்களைத் துயரத்தில், பேரிடரில் சிக்க வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இந்தப் பொல்லாத ஆட்சியைத் தூக்கியெறிந்து விட்டு - கழக ஆட்சியை அரியணையில் ஏற்ற - முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் அந்த வெற்றியை காணிக்கையாக்க நாமெல்லாம் ஒருங்கிணைவோம். வெற்றி பெறுவோம்.”
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!