M K Stalin

“கொரோனா ஊழலில் பிஸியாக இருக்கும் அமைச்சரால் சொந்த மாவட்டத்தையே காக்க முடியவில்லை”- மு.க.ஸ்டாலின் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (10-09-2020) மாலை, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் (மறைந்த) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பைய்யா அவர்களது திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு :

“புதுக்கோட்டை மாவட்டத்தில் கழகத்தின் முக்கியத் தளகர்த்தர்களில் ஒருவரான ஆலவயல் சுப்பையா அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

இது படத்திறப்பு நிகழ்ச்சி என்பதை விட - கழகப் பாசறையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொண்டாற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொண்டருக்கு நன்றி செலுத்தும் விழா என்று கூறுவதே பொருத்தமாகும்.

இந்த மாவட்டத்தில் கழகத்தின் குரலாக - மக்களின் ஊழியனாகத் திகழ்ந்தவர், கழகப் பணியில் அவரை விஞ்சிய இன்னொருவர் திருமயம் தொகுதியில் இல்லை என்ற அளவிற்குப் பெயர் பெற்றவர், ஆலவயல் சுப்பையா அவர்கள்!

பொன்னமராவதி ஒன்றியப் பெருந்தலைவராக அவர் இருந்திருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், என, கழகத்துடன் வளர்ந்தவர் அவர். 1989-ல் திருமயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கழகத்தின் சார்பில் வெற்றி பெற்று - மக்கள் பணியாற்றியவர்.

எம்.எல்.ஏ. என்றால் அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் போல, தேடிச் செல்ல வேண்டியவராகவோ, அல்லது தேடினாலும் கிடைக்காதவராகவோ அவர் இருந்தது இல்லை. கழகத் தொண்டர்களைத் தேடிச் சென்று பணியாற்றியவர், ஆலவயல் சுப்பையா அவர்கள்!

தொகுதி மக்களை நாடிச் சென்று, அவர்களின் குறைகளை அறிந்து - அவற்றைத் தீர்த்து வைக்க, ஆளுங்கட்சியாக இருந்த அந்தக் காலகட்டத்தில் பாடுபட்டவர். அவருடைய தொகுதி நலத் திட்டங்கள் - இன்றைக்கும் அவருடைய பெயரைச் சொல்லும்.

நேற்றைய தினம் கழகத்தின் பொதுக்குழு நடைபெற்றதை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். இந்தியத் திருநாட்டிலேயே முதன்முறையாக காணொலிக் காட்சி மூலம் – 5 மணி நேரம் நடைபெற்ற அந்தப் பொதுக்குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அ.தி.மு.க. அரசின் கொரோனா தோல்வி, அ.தி.மு.க. அரசின் ஊழல் ஊதாரித்தனங்கள், அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோதத் திட்டங்கள் - மாநில உரிமைகளை இழந்து விட்டு நிற்கும் அவலம், மத்திய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதத் திட்டங்கள், ஊழல் அ.தி.மு.க. ஆட்சியை முட்டுக் கொடுத்து - பாதுகாவலனாக நின்று, இந்த நான்காண்டு காலம் தமிழக மக்களை வஞ்சித்தது ஆகியவற்றை கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம். அந்தத் தீர்மானங்களை – மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கெல்லாம் இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைக்கு கொரோனா பாதிப்பு எல்லை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தின் அமைச்சர். அவர் முதலில், ‘குட்கா ஊழலிலும்’ இப்போது ‘கொரோனா ஊழலிலும்’ பிஸியாக இருப்பதால் - தமிழக மக்களை மட்டுமல்ல - சொந்த புதுக்கோட்டை மாவட்டத்தையே கொரோனாவிலிருந்து அவரால் காப்பாற்ற முடியவில்லை.

புதுக்கோட்டையில் கொரோனா பாதிப்பு 7000-ஐ தாண்டிவிட்டது. கொரோனாவால் மரணம் 116-ஐ தாண்டி விட்டது. இதுவும் உண்மைக் கணக்கா என்றால் அதுவும் இல்லை.

கொரோனா நோய்த் தொற்றையும், அதனால் ஏற்பட்ட இறப்புகளையும் குறைத்துக் காட்டியே, இன்றைக்குப் புதுக்கோட்டை மாவட்டம் கொரோனாவின் கடுமையான பாதிப்பில் இருக்கிறது.

கொரோனா தொல்லை இப்படியென்றால் - ஊராட்சி மன்றங்களுக்கு குடிநீர்ப் பணிகளைச் செய்யக் கூட நிதி கொடுப்பதில்லை.

‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பணிகளை இங்குள்ள கலெக்டர் ‘பேக்கேஜ் டெண்டர்’ விடுகிறார். அவர் முன்பு, விஜயபாஸ்கரின் துறையில் பணியாற்றி விட்டு, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக வந்தவர். பேக்கேஜ் டெண்டரை எதிர்த்து வழக்குப் போட்டால் - அந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வைக்க ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் முன்தேதியிட்டு தீர்மானம் போட்டுத் தரச் சொல்லி மிரட்டுகிறார். ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரே – ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி மூலம் மாவட்டத்தில் உள்ள 490-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை மிரட்டுகிறார் என்றால் அதற்கு எப்படி தைரியம் வந்தது?

அதனால்தான் நான் விடுத்த அறிக்கையில், “இப்படி முன்தேதியிட்டு தீர்மானம் பெறுவது” கிரிமினல் சதி என்று எச்சரித்தேன். ஊழல் அமைச்சர் புதுக்கோட்டையில் இருப்பதால், இங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவரும் இதுபோன்ற ஊழல் நடவடிக்கைகளில் தைரியமாக இறங்குகிறார். அவர் நாளை, சட்டத்தின் முன்பு பதில் சொல்ல வேண்டியதிருக்கும். இங்குள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சரி, மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் சரி, கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது, அவர்களுக்கு முக்கியமான பணி அல்ல… ஊழல் செய்வது மட்டுமே அவர்களின் ஒரே பணி!

அதனால்தான் இன்றைக்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமே ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னால் போய்விட்டது. அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை - ஊழல்களை நாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆட்சியை விரட்டியடிப்போம்! விரைவில் கழக ஆட்சி அமைப்போம்! நன்றி!”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

Also Read: “கிசான் திட்டத்தில் ரூ. 110 கோடி ஊழல் : அ.தி.மு.க அரசே முழுமுதற் காரணம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!