M K Stalin
“குடிமக்களின் அடிப்படை உரிமைகளை காக்க துணை நின்றவர்” கேசவானந்த பாரதி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கேரளாவைச் சேர்ந்த கேசவானந்த பாரதி உடல்நலக்குறைவால் இன்று (செப்.,7) அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்
அதில்ம், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை விழுமியங்களைப் (Basic Structure of the Constitution) பாதுகாப்பதற்குப் பெரிதும் காரணமாக இருக்கும் வழக்கினைத் தொடுத்தவரான கேசவானந்த பாரதி இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி துயரத்தை அளிக்கிறது.
கேரளாவில் நிலச் சீர்திருத்தத் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக கேசவானந்த பாரதி தொடர்ந்த ஒரு வழக்கு, உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு, 13 நீதியரசர்களைக் கொண்ட மாபெரும் அரசியல் சட்ட அமர்வினால் விசாரிக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள் தங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மையினைக் கொண்டு, அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் வகையில் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதற்குக் கடிவாளம் போட்ட அந்த வழக்கின் தீர்ப்பு; இன்றுவரை ‘கேசவானந்த பாரதி’ வழக்கு என்றே வரலாற்றில் புகழ்ப் பெயர் பெற்று நிலைத்துள்ளது.
1973-ம் ஆண்டு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்புதான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான; மதச்சார்பின்மை - கூட்டாட்சித் தத்துவம், இவற்றைப் பாதுகாப்பதற்கான வாளும் கேடயமுமாக விளங்குகிறது.
மக்களாட்சி எனும் மலைக்கோட்டையின் மதில்களைக் காத்து உறுதிப்படுத்துவதற்குக் காரணமான வழக்கைத் தொடுத்து, இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் போற்றிப் பாதுகாக்கத் துணை நின்ற கேசவானந்த பாரதி அவர்களின் மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்