M K Stalin
“இடஒதுக்கீட்டின் அம்சத்தை காக்க குரல் கொடுங்கள்” - சமூக நீதிப்போருக்கு ஆதரவு கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்!
இடஒதுக்கீடு தொடர்பான அடிப்படை அம்சத்தை பாதுகாத்திட குரல் கொடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ள 11 அரசியல் கட்சித்தலைவர்களுக்கு கடிதம் வாயிலாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது
“வணக்கம்
நாடு சுதந்திரம் அடைந்த தருணத்தில், நிர்வாகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தலைமுறை தலைமுறையாக, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு, வரலாற்றுரீதியாக இழைக்கப்பட்ட அநீதி அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த நம் முன்னோர்களின் இதயத்தைக் கனக்கச் செய்தது. அந்த நூற்றாண்டு காலக் காயத்தை ஆற்றிடவும், சமவாய்ப்பு அளித்திடவும் இடஒதுக்கீட்டுப் பிரிவுகளை நமது அரசியல் சட்டத்தில் அவர்கள் உருவாக்கினார்கள்.
புறக்கணிக்கப்பட்ட இந்தச் சமுதாயங்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நீரோட்டத்தில் ஒருங்கிணைய வைக்கவும், அவர்களுக்குரிய பங்களிப்பை உறுதி செய்திடவுமே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. சமத்துவம், சமூகநீதி, சம வாய்ப்பு ஆகியவற்றை அளித்திட வேண்டும் என்று நமது அரசியல் சட்டத்தின் முகப்புரை மிகவும் அழுத்தம் திருத்தமாகப் பிரகடனம் செய்கிறது.
மதம், ஜாதி, இனம், மொழி, பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் அதிகாரத்தில் பங்களிக்காதவரை முகப்புரையில் வரையறுக்கப்பட்டுள்ள; சம வாய்ப்பு மற்றும் சமத்துவம் ஆகிய கோட்பாடுகள் வெற்று முழக்கமாகவும், மாயையாகவுமே நீடிக்கும். அதுவரை அரசியல் சட்டத்தின் மூன்று முக்கிய அம்சங்களான; “சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம்” ஆகியவற்றை அடைய முடியாது.
காலம் காலமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள - ஒடுக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் நலம் - எதிர்கால முன்னேற்றம் ஆகியவை, இடஒதுக்கீட்டுக் கொள்கை என்ற அடிப்படையை நம்பித்தான் இருக்கின்றன. மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் மீது மத்திய அரசிற்குள்ள பாராமுகத்தையும், அதன் கீழ் இயங்கும் பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம் - மருத்துவக் கல்விக் கழகம் ஆகியவை, எப்படி இந்தச் சமுதாயத்திற்கான இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்கின்றன என்பதையும் விளக்குவதற்கே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
மாநிலத்திலிருந்து “மத்தியத் தொகுப்பிற்கு” அளிக்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், மாநில அளவில் உள்ள இடஒதுக்கீட்டுச் சட்டங்களின்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசின் விதிமுறைகள் இருந்தும்- பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு உள்ள இடஒதுக்கீட்டை அளிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்ட இடங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் “மத்திய பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம்”- மாநில இடஒதுக்கீட்டுச் சட்டப்படி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு உள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்க மறுக்கிறது. உண்மையில், மாநிலங்களில் இருந்து மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவதே இல்லை. அதே போல், பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 18 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தாமல் - மத்தியில் உள்ள 15 சதவீத இடஒதுக்கீட்டை மட்டுமே, “பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம்” செயல்படுத்தி வருகிறது.
சட்டப்படியான இடஒதுக்கீடு உரிமையை நிராகரிக்கவே இப்படித் திட்டமிட்டு செயல்படுகிறது. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்கும் அநியாயம், தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை- நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஃது நிகழ்கிறது.
வெளி மாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில், 1984-ல், மாண்பமை பொருந்திய உச்சநீதிமன்றம், “அகில இந்தியத் தொகுப்பு” - என்ற முறையை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் உருவாக்கியது. அதனடிப்படையில் மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்) ஆகியவற்றில் 15 சதவீத இடங்களையும், முதுநிலை மருத்துவக் கல்வியில் 50 சதவீத இடங்களையும் மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளித்திட வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்கியது.
இந்த உத்தரவு 31.01.2017 அன்று மறு ஆய்வு செய்யப்பட்டு - மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் கொடுக்கும் இடங்களில், பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு மட்டுமின்றி, “அந்த இடஒதுக்கீடு மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்” என்றும் விளக்கியிருந்தது.
2010 மற்றும் 2012ல் மருத்துவக் கல்விக் கழகம், இருக்கின்ற விதிகளில் சில திருத்தங்கள் செய்து, மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விகளுக்கு “நீட்” என்ற பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், அதில் மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும் என்றும் அறிவித்தது. மாநிலங்கள் ஒதுக்கும் இடங்கள் அல்லது மாநிலம் மத்தியத் தொகுப்பிற்கு ஒப்படைக்கும் இடங்கள் என அதில் ஏதும் பிரித்துக் கூறப்படவில்லை.
நீட் தேர்வை, தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மேலும் இந்தத் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று கோரி பலமுறை பிரதமருக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன். அது அப்படியே இருக்க, மாநிலங்கள் ஒப்படைக்கும் மத்தியத் தொகுப்பிற்கான இடங்களில் - மருத்துவக் கல்விக் கழகமே உறுதி செய்துள்ள இடஒதுக்கீடு விதிகளின் படி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க 4 வருடங்களாக மத்திய அரசு மறுத்து வருகிறது என்பதைத் தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
நாடு முழுவதும், மருத்துவக் கல்வியில் ஒரு இடம் கூட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இந்த நான்கு ஆண்டுகளில் கிடைக்கவில்லை. மருத்துவக் கல்விக் கழகம் மற்றும் பல் மருத்துவக் கல்விக் கழகத்தின் 'நீட்" தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு –அவ்வழக்கில் 2013-ல் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிறகு 2016-ல் உச்சநீதிமன்றம் மீண்டும் நீட் தேர்வை அனுமதித்து 2013 தீர்ப்பைத் திரும்பப் பெற்றது.
2016-ல் இருந்து இன்றுவரை மாநிலங்கள் அளிக்கும் மத்தியத் தொகுப்பிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வி இடங்களில், மாநிலத்தில் உள்ள 50 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுசாயத்திற்கு 50 சதவீதம், பட்டியலின மக்களுக்கு 18 சதவீதம், பழங்குடியினத்தவருக்கு 1 சதவீதம் என்ற 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. ஆனால் 18 சதவீத இடஒதுக்கீடு பட்டியலினத்தவருக்கு உள்ள தமிழ்நாட்டில் 15 சதவீத இடங்களை மட்டுமே மத்திய அரசு அளித்து வருகிறது. 3 சதவீத இடம் பட்டியலின மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
பட்டியலின - பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசு இவ்வாறு தவறாகவே செயல்படுத்தி வருகிறது. மருத்துவக் கல்விக் கழகம் மற்றும் பல் மருத்துவக் கல்விக் கழகத்தின் விதிமுறைகளின்படி, “மத்திய பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம்” தேர்வுகள் நடத்தி - மாணவர்களைச் சேர்க்கும் ஒரு கவுன்சிலிங் அமைப்பு மட்டுமே! மாநில அளவில் உள்ள இடஒதுக்கீடு சட்டங்களை மதிக்காமலோ அல்லது மாநிலங்கள் கடைப்பிடிக்கும் இடஒதுக்கீட்டை மறுக்கவோ அதற்கு அதிகாரம் இல்லை.
தங்களது புரிதலுக்காக, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இடஒதுக்கீடு குறித்த விவரங்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிட விரும்புகிறேன்.
மேற்கண்ட பட்டியலின்படி, மாநிலத்திற்கு மாநிலம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இடஒதுக்கீடு வேறுபடுவதைப் பார்க்கும் போது - மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களால் ஒப்படைக்கப்படும் இடங்களில், மத்திய இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து- அந்த ஒருதலைப்பட்சமான முடிவால், மாநில இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் மாணவர்களுக்குப் பாதகமாகவும், இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை அவமதிப்பதாகவும் இருக்கிறது. இது, மாநில இடஒதுக்கீட்டை அனுபவித்து வரும் மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும்.
மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளைக் கட்டி - மருத்துவக் கல்வியில் மாணவர்களைச் சேர்த்து – மருத்துவராக்கி - மாநிலத்திற்குள் மருத்துவச் சேவையை விரிவுபடுத்த ஒரு மாநில அரசு எடுக்கும் முயற்சியினை - மத்திய அரசின்கீழ் உள்ள “பொது சுகாதாரச் சேவை இயக்குனரகத்தின்” தயவில் விடுவது மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமின்றி - மாநில நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க, மருத்துவ மற்றும் பல் மருத்துவ முதுநிலைக் கல்விக்கான இரண்டாவது கவுன்சிலிங்கை அவசரமாக நிறுத்திய மத்திய அரசு, மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியலினத்தவருக்கும் இடஒதுக்கீட்டை வழங்குவதில் அவசரம் காட்டவில்லை. ஆகவே கடந்த 4 ஆண்டுகளாக, இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு இல்லாமல் - மருத்துவக் கல்வி இடங்கள் கிடைக்காமல் இன்னலுற்று நிற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 4 ஆண்டுகளில் 2729 மருத்துவக் கல்வி இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. பட்டியலின மாணவர்களுக்கு 164 இடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 10 ஆயிரம் மருத்துவ இடங்களும், பட்டியலின மாணவர்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் மறுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
இந்தக் கல்வியாண்டையும் சேர்த்து கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாட்டைப் பார்த்தால், இந்த மாணவர்களுக்கு மத்திய “பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம்” நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறது. மாநிலங்களின் இடஒதுக்கீடு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்கிறது.
தனக்குச் சொந்தமான விதிகளையே- மருத்துவக் கல்விக் கழகம் மற்றும் பல் மருத்துவக் கல்வி கழகமும் மீறியிருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அரசியல் சட்டத்தின் 14 மற்றும் 15வது பிரிவுகளை அப்பட்டமாக மீறி- கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மத்தியத் தொகுப்பு என்பது நிரந்தரமானது அல்ல. உச்சநீதிமன்றம் இந்தத் தொகுப்பை உருவாக்கி 34 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் - நாடு முழுவதும் உள்ள மாணவர்களைச் சேர்க்கும் வகையில், “ரீஜினல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மெடிக்கல் சைன்ஸ்” என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கிய பிறகு இந்த “மத்தியத் தொகுப்பு”க் கொள்கை காலாவதியாகி விட்டதாகவே கருத வேண்டும். ஆனால் மத்திய அரசோ உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கடைப்பிடிப்பதோடு மட்டுமின்றி- மாநில அதிகாரம், மாநில நலன் ஆகியவற்றிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில்; கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் செயல்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்ட பிறகு, “அகில இந்தியத் தொகுப்பு” தேவையில்லை. ஆகவே அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவ இடங்களை ஒப்படைக்கும் முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாநிலங்கள் அனைத்தும் ஓரணியில் நின்று குரல் கொடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
மாநிலங்கள் ஒப்படைக்கும் இடங்களை மத்திய “பொது சுகாதாரச் சேவை இயக்குநரகம்” கையாளும் முறையும் கைவிடப்பட- சட்டத்திருத்தங்கள் மூலமாகவே உரிய வழி முறை காணப்பட முடியும் என்ற நிலை உள்ளது. சமூகநீதிக்காகப் பிறந்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம், இந்த அநீதிகளை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
காலம் காலமாக புறக்கணிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் ; மருத்துவக் கல்வியில் முன்னேறுவது மிக முக்கியமானது. அது ஒன்றே இந்த சமுதாயங்களுக்கு அதிகாரமளித்து- ஏற்றத் தாழ்வுகளை அறவே நீக்கி- சாதிய அடக்குமுறைகளை, அநீதிகளை அகற்றி- சாதியற்ற ஜனநாயகத்தை உறுதி செய்யும். இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், பட்டியலின மாணவர்களுக்கும், “மத்தியத் தொகுப்பிற்கு” அளிக்கப்படும் இடங்களில் மாநில அளவிலான இடஒதுக்கீட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்காமல்- மருத்துவக் கல்வி சேர்க்கையில் இழைக்கப்படும் அநீதியை மத்திய அரசும் பாராமல் இருக்க நிச்சயம் அனுமதிக்க முடியாது.
சமூகநீதியைப் பாதுகாக்கவும், பல நூற்றாண்டுகாலமாக புறக்கணிக்கப்பட்டுள்ள, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயங்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்யவும், அவர்கள் சம வாய்ப்பைப் பெற்றிடவும் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் இந்தப் போரில் தங்களது ஆதரவைக் கோரும் அதே வேளையில், உரிமையை இழந்துள்ளவர்களின் உரிமைகளுக்காகவும்- இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாத்திடவும் தாங்கள் குரல் கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!