M K Stalin
“பெருந்தலைவர் காமராஜர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; போற்றுவோம்!” - மு.க.ஸ்டாலின் மடல்!
"பெருந்தலைவர் காமராஜர் பெருமைகளை ஏற்றிப் போற்றுவோம்!" எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த மடல் வருமாறு :
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் கடிதம்.
ஜூலை 15 - உலக நாட்காட்டிகள் அனைத்திலுமே இந்தத் தேதி இருக்கும் என்றாலும், தமிழகத்திற்கு இந்த நாளுக்கென தனியானதொரு சிறப்பு உண்டு. ஆம்.. கல்வி வளர்ச்சி நாளாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்படும் இந்த நன்னாள்தான் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளாகும். தமிழக அரசியல் வரலாற்றில், தனி முத்திரை பதித்த முதல்வராக, 9 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து, இந்திய அரசியலுக்கும் அதுவரை இல்லாத புதிய வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர்; அவர் தந்த 'K - Plan' துணைக்கண்ட அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம். திராவிட இயக்கத்துக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும் சமூக - அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தபோதும், மேடைகளில் கடுமையான விமர்சனங்கள் மாறி மாறி வைக்கப்பட்டபோதும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களை, தந்தை பெரியார் அவர்கள் ‘பச்சைத்தமிழர்’ என்று அழைத்தார்; பேரறிஞர் அண்ணா அவர்களோ, “குணாளா.. குலக்கொழுந்தே..” என்றே கொண்டாடி எழுதினார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது சட்டமன்ற அனுபவங்கள் குறித்த பேட்டியில், தமிழகத்தின் ‘சிறப்பான முதல்வர்’ என்று காமராஜரைக் குறிப்பிட்டிருக்கிறார்.
திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரும், காமராஜர் மீது தனிப்பட்ட அன்பு செலுத்தினர். பெருந்தலைவர் காமராஜரும் அத்தகைய அரசியல் பண்பாட்டினைக் கடைப்பிடித்தார்.
சமூகநீதியின் தாய்மடியாக விளங்கும் தமிழகத்தில், நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ‘கம்யூனல் ஜி.ஓ.' எனப்படும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டு முறைக்கு, ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று குடியரசு நாடான இந்தியாவில் ஆபத்து ஏற்பட்டபோது, இடஒதுக்கீட்டினைக் காப்பதற்காக தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் அறப்போராட்டத்தை நடத்தினர். எழுச்சிமிகுந்த இந்தப் போராட்டத்தின் தன்மையையும் தாக்கத்தையும் உணர்ந்திருந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதனால், அன்றைய பிரதமர் பண்டித நேரு அவர்களிடம், தமிழகத்தின் நிலையையும், திராவிட இயக்கத் தலைவர்கள் நடத்திய போராட்டத்தின் தீவிரத்தையும் எடுத்துக்கூறினார். அதன் விளைவாக, இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு முறை காப்பாற்றப்பட்டது. முதல் திருத்தத்தின் மூலவராக இருந்து, திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை நிலை பெற்றிடத் துணை புரிந்தவர் காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவரான காமராஜர்.
சென்னை மாநகராட்சிக்கு 1959-ல் நடைபெற்ற தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆணையை ஏற்று, தலைவர் கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தால், தி.மு.கழகம் முதன்முறையாக வெற்றி பெற்று மாநகராட்சி நிர்வாகத்தை மேற்கொண்டது. அப்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்புக்கட்டளைப்படி, மாநகராட்சியின் சார்பில் சென்னை ஜிம்கானா கிளப் அருகே பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது.
அரசியல் களத்தில் எதிர்துருவங்களாக இருந்தபோதும், ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்கிற அரசியல் பண்பாட்டினைப் போற்றுவதில் முன்னோடியாக இருந்ததற்கு இப்படி எத்தனையோ சான்றுகள் உண்டு.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில், 1968-ம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது, அதன் தொடக்கவிழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் வாய்ப்பைப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வழங்கினார் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது, அவரது உயிரைக் காக்கும் எத்தகைய சிகிச்சையையும் மேற்கொள்வதற்கேற்ப வெளிநாட்டுப் பயணத்திற்கான மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பெறுவதில் பெருந்தலைவர் அவர்கள் தனிப்பட்ட ஆர்வம் செலுத்தினார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் உயிர்ப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்த 1969 பிப்ரவரி 2 இரவில் தலைவர் கலைஞர் உள்ளிட்ட கழக அமைச்சர்களுடன் கண்விழித்துக் காத்திருந்தவர் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை ஈன்ற அன்புத்தாயாரும் என் பாசத்திற்குரிய பாட்டியாருமான அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் மறைந்தபோது, அரசியல் பணி காரணமாக தலைவர் கலைஞர் அவர்கள் வருவதற்கு நேரமானது. அவருக்கு முன்னதாக தலைவரின் கோபாலபுரம் வீட்டிற்கு வந்து, அஞ்சுகம் அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இறுதி ஊர்வலத்திற்கான பணிகளையும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார் பெருந்தலைவர்.
தேர்தல் கள அரசியலைக் கடந்து, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பெருந்தலைவருக்கும் இருந்த நட்புறவை விளக்க இப்படி நெஞ்சை நெகிழ வைக்கும் எத்தனையோ நிகழ்வுகள் உண்டு!
1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் நாள் அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது, தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு நாட்டின் ஜனநாயகம் காக்கும் அறப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. நாடு முழுவதும் ஸ்தாபன காங்கிரசின் மூத்த தலைவர்கள் - சோஷலிஸ்ட் கட்சியின் முன்னோடிகள், இடதுசாரித் தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரசைக் கட்டிக்காத்து, இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் வழிகாட்டியாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு அரணாக இருந்தது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு.
நெருக்கடி கால இந்தியாவில் ஜனநாயகம் உயிருடன் இருக்கும் ஒரே மாநிலமாகத் தலைவர் கலைஞர் ஆட்சி செய்த தமிழகம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உயிர், 1975-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் தனது அரசியல் - வாழ்வியல் தலைவரான உத்தமர் காந்தியடிகள் அவர்களின் பிறந்தாளில் பிரிந்தது. அப்போது முதல்வராக இருந்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், காந்தியடிகளின் பிறந்தநாளில் மறைந்த பெருந்தலைவர் அவர்களின் உடலை கிண்டி - காந்தி மண்டபம் அருகிலேயே தகனம் செய்து, நினைவிடம் அமைத்திட வழிசெய்தார்.
பெருந்தலைவருக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடம் முட்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், அதனை விரைவாக சீர்படுத்துவதற்காக கொட்டும் மழையையும் இருளையும் பொருட்படுத்தாமல், தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, தனது ‘கார் ஹெட்லைட்டை’ ஒளிரச் செய்து, சீர்படுத்தும் பணிகளை நேரில் நின்று மேற்கொள்ளச் செய்தவர் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள்.
கிண்டி, காந்தி மண்டபம் அருகே பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு, அவருக்காக நினைவிடம் அமைக்கப்பட்டபோது, அதன் முகப்பில் அவரது ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் சின்னமான இராட்டைச் சின்னத்தைப் பொறித்துப் பெருமை சேர்த்தவர் தலைவர் கலைஞர் அவர்களாவார்கள். விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தையும் நினைவுச் சின்னமாக மாற்றி அமைத்தார் கலைஞர். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மறைவதற்கு 40 நாட்களுக்குமுன் நடைபெற்ற என்னுடைய திருமண விழாவில்; உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும், அவர் வருவதற்கென்றே அமைக்கப்பட்ட தனிவழியில் மணமேடைக்கு வந்து, அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோருடன் இணைந்து, வாழ்த்தும் ஆசியும் வழங்கிய அந்த நிகழ்ச்சி இன்றும் எனது கண்களின் நினைவுகளில் நின்று நிலைத்திருக்கிறது.
பெருந்தலைவர் வாழ்ந்த போதும்; அவர் வரலாறாக ஆனபோதும் அவர் மீதான மரியாதையை பல வகைகளிலும் வெளிப்படுத்தியவர் கலைஞர். நெருக்கடி நிலையை எதிர்த்து - பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்திய கலைஞர், தனது ஆட்சியையே 1976-ல் விலையாகக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தி.மு.கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படம் திறக்கப்பட்ட வேளையில், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் அவர்களைத் தனது அறைக்குத் தனியாக அழைத்து, பெருந்தலைவரின் படத்திற்குக் கீழே எழுதுவதற்குப் பொருத்தமான வாசகத்தைக் கேட்ட நிலையில், ‘உழைப்பே உயர்வு தரும்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் கணமே எழுதிக் கொடுத்து, கர்மயோகி காமராஜருக்குப் பெருமை சேர்த்தார்.
13 ஆண்டுகால இடைவெளிக்குப்பிறகு, 1989-ல் தமிழகத்தின் முதல்வராக மூன்றாம் முறையாகத் தலைவர் கலைஞர் பொறுப்பேற்று, ஆட்சி செய்தபோது, இந்தியாவின் பிரதமரான சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தபோது, அந்த மேடையில் உரையாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரையும், உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரையும் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததும், விழா மேடையிலேயே அதனை ஏற்று, பிரதமர் வி.பி.சிங் அவர்கள் அண்ணா - காமராஜர் ஆகியோரின் புகழ்ப் பெயர்களைச் சூட்டியதையும் மறக்க முடியுமா?
கழகம் ஆட்சி அமைத்த காலங்களில் எல்லாம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தலைவர் கலைஞர் அவர்கள் சிறப்புகளைச் செய்தபடியே இருந்தார். 2006-2011 தி.மு.கழக ஆட்சிக்காலத்தில், ஐந்தாம் முறை தமிழக முதல்வராக ஆட்சி செய்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவசக் கல்வி தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளினை தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள்தோறும் கல்வி வளர்ச்சி நாளாக எல்லாக் காலங்களிலும் கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சட்டமியற்றி, அதனை நடைமுறைப்படுத்தி, ஆண்டுதோறும் ஜூலை 15 அன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடிக்கச் செய்தார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோதும் இன்றளவும் அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கல்விக் கண் திறந்த கர்மவீரர் - தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றிய தலைசிறந்த முதல்வர் - அரசியல் பொதுவாழ்வில் அரிய மாமனிதர் - திராவிட இயக்கத் தலைவர்களின் மாறா அன்புக்குப் பாத்திரமானவர் - தலைவர் கலைஞர் அவர்களின் மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளாம் ஜூலை 15 அன்று, அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்படவிருக்கிறது. நம் தலைவர் கலைஞர் காட்டிய வழியில் ஜூலை 15-ம் நாளினை, கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடித்து, பெருந்தலைவர் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றிப் போற்றுவோம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!