M K Stalin
“தவிக்கும் வாய்க்கு தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கொள்ளையடிக்கத் துடிப்பதா?” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
"கிராமப்புறங்களில் 'அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அ.தி.மு.க. அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.
‘அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டத்தின் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். தவறினால் தி.மு.கழகம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிராமப்புறங்களில் 'அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும்' திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடும் அ.தி.மு.க அரசின் முடிவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'அனைவருக்கும் குழாய் மூலம் மார்ச் 2024-க்குள் குடிநீர் வழங்க வேண்டும்' என்ற 'ஜல் சக்தி மிஷன்' திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நேரத்தில் - கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி 2264.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தலே நடத்த விடாமல் கொள்ளையடித்தது போல், இப்போது உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தும், ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க நினைப்பது வேதனைக்குரியது. டெண்டர் 'கமிஷனை' மொத்தமாக ஒரே இடத்தில் வசூல் செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விட வேண்டும் என்று நினைப்பது 'பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின்' அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.
இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் ஐ.ஏ.எஸ்., ஜூலை 6-ம் தேதியன்று அவசர அவசரமாக ஒரு 'காணொலிக் காட்சி" மூலம் ஆலோசனையை நடத்தி, “15.7.2020-ம் தேதிக்குள் இதற்கான மாவட்ட அளவிலான செயல் திட்டங்களைக் கொடுக்க வேண்டும்” “31.7.2020-ம் தேதிக்குள் டெண்டர்களை விட்டு விட வேண்டும்” “சில பணிகளை 2021 மார்ச் 31-ம் தேதிக்குள் முடித்து பில் தொகையைக் கேட்டுப் பெற வேண்டும்” என்றெல்லாம் இவ்வளவு “அவசர வசூல் வேட்டை”க்கான வழிகாட்டுதல்களை வழங்குவது ஏன்?
குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களைச் சார்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வாதாடி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெற்று முடிந்து, இன்றைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இடம் பெற்று இருக்கிறார்கள். ஊராட்சி மன்றங்கள், 'கட்சி சார்பற்ற தேர்தல்' என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமின்றி, அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் மாவட்ட அளவில் டெண்டர் விட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குறைத்து, ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்புகளைக் கேலிக்கூத்தாக்கும் செயலில் ஈடுபடுவது அ.தி.மு.க அரசுக்கு வெட்கக் கேடான செயலாகத் தோன்றவில்லையா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு, இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், துறையின் அரசு செயலாளரும், ஏன், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கூட 'மனப்பூர்வமாக' ஒத்துழைப்பு வழங்குவது அதிர்ச்சியளிக்கிறது.
ஆகவே 19 லட்சத்து 74 ஆயிரத்து 985 வீடுகளுக்கு, 'குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும்' ஜல் சக்தி திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 2,264 கோடி ரூபாய் நிதியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி ஒதுக்கீடு செய்யத் தவறினால் திராவிட முன்னேற்றக் கழகம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனாவைப் பயன்படுத்தி அரசுத் திட்டங்களில், அதுவும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குச் சென்றடையும், தவிக்கும் வாய்க்கு தண்ணீர் வழங்கும் திட்டங்களில் கூட கடைசி நிமிடக் ('லாஸ்ட் மினிட்') கொள்ளையடிக்கத் துடிக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் சுருட்டல் முயற்சிக்கு ஒத்துழைத்து, சட்டத்தின் பிடியில் நாளைக்குச் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரி மற்றும் துறை அரசு செயலாளர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!