M K Stalin
“இப்போதும் வெறுங்கையால் முழம் போடும் வேலைதானா?” - பா.ஜ.க அரசின் அறிவிப்புகளை விளாசும் மு.க.ஸ்டாலின்!
“பிரதமர் மோடி நேற்று பெரிய அளவிலான மீட்புத் திட்டம் என முழங்கியதற்கும், இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட செயல்திட்டத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை; ஏழை - எளிய, நடுத்தர மக்கள் கைவிடப்பட்டு விட்டார்களோ என்ற ஏமாற்றத்தையே தருகிறது” என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
“கோவிட்-19” நோய்த் தொற்றினால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை அடியோடு தொலைத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருக்கும் ஏழை - எளிய மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு - குறு நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தரப் பிரிவு மக்கள் ஆகியோர்க்கு, நெருக்கடி மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில் கூட மனிதநேயத்துடன் உதவிசெய்ய மத்திய பா.ஜ.க. அரசு மனமிரங்கவில்லை என்பது உள்ளபடியே மிகுந்த வேதனையளிக்கிறது.
கொரோனாவிற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “ரூ.20 லட்சம் கோடி மீட்புத் திட்டம்” என்று, வழக்கம்போல் சில முழக்கங்களையும் இணைத்து முன்வைத்தார். ஆனால், இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள “செயல்திட்டம்”, பிரதமர் செய்த அறிவிப்பின்மீது பெருத்த ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது; இரண்டுக்கும் தொடர்பில்லாமல் நீண்ட இடைவெளி இருக்கிறது.
உணவுக்கும், மருந்துக்கும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், அப்படித் தப்பித்தவறி திரும்பிச் சென்றவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், 5000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம்கூட இல்லை என்பது, ஏற்கனவே சூழ்ந்துள்ள சங்கடங்களுக்கிடையே சலிப்பை உருவாக்கி இருக்கிறது. ஆக மொத்தத்தில், “ஏழை - எளிய மக்களுக்கு எதுவுமில்லை; நடுத்தர மக்களுக்கு ஒன்றும் இல்லை. அவர்களெல்லாம் கைவிடப்பட்டு விட்டார்களோ”என்ற அளவில்தான் இன்றைய நிதியமைச்சரின் பத்திரிகையாளர் கூட்டம் நிறைவு பெற்றிருக்கிறது.
மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒரு லட்சம் கோடி வரை நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் - மாநில நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏற்ற நிதி ஒதுக்கீடு இல்லை என்பதால் “கூட்டாட்சித் தத்துவத்தின்” கடமையையும் பொறுப்பையும் மத்திய அரசு நிறைவேற்ற இப்போதும்கூட எண்ணிப்பார்க்கவில்லை. 6.30 கோடிக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருந்தும், 45 லட்சம் நிறுவனங்களுக்காக, சில “நிவாரணங்களை” மட்டும் அறிவித்து - மற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ‘அம்போவென்று’ கை கழுவியிருப்பது கவலையளிக்கிறது.
கொரோனா பேரிடரால் ஒவ்வொரு துறையும் கடுமையான தாக்கத்திற்குள்ளாகி - தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ள இந்த மோசமான தருணத்தில், அந்தத் துறைகளைத் தூக்கி நிறுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் நிதியமைச்சர் மேற்கொள்ளவில்லை. தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற அடிப்படையை மறந்துவிட்டு, மத்திய அரசு செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் துயரங்களையும் துடைத்து - சிறுதொழில் முதல் அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கான அர்த்தமுள்ளதொரு நிவாரணத் திட்டத்தை ஏனோ பிரதமரும் அறிவிக்க முன்வரவில்லை; நிதியமைச்சரும் தன் செயல்திட்டத்தில் கூறிடவில்லை.
கொரோனா பேரிடரினால் இழந்த வாழ்வாதாரம், வருமானம், தொழில் முன்னேற்றம், மாநிலங்களின் நிதி நிலைமை என எதையும் மீட்கும் திட்டம் - குறிப்பாக, கொரோனாவை விட்டு வெளியே வரும்போது, இந்தப் பேரிடரால் நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான அணுகுமுறை, மத்திய பா.ஜ.க அரசிடம் இல்லாமல் - வெறுங்கையால் முழம் போடும் வேலையில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் அனைவரிடமும் வலுப்பட்டுள்ளது.
இது பேரிடர் நேரம்; பேரிடரிலிருந்து பொருளாதாரத்தை மீட்க வேண்டிய காலம். “வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன்; 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்” என்ற நிறைவேறாத தேர்தல் வாக்குறுதிகள் போல், கொரோனா பேரிடரிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய ஆக்கபூர்வமான செயல்திட்டம் எங்கே எங்கே என்று தேடிப் பார்க்கும் நிலைதான் இப்போதும் நீடிக்கிறது!
வேலையிழப்பும் - வருமான இழப்பும் ஒவ்வொரு குடும்பத்திலும் தாண்டவமாடும் இந்த நேரத்தில் மனிதநேயத்திற்கும் - மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் நேரடியாக பணமாக வழங்கிடும் திட்டத்தை முதலில் அறிவித்து, ஆறுதல் தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?