M K Stalin
“வருவாய்க்காக டாஸ்மாக்கை திறந்தது அவமானம்” நிதி ஆதாரம் குறித்து வெள்ளையறிக்கையை வெளியிடுக : மு.க.ஸ்டாலின்
''கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்து விட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்'' என்று தமிழக மக்கள் எழுப்பிய முழக்கங்களின் பேரொலி, கோட்டையில் அமர்ந்திருக்கும் இருக்கும் முதலமைச்சரின் காதுகளில் நிச்சயம் எதிரொலித்து பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
அதில், “கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வமும் கொண்ட அ.தி.மு.க. அரசைக் கண்டித்து இன்று கருப்புச் சின்னம் அணியும் போராட்டத்தை நடத்துவது எனத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுத்தோம்.
இது அரசியல் போராட்டம் அல்ல; மக்களைக் காக்கும், சமூகப் பாதுகாப்புப் பிரச்சினைக்கான போராட்டம் என்பதால், அனைத்துக் கட்சியினர் மட்டுமல்ல; தமிழக மக்களும், பெரும் எண்ணிக்கையிலான மகளிரும், கருப்புச் சின்னம் அணிந்து தங்களது எதிர்ப்பை அ.தி.மு.க. அரசுக்கு தெரிவித்துள்ளார்கள்.
'கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்' என்று தமிழக மக்கள் எழுப்பிய முழக்கங்களின் பேரொலி, கோட்டையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் முதலமைச்சரின் காதுகளில் நிச்சயம் எதிரொலித்து பதற்றத்தை அதிகப்படுத்தியிருக்கும்.
இதுவரை காட்டிய அலட்சியம், இதுவரை ஆட்கொண்டிருந்த மெத்தனம் ஆகியவற்றை விடுத்து ஆபத்து - பேராபத்து - அழிவு - பேரழிவு - என பூதாகரமாக உருவெடுத்துவரும் கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்கு, 'எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய் வார்த்திடாமல்', அ.தி.மு.க. அரசு தனது சிந்தனையை உகந்த வழியில் செலுத்த வேண்டும் என்பதை முன்னெச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
ஏனென்றால், இது மனித உயிர்ப்பிரச்னை; ஜீவ மரணப் போராட்டம்! மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை! இந்த நேரத்தில் தமிழக அரசு ஆற்றும் ஒவ்வொரு காரியத்திலும்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் மையங்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,829 ஆகிவிட்டது. நேற்று மட்டும் ஒரே நாளில் 771 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 35 உயிர்களை இழந்துள்ளோம். இந்த எண்ணிக்கை அச்சத்தை ஊட்டுவதாகவே அமைந்துள்ளது. இருந்தாலும், இந்தப் பேரிடரிலிருந்து நாம் மீள முடியும் என்ற நம்பிக்கை நெஞ்சத்தில் நிறைந்திருக்கிறது. இதுவரை 1516 பேர் குணமடைந்து வீடுதிரும்பி உள்ளார்கள் என்பது பொதுமக்களுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது.
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்து ஆட்சி செய்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ''முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்; முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்" என்று சொல்வார்கள். எனவே, இந்தப் பேரிடரிலிருந்து தமிழகத்தால் மீளமுடியும். ஆனால் அதற்கான முயற்சிகளை, திட்டமிடுதல்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசுதான் செய்ய வேண்டும். 'ஊடரங்கு அறிவித்துவிட்டோம், அதனால் கொரோனா ஒழிந்துவிடும்' என்பது மிகமிகப் பிழையான எண்ணம்.
கொரோனா தானாக ஒழியாது; அரசுதான் ஒழிக்க வேண்டும்! கொரோனா பரவும்; அது பரவாமல் அரசு தான் தடுக்க வேண்டும்! நோய்த் தொற்று எங்கிருந்து பரவுகிறது, எப்படி பரவுகிறது என்ற அறிவியல் ரீதியான ஆய்வு நோக்கமும், ஆக்கபூர்வமான திட்டமிடுதலும், ஆர்வமும் இருந்திருந்தால், ஆசியாவிலேயே மிகப்பெரிய கோயம்பேடு சந்தையிலிருந்து, பல மாவட்டங்களுக்கும், வேறு மாநிலத்திற்கும் பரவிய நோயை முன்கூட்டியே தடுத்திருக்கலாம். கோயம்பேடு பகுதிக்கு வந்து சென்றவர்கள் மூலமாக பயணம் செய்து பரவிய தொற்றே, இப்போது தமிழகத்தில் எண்ணிக்கை அதிகமானதற்குக் காரணம்.
கோயம்பேட்டில் இலட்சக்கணக்கில் தேனடையாகக் கூட்டம் கூட தாராளமாக அனுமதித்ததுதான் ஊரடங்கை அமல்படுத்தும் அழகா? கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடியபோது, கோயம்பேடு சந்தையையும் மூட வேண்டும் அல்லது பரவலாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போனது ஏன்?
"சென்னை அதிக மக்கள், நெருக்கமாக வாழும் நகரம். கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு இதுதான் காரணம்" என்று முதலமைச்சர், திடீர் ஞானோதயம் கண்டதைப் போல், காரணம் கண்டுபிடித்திருக்கிறார்.
"கொரோனாவே தமிழகத்துள் வராது" என்றார்; "ஒருவருக்கு வந்தால் கூட காப்பாற்றிவிடுவோம்" என்றார்; "அது பணக்கார வியாதி, ஏழைகள் பயப்பட வேண்டாம்" என்றார்; "மூன்றே நாட்களில் மாயமாய் மறைந்துவிடும்" என்றார்; "வெளிநாட்டுக்கு போய்விட்டு வந்தவர்களால்தான் பரவியது" என்றார்; இப்போது, "மக்கள் அதிகமாக இருக்கிறார்கள்" என்கிறார்.
நாடு, நகரம் என்று இருந்தால் மக்கள் வாழத்தான் செய்வார்கள். எங்கிருந்தாலும் அரசாங்கம்தான் அவர்களின் அரண்; மக்களைக் காப்பாற்றி, பாதுகாக்க வேண்டும்! இதைச் செய்வதற்கு கையாலாகாத அரசுதான், நித்தமும் ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறி, தன்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது தோல்விக்குக் காரணம் கண்டுபிடித்துச் சொல்பவர், காரியம் ஆற்றிட மாட்டார்' என்பது 'விவசாயி' என்று இட்டுக்கட்டிச் சொல்லிக் கொள்ளும் முதலமைச்சருக்குத் தெரியாதா?
ஊரடங்குக் காலத்திலும் பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்தியது தமிழக அரசு. கொரோனா காலத்திலும் துறைரீதியான கொள்ளைகள் குறையவில்லை; அது தொடரவே செய்தது. 'ரேப்பிட் கிட்' வாங்கியதிலும் ஊழல். இதன் உச்சமாக, கொரோனா காலத்திலும் மதுபானக் கடைகளைத் திறப்பதில்தான் தமிழக அரசு ஆர்வமாக இருந்தது.
மக்களைக் கூட்டமாகக் கூடாதீர்கள் என்று சட்டம் போட்டுவிட்டு; அந்த சட்டத்தை மீறுவதற்கு ஓட்டை போட்டுத் தருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு. மதுக்கடைகளை திறப்பது, சமூகத் தொற்றை எற்படுத்திப் பரப்பும் எனத் தெரிந்தும், அரசு இதைச் செய்வது, அரசின் மக்கள்நலனை மறந்த, பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
'வலிமையுள்ளவர்கள், ஆரோக்கியம் உள்ளவர்கள், உடல் பலமுள்ளவர்கள் பிழைத்தால் பிழைத்துக் கொள்ளட்டும்' என்கின்ற ஆணவம்தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்! ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் பசியுடனும் பட்டினியுடனும் முடங்கி உள்ளனர். ஆனால், "தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார்.
அவருக்கு சவாலாகவே சொல்கிறேன். "பசித்திருப்பவர்கள் தகவல் தாருங்கள்" என்று ஒரு பொதுத் தொலைபேசி எண்ணை தமிழக அரசின் சார்பில் தைரியம் இருந்தால் அறிவியுங்கள். உங்களுக்கு எத்தனை இலட்சம் பேர் தகவல் தருகிறார்கள் என்று பாருங்கள்.
கோட்டையில் உட்கார்ந்து கொண்டு, இன்னமும் டெண்டர் தேதிகளையும், காண்ட்ராக்ட் கமிஷன்களையும் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மக்களின் பசி, பட்டினிப் பற்றி என்ன தெரியும்? ரேஷன் கார்டுக்கு 5000 ரூபாய் வழங்கி அவர்களை அரசு பாதுகாக்க வேண்டும்; மாநில அரசின் 2 இலட்சம் கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் இதற்காக ரூ.3,850 கோடி மட்டுமே செலவாகும்.
பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்றத்தானே இந்தப் பணம் பயன்பட வேண்டும்? முதல்வருக்கு நெருக்கமான செய்யாதுரைக்குத் தரப்பட்ட காண்ட்ராக்ட் தொகையைவிட, இது அளவில் மிகவும் குறைவுதான்! மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாத இந்த அரசு, மருத்துவர்கள், செவிலியர்களைப் பற்றியும் கவலைப்படவில்லை. மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு அரசு முறையான பாதுகாப்பு வழங்காததால் அவர்களுக்கும் நோய்த் தொற்று பரவியுள்ளது. அவர்களது பாதுகாப்பை இனியாவது அரசு உறுதி செய்ய வேண்டும்.
எதைக் கேட்டாலும் தமிழக அரசின் நிதி நிலைமையைக் காரணம் காட்டுகிறார்கள். மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்; மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதிகள் பற்றிய விபரங்களும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். அதுதான் தொழிற்துறையினர், இந்த இக்கட்டான நேரத்தில் தங்களது எதிர்கால தேவையை திட்டமிட உதவுவதாக இருக்கும்.
பொருளாதாரத்தை மீட்க வழியில்லாத இந்த அரசுக்கு தெரிந்த ஒரே வழியாக மதுபானக் கடைகள் மட்டுமே இருப்பது அவமானமாகும்!
இவை அனைத்தையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கும் வகையில் இன்று கருப்புச் சின்னம் அணிதல், கருப்புக் கொடி பிடித்தல் ஆகிய வடிவங்களில் கண்டனப் போராட்டம் நடத்தி உள்ளோம். இந்தப் போராட்டம் தமிழக அரசின் மூடிய விழிகளை நிச்சயம் திறக்கும் என நம்புகிறோம்.
எத்தனையோ அறிக்கைகள் விடுத்தும், கடிதங்கள் அனுப்பியும், தீர்மானங்கள் போட்டும், அ.தி.மு.க. அரசு கண் திறந்து பார்க்காத - செவிசாய்க்காத மந்த நிலையை மாற்றத்தான், இத்தகைய போராட்டம் நடத்த வேண்டிய அவசிய, அவசரம் ஏற்பட்டது. அரசுக்கு உணர்த்த இதைத்தவிர வேறு வழியில்லை!
மக்களது பாதிப்பை உணர்த்த, இறுதியில் போராட்டம் நடத்தவே வேண்டிவந்தது. ஒவ்வொரு உயிரும் மகத்தானது; விலைமதிப்பில்லாதது. தினமும் இத்தனைப் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது; இத்தனைப் பேர் இறந்துள்ளார்கள் என்று செய்திக்குறிப்பு வெளியிடும்போது, குறைந்தபட்ச உயிரோட்டம் இருந்தாலும், ஒரு அரசாங்கத்துக்கு குற்றவுணர்ச்சி இருக்க வேண்டும்.
ஏதோ கிரிக்கெட் 'ஸ்கோர்' சொல்வது போல வழக்கமான பழக்கமாக மாறிவிடக்கூடாது என்பதை எச்சரிக்கை செய்கிறேன். மத்திய அரசிடம் நிதி கேட்க முதுகெலும்பு இல்லாமல், மதுபானக் கடைகளைத் திறந்து நிதிநெருக்கடியைச் சமாளிக்க முயல்வதும் - மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிதி ஒதுக்க முடியாமல் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்துவதும் சரியுமல்ல; முறையுமல்ல!
இது கணித்திடவியலாத பேராபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். கொரோனா என்ற சுழலில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட வேண்டாம்; தயவு செய்து தமிழ் மக்களைக் கைவிட்டுவிட வேண்டாம்; காலத்தின் பழியிலிருந்து தப்பிக்க நல்லவழி காணுங்கள்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?