M K Stalin
“கொரோனா நெருக்கடியிலும் ரேபிட் கிட் கொள்முதலில் முறைகேடு” - அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
ஐ.சி.எம்.ஆர் அங்கீகாரம் பெறாத ஒரு இடைத்தரகு நிறுவனத்திடம் அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆர்டர் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்படி அனுமதித்தார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
“தமிழக மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு நடத்தும் வகையில் - கொரோனா சோதனை செய்யும் அதிவிரைவு பரிசோதனைக் கருவிகளை (Rapid Test Kit) அதிக விலைக்கு வாங்கியுள்ள அ.தி.மு.க அரசின் முகமூடியைக் கிழித்தெறியும் வகையில், “இனிமேல் கொரோனா நோய் பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட் 600 ரூபாய்க்குப் பதிலாக ஜி.எஸ்.டி. உட்பட 400 ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்பட வேண்டும்” என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள மனித நேயம் மிக்க தீர்ப்பினை இதயபூர்வமாக வரவேற்கிறேன்.
இந்த அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகள் “அதிக” விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளன என்று முதன்முதலில் நான் குற்றம்சாட்டியபோது, “நாங்கள் ஐ.சி.எம்.ஆர் நிர்ணயித்துள்ள விலையில்தான் வாங்கியிருக்கிறோம்” என்று அ.தி.மு.க. அரசு கூறியது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் உமாநாத் ஐ.ஏ.எஸ்-ஸும், “குட்கா புகழ்" சுகாதாரத்துறை அமைச்சருடன் அமர்ந்து இந்த விலைக்கு வாங்கியதற்கு “வக்காலத்து” வாங்கி பேட்டியளித்து - தனியாருக்குக் கொள்ளை லாபம் போவதை நியாயப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.
ஆனால் “இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டை தயாரிக்கும் சீன நிறுவனம் ஒரு கிட்டை 225 ரூபாய்க்கு மட்டுமே விற்கிறது. அந்த கிட் இறக்குமதி செய்வதற்கு ஆகும் சரக்கு கட்டணம் 20 ரூபாய். ஆக மொத்தம் ஒரு கிட் விலை 245 ரூபாய்” என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களைப் பார்த்தால் - 245 ரூபாய் மதிப்புள்ள ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டிற்கு, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு 600 ரூபாய் கொடுத்திருக்கிறது என்ற தூசு படிந்த உண்மை அம்பலமாகியிருக்கிறது.
கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, “வானளாவிய” விலை கொடுத்து வாங்கியதற்கு இப்போது அ.தி.மு.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
அதுமட்டுமின்றி, இந்த மருத்துவ உபகரணங்களை நேரடியாக ஐ.சி.எம்.ஆர் அங்கீகரித்துள்ள நிறுவனங்களிடமிருந்து வாங்காமல், ஐ.சி.எம்.ஆர். அங்கீகாரம் செய்யாத சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்கியிருப்பதும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வெளிவந்துள்ளது.
ஊரடங்கை அவசரமாக அறிவித்து - மக்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்தும் அ.தி.மு.க. அரசு - பேரிடரிலும் இப்படியொரு வெளிப்படைத்தன்மை இல்லாத உள்நோக்கமுள்ள கொள்முதலுக்கு வித்திட்டு - நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையிலும், அதுகுறித்த கவலையின்றி, இப்படி உத்தரவு வழங்கியிருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது.
டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள அதே தீர்ப்பில் “பொது அமைதி பாதிக்கப்படும் வகையில் நாடு முன்னெப்போதும் இல்லாத ஒரு சுகாதாரப் பேரிடரைச் சந்தித்து வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கிறார்கள். பொருளாதாரம் ஸ்தம்பித்து நிற்கிறது. உயிர்ப் பாதுகாப்பு குறித்து ஒவ்வொருவரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் லாப நோக்கத்தைவிட பொதுநலனே முக்கியத்துவம் பெற வேண்டும்” என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட விலையிலிருந்து 145% அதிக விலை வைத்து வாங்கப்படும் கிட் “இனி இந்தியா முழுவதும் இந்த ரேபிட் டெஸ்ட் கிட் ஜி.எஸ்.டி உட்பட 400 ரூபாய்க்கு மிகாமல் வழங்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது மிகச் சிறந்த தீர்ப்பு!
நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பை - பேரிடர் நேரத்தில் மக்களின் மீது பொழிந்துள்ள கருணை மழையாகவே கருதுகிறேன்.
ஆகவே, 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட் கிட்டிற்கு, அ.தி.மு.க அரசு 600 ரூபாய் கொடுத்தது ஏன்? ஐ.சி.எம்.ஆர் அங்கீகரித்த நிறுவனத்திற்கு “ரேபிட் டெஸ்ட் கிட்” கொள்முதல் ஆர்டரைக் கொடுக்க ஏன் அ.தி.மு.க அரசு முன்வரவில்லை?
எல்லாம் நானே என்று முன்னின்று அரசுப் பணத்தில் தன்னை தினந்தோறும் “விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும்” முதலமைச்சர் பழனிசாமி, ஐ.சி.எம்.ஆர் அங்கீகாரம் பெறாத ஒரு இடைத்தரகு (Intermediary) நிறுவனத்திடம் அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆர்டர் வழங்க எப்படி அனுமதித்தார்?
மக்கள் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் - குறிப்பாக, 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.
இதுதவிர, அ.தி.மு.க. அரசால் வாங்கப்பட்ட இந்த “ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்”-களின் தரம், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட கொரோனா பரிசோதனை செய்த மாவட்டங்களில் கிடைத்த முடிவுகள் துல்லியமானதா என்பது குறித்து எல்லாம் முதலமைச்சர் பழனிசாமி விளக்கிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் இப்படி இக்கட்டான கேள்விகளைக் கேட்கலாமா, இது அரசியல் என்று எளிமையாகச் சொல்லி, கேள்விக் கணைகளைக் கடந்துபோக முயற்சி செய்யக் கூடாது. இது, மக்களின் பொதுச் சொத்தான கருவூலத்தைக் கரையான் அரிக்கும் காரியம் போன்றது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!