M K Stalin
திமுக ஆட்சிக்கு வந்ததும் 234 தொகுதிகளிலும் Anitha Achievers Academy அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் பேச்சு!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (18.3.2020), மாலை, தனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வார்டு 66 ஜவஹர் நகர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் மூன்றாவது பேட்ச்சில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்ற 71 மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேனா மற்றும் புத்தங்களையும் வழங்கினார். அதேபோல நான்காவது பேட்ச் பயிலும் 60 மாணவிகளுக்கு பேனா, புத்தங்கள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்மையத்தில் பயிற்சி பெறும் மாணவிகளிடையே ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“மருத்துவக் கல்வியைப் பெற முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் பெயரில் பயிற்சி மையம் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்து, 2019 பிப்ரவரி மாதம் இந்த அரிய முயற்சியைத் தொடங்கினோம். அப்படித் தொடங்கப்பட்ட நேரத்தில், இந்தப் பயிற்சியில் 61 மாணவிகள் இணைந்து பயிற்சி பெற்றார்கள். அந்த 61 பேரில் 59 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதைத் தொடர்ந்து, அதே 2019ம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் கட்டப் பயிற்சித் தொடங்கப்பட்டு, அதில் 67 பேர் வேலைவாய்ப்புக்குரிய பயிற்சியினைப் பெற்று, 51 பேர் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து மூன்றாவது கட்டமாக, அதே 2019 ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் 2020 வரை பயிற்சி பெற்றிருக்கும் மாணவிகள் 75 பேர். அதில் 53 பேர் வேலைவாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். இப்போது, இன்று நான்காவது கட்டமாகத் தொடங்கப்பட இருக்கும் இந்தப் பயிற்சியில் 61 மாணவிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். இன்னும் 20 பேர் சேரவிருக்கிறார்கள் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன்.
எப்படியும் இந்த 61 பேரில் நிச்சயமாக 40 பேருக்குக் குறையாமல் வேலைவாய்ப்பினைப் பெறப் போகிறீர்கள் என்ற செய்தியும் எனக்குக் கிடைத்திருக்கிறது. இதை முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்திட வேண்டும் என முடிவு செய்து, கொளத்தூர் தொகுதியில் இந்தப் பணியை நாம் முதலில் தொடங்கினோம்.
தொடங்கப்பட்ட நேரத்தில், ஏதோ நம்முடைய தொகுதியில் மட்டும் இதை நடத்திடாமல், தமிழகத்தில் இருக்கும், அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் இதே போன்ற முகாம்கள் அமைக்கப்பட்டு, அந்தந்தத் தொகுதியில் இருக்கும் உங்களைப் போன்ற மாணவிகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று என்னுடைய விருப்பத்தை நான் அப்போதே எடுத்துச் சொன்னேன்.
அது இன்றைக்கு ஓரளவுக்கு; முழுமையாக இல்லையென்று சொன்னாலும், மாவட்டச் செயலாளர் சேகர் பாபு அவர்களது தொகுதியில், அதேபோல் சைதாப்பேட்டை தொகுதியில், ஆயிரம் விளக்கு தொகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடைய தொகுதிகளில், தொடங்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் இந்த நேரத்திலும் நாம் இந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என்றால், உறுதியாகச் சொல்கிறேன்; நிச்சயமாகச் சொல்கிறேன்; ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு 234 தொகுதிகளிலும் இதே போன்ற பயிற்சி மையங்களை நடத்துவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்க விரும்புகிறேன்.
சென்ற நிகழ்ச்சியில் கூட நான் குறிப்பிட்டுச் சொன்னேன்; இந்த கொளத்தூர் தொகுதியில் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு வரும் போதெல்லாம் என்னையே அறியாமல் மகிழ்ச்சி பெறுவதுண்டு. எல்லா நிகழ்ச்சிகளிலும் மகிழ்ச்சி பெற்றாலும், இன்றைக்கு உங்களைச் சந்திக்கும் போது, இந்த முகாமில் பயிற்சி பெற்று, வேலை பெறும் நிலையைப் பார்க்கும் போது அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக, மாணவிகள், பெண்களுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அப்படிப்பட்ட மாணவிகள், உங்களைக் காப்பாற்றிக்கொள்ள, உங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற, தன்னம்பிக்கை பெற்றவர்களாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இங்கு வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
இந்த நிலைக்கு வந்திருக்கும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளை எடுத்துச் சொல்லி, இன்னும் பல வெற்றிகளை நீங்கள் பெற வேண்டும்; இன்னும் நல்ல நிலைக்கு நீங்கள் வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” என மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்