M K Stalin
“கடல் கடந்து வாழும் கலைஞரின் புகழ்” - அந்தமான் பயணம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்!
“கடல் கடந்து வாழும் கலைஞரின் புகழ்” எனக் குறிப்பிட்டு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் எழுதியுள்ள மடல் பின்வருமாறு :
“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
கழகத்தின் தலைமையகமாம் அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் சிலை வடிவில் உயிர்ப் பெற்றிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரும் செல்லும் இடமெல்லாம் வழிகாட்டுவது போன்ற உணர்வைப் பெற்றிருக்கிறேன். அந்த உணர்வுடன்தான் ஜனவரி 9ம் தேதி அதிகாலையில் அந்தமானுக்கு விமானத்தில் பயணித்தேன்.
முதல்நாள் சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான எதிர்க்கட்சித் தலைவரின் உரையினை நிகழ்த்திவிட்டு, மறுநாள் மேற்கொண்ட இந்தப் பயணத்தில் என்னுடன் கழகத்தின் அமைப்புச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் ஆகியோருடன் என் வாழ்க்கைத் துணைவியாரும் பயணித்தார்.
போர்ட்பிளேர் விமானநிலையத்தில் தரையிறங்கிய போது, தமிழகத்தில் தான் இன்னமும் இருக்கிறோமா என்கிற அளவிற்கு அந்தமான் கழகத்தினர் திரண்டு வந்து எழுச்சிமிகு வரவேற்பளித்தனர். அந்தமான் மாநில கழகச் செயலாளர் குழந்தை, அவைத்தலைவர் மருதவாணன், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொள்கையுணர்வுடன் முன்னெடுத்திருந்த இந்த வரவேற்பு நிகழ்வு, குடும்பப் பாசமிக்க நம் இயக்கத்திற்கேயுரிய மகிழ்ச்சியினையும் மனநிறைவினையும் அளித்தது. அந்தமானில் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓட்டல் வரை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாகத்துடன் வந்து தங்கள் உணர்வினை வெளிப்படுத்தினர்.
ஜனவரி 9 காலையில் அந்தமான் தி.மு.கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் இல்லத் திருமணம். பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள் அந்தத் திருமணத்திற்கு வந்திருந்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கருணாகரன் கழகத்தின் மீது தீவிரப் பற்று கொண்டவர். 35 ஆண்டுகளுக்கு முன் அந்தமானுக்கு வந்தபோதும், அங்கும் கழகப் பற்று மாறாமல் இயக்கப் பணியாற்றுபவர். பற்று என்பதைவிட வெறி என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருடைய வேகம் அமைந்திருக்கிறது. கருணாகரன் துணைவியார் அணிந்திருக்கும் தாலிகூட உதயசூரியன் வடிவத்தில்தான் அமைந்திருக்கும் என்ற தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். கருணாகரன் அவர்களின் மகள் திருமணத்தில் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட எல்லோரும் கழகப் பற்றுடன் சுயமரியாதை உணர்வுடன் திருமண விழாவில் பங்கேற்றிருக்க, மணமக்கள் தீனா ஜெபகனி-சாலமன் இணையரின் திருமணத்தை நடத்தி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
ஆளுநர் உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய உரைக்கு முதலமைச்சர் பதில் சொல்லி உரையாற்றுகிற நாளில் நான் அந்தமானில் கழகப் பொதுக்குழு உறுப்பினர் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தேன். சட்டப்பேரவையில் கழக உறுப்பினர்கள் புறக்கணித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றிருப்பதைத்தான் முதல்வர் தனது பதிலுரையில் தெரிவிக்கப் போகிறார். தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் அந்த உரையைவிட, தங்களை இயக்கத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டு கொள்கை வளர்க்கும் இத்தகையத் தோழர்கள் நிறைந்திருக்கும் திருமண விழாவில் பங்கேற்பது பலனளிக்கக்கூடியது என்பதால்தான் அந்தமான் நிகழ்வில் பங்கேற்றேன்.
மணமக்களை வாழ்த்திப் பேசிடும்போது, சுயமரியாதைத் திருமணத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் சட்டமாக்கியதையும், அதன் வாயிலாகத் தமிழ்ப் பண்பாடு நிலைநிறுத்தப்பட்டதையும் அந்தமான் வரை அந்தப் பண்பாடு தொடர்வதையும் சுட்டிக்காட்டினேன். கழகத்தினரின் ஆர்வமும் பற்றும், அந்தமானில் கழகம் தோன்றிய வரலாற்றினை நினைவூட்டின. தி.மு.கழகம் 1949ல் ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்ட நிலையில், அந்தமானில் 1963ல் தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இரவு பகல் பாராமல் இயக்கம் வளர்த்தவர்களின் பட்டியல் நீளமானது. அவர்களின் பேருழைப்பால் கழகம் வளர்ச்சி பெற்று, 2012 பிப்ரவரி 15 அன்று அந்தமான் தி.மு.கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் அபடின் பஜார் சாலையில், அம்பேத்கர் ஆடிட்டோரியம் எதிரில் உருவாக்கப்பட்டது. அதனைத் திறந்து வைக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.
2013ல் அந்தமான் தி.மு.க. பொன்விழா கொண்டாடிய போது, அந்தமான் கலைஞர் அறிவாலயத்தில் அக்டோபர் 18 அன்று பேரறிஞர் அண்ணா சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பினை நான் பெற்றதையும் குறிப்பிட்டேன்.
தமிழ்மொழி செழிக்க வேண்டும். தமிழினம் உயர வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் அனைத்து விதங்களிலும் உயர்வடைய வேண்டும் என்பதுதான் தி.மு.கழகத்தின் கொள்கை. அதற்கானப் பயணத்தில் மணமக்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என வாழ்த்துரை வழங்கினேன்.
திருமணம் என்பது இல்வாழ்க்கையின் இனிய சிறைவாசம் என்று சொல்வார்கள். கழகக் குடும்பத்தினரின் மணவிழாவை நடத்தி முடித்த பிறகு, அந்தமானில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க செல்லுலார் சிறைச்சாலையைப் பார்வையிடச் சென்றேன். முன்பே பல முறை அதனைப் பார்வையிட்டிருந்தாலும் ஒவ்வொரு முறையும் அது ஏற்படுத்தும் வீரமிக்க உணர்வினை மறந்திட முடியாது. எத்தனையெத்தனை வீரத் தியாகிகள் தங்கள் சொந்த சுகத்தை மறந்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக இந்த சிறையில் சித்திரவதைகளை அனுபவித்தார்கள் என்பது நினைவுக்கு வந்தது.
சுதந்திர இந்தியாவிலும் சென்னை மத்திய சிறையில் எதிர்கொண்ட மிசா காலக் கொடுமைகளையும் எண்ணிப் பார்த்தது மனது. செல்லுலார் சிறையை சுற்றிக்காட்டும் பணியில் இருந்தவர், பல தகவல்களைத் தெரிவித்தார். சென்னை மாகாணத்திலிருந்து அந்தமானுக்கு கொண்டு வரப்பட்ட கைதிகள் பற்றிய விவரங்களும் இருந்தன. எந்தக் கொட்டடியில் யார் அடைக்கப்பட்டிருந்தார், அவரை என்னவிதமாகத் துன்புறுத்தினர் என்பதையெல்லாம் விளக்கியபடி, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்தையும் காட்டினார். ஒரே நேரத்தில் மூன்று பேரை தூக்கில் போடும் கொடூரங்களும் நிகழ்ந்திருப்பதை எடுத்துரைத்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைத்த இந்திய தேசிய ராணுவம், ஜப்பான் துணையுடன் பிரிட்டிஷ் இந்தியப் படைகளுடன் மோதியபோது, அந்தமானைக் கைப்பற்றியது. 1943 முதல் 1945 வரை அந்தமான் பகுதி நேதாஜி படையினரின் ஆளுகையில் இருந்தது. அந்த வீரதீர வரலாற்றையும் நினைவுகூர்ந்தபடி செல்லுலார் சிறையின் பல பகுதிகளையும் பார்வையிட்டேன்.
சிறைச்சாலையைப் பார்வையிடுவதற்காக குடும்பத்தினர்-நண்பர்களுடன் கூட்டமாக வந்திருந்த தமிழகம், ஆந்திரா மற்றும் வடநாட்டை சேர்ந்தவர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய போது, கழகத்தை ஆதரித்தும் என்னை வாழ்த்தியும், உள்ளன்புடன் முழக்கங்களையும் எழுப்பினர். தமிழகத்தில் கழக ஆட்சி மிக விரைவில் அமையும் என்பதுதான் அவர்களின் வாழ்த்தொலி.
அன்று மாலையில், கடற்கரையை ஒட்டியுள்ள ‘மெரினா பார்க்‘ என்ற பகுதிக்குச் சென்றோம். இராணுவ உடையில் மிடுக்குடன் அமைந்த நேதாஜி சிலையைப் பார்க்கும்போதே உத்வேகம் கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களின் சிலைகள் அங்கே இருந்தன. இந்தியாவின் முப்படைகளிலும் பணியாற்றி, எதிரிகளுக்கு அஞ்சாமல் நாட்டின் நலன்காக்க சேவையாற்றிய பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களும் அந்தப் பூங்காவில் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்டபடியே நடந்தபோது, சுனாமி நினைவுத் தூண் பார்வையில் பட்டது. அந்த கறுப்பு நாளை எப்படி மறக்க முடியும்?
2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேஷியா பகுதியில் தொடங்கிய சுனாமி எனும் ஆழிப்பேரலை இந்திய எல்லையில் முதலில் தாக்கியது அந்தமானின் நிகோபர் தீவுகளில் உள்ள இந்திரா முனை என்ற பகுதியைத்தான். அதனைத் தொடர்ந்தே சென்னை தொடங்கி குமரி வரை பேரலை உருவாகி பல உயிர்களைப் பலிகொண்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நம் தலைவர் கலைஞர் அவர்கள் அந்த செய்தி கேட்டு கலங்கியதுடன், குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் வள்ளுவர் சிலை என்ன நிலையில் உள்ளது எனக் கேட்டு, நன்றாக இருக்கிறது என்பதையறிந்து சற்று நிம்மதி அடைந்ததும், தன் வசனத்தில் உருவான படத்திற்கான ஊதியத்தை சுனாமிக்கான முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நேரில் அளிக்குமாறு என்னைப் பணித்ததும் நினைவில் நிழலாடின.
அப்போது ஆர்வத்துடன் வந்த ஒரு தமிழ்க்குடும்பத்தினர், தங்களிடம் செல்போன் இல்லாத நிலையிலும், யாரிடமோ கேட்டுப்பெற்று, என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அவர்களின் அந்த ஆர்வத்திற்குக் காரணம், அவர்கள் குடும்பத்தில் தற்போது 7ம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு ‘பகுத்தறிவு’ எனப் பெயர் சூட்டியவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர். அந்தச் சிறுவன், குழந்தையாக இருந்தபோது, சென்னைக்கு அழைத்து வந்த குடும்பத்தினர், தலைவரை சந்தித்து பெயர் சூட்டச் செய்துள்ளனர்.
இத்தகைய இனிமையான செய்திகளுடன் அன்றைய பொழுது நிறைவடைய, மறுநாள் ஜனவரி 10ஆம் நாளன்று காலையில், ரோஸ் ஐலேண்ட் எனும் பகுதிக்குப் படகில் பயணமானோம். ’அந்தமானைப் பாருங்கள் அழகு...’ என்ற திரைப்படப் பாடலுக்கேற்ப, தென்னை மரங்களால் நிறைந்திருந்த அந்தத் தீவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஒரு குட்டி ராஜாங்கத்தையே நடத்தியுள்ளனர் என்பதற்கு அடையாளமாக தலைமைச் செயலகக் கட்டடம், தங்கும் இடங்கள், பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டுத் திடல் எல்லாமும் இருந்துள்ளது. நேதாஜியின் படையினருடன் ஜப்பான் நடத்திய தாக்குதலின்போது அவை முற்றிலுமாக சிதைக்கப்பட்டு, தற்போது சிதிலமடைந்திருப்பதை நம்முடன் வந்தவர்கள் விளக்கினர். ரோஸ் ஐலேண்டு என்ற பெயரும் 2018ல் இந்தியப் பிரதமர் அவர்களால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஐலேண்டு என மாற்றப்பட்டுள்ளது.
வரலாற்றுப் பின்னணி கொண்ட இடம் என்பதால் பல மாநிலங்களையும் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் அந்தமான் வரும்போது அதனைப் பார்வையிடுவது வழக்கம். அன்றைய நாளில் வந்திருந்த பலரும் என்னை சந்தித்து வாழ்த்தியதுடன், தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சி நிர்வாகத் திறனையும் இந்தியாவுக்கே முன்னோடியாகப் பல திட்டங்களை செயல்படுத்தியதையும் குறிப்பிட்டு, அந்த நிர்வாகத் திறனை விரைவில் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
ஏறத்தாழ 570 தீவுகளைக் கொண்டிருக்கும் அந்தமானில் ஒவ்வொரு தீவும் தனிச் சிறப்புகளைக் கொண்டவை. பழங்குடி மக்கள் நிறைந்த தீவுகளும் உண்டு. பாரம்பரியமிக்க அவர்களின் பண்பாடு பாழாகாமல், அதே நேரத்தில் அறிவியல் வளர்ச்சியின் பயன்களையும் பெறும் வகையில் மெல்லிய மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை ஒவ்வொரு பயணத்தின்போதும் அறிய முடிகிறது.
போர்ட்பிளேரில் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பியபோது, கட்சி பாகுபாடின்றி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். கேட்சல் செட்டில்மெண்ட் வெல்ஃபேர் அசோசியேஷன் என்ற அமைப்பின் துணைச் செயலாளர் லாரன்ஸ் என்பவர் கவனத்திற்கு கொண்டு வந்த பிரச்சினை என்பது ஈழத்தமிழர் நலன் சார்ந்தது.
1970-76 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி 78 குடும்பத்தினர் அந்தமானுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நிலம் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டாலும், 23 குடும்பத்தினருக்கு மட்டுமே நிலம் தரப்பட்டுள்ளது. வேலையும் சரியாகத் தரப்படவில்லை. 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிலமும் வேலையும் தரப்படும் என மீண்டும் உறுதியளிக்கப்பட்டும், இன்றுவரை நிறைவற்றப்படவில்லை. வீடு கட்டிக் கொள்வதற்காவது அனுமதிக்க வேண்டும் என 2014ல் கோரிக்கை வைத்துள்ளனர். 2018ல் அந்தமானுக்கு பிரதமர் மோடி அவர்கள் வந்தபோது அவரிடமிருந்து உத்தரவாதத்தை எதிர்பார்த்துள்ளனர். பிரதமர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை கவலையுடன் குறிப்பிட்டார்.
Also Read: “சட்டமன்றத் தேர்தலிலும் மக்களின் ஆதரவு தொடரும்; தி.மு.க ஆட்சியமைக்கும்” - உதயநிதி ஸ்டாலின் உறுதி!
அந்தமானில் ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட பலரும் மூன்று-நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து, வாணிபம் செய்து, அரசுப் பணியாற்றி அந்தப் பகுதியின் வளர்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட நிலையிலும் அவர்களுக்குப் பட்டா வழங்கப்படவில்லை என்பதையும் பலரும் எடுத்துரைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை மனதில் பதியவைத்துக் கொண்டு, அன்று மாலையில் அந்தமான் தி.மு.கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை திறப்பு விழா நிகழ்வுக்கு கழக நிர்வாகிகளுடன் புறப்பட்டேன்.
திருவிழாக்கோலம் பூண்டிருந்தது அந்தமான் கலைஞர் அறிவாலயம். சென்னை கடற்கரையில் தன் அண்ணனுக்குப் பக்கத்தில் ஓய்வெடுக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், சென்னை அண்ணா அறிவாலயம் போலவே, அந்தமானிலும் தன் அண்ணனுக்குப் பக்கத்தில் உயிர்த்திருக்கும் வகையில், நம் திராவிட சிற்பி தீனதயாளன் கைவண்ணத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலையை உணர்ச்சி மேலிட-உவகை பொங்கிடத் திறந்து வைத்தேன். சிலை திறப்பு விழா பொதுக்கூட்டம் அருகிலுள்ள மூவர்ணப் பூங்காவில் நடைபெற்றதால், கலைஞர் அறிவாலயத்திலிருந்து பேரணியாக கழகத்தினருடன் அந்த இடத்தினை அடைந்தோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு கட்சியின் தலைவராக அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பொறுப்பேற்று சாதனை படைத்தவர். அதே நேரத்தில், அவர் அனைத்துக் கட்சியினராலும் போற்றப்படும் தலைவர். அதனால், அந்தமானில் கலைஞர் சிலையினை அமைப்பதற்கு தோழமைக் கட்சியினரும் நிதியுதவி அளித்து தங்களின் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர். சிலை திறப்புப் பொதுக்கூட்டத்தில் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தமான் மாநில செயலாளர் கே.ஜி.தாஸ் அவர்கள், நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை குறிப்பிடும் போது, "நீங்கள் அனைவரும் 'தமிழின தலைவராகக்' குறிப்பிடுகிறீர்கள். அது தவறு, அவர் 'இந்தியாவின் தலைவர்'. இன்றும் இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக விளங்குபவர்” என்றார். அது நம் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளாம் நமக்கு அனைவருக்குமே கிடைத்த பெருமை.
அந்தமான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குல்தீப் ராய் சர்மா அவர்களின் சார்பில் அந்தமான் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் தமிழன் செல்வன் உரையாற்றும் போது, “ எம்.பி அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் இங்கே வரமுடியாமல் போனாலும், அவர் என்னிடம் இந்தக் கூட்டத்தில் பதிவு செய்ய சொன்னது, இங்கே காங்கிரஸ் வெற்றி பெறுவதற்குக் காரணம், தி.மு.க.வினரின் அளப்பரிய உழைப்புதான்" என நமது அந்தமான் தோழர்களின் உழைப்பை பெருமிதத்துடன் பதிவு செய்தார். அதற்கு அடுத்து பேசிய அந்தமான் மாநில கழக செயலாளர் குழந்தை அவர்கள் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார், "இனிமேல் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியையும் சேர்த்து 39 இடங்களில் வெற்றி பெற்றது என்று மட்டும் சொல்லாமல், அந்தமானையும் சேர்த்துக் கொண்டு 40 இடங்களில் வென்றுள்ளது எனச் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.அது நம் கழகத்திற்கும், அங்கு வாழும் தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும்.
சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றும் போது, இனி 40 தொகுதிகளில் கழகக் கூட்டணி வென்றது என அந்தமானையும் சேர்த்துக் கூறுவோம் என பலத்த ஆரவாரத்திற்கிடையே தெரிவித்தேன். மேலும், 1964ஆம் ஆண்டு அந்தமானில் பொதுப்பணித்துறை ஊழியர்களின் போராட்டத்தையடுத்து 72 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்ட போது, து.த.கோபால் அவர்கள் தனது பணியினைத் தூக்கியெறிந்துவிட்டு, ராமச்சந்திரனுடன் தமிழகம் வந்து பேரறிஞர் அண்ணாவை சந்தித்து ஆலோசனைப் பெற்று, அந்தமான் திரும்பி, போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வெற்றி கண்டதையும் குறிப்பிட்டேன்.
இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் வாய்ப்பு இல்லாத காலத்தில், தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நம் தோழர்களே தமிழ் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய அதில் அவர்களின் துணைவியரே ஆசிரியர்களாகி பாடம் நடத்தியதையும் நினைவுகூர்ந்தேன். அதன்பிறகே, 5ஆம் வகுப்பு வரை தமிழ் கற்றுத்தர அரசு ஒப்புக்கொண்டதையும், தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் கற்றுத் தந்தவர்களையே ஆசிரியர்களாக அரசு நியமித்த வரலாற்றையும் எடுத்துரைத்தேன்.
என்றென்றும்-எப்போதும் தமிழர் நலன் சார்ந்தும், உரிமைக்காகப் போராடும் மக்களின் பக்கம் நின்றும் பாடுபடும் தி.மு.கழகத்தின் நெடிய போராட்ட வரலாற்றை விளக்கி, விரைவில் நடைபெறவுள்ள அந்தமான் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கழகத் தோழர்கள் களப்பணியாற்றி, மக்களின் ஆதரவைப் பெற்று, மகத்தான வெற்றியைக் கழகத்திற்குப் பெற்றுத்தர வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன்.
1191 கடல் மைல்களுக்கு அப்பாலும் ஒளிரும் கன்னித் தமிழ்த் தலைவர் கலைஞரின் புகழ் கண்டு களிபேறுவகை கொண்டேன்.
ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படும் அந்தமான் கழகத்தினரின் உழைப்பும், அந்தமான் தமிழர்கள் தலைவர் கலைஞர் அவர்கள் மீது வைத்துள்ள பற்றும், உங்களில் ஒருவனான என் மீது காட்டுகின்ற உயர்வான அன்பும் கரையைத் தாலாட்டும் அலைகள் போல, இதயத்தின் கரைகளில் மோதி எதிரொலி எழுப்பிக் கொண்டே இருக்கின்றன. அவை மேலும் அதிகமாக உழைத்திடவும், மறைமுகத் தேர்தல் மூலமாக ஜனநாயகத்தைப் படுகொலை செய்து பச்சை ரத்தம் பரிமாறுகின்ற ஆட்சியாளர்களை நேரடியாகவும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி, தமிழகத்தை காலத்தே மீட்டிடும் வலிமையைப் பன்மடங்கு பலப்படுத்தவும், உறுதிமிக்க உந்துசக்தியாக அமைந்துள்ளன என்றால் மிகையில்லை."
இவ்வாறு தனது மடலில் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!