M K Stalin
“நல்லாட்சிக்கான முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல்; களத்தில் வென்று காட்டுவோம்” -தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்!
ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சிகளில் முறைகேடான தேர்தல் நடந்தால் அது மாநிலம் முழுவதும் புற்றுநோய் போல பரவிவிடும். உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தோழமை சக்திகளுடன் உறுதியாகத் துணை நின்று வென்று காட்டுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளுக்கு மடல் எழுதியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு,
“நாளைய நல்லாட்சிக்கு முன்னோட்டம் உள்ளாட்சித் தேர்தல் !
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
வருமா வராதா, வரவே வராதா, சட்டப் பேரவை பொதுத் தேர்தல்வரை தள்ளிக்கொண்டே போய் விடுவார்களா என்று மக்கள் மத்தியில் சந்தேகத்தை வளர்த்துக் கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தல்களின் ஒரு பகுதியாக, ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலின் பரப்புரை நிறைவடைந்து, வாக்குப்பதிவுக்கான நேரம் நெருங்கி வருகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் வலிமையும் தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் எப்போதும் உண்டு என்பதைத் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறோம். அதே நேரத்தில் எப்படி நடத்தப்படுகிறது என்பதையும் உன்னிப்பாகக் கவனித்து, ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பு சிதறிவிடக்கூடாது என்பதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். எப்போதெல்லாம் தி.மு.கழக ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்பு பலமாகக் கட்டமைக்கப்படும். ஊராட்சிகள் தோறும் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும். தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் எனப் பல முன்னோடித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு கிராமங்கள் தோறும் நல்ல வளர்ச்சி பெற்றன. எப்போதெல்லாம் அ.தி.மு.க. ஆட்சி அமைகிறதோ அப்பொதெல்லாம் உள்ளாட்சி என்கிற கட்டமைப்பு சிதறடிக்கப்படுவது வழக்கம். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பதை, 2016ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய உள்ளாட்சித் தேர்தல், மூன்றாண்டுகளுக்குப் பின்னர், 2019 இறுதியில், அதுவும் ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமே நடைபெறுவதிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
பாடத் தெரியாதவர் பக்க வாத்தியம் பழுது என்ற கதையாக, ஆட்சியில் இருப்பவர்களால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வக்கில்லாத நிலையில், தி.மு.க.தான் வழக்குப் போட்டுத் தேர்தலைத் தடுத்துவிட்டது என்று அ.தி.மு.க. பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. தி.மு.க. ஏன் வழக்குப் போட்டது என்பதை நெஞ்சைத் தொட்டு உண்மையைப் பேசுவார்களா அடிமை ஆட்சியாளர்கள்? வார்டு வரையறை செய்வதில் தொடங்கி, பழங்குடியினர்-மகளிர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு வரை, முறையாக, விகிதாசாரமாகக் கடைப்பிடிக்காமல், மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் மறைமுகக் கூட்டணி அமைத்துக்கொண்டு அவசர அவசரமாகத் தேர்தல் தேதியை அறிவித்த காரணத்தால்தான் தி.மு.கழகம் நீதிமன்றத்தை நாடியது.
உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அ.தி.மு.க. அரசின் அவசரக் கோலத்தை சுட்டிக்காட்டிக் குட்டு வைத்தன. அதற்குப் பதிலளிக்க இயலாமல், தேர்தலை நடத்துவதற்கு தெம்பும் திராணியும் இல்லாத காரணத்தால், ஏதாவது சாக்குபோக்கு சொல்லி உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த அ.தி.மு.க. அரசு, பழியை தி.மு.க. மீது போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமலேயே, சிறப்பு அதிகாரிகளைக் கொண்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்ற நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்ததுதான் கடந்த 3 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் நிலவிய உள்ளாட்சி அவலம். அவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு காணொலியையும் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளோம்.
ஊர்கள் தோறும் குப்பை மேடுகள், குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடைக் குட்டைகள், தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்த பகுதிகள், குடிநீர்க் குழாயைத் திறந்தால் வெறும் காற்றுதான் வருகிறது என்ற படுமோசமான நிலைமை. கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை; சுகாதார வசதிகள் இல்லை; சுற்றுப்புறம் தூய்மையாக இல்லை; மக்கள் நலனில் ஆட்சியாளர்களுக்கு அறவே அக்கறை இல்லை. அதனால்தான், ஒவ்வோர் ஊராட்சி நோக்கியும் எதிர்க்கட்சியான தி.மு.கழகம் சென்றது.
மக்களிடம் செல்வோம்.. மக்களிடம் சொல்வோம்.. மக்கள் மனங்களை வெல்வோம் என, தமிழ்நாட்டில் உள்ள 12ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சிகளில் கூட்டங்கள் நடத்தி, மக்களை நேரடியாகச் சந்தித்தது தி.மு.கழகம். கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் தங்களின் குறை கேட்க ஆளுந்தரப்பிலிருந்து ஒரு நாதியும் இல்லை என்ற குமுறலில் இருந்த மக்கள், அலை அலையாய் அந்தக் கூட்டங்களில் பங்கேற்று, பரிதாபமான தங்கள் நிலையை விளக்கினர். தி.மு.கழகத்தால் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் தங்கள் தேவைகளைத் தெரிவித்தனர். மனுக்களை அளித்தனர். ஊராட்சிகள் தோறும் மக்களிடம் சென்று, அவர்களின் மனங்களை வென்ற தி.மு.கழகம்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் பெரு வெற்றி பெறும் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்திருப்பதால், தேர்தல் ஆணையத்தையும், தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளையும் தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டு முறைகேடுகளைச் செய்து, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்துப் பறித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
தேர்தல் பணியில் உள்ள மாவட்ட ஆட்சியர் தொடங்கி, அனைத்து அதிகாரிகள் மீதும் தி.மு.க.வுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கடமை தவறாமல் தங்கள் ஜனநாயகப் பணியை பயமின்றி, பாரபட்சமின்றி நிறைவேற்றிட வேண்டும். அலட்சியம் காட்டினால், அதனால் விளைகின்ற சீர்கேடுகள், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, அதிகாரிகளுக்கும் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும். குப்பையும் சாக்கடையும் தேங்கினால், கொசுக்கள் பெருகும், டெங்கு பரவும், பலவித மர்மக் காய்ச்சல்கள்-தொற்று நோய்கள் உருவாகும். கொசுவுக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுக்கும் சாதாரண மக்கள் என்றோ அதிகாரிகள் குடும்பத்தார் என்றோ பேதம் தெரியாது. அனைத்து மக்களையும் போல அதிகாரிகளும் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடான தேர்தல் நடந்தால், அது மாநிலம் முழுவதும் புற்றுநோய்போல பரவிவிடும். அதற்கு அதிகாரிகள் இடம் கொடுக்க மாட்டார்கள் எனப் பெரிதும் நம்புகிறேன். ஆளுங்கட்சியின் தில்லுமுல்லுகளுக்கு உடன்போகக் கூடியவர்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டே தீரும் என்பதை நிச்சயம் மறக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
நம்பிக்கை பெருகியிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம் தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காகக் காத்திருக்கிறது. செழித்து விளைந்திருக்கும் வெற்றியை மிகவும் கவனமாக அறுவடை செய்து, ஒரு நெல்மணிகூட சிந்தாதபடி அப்படியே கொண்டுவந்து களஞ்சியத்தில் சேர்த்திடும் பெரும் பொறுப்பு, தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்கள் கைகளிலேதான் இருக்கிறது. கழக வேட்பாளர் போட்டியிடும் இடமாக இருந்தாலும், தோழமைக் கட்சியினர் போட்டியிடுகின்ற இடமாக இருந்தாலும், வெற்றி ஒன்றே குறிக்கோள். வேறெதுவும் நம் கவனத்தைச் சிதறடித்துவிட அனுமதிக்கக் கூடாது.
நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி கூறுவாரே, வில் ஏந்திய அருச்சுனனுக்கு அம்பின் நுனியும் கொம்பில் இருந்த பறவையின் கழுத்தும் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது போல, அவரது உடன்பிறப்புகளாம் உங்களுக்கு தி.மு.கழகக் கூட்டணி வேட்பாளர்களும் அவர்களின் வெற்றியும் மட்டுமே கருத்திலும் கவனத்திலும் இருக்க வேண்டும்.
கொள்ளையே கொள்கை என்று, நாளெல்லாம் லஞ்சம், பொழுதெல்லாம் ஊழல் எனத் திளைக்கும் இந்த கமிஷன் - கரப்ஷன் - கலெக்ஷன் ஆட்சியாளர்களை விரட்டியடித்திடுவதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள வாய்ப்புதான் ஊரக உள்ளாட்சித் தேர்தல். நாளைய நல்லாட்சிக்குக் கட்டியம் கூற, உள்ளாட்சித் தேர்தல் களத்தில் தோழமை சக்திகளுடன் உறுதியாகத் துணை நின்று வென்று காட்டுவோம்! ” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மடலில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !