M K Stalin
#CAA : "அவர்கள் தமிழின துரோகிகள் என்றே அடையாளம் காணப்படுவார்கள்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தி.மு.க இளைஞரணி சார்பில் கடந்த டிசம்பர் 13ம் தேதி குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று தமிழகம் முழுக்க தி.மு.க சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், கொண்டுவந்த பா.ஜ.க அரசிற்கு எதிராகவும், ஆதரவளித்து துரோகமிழைத்த அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், குடியுரிமை சட்டம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசிக்க சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
தி.மு.க சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
அப்போது அவர் பேசியதாவது, “இன்று நடைபெற்ற கூட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. வருகிற 23ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் மிகப்பெரிய பேரணியை நடத்துவது என்று முடிவுசெய்துள்ளோம்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை பெறுவோர் பட்டியலில் உள்ள அண்டை நாடுகளில் பட்டியலில் இலங்கை இடம்பெறாமல் போனது ஏன்? அகதிகளாக வரும் வேறு மதத்தினரில் இஸ்லாமியரை தவிர்த்திருப்பது ஏன்? இந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்துத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர், பா.ம.க மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் என தமிழகத்திலிருந்து 12 பேர் இந்த சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்ததால்தான் இந்த சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவர்கள் தமிழின துரோகிகள் என்றுதான் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்; மன்னிக்கவும் மாட்டார்கள்.” எனத் தெரிவித்தார்.
மேலும், “அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
அ.தி.மு.க மற்றும் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை மோடி, அமித்ஷா என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே அடிபணிந்து, காலில் விழுந்து ஏற்றுக்கொள்பவர்கள்.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “வரும் டிசம்பர் 23ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் பேரணியில் கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!