M K Stalin
“அரசு நிர்வாகத்தின் அலட்சியமே 17 பேர் உயிரிழப்புக்குக் காரணம்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் உயிரிழந்த இடத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் நேற்று காலை தடுப்புச் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் நான்கு வீடுகளைச் சேர்ந்த 17 பேர் உடல் நசுங்கியும், மண் மூடியும் உயிரிழந்தனர்.
நடூர் ஏ.டி காலனி பகுதியில் துணிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியன் என்பவரது பங்களாவை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு வீடுகளின் மேல் விழுந்து தரைமட்டமாக்கியது. இதனால் அந்த வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த 2 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையடுத்து, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நீதி வேண்டியும், சுற்றுச்சுவர் அமைத்த துணிக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலிஸார் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களை கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இந்நிலையில், சம்பவ இடத்தைப் பார்வையிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின், “அந்த சுவர் பழுதடைந்திருக்கிறது, அதனால் எந்நேரமும் விழுந்து ஆபத்து ஏற்படலாம் என நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம், அமைச்சரிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த 17 பேரின் உயிர் நிச்சயம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
அரசு, அதிகாரிகள், அமைச்சரின் அலட்சியத்தால், சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. 17 பேரின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறந்தவர்களின் உடல்களை, அவர்களது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தாமல் திருட்டுத்தனமாக பிரேத பரிசோதனை செய்திருப்பது வேதனையளிக்கிறது. தொடக்கத்தில், இறந்தவர்களின் உடல்களை வாங்க அவர்களின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அப்போது, இப்பகுதி மக்கள் இச்சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக இந்த நிதியுதவி போதாது. அதை அதிகப்படுத்தி வழங்கவேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இறந்த 17 பேரின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அப்பகுதி மக்களுக்கு வீடுகளை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும்.
இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. வழக்கு மட்டும் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்குக் காரணமானவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சிஆர்.இராமசந்திரன், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?