M K Stalin
''உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தி.மு.க மீது பழிபோடுவது ஏன்?'' - மு.க.ஸ்டாலின் கேள்வி!
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் மகள் திருமண நிகழ்ச்சி புதுக்கோட்டை கலைஞர் திடலில் நடைபெற்றது. இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், நான் இங்கு தி.மு.க தலைவராகவோ எதிர்க்கட்சித் தலைவராகவோ நான் வரவில்லை. பெரியண்ணன் அரசுவின் அண்ணனாக திருமண விழாவை நடத்தி வைக்க வந்துள்ளேன்.
கட்சியால் என்ன லாபம் என்று நினைக்காமல் தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று பணியாற்றியவர் என்று கலைஞரால் பாராட்டப்பட்டவர் பெரியண்ணன் அவர்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க பொய் சொல்லி வெற்றி பெற்றதாக திரும்பத் திரும்ப தெரிவித்து வருகிறார். இன்றைக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றுள்ளது. நீங்கள் பொய் சொல்லி வெற்றி பெற்று உள்ளீர்களா.
அ.தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை மூன்று வருடமாக நடத்தாமல் தி.மு.க மீது பழிபோடுவது ஏன். தி.மு.க வழக்கு போட்டது உண்மைதான். உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று தான் வழக்கு தொடுத்தோம். நீதிமன்றம் முறையாக நடத்துங்கள் என்று உத்தரவிட்டது.
இப்போது பல்வேறு மாவட்டங்களை பிரித்துள்ளார்கள். அந்த மாவட்டங்களை பிரித்து முறையாக செய்தார்களா இல்லை. தி.மு.க வழக்கறிஞர்கள் சார்பில் நான்கு முறை மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தோம்.
புதிதாக அறிவித்த மாவட்டங்களில் வரையறை இல்லாமல் தேர்தல் நடத்த கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். ஆனால் தொடர்ந்து முதலமைச்சர் தி.மு.க உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் வழக்கு தொடர்கிறது என்று பொய்யான புகாரை தெரிவித்து வருகிறார்.
பொங்கல் பரிசு திட்டத்தை அரிசி அட்டைக்கு மட்டும் என அறிவித்திருக்கிறார்கள். தலைவர் கலைஞர் ஆட்சியில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது.
அது போல பொங்கல் பரிசு திட்டத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு முன்கூட்டியே பொங்கல் பரிசு வழங்குகிறது.
யாருடைய காலையும் பிடித்து கொண்டு முதல்வர் ஆக வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் கலைஞரின் மகன், எனக்கு சுயமரியாதை உள்ளது. '' எனத் தெரிவித்தார்.
முன்னதாக பெரியண்ணன் அவர்கள் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!