M K Stalin
“கோட்டையை விட்டு கொள்ளைக் கூட்டத்தை விரட்டிடுவோம்” - தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
“மத்திய - மாநில அரசுகள், நம் மீது வீண்பழி சுமத்தி, அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புகிற காரியங்களில் ஈடுபடுவார்கள். பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாக மக்கள் மத்தியில் அ.தி.மு.க. ஆட்சியின் சீர்கேடுகளைக் கொண்டு சென்று பதியவைக்க வேண்டும்!” “கொள்ளைக் கூட்டத்தை கோட்டையை விட்டு விரட்டிடுவோம்!”
இன்று (10-11-2019) காலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதன் முழுவிவரம் பின்வருமாறு:
“தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும், என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, வணக்கம்!
பொதுவாக, நம் பொதுக்குழுவை அண்ணா அறிவாலயத்தில் - கலைஞர் அரங்கத்தில் நடத்துவதைத்தான் வழக்கமாக வைத்திருந்தோம். ஆனால் அப்படி நடைபெறும் நேரத்தில், மேடையில் இருந்து அனைவரையும் பார்க்க முடியாத ஒரு சூழல் ; அரங்கிற்கு வெளியே வைக்கப்படும் தொலைக்காட்சிகள் மூலம்தான் பொதுக்குழு உறுப்பினர்களே நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால் இந்த முறை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அரங்கத்துக்கு உள்ளேயே அமர்ந்து நிகழ்வைப் பார்க்க வேண்டும்;. அனைத்து உறுப்பினர்களும் பொதுக்குழுவில், விவாதங்களில் பங்கேற்க வேண்டும், விவாதங்களை அருகிலே இருந்து கேட்க வேண்டும் என்று முடிவு செய்து, எந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில், சென்னை மேற்கு மாவட்டக் கழகத்தின் செயலாளர் ஜெ. அன்பழகன் அவர்கள் இந்த முயற்சியைத் தெரிவித்தார்.
கழகப் பொதுக்குழுவிற்கு இந்த ஒய்.எம்.சி.ஏ திடலைத் தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாது, திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் பதிவு செய்யப்படும் அளவிற்கு, மிக அழகான மேடை, மண்டபம் போன்ற சிறப்பான பந்தல் ஆகியவற்றை, அவருக்கே உரிய வகையில் அற்புதமாக ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்காக முதலில் உங்கள் அனைவரின் சார்பிலும் அவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
“என்னதான் என் மனதுக்குள் உற்சாகத்தை உருவாக்கிக் கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருந்தாலும், தலைவர் கலைஞர் அவர்களின் நினைவுகள் என் மனதை இன்றைக்கும் பிழிந்துகொண்டிருக்கின்றது. பொதுக்குழுவில் நுழைகிறபோது, தலைவர் கலைஞர் அவர்கள் அங்கே கம்பீரமாக வீற்றிருப்பாரே என்ற நினைவோடுதான் நான் இந்த அரங்கத்திற்குள் நுழைந்தேன்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி நம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார்கள். மறைந்துவிட்டார் என்று சொல்லக்கூடாது. வங்கக் கடலோரத்தில் அறிஞர் அண்ணாவுக்குப் பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்; உறங்கிக் கொண்டிருக்கிறார்.
அதே ஆகஸ்ட், 28ஆம் நாள் என்னை, தலைவர் கலைஞர் அவர்கள் வகித்த தலைமைப் பதவிக்கு பொதுக்குழு உறுப்பினர்களான நீங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து, ஒற்றுமையுணர்வுடன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். "நீங்கள்" என்று சொன்னால், தனிப்பட்ட நீங்கள் அல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் பிரதிநிதிகளாக இருந்து நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள்.
அப்படித் தேர்ந்தெடுக்கிற நேரத்தில், அப்போதே நான் சொன்னேன்; "நான் கலைஞர் அல்ல. தலைவர் கலைஞரைப் போல எனக்கு எழுதத் தெரியாது. தலைவர் கலைஞரைப் போல பேசத் தெரியாது. ஏன், தலைவர் கலைஞர் அவர்களைப்போல உழைக்கவும் தெரியாது. ஆனால், எதையும் முயன்று பார்க்கும் ஆர்வமும் துணிவும் எனக்கு உண்டு. காரணம், தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு அந்தத் தன்னம்பிக்கையைக் கற்றுத்தந்திருக்கிறார். அதனால்தான் முடிந்தவரையில் உழைத்தேன், உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் சக்தி உள்ளவரை உழைத்தேன், உழைப்பேன். ஏன், என் சக்தியை மீறியும் நான் உழைத்தேன், உழைப்பேன், உழைத்துக் கொண்டே இருப்பேன்!" - என்று குறிப்பிட்டேன்.”
“என்மீது பற்றுக்கொண்டவர்கள், பாசம் கொண்டவர்கள், நம் முன்னோடிகள், நிர்வாகிகள் என்னிடம் அடிக்கடி சொல்வார்கள். நம் பொருளாளர் அவர்கள்கூட என்னிடம் சில நேரங்களில் உரிமையில் கோபமாகப் பேசுவதுண்டு, "கொஞ்சம் ஓய்வெடுப்பா!" என்று. "சிறிது நேரமாவது ஓய்வெடுக்கக்கூடாதா?" என்று கேட்கிற அளவுக்கு உழைத்தேன். இந்த ஓராண்டு காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கே மலைப்பாகத்தான் இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் இன்று கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. தமிழக அரசியலில் மட்டுமல்ல; அகில இந்திய அளவிலும் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. ஏற்கெனவே 89 சட்டமன்ற உறுப்பினர்களை நாம் பெற்றிருந்தோம். இப்போது 100 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறோம். யாரால்? இது, தனிப்பட்ட என்னுடைய சாதனை அல்ல. இந்தச் சாதனை அனைத்தும் உங்களைத்தான் சேரும். உங்களை உருவாக்கியிருக்கும் நம் தொண்டர்களைச் சேரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.”
“நாடாளுமன்ற மக்களவையில் கடந்த ஆண்டு நமக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனால் இன்று, 24 பேர் ‘உதயசூரியன்’ சின்னத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றால், இது தனிப்பட்ட எனக்குக் கிடைத்த வெற்றி அல்ல. தி.மு.கழகத் தொண்டர்களால், உங்களது ஓயாத உழைப்பால் கிடைத்த வெற்றி. இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உட்கார்ந்திருக்கிறது என்றால், அது உங்களது சாதனை. இயக்கத் தொண்டர்களின் உழைப்பு. நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்றோம். தொண்டர்களின் உழைப்புதான் அதற்குக் காரணம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
இங்கே பேசிய நம் பொதுக்குழு உறுப்பினர்கள் குத்தாலம் கல்யாணம் தொடங்கி , அனைவரும் நேரத்தின் அருமை கருதி உரையாற்றியிருக்கிறார்கள். பல்வேறு கருத்துகளை - கோபித்துக்கொள்வார்களோ என்று தயங்காமல், வெளிப்படையாக முன்வைத்திருக்கிறார்கள். சிலர் பிரச்சினைகளை எடுத்துச்சொன்னார்கள். இவை எல்லாம் ஏற்கெனவே நாம் அறிந்தவைதான். சில புதிய செய்திகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.”
“நான் செயல்தலைவராகப் பொறுப்பேற்றபிறகு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தினோம். அந்தக் காலகட்டத்தில், அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு மாவட்டமாக அழைத்து, ஆய்வு நடத்தினோம். மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் என அனைவரையும் தனித்தனியாக அழைத்துப்பேசி ஆய்வு செய்தோம். அதன் அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுத்தோம். முழுமையாக எடுக்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு நடவடிக்கைகள் எடுத்தோம். அதன் பலனாக, நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி கிடைத்தது.
நீங்கள் இங்கே கூறிய கருத்துகளையெல்லாம் என் மன ஏட்டில் குறித்துவைத்துக் கொண்டேன். அவையெல்லாம் காலச்சூழலுக்கேற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும், அதன்மீது தலைமைக்கழக நிர்வாகிகளுடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியபோது நான் சொன்னேன், ‘நான் ஒரு சர்வாதிகாரியாக மாறப்போகிறேன்’ என்று. அது வெறும் பேச்சுக்காக அல்ல. கழகத்தின் வளர்ச்சிக்காக, கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக, நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொன்னேன்.”
“நீங்கள் கூறிய சில உண்மையான விமர்சனங்களை, சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இல்லையென்றால் திருத்தப்படுவார்கள் என்ற உறுதியை பொதுக்குழு மூலமாக எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன். அதேபோலத்தான், தலைமைக் கழக நிர்வாகிகளாக இருந்தாலும், மாவட்டச் செயலாளர்களாக இருந்தாலும், மற்ற நிர்வாகிகளாக இருந்தாலும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். யாரும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்து விடக்கூடாது.
பல லட்சக்கணக்கான தொண்டர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். தங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களை, தங்களுக்குக் கீழ்தான் என்று நினைத்துவிடக்கூடாது . அனைவருக்கும் பதவிகள் வழங்க முடியாது. சில ஆயிரம் பேர்தான் பொதுக்குழு உறுப்பினர்களாக முடியும். சில நூறு பேர்தான் செயற்குழு உறுப்பினர்களாக முடியும். நூறுக்கும் குறைவானவர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும். சில 10 பேர்கள் தான் தலைமைக் கழக நிர்வாகிகளாக முடியும். அதற்காக, இவர்கள் மட்டுமே கழகமா? இந்தப் பதவியைத் தாண்டி லட்சக்கணக்கான தொண்டர்களால்தான் கழகம் உறுதியாக நிற்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.”
“அவர்களால்தான் நீங்கள் இந்த அரங்குக்குள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறீர்கள், அவர்களால்தான் நானும் இந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த எண்ணத்தை யாரும் எந்தச் சூழ்நிலையிலும் மறக்காமல் இருந்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு எந்தக் கொம்பனாலும் எந்தக் காலத்திலும் முடியாது. எத்தனை பெரிய மாளிகையையும் கட்டலாம். அடித்தளம் சரியாக அமையவேண்டும். அத்தகைய அடித்தளம் தான் தொண்டர்கள். அவர்களை அரவணைத்துச் செல்லுங்கள். அவர்களது ஆலோசனைகளைக் கேளுங்கள். அவர்களிடம் களநிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள். அவர்களோடு சில நிமிட நேரம் செலவிடுங்கள். அவர்கள் மூலமாகத் தான் உண்மையான செய்திகளை முழுமையாக அறிய முடியும்.
நகரச் செயலாளர்களுக்கு அந்த நகரம் அத்துப்படியாக இருக்க வேண்டும். ஒன்றியச் செயலாளர்களுக்கு அந்த ஒன்றியம் முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்களுக்கு அந்த மாவட்டமே மனப்பாடமாக இருக்கவேண்டும். சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மட்டும் கட்சிப் பணி ஆற்றாமல், அனைத்து நேரங்களிலும் கட்சிப் பணி ஆற்றிட வேண்டும். இந்த மாதம் இந்தப் பகுதி, இந்த வாரம் இந்தப் பகுதி என்று திட்டமிட்டு பணியாற்றினால், நம்மை வீழ்த்த யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான், ஊராட்சிக் கழகங்களை கிளைக் கழகங்களாக மாற்றும் வகையில் கழகத்தில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 12,500 ஊராட்சிகளுக்கு ஊராட்சி செயலாளர்களை வைத்திருந்தோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தினோம். நம் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அது ஒரு காரணம். அங்கு சென்ற பிறகு நிறைய உண்மைகள் தெரியவந்தன. ஊராட்சி என்பது மிகப்பெரிய ஊர்கள் கொண்டது. இதனை ஒரு செயலாளர் இருந்து கவனிக்க முடியாது. அதனால் கிளைகளாகப் பிரித்திருக்கிறோம்.”
“இதுவரை 12,500 ஊராட்சி செயலாளர்கள் இருந்தார்கள். இனிமேல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக் கழகங்கள் உருவாகப்போகின்றன. அதனால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிளைக்கழகச் செயலாளர்கள் வரப்போகிறார்கள். அதன்மூலம் மக்களோடு மக்களாக ஒன்றாக இணைந்து நெருக்கமாகப் பணியாற்றிட முடியும். 30, 40 வருடங்களுக்கு முன்பு எப்படிப் பணியாற்றினோமோ, அதுமாதிரி பணியாற்றிட முடியும். எப்படி நாடாளுமன்றத் தேர்தலில் நமது வெற்றியைப் பற்றி நான் பெருமை பொங்கச் சொன்னேனோ, அதேபோல் நமக்கு இருக்கும் வருத்தத்தையும் சொல்லியாக வேண்டும்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். ஆளும் கட்சி அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையைப் பயன்படுத்தி பணப்பட்டுவாடா செய்ததால் தோற்றோம் என்பது உண்மைதான். ஆனால் அதுமட்டும் காரணமில்லை. நமது பணியில் ஏதோ குறைபாடு இருக்கிறது. அதுவும் தோல்விக்கு ஒரு காரணம். ஆகவே கழகத்தின் அடிக்கட்டுமானத்தை பலப்படுத்த வேண்டும். மாநாடு போடுகிறோம். பொதுக்கூட்டம் நடத்துகிறோம். ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறோம். சட்டமன்றத்தில் வாதாடுகிறோம். நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கிறோம். இவைகளெல்லாம் மக்களுக்காக. கட்சிக்காகச் செய்யவேண்டியது என்பது, அமைப்பை பலப்படுத்துவது, கிளைகளை உருவாக்குவது, உறுப்பினர்களை அதிகப்படுத்துவது, மக்களோடு மக்களாக நிர்வாகிகள் இரண்டறக் கலந்து பழகுவது.”
“அடிமட்ட நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் அரவணைத்துச் செல்வது ; தலைமை கழகத்தோடு மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது; இத்தகைய கட்டமைப்பில்தான் கழகம் நிற்கிறது. அப்படி நிற்கும் கழகம்தான் வெற்றி பெறும்! பொதுக்குழுவில் இரண்டு முக்கியமான சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். திருநங்கைகளை கழகத்தில் இணைக்க ஒரு சட்டத் திருத்தம்; "திருநங்கைகள்" என்ற பெயருக்கு அரசு அங்கீகாரம் கொடுத்தவர், தலைவர் கலைஞர் அவர்கள். அதேபோல் , வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழர்களுக்கான அமைப்பு; அவரவர் வாழும் நாடுகளில் அமைத்துக்கொள்ளவும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தி.மு.க.,வை நோக்கி மக்கள் வரவேண்டுமென்றால், மக்களை நோக்கி தி.மு.க. நிர்வாகிகள் வேகமாகச் செல்ல வேண்டும்.
பேசியவர்கள் பலர் தி.மு.க ஆட்சிக்கு வரும் என்றீர்கள். தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும்; அதில் சந்தேகமில்லை. நாம் தான் வெற்றி பெறுவோம். ஆனால் அந்த வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்! உண்மையாக உழைக்க வேண்டும்! ஓயாமல் உழைக்க வேண்டும்! நமது வெற்றியைத் தடுப்பதற்கு மாநில அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் சதித்திட்டங்களைத் தீட்டிவருகிறது. பத்திரிகைகளில், சமூகவலைதளங்களில், தி.மு.க.வைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். நம்மைத்தான் ஆளுங்கட்சி என எண்ணிக்கொண்டு, கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். நம்முடைய ரத்தம், வியர்வை, உழைப்பு, ராஜதந்திரம், ஒற்றுமை ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி, நாம் வெற்றி பெற வேண்டும்.”
“நம் பொருளாளர் சொன்னதைப்போல், கோஷ்டிகள் இருப்பது இயல்புதான். ஆனால் அந்தக் கோஷ்டிகளில், கழக வளர்ச்சிக்காக யார் நன்றாகச் செயல்படுவது என்ற ஆரோக்கியமான போட்டி இருக்கவேண்டுமே தவிர, பகைமை கொண்டு கழக வளர்ச்சிக்குத் தீங்கு விளைவித்துவிடக் கூடாது. ஒற்றுமையும், உழைப்பும் இருந்துவிட்டால், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. நம்முடைய அரசியல் திறமைகளை மாற்றுக் கட்சியினரிடம் பயன்படுத்தி அவர்களை வெல்ல நினைக்க வேண்டுமே தவிர, சொந்தக் கட்சிகாரரரிடமே காட்டி, காலத்தை வீணடித்துவிடக்கூடாது. நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும்; ஆளும் கட்சி இப்போது செலவு செய்வதைவிடவும் அதிகமான பணத்தை வாரி இறைக்கத்தான் செய்வார்கள். அந்தப் பணபலத்தை வெல்லும் வல்லமை உங்களது ஒற்றுமைக்கும், உழைப்புக்கும் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்!
தோல்விகளில் இருந்து மீண்டு வந்தோம் என்றால் ; தலைவர் கலைஞர் அவர்களின் உயிருக்கும் உயிரான உடன்பிறப்புகளின், தொண்டர்களின் உழைப்புதான், அதற்குக் காரணம். ஒன்பது ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. ஆனாலும் நாம்தான் ஆட்சியில் இருக்கிறோம் என்பதைப் போலவே தி.மு.க.வை நினைக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு கழகத்தை உச்சியில் வைத்திருப்பதற்கு தொண்டர்கள்தான் காரணம். தமிழ்நாட்டு மக்களுக்கு நமது கழக அரசு செய்ததைப் போன்ற மகத்தான சாதனைகளை யாரும் செய்ததில்லை.”
“1991- 96 வரையிலான ஜெயலலிதா ஆட்சி - அதைவிட மோசமான ஆட்சி இப்போது நடைபெறும் ஆட்சி. ஒரு கொள்ளைக் கும்பலிடம் தமிழ்நாட்டு அரசாங்கம் சிக்கிவிட்டது. தமிழகம் பல கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த கொள்ளைக்கும்பலை அம்பலப்படுத்துங்கள். ஆதாரங்களுடன் பேசுங்கள். ஒன்பது ஆண்டு காலத்தில் எந்தச் சிறு நன்மையும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை என்பதைச் சொல்லுங்கள். இந்த ஆட்சி எல்லா வகையிலும் சீர்கெட்டுப்போயிருக்கிறது; தோற்றுவிட்டது. இதனை பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சியை, அண்ணாவின் - கலைஞரின் ஆட்சியை அமைப்பதற்கு இந்தப் பொதுக்குழு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் நம் மீது வீண்பழி சுமத்தி மக்களைத் திசை திருப்புகிற காரியத்தில் ஈடுபடுவார்கள். மிசாவிலேயே நான் இல்லையாம். இதை அரசியல் அறியாதவர்கள் பேசலாம். ஆனால் இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி விவாதிப்பது வேதனையாக இருக்கிறது. நான் மிசாவில்தான் கைது செய்யப்பட்டேன் என்று நானே சொல்லிக்கொள்ள சற்று நாணுகிறேன். உதாரணமாக, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். பஞ்சமி நிலம் இல்லை என்று நான் உறுதியாகச் சொல்லிவிட்டேன். "அதனை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்" என்று உறுதியாகச் சொல்லிவிட்டேன்.
"அதனை நிரூபிக்க வில்லை என்றால், மருத்துவர் ராமதாசும், அவர் மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத்தயாரா?" என்று கேட்டேன். இதற்கு மேல் என்ன சொல்ல முடியும்? குற்றம் சாட்டியவர்கள் தான், தாம் கூறிடும் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.”
“முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் பா.ஜ.க.,வைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, புகாரில் உண்மை இருந்தால் விசாரிக்கப்படும் என்றார். பஞ்சமி நிலம் என்று அவர்கள் கண்டுபிடித்தால், அவர்கள் வெளியிட மாட்டார்களா? தெரிந்துகொண்டே, வேண்டுமென்றே நாடகம் நடத்துகிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முரசொலி அலுவலகத்தைப் பூட்டவேண்டும் என்று பேட்டி கொடுத்திருக்கிறார். கலைஞரின் ரத்தம் ஓடும் உடம்பு இது. விட்டுவிடுவோமா? நாங்கள் ஒன்றும் கையாலாகாதவர்கள் அல்ல!
இனி வரப்போகும் காலம் நமக்கு சவாலான காலமாகத்தான் இருக்கப்போகிறது. எந்தச் சவாலையும் சந்திப்போம். யாராவது சவால் விட்டால்தான் நமக்கும் அதிக வேகம் பிறக்கும். அந்த வேகம், விறுவிறுப்பு இப்போது பிறந்திருக்கிறது. இந்தப் பொதுக்குழுவில் நாம் எடுக்கவேண்டிய உறுதி, கோட்டையை விட்டு கொள்ளைக் கூட்டத்தை விரட்டிடுவோம் என்ற உறுதிதான்!
இந்தப் பொதுக்குழுவைச் சிறப்பாக நடத்தித் தந்திருக்கும் சென்னை மேற்குமாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கும், அவருக்குத் துணைநின்ற கழக நிர்வாகிகளுக்கும் நன்றி.”
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !