M K Stalin
மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்ட நேற்று முன்தினம் மீண்டும் கர்நாடகா அரசு விண்ணப்பித்துள்ளது. அதில் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை என கூறியுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசிடம் கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டியதில்லை", என்று, மத்திய அரசுக்கு 4.10.2019 அன்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், “காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு வழங்கப்படும் தண்ணீருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு நிறைவேற்றக் கூடாது” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும், “எங்கள் மாநிலத்திற்குள் உள்ள காவிரி நீரைப் பயன்படுத்துவதற்குத்தான் மேகதாது அணை கட்டுகிறோம்” என்று ஒரு விதண்டாவாதத்தை முன் வைத்து, தற்போது மத்திய அரசிடம் புதிய அணை கட்ட மீண்டும் கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது, மிகுந்த ஆபத்தான அடிப்படையிலானது, கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்றமே இறுதி செய்த காவிரி நதி நீர்ப் பங்கீடு ஆகிய அனைத்திற்கும் எதிராகத் திட்டங்களைத் தீட்டி, தமிழகத்திற்கான காவிரி நதிநீர் உரிமையை அடியோடு பறிப்பதை கர்நாடக மாநில அரசு தனது வஞ்சக சூழ்ச்சியாகக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது.
இரு மாநில மக்களிடையே நிலவும் நல்லுறவிற்கு, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவர்களின் இந்த அணுகுமுறை எந்த வகையிலும் பயனளிக்காது.
குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு “ மேகதாது அணை கட்டுவது பற்றி தமிழகத்துடன் பேச வேண்டியதில்லை “ என்று கர்நாடக அரசு கூறியிருப்பது தன்னிச்சையானது; நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியது. மேலும், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் உரிமைகளை எதேச்சதிகாரமாக அத்துமீறி அபகரிக்க முயலுவதாகும்.
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் பாணியில், சகோதர மாநிலமான தமிழகத்திற்கு பாதிப்பை உண்டாக்க கர்நாடக அரசு எடுக்கும் இந்த நிலைப்பாடு, கூட்டாட்சியில் வரவேற்கத்தக்க ஒன்றல்ல.
உச்சநீதிமன்றம் உறுதி செய்த காவிரி இறுதித் தீர்ப்பிலும், அதன் அடிப்படையில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி வரைவுத் திட்டத்திலும், கர்நாடக அரசு புதிய அணையை தமிழகத்தின் அனுமதியின்றி நிச்சயம் கட்ட முடியாது.
குறிப்பாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன்னனுமதியின்றி மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை எந்தப் புதிய அணை திட்டத்திற்கும் அம்மாநில அரசுக்கு அனுமதி அளிக்கவே முடியாது.
அப்படி கர்நாடக அரசு 68 டி.எம்.சி. நீரைத் தேக்கி வைத்துக் கொள்ள புதிய அணை கட்டுவது, தங்கள் மாநிலத்திற்குள் விவசாய நிலங்களை அதிகரித்து, காவிரி இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி காவிரி நீருக்கும் உலை வைத்து, விவரிக்க முடியாத ஊறு ஏற்படுத்துவதாகவே அமைந்து விடும்.
ஏற்கனவே பல வகையிலும் சோதனைகளைச் சந்தித்துவரும் தமிழக விவசாயிகளின் நலனை இந்த முயற்சி, மேலும் பாதிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பதை கர்நாடக அரசும், மத்திய அரசும் உணர்ந்திட வேண்டும்.
ஆகவே, கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியையும் அளிக்கக் கூடாது என்றும், இந்தத் திட்டத்திற்கு அனுமதிகோரி மீண்டும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கர்நாடக அரசின் விளக்க அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
மூத்த அரசியல் தலைவரான கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அவர்கள் பெருந்தன்மையோடு, இரு மாநில மக்களின் நல்லுறவு கருதி, மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!