M K Stalin
“இதுவே கடைசியாக இருக்கும்” : சுபஸ்ரீ குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
சென்னை பள்ளிக்கரணையில் அ.தி.மு.கவினர் சட்டவிரோதமாக வைத்த பேனர் சரிந்து விபத்துக்குள்ளானதில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இனி தி.மு.க-வினர் பேனர், கட்-அவுட்கள் வைக்கக்கூடாது எனக் கட்டாய உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், இன்று சுபஸ்ரீ இல்லத்திற்கு நேரில் சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். தி.மு.க அறக்கட்டளை சார்பில் 5 லட்ச ரூபாய் நிதி உதவியும் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க-வினரால் வைக்கப்பட்ட பேனரால் பலியான சுபஸ்ரீயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் உயர்நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் பேனர்கள் வைக்கவேண்டும் என்ற உத்தரவையும் மீறி பெயரளவுக்கு ஒன்றிரண்டு பேருக்கு மாத்திரமே அனுமதி பெற்றுக்கொண்டு நூற்றுக்கணக்கான பேனர்களை வழிநெடுக வைத்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
உயர்நீதிமன்றம் தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நீதிமன்ற தடை உத்தரவை மீறி அவர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் ரகு என்கிற ஒரு சகோதரர் பலி ஆனார். இப்போது சுபஸ்ரீ என்கிற ஒரு சகோதரி பலியாகி இருப்பது வேதனை அளிக்கிறது.
சுபஸ்ரீயை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறேன். என்ன தான் ஆறுதல் கூறினாலும் அந்த இழப்பை ஈடு செய்யமுடியாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், முடிந்த வரையில் அவர்களை நாங்கள் ஆறுதல் படுத்தியுள்ளோம்.
சுபஸ்ரீயின் தந்தை ரவி, என்னிடத்தில் சொன்னது, “இதுவே கடைசியாக இருக்கட்டும் என்னுடைய மகள் சுபஸ்ரீ இந்த பேனர் கலாசாரத்தால் இழந்திருப்பது கடைசியாக இருக்கட்டும். இனியும் தொடரக்கூடாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும்” என்று உணர்ச்சிகரமாக சொன்னது உள்ளபடியே மறக்க முடியாதது.
நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் நாங்களே முன்சென்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருக்கிறோம். நாங்கள் சட்டத்தை மீறி அனுமதி இல்லாமல் எங்கும் பேனர் வைக்கமாட்டோம் என்று சொல்லியிருக்கிறோம். நிகழ்ச்சி நடக்கக்கூடிய இடத்தில் அடையாளத்திற்கு ஒன்றிரண்டு இடங்களில் மாத்திரம் வைத்துவிட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும். அதை மீறி யாராவது வைத்தால் நாங்களே உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்தது மட்டுமல்லாமல் நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம்.
என்னைப் பொறுத்தவரையில் பேனர் கலாச்சாரம் தொடரக்கூடாது என்பதுதான் விருப்பம். சுபஸ்ரீயை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு தி.மு.க அறக்கட்டளை சார்பில் ஐந்து லட்ச ரூபாய் உதவித் தொகையை வழங்கியிருக்கிறோம். துன்பத்திற்கு ஆளாகி இருக்கும் அந்தக் குடும்பத்திற்கு தி.மு.க துணைநிற்கும் என்று உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.
பேனர் வைத்த அ.தி.மு.க-வினர் இன்னும் கைது செய்யப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “அடுத்த வினாடியே கூட அவர் கைது செய்யப்படலாம். அப்படியான நாடகத்தை இந்த காவல்துறையும் அரசும் நடத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நேற்று சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!