M K Stalin
இந்தி திணிப்பு எதிர்ப்பு : ஆளுநர் வேண்டுகோளை ஏற்று திமுகவின் போராட்டம் ஒத்திவைப்பு- மு.க.ஸ்டாலின் பேட்டி!
தி.மு.க. தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மத்திய அரசின் இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிராக செப்டம்பர் 20ம் தேதி தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்தப் போராட்ட அறிவிப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று, ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலாலின் அழைப்பை ஏற்று அவரைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின். அப்போது “தமிழகத்தில் எக்காரணத்தைக் கொண்டும் இந்தி திணிக்கப்படாது என்றும் அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “எதற்காக போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று கூறினோம். அதற்கு அமித்ஷாவின் கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இந்தி திணிக்கப்படாது என்றும் உறுதியளித்தார். மேலும், மத்திய அரசின் பிரதிநிதியாகத்தான் இந்த உறுதியைக் கூறுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்” என்றார்.
இதனையடுத்து, “இந்தித் திணிப்பை எதிர்த்து 20ம் தேதி நடத்தப்பட இருந்த தி.மு.கவின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், ஆளுநர் அழைத்துப் பேசியிருப்பது, திமுகவின் முன்னெடுப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், எந்த வகையில் இந்தி திணிக்கப்பட்டாலும் அதனை எதிர்ப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!