M K Stalin
“அறிவாற்றல் மிக்க இளைய தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர் சமுதாயத்துக்கு வாழ்த்துகள்” : மு.க.ஸ்டாலின்
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. ஆசிரியர் சமுதாயத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவதான முக்கிய இடத்தில் வைத்து உலகம் போற்றும் ஆசிரியர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக ஆட்சிப் பொறுப்பிலிருந்த நேரங்களில் எல்லாம் பல முனைகளிலும் பாடுபட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தின” வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“நல்ல எண்ணங்களை ஏற்படுத்துவது நமது கடமை. மனிதர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்றால் நல்ல எண்ணங்கள்தான் மனிதர்களை உருவாக்குகிறது” என்ற உயரிய சிந்தனையுடன், ஆசிரியராக, அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக, இறுதியில் இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகி வரலாறு படைத்தவர்; அரசர்களுக்கு இடையே ஒரு தத்துவ ஞானியாகவும், தத்துவஞானிகளின் மத்தியில் ஓர் அரசராகவும் விளங்கியவர் டாக்டர் இராதாகிருஷ்ணன்.
அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக மிகுந்த மகிழ்ச்சியுடனும், மாணவர்கள்- ஆசிரியர்கள் மத்தியில் உற்சாகம் பொங்கும் எழுச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. “ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் சம வாய்ப்பிலான கல்வி பெற வேண்டும்”என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் பணியாற்றியவர் டாக்டர் இராதாகிருஷ்ணன்.
அப்படியொரு சம வாய்ப்பினை வகுப்பறைகளில் வழங்கி, அனைவரும் சிறந்த கல்வி பெற்று, நல்லொழுக்கம் - பண்புகளைப் பெற்று, அறிவிலும், ஆற்றலிலும் சிறப்புமிக்க ஒரு இளைய தலைமுறையை உருவாக்கும் மிக உயர்ந்த உன்னதமான பணியில் இருப்பவர்கள் ஆசிரியர் பெருமக்கள் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் உணர்ந்திருக்கிறது.
அதனால்தான் வருங்காலத் தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நல்லாசிரியர் விருதை 1997ல் ஆட்சிப் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர், 'டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது' என்று பொருத்தமாகப் பெயர் மாற்றம் செய்து, ஆசிரியர் பெருமக்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
ஆசிரியர் பெருமக்களின் உயர்கல்விக்கு ஊக்க ஊதியம்; ஈட்டிய விடுப்பு நாட்களைச் சரண் செய்திடும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களுக்கான ஊதியம்; 10 ஆண்டுகள் பணி முடித்தால் தேர்வு நிலை ஊதியம்; 20 ஆண்டுகள் பணி முடித்தால் சிறப்பு நிலை ஊதியம்; தமிழாசிரியர்களிடையே இருநிலை நீக்கம்;
தமிழாசிரியர்களின் 'புலவர்' பட்டயம் 'பி.லிட்' பட்டமாக மாற்றம்; தமிழாசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு; ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்கள்; அகவிலைப் படிகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு; நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களாக்கியது;
பதிவு மூப்பு அடிப்படையிலேயே பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்தது; தொகுப்பூதிய ஆசிரியர் நியமன முறையை அடியோடு ரத்து செய்தது என பல்வேறு சலுகைகளை ஆசிரியர்களுக்கு வழங்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை ஆசிரியர் பெருமக்கள் மனதில் என்றைக்கும் பசுமையாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.
இதுதவிர தி.மு.க. ஆட்சியில் அமர்ந்திருந்த நேரங்களில் எல்லாம் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர் நியமனங்களைச் செய்து, ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளுக்காகவும் எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்குவது திராவிட முன்னேற்றக் கழகம் என்று தெரிவித்துக் கொள்ளும் இந்த தருணத்தில், தமிழக ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!