M K Stalin
“தமிழர்களுக்கு யாரும் தேசபக்தி கற்றுத்தரத் தேவையில்லை” : பா.ஜ.க-வை விளாசிய ஸ்டாலின்!
சிலை திறப்பு விழா பொதுக்கூட்ட நிகழ்வில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, '' தமிழக வரலாற்றில், திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில், ஏன் தனிப்பட்ட முறையில் என்னுடைய வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஆகஸ்ட் 7 தான். எவரை நாம் உயிர் என்று உடலுக்குள் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்தோமோ, அந்த உயிருக்கு இணையான தலைவர் கலைஞர் அவரது அண்ணனுக்குப் பக்கத்தில் ஓய்வெடுக்கச் சென்ற நாள் இந்நாள்.
அண்ணா மறைந்த நேரத்தில் தந்தை பெரியார் சொன்னார், நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. இழக்கக்கூடாதவரை நாம் இழந்திருக்கிறோம் என்றார். கலைஞர் அவர்களும் நம்மைவிட்டுப் பிரிந்த நேரத்தில் அப்படியொரு உணர்வுதான் ஏற்பட்டது.
கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. மிகச் சரியாக 20 ஆண்டுகளில், அதாவது 1969ம் ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார்கள். சாமானியர்களுக்கான இந்த இயக்கத்தைத் தொடங்கி சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அழைத்துச் சென்றது மட்டுமல்ல, ஐந்து முறை தமிழகத்தில் தலைவர் கலைஞர் தலைமையில் ஆட்சி பொறுப்பிலிருந்ததற்குக் காரணம் அண்ணா அவர்கள் தான்.
இயக்கத்தை 50 ஆண்டுகளாக வளர்த்துக் கொடுத்தவர் கலைஞர் தான். நாடாளுமன்றத்திற்குச் சென்றது மட்டுமல்ல, அவரது தம்பிமார்களை மத்திய அமைச்சரவையில் நிறுத்தி அழகு பார்த்தவர். 14 வயதில் தமிழ்க் கொடி பிடித்தவர். அதனை 96 வயது வரை பற்றி பிடித்துள்ளார்.
முதுமை காரணமாக இல்லத்தில் ஓய்வெடுக்கும் போது அவரிடம் நாங்கள், முரசொலி போகலாமா, அண்ணா அறிவாலயம் போகலாமா எனக் கேட்போம். அப்போது அவர் கண்கள் விரியும். அப்போது பேனாவையும், தாள்களையும் கையில் கொடுத்ததும் அண்ணா என்று எழுதினார்.பேசும்போது அண்ணா என்றே பேசினார். இப்படி ஒரு தலைவரை உலக வரலாற்றில் கண்டது உண்டா, எத்தகைய தலைவரை நாம் பெற்றுள்ளோம்?
தமிழ்நாட்டில் பல ஊர்களில் கலைஞர் சிலை நிறுவப்படுகிறது. மற்ற இடங்களில் எல்லாம் எழுந்து நின்று கர்ஜிக்கும் சிலையைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் முரசொலி அலுவலகத்தில், உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பார். எழுதுவதுதான் அவருக்கு மிக மிகப் பிடிக்கும். அதுதான் தமிழுக்கும் பிடிக்கும் என்பதால் அதே வடிவில் காட்சி தருகிறார். உயிர்ப்போடு வடிவமைத்த சிற்பி தீனதயாளன் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.
பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும். அண்ணா என்றால் மொழியுணர்வும், இன உணர்வும். கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும். அவர்களின் சிலைகள் இந்த தத்துவத்தைத் தான் இன்றைக்கும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும், சமூகநீதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய காலம் தற்போது உருவாகி உள்ளது. எனவே தான் முன்பைவிட கலைஞர் நமக்கு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறார்.
காரணம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளனர். அந்த சமூக நீதி கொள்கைக்கு உலைவைப்பதற்கு பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்துள்ளார்கள். இட ஒதுக்கீடு கொள்கையால், தகுதி, திறமை போய்விட்டதே என்று இதுவரை சொல்லி வந்தவர்கள், இன்றைக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதும், இடஒதுக்கீடு கொள்கையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
அதே போல தான் மாநில சுயாட்சிக் கொள்கையை அழித்துவிட்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அடையாள அட்டை, ஒரே தேர்வு என எல்லாவற்றையும் டெல்லியில் குவிக்கிறார்கள். மத்திய அரசு என்பது என்று மத்தியப்படுத்தப்பட்ட அரசாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குத்தான் 1971ம் ஆண்டே, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கினார் நமது முத்தமிழறிஞர் கலைஞர்.
இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது ஆட்சியைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஜனநாயகம் தான் முக்கியம் என்று கூறினார். அந்தத் துணிச்சலை நாம் இப்போது எடுத்துக் கொள்ளவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை நீக்குவதற்கு தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தினமும் போராடி வருகிறார்கள். இந்தச் செய்தியை தினமும் பார்க்கிறோமே. கலைஞர் இருந்திருந்தால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்திருப்பார். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தையே நடுங்கச் செய்துள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல், தபால் தேர்வில் இந்தி, நீட் என பலவற்றைப் பேசுகிறார்கள். அதற்கு தமிழக மக்கள் சார்பாக நான் பாராட்டுகளைத் தெரித்துக் கொள்கிறேன்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொள்ளக்கூடாது என்பதே தி.மு.கவின் நிலைப்பாடு. எதிரி நாடுகளின் அச்சுறுத்தல் இருக்கும்போது நாங்கள் இந்தியாவின் பக்கம் தான் நின்றோம். எனவே எங்களுக்குத் தேச பக்தி பாடத்தை யாரும் கற்றுத் தரத் தேவையில்லை. ஒரு போலி தேசபக்தியை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரச்னையை தூண்டி விடும் மத்திய பா.ஜ.க அரசை தி.மு.க எதிர்க்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு காஷ்மீரில் அமையும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே தி.மு.க நிலைப்பாடு” என அவர் பேசினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?