M K Stalin
“சமத்துவமும், சகோதரத்துவமும், ஜனநாயகமும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கிறது” : மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்ற மணவழகர் மன்ற விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், “சமத்துவம் - சகோதரத்துவம் - ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மார்க்சியம் - தொழிலாளர் ஒற்றுமை போன்ற சொற்கள் நாடாளுமன்றத்தில் ஒலிக்கத் துவங்கியுள்ளன; சொந்த நாட்டவர்களிடமே போராடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “எத்தனையோ மேடைக்கு சென்றாலும் தமிழ்விழா நடக்கின்ற மேடைக்கு தலைவர் கலைஞர் செல்லும்பொழுது தானாக ஒரு பூரிப்பு வரும். அவரின் முகத்தைப் பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். அப்படிப்பட்ட மேடைகளில் இந்த மணவழகர் மேடையும் அமைந்திருக்கின்றது என்று சொன்னால் நிச்சயமாக மிகையாகாது. அத்தகைய பெருமை படைத்த தலைவர் கலைஞர் அவர்களை இழந்து ஓர் ஆண்டு நிறைவு பெறக்கூடிய நிலையில் இருக்கின்றோம்.
தலைவர் கலைஞர் அவர்கள் இல்லை என்பது நாட்டிற்கு பெரிய இழப்பு - தமிழகத்திற்கு பெரிய இழப்பு - தமிழர்களுக்கு பெரிய இழப்பு – தமிழ் இனத்திற்கு பெரிய இழப்பு. ஆண்டுதோறும் அவரை இங்கு அழைத்து அழகு பார்த்தீர்கள். இன்றைக்கு அவருடைய மகனாக இருக்கக்கூடிய என்னை மறக்காமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதே போல் அழைப்பை நானும் மறுப்பதில்லை, மறப்பதும் இல்லை தொடர்ந்து நானும் வந்துகொண்டுதான் இருக்கின்றேன்.
இன்றைக்கு தமிழுக்கும் நம்முடைய இனத்திற்கும் ஒரு சோதனை ஏற்பட்டிருக்கின்றது. அந்த வேதனை இன்றைக்கு சூழ்ந்து வந்து கொண்டிருக்கின்றது. கட்சி வேறுபாடுகள், மத மாச்சரியங்கள், சர்வாதிகார வேறுபாடுகள் ஆகியவற்றைக் களைந்து நம் மொழியைக் காக்க - நம்முடைய இனத்தை காக்க - நாம் ஒன்று சேர வேண்டிய காலக்கட்டம் வந்திருக்கின்றது.
“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி மகள் அன்னைத் தமிழ் மொழி” இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்கத் துவங்கி விட்டது. தந்தை பெரியார் வாழ்க - அறிஞர் அண்ணா வாழ்க - தமிழ் வாழ்க - தலைவர் கலைஞர் வாழ்க - என்று நாடாளுமன்றத்தில் குரல்கள் ஒலிக்கத் துவங்கி இருக்கின்றது. சமத்துவம் - சகோதரத்துவம் - ஜனநாயகம் - மதச்சார்பின்மை – மார்க்சியம் - தொழிலாளர் ஒற்றுமை ஆகிய சொற்கள் எல்லாம் இன்றைக்கு நாடாளுமன்ற அவையில் ஒலிக்கத் துவங்கி இருக்கிறது.
மும்மொழித் திட்டத்தை புகுத்துவதற்கு கஸ்தூரி ரங்கன் குழுவின் அந்த அறிக்கை அறிவுரைப்படி மத்திய அரசு இப்பொழுது திட்டமிட்டு கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை அப்படி திட்டமிட்டு அந்தப் பணியைத் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் 1965-யைப் பார்க்க வேண்டும் என்று நாம் குரல் எழுப்பினோம். உடனே அதற்கு வாபஸ் என்ற செய்தி வந்தது.
தென்னக ரயில்வேயில் தமிழில் பேசக் கூடாது இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் பேசிட வேண்டும் என்று ஒரு ‘சர்குலர்’ வெளியிட்டிருப்பதாக உத்தரவு போட்டார்கள். தி.மு.கழகம் உடனடியாக எதிர்த்து, இதுபோன்ற உத்தரவிற்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என்று குரல் எழுப்பினோம். அதன் பிறகு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது மட்டுமல்லாமல் அந்த அதிகாரியே செல்பேசியில் என்னோடு தொடர்பு கொண்டு “நாங்கள் உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டோம்” என்று சொல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.
தபால் துறையில் தேர்வுகளை இந்தியில் தான் எழுத வேண்டும் என்று அந்தத் தேர்வுகளையும் நடத்தி இருக்கின்றார்கள். அப்படி, நடத்திய தேர்வை ரத்து செய்ய வைத்ததும் நாம் தான், நம்முடைய நாடாளுமன்ற எம்.பி.க்கள் குரல் எழுப்பி அதனை ரத்து செய்ய வைத்திருக்கின்றோம். ஏன் தமிழ் மொழியிலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாக வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழில் வெளிவரக்கூடிய சூழ்நிலையை இன்றைக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.
ஒரே நாடு - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு - ஒரே ஆணையம் என்றும் சொல்கின்றார்கள். அடுத்து மாநிலங்களின் மொத்த அதிகாரங்களையும் பறித்து மத்திய அரசு என்ற ஒரே அரசு தான் என சொல்லக்கூடிய சூழ்நிலை வந்து கொண்டிருக்கின்றது. ஜனநாயகத்தையே படு குழிக்குள் தள்ளக் கூடிய ஒரு சூழ்நிலையை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சமத்துவம் - சமதச்சார்பின்மை என்ற தத்துவங்களுக்காக மட்டுமல்ல அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் நாம் போராட வேண்டிய காலமாக மாறிவிட்டது.
இந்த ஆபத்தை தமிழகம் உணர்ந்த அளவிற்கு மற்ற மாநிலங்கள் உணரவில்லை என்ற வருத்தம்தான் இருந்து கொண்டிருக்கின்றது. தமிழகத்திலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்காக மட்டுமல்ல இந்தியாவிற்கும் சேர்த்து பேசக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு வந்திருக்கின்றது” எனத் தெரிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!